Wednesday, November 29, 2006

மாவீரர்நாள் உரையில் ஏமாற்றிய பிரபாகரன்

உலகத் தமிழரையும் ரஜனி ரசிகர்களையும் ஏமாற்றிய தலைவர்.

'உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும்' என்ற அடைமொழியுடன் கொஞ்சநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மாவீரர்நாள் உரை முடிந்துவிட்டது.
பலதரப்பட்டவர்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள். பலருக்கு நிறைவையளித்து அவர்களின் எதிர்பார்ப்புக்களை ஓரளவாவது தீர்த்து வைத்துள்ளது அவ்வுரை. சிலருக்கு எரிச்சலையும் விசனத்தையும் கொடுத்துள்ளது.
பலதரப்பட்டவர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகள் இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு விடயத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது பிரபாகரனின் இவ்வருட உரை.

அது என்ன விடயம்?

எதிர்பார்க்கப்பட்டபடி இலங்கையின் இப்போதைய நிலைவரம், அரசியற்சூழல், போர் நிலைமை என்பவற்றைச் சொல்லி, தமிழரின் பாடுகள், வேதனைகள் என்பவற்றைச் சொல்லி, இன்னும் பன்னாட்டு அரசியலையும் அவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டையும் குறிப்பிட்டு இறுதியில் புலிகளின் நிலைப்பாட்டையும் சொல்லியவிதத்தில், அவரின் உரை சரியானதே. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய விடயமொன்றைப் பற்றி வாயே திறக்காமல் விட்டுவிட்டார்.

அது என்ன விடயம்?

உலகத் தமிழர்கள் அனைவரும் பிரபாகரனிடமிருந்து எதிர்பார்த்த கருத்து ஒன்றுண்டு.
கடந்த மாவீரர் நாள் உரையிலேயே தெளிவுபடுத்தவேண்டியிருந்தும் தவறவிட்ட 'சந்திரமுகி' படம் பற்றிய பிரபாகரனின் கொள்கை விளக்கவுரையை இவ்வருட மாவீரர் உரையிலாவது தருவார் என்ற 'உலகத் தமிழர்களின்' எதிர்பார்ப்பில் அவர் மண்ணைப்போட்டுவிட்டார்.
மேலும் வெளிவரவிருக்கும் 'சிவாஜி' படம்பற்றியும் எந்தவொரு சொல்தானும் சொல்லவில்லை என்றளவில் தமிழர்களை இன்னும் கடுப்பில் ஆழ்த்திவிட்டார்.

அந்தவகையில் 'சந்திர முகி' பற்றியும் இனி வெளிவரவிருக்கும் 'சிவாஜி' பற்றியும் எந்தவொரு குறிப்பையையும் சொல்லாமல் விட்டதன்மூலம் உலகத்தமிழர்களை ஏமாற்றியுள்ளார் பிரபாகரன்.

இதன்பின்னாலுள்ள அரசியல் சூட்சுமங்களை இனிவரும் காலத்தில்தான் நாம் அறிந்துகொள்ள முடியும்.


கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்
விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும்

2 comments:

நற்கீரன் said...

என்ன சுட்டிக்காட்டுகின்றீர்கள். போனவருடம் 'multiple personality' சந்திரமுகி படம் பற்றியும் இந்த வருடம் 'hero?' சிவாஜி பற்றியும்...

முடிவு என்கிறீர்களா?

தீர்வில் CFA இருந்து உத்யோகபூர்வமாக விலகவில்லை என்பது இங்கு குறிப்பிட வேண்டும்.

இவ்வளவு காலம் Norway செய்த உதவியை ஊதாசீனம் செய்து விட்டு, போர் என்ற கொடுமைக்குள் நேரே செல்லவில்லை என்ற அளவில் வி.பு. முதிர்ச்சி தெரிகின்றது.

ஆனால், என்ன நடக்க போகின்றது என்று ஒரு இளிவும் தெரியவில்லை.

என்ன நடந்தாலும் மக்கள் அவலம் மேலும் மோசம் ஆவதுதான் உறுதி.

கொழுவி said...

நற்கீரன்,
இது நேரடியாகவே சந்திரமுகி பற்றியும் சிவாஜி பற்றியும் பேசும்பதிவு.
மறைமுகக் கருத்தென்று ஏதுமில்லை.

அதுசரி, நோர்வே செய்த உதவியென்று எதைச் சொல்கிறீர்கள்?
போராட்டத்தில் எந்த முடிவென்றாலும் அதில் நோர்வேயைக் கருத்திற்கொள்ள வேண்டிய தேவையென்ன? அவர்களுக்கு இதில் என்ன சம்பந்தம்?