Tuesday, January 30, 2007

திரிக்கப்பட்ட வரலாறும் இழைக்கப்பட்ட அநீதியும்

வலைப்பதிவுகளில் முதன்முறையாக புதிய முயற்சியென வித்தியாசமான சிந்தனையென்ற பல்வேறு அடைமொழிகளோடு சில பதிவுகள் வந்திருக்கின்றன. வானொலி நிகழ்ச்சிகளாக கலந்துரையாடல் ஒலிப்பதிவுகளாக மலைநாடன் வசந்தன் சயந்தன் சோமிதரன் ஆகியோர் இட்டிருக்கும் ஒலிப் பதிவுகளை ஆகா ஓகோ என்று பாராட்டி எழுதுகின்றனர் பலர். அதில் எமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் வரலாற்றை மறந்தவர்களாக இந்த முயற்சி வலையுலகில் இப்போது தான் அறிமுகப்படுத்தப் படுகிறது என்று இவர்கள் எழுதுவதைத்தான் திரிக்கப் பட்ட வரலாறு என்கிறோம்.

2005 யூன் மாதத்திலேயே நாம் இவ்வாறான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிப்பதிவை முதன் முயற்சி புது முயற்சி என்ற எந்த ஆலவட்டமும் இன்றி வெளியிட்டமையை மறந்து நடப்பது திட்டமிடப்பட்ட அநீதி.

நீர் ர
ொம்பக்கெட்டிக்காரன்.அற்புதமாகவிருக்கின்றன காட்சியும்,கானமும்!இதை எப்படியும் வளர்த்துச் செல்லுதல் மிகவும் ஆரோக்கியமானது.போலித்தனங்களைப் போட்டுடைக்க இப்படியான முயற்சிகள் நல்ல பயனைத் தரும்.மனிதர்களுள் ஊடாடும் வஞ்சகத்தனத்தை புஷ்ணவி மூலம் சாட்டையடி கொடுத்த, எழுத்து வடிவம் சிறப்பாகச் செல்கிறது.மௌனித்த மகளிரெனும் மடமைக்கு, புஷ்ணவி ஆப்புவைத்து,இல்லை நாம் பாரதிகண்ட புதுமைப் பெண்களெனும் பிரகடனத்தைச் செய்கிறார்.அற்புதமான வரிகள்! இந்தச் சின்னன்கள் சிறப்பாய் வளர,என் வாழ்த்துக்கள்.நாளைய உலகம் உங்கள் கரங்களில் வந்தாடும்.இதில் எனக்குச் சந்தேகமில்லை.


நிறைந்த பெருமிதத்தோடு

ப.வி.ஸ்ரீரங்கன்

அப்பொழுதே நாம் இந்தப் பாராட்டையும் பெற்றிருந்தோம்.இதோ உங்களுக்காக உண்மையாகவே தமிழ் வலைப் பதிவில் முதன் முறையாக கலந்துரையாடல் ஒலிப்பதிவு. இதுவே இன்று புது முயற்சி செய்வோருக்கெல்லாம் முன்னோடி.






Sunday, January 28, 2007

புளொக்கரை எச்சரிக்கிறேன்

புளொக்கர் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துதாம். வலுக்கட்டாயமாக அலற அலற ஆட்களைப் பிடிச்சுத் தன்ர புது புளொக்கரில சேர்க்கிறதாம். என்னதான் நடந்தாலும் புது புளொக்கர் பக்கம் போகவே மாட்டம் எண்டிருந்த ஒரு சிலரை கதறக் கதறத் தூக்கி புது புளொக்கரில ஏத்தினதாக் கேள்வி. அதுவும் பெரிய பெரிய தலையளாப் பாத்துத்தான் உந்தப் பதிவர் பிடி வேலை நடக்குது. உதை நான் கடுமையாக் கண்டிக்கிறன்.

என்னை ஒருபோதும் வலுக் கட்டாயமாக அவர்களால் புது புளொக்கரில் தள்ள முடியாது என எச்சரிக்கிறேன்.

ஏனெனில் மனப்பூர்வமாக சுய அறிவோடு நானே இதோ இந்த நிமிடம் முதல் மாறி விட்டேன். புதுப் புளொக்கர் வாழ்க

கொழுவியோடே கொழுவலா?

இண்டைக்குக் கதை சொல்லப்போறன். அதுவும் மூண்டு கதைகள்.
கதைகள் எண்ட உடன 'கற்பனை' எண்டு நினைக்காதையுங்கோ. எல்லாம் உண்மைகள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"கொழுவிக்கு மண்டைக்க ஒண்டுமில்லை"
"கொழுவிற இடம் தெரியாமல் கொழுவினால் இதுதான் நடக்கும்"
[என்ன நடந்ததெண்டு எனக்கும் விளங்கேல;-)]

மேற்கோளிடப்பட்ட வசனங்களை ஒருத்தர் எழுதியிருக்கிறார்.
இவருக்கும் கொழுவிக்கும் அந்த இடத்தில எந்தப்பிரச்சினையும் நடக்கேல. ஆனா சரியான இடத்தில பூந்து தக்கநேரத்தில கொழுவிக்கு ஒரு குத்து விட்டிருக்கிறார் பாருங்கோ...
அதுக்கு என்ன காரணம்?
கொழுவிக்குக் குத்த தருணம் பாத்திருக்கிற அளவுக்கு என்ன நடந்தது?
அந்த இடத்தில வாசிக்கிற ஆக்களுக்கு சம்பந்தமில்லாமல் இவனேன் கொழுவியோட கொழுவிறான் எண்டு தோன்றியதா?
நானும் யோசிக்கிறன். முடிஞ்சால் நீங்களும் கண்டு பிடியுங்கோ பாப்பம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்மணத் திரட்டியில் பின்னூட்டங்களைத் திரட்டும் வசதியைப் பெற வேண்டுமாயின் வலைப்பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்பட வேண்டும் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டு இன்றுவரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த அறிவித்தல் வருவதற்கு முன்னரே கொழுவி பின்னூட்ட மட்டுறுத்தலைச் சிலகாலம் செய்ய வேண்டியிருந்தது. அது ஏன்?

முன்னர் சில வலைப்பதிவுகளில் சகட்டுமேனிக்கு தூசணங்கள் பின்னூட்டமாக இடப்படும். இதைச்சிலர் தமது அரசியல் நோக்கங்களுக்குப் பாவித்தனர். பாதிக்கப்படும் நிலையிலிருப்பவர் மகிழ்ச்சியடையும் நிலைகூட இருந்தது.

இப்படிப்படியாக இருந்துவரும் காலத்திலே,
தூசணம் கொட்டிவிட்டுச் சொல்லும் ஓர் அனாமதேயத்துடன் கொழுவி பொருதும் நிலை தற்செயலாக வந்துவிட்டது. பொருதிய கொழுவிக்கு உடனேயே புரிந்தது இது ஒரு கழண்ட கேஸ் என்று. எந்த அரசியலுமின்றி ஆங்காங்கே துப்பிவிட்டுச் செல்வதே அந்த விசரின் வேலையென்று விளங்கிவிட்டது. கொழுவியை மிகத்தீவிரமான புலியெதிர்ப்பாளன்/ள் எண்டு சொல்லியது.
விசருகளோடு சண்டைபிடித்தால் நாமும் விசர்ப்பட்டம் வாங்கிவிடுவோமோ என்ற பயத்தில் கொழுவி பின்வாங்கினாலும் அந்த விசர் விடுவதாக இல்லை.
கொழுவியின் பதிவுகளுக்கும் தூசணப்பின்னூட்டங்கள் வரத் தொடங்கின. ஆனால் மற்றவரைப் போல் அவற்றை வைத்து அரசியற்பிழைப்பு நடத்தும் கேவல எண்ணம் கொழுவிக்கில்லை. [ஏற்கனவே யாரோ எழுதிய ஆபாசப்பின்னூட்டத்துக்காக தமிழ்மணத் திரட்டியிலிருந்து தூக்கப்பட்டவன் கொழுவி.;-(]எனவே பின்னூட்ட மட்டுறுத்தல் உடனடியாகவே செயற்பாட்டுக்கு வந்தது கொழுவியின் வலைப்பதிவில். அந்த விசரும் கொஞ்சநாள் விடாமல் துப்பிவிட்டு களைத்து ஓய்ந்துவிட்டது.

இதுதான் கொழுவி மட்டுறுத்தற் கட்டாயத்துக்கு முன்பே பின்னூட்டம் மட்டுறுத்திய கதை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சில கோமாளிகள் இருக்கிறார்கள். தம்மீது வெளிச்சம் விழவும், தானும் ஒரு பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளவும் புலிக்கு வால்பிடிக்கும் கூட்டமது. புலத்தில் பெருமளவுக்கு இக்கூட்டம் இருக்கிறது. போராட்டம் பற்றி தகவல் பூர்வமாகவோ - அறிவுபூர்வமாகவோ - தர்க்கபூர்வமாகவோ ஒரு கோதாரியும் தெரியாதவர்கள், புலிக்கு வால்பிடிப்பதால் தாம் பெரிய ஆள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இயல்பில் என்ன இருக்கிறதென்ற விளக்கமின்றி கற்பனையில் புரட்டுக்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
வால்பிடிப்பதிற்கூட தாம்தான் முன்னுக்கு நிற்கவேண்டுமென்று நினைப்பவர்கள். எங்கே தமதிடம் போய்விடுமோ என்ற அச்சத்தில் மற்றவால்பிடிகளைத் தள்ளிவைக்க, முடிந்தால் துரோகியாக்கிவிடவும் நினைப்பவர்கள்.

இக்கோமாளிக் கூட்டத்துக்கும் கொழுவிக்கும் கூட கொழுவலுண்டு.

கொழுவிக்குக் கொழுவிற இடம் தெரியாதெண்டு சொல்லிறது ஒருபக்கமிருக்கட்டும்; கொழுவியோட கொழுவிறதாலதானோ என்னவோ மேற்சொன்ன கோமாளிக்கூட்டத்துக்கும் கோழுவிற இடம் தெரியாமலிருக்கு.

Friday, January 26, 2007

யாதும் ஊரே யாவரும் கேளிர்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பெயரில் புதிதாய் ஒரு வலைப்பதிய எண்ணியுள்ளேன். எல்லாம் ஒரே உலகமே எல்லாரும் உறவினரே என அர்த்தம் தொனிக்கும் இத் தலைப்பின் கீழ் நான் எழுத நினைத்துள்ள பதிவுகளின் முன்னோட்டம் இது.

எங்கடை பலாப் பழத்துக்கு அடுத்த வீட்டில விலை பேசுறான் வடக்கத்தையான்.

தமிழ் ஆண்களின் வேட்டியை விழுங்கிய வட இந்தியரின் குர்தார்.

ஆ.. கொப்புரானே.. முஸ்லீம்கள் எங்களை அடுத்துக் கெடுத்தனர்..

சில ஊளையிடும் தமிழரும் அவர்களின் உணர்வுகளும்

இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிடவும் சிலரைத் தயார் செய்துள்ளேன். பிறரின் பின்னூட்டங்கள் எனது கருத்துக்களை கேள்விக் குறியாக்கினால் ஒருபோதும் வெளியிட மாட்டேன்.

Thursday, January 25, 2007

சேலை கட்டணும் சிங்குச்சா..

ஆரூரன் மாதுளன் மாதிலன் மற்றும் திவ்யா எனச் சிலர் அல்லது ஒருவர் அவரது மொழியில் வடக்கத்தையானின் உடையான பஞ்சாபியை அணிவது தமிழ் பெண்களின் கலாசாராத்திற்கு உகந்தது அல்ல என்று எழுதியதும் அதற்கு வரும் எதிர்வினைகளுக்கு விரல் சூப்பும் சின்னப் பிள்ளைகள் மனநிலையில் நின்று பதிலதிப்பதனையும் பார்த்திருக்கிறீர்களா..?

அதற்காக நான் எழுதிய பின்னூட்டம் ஒன்று வெளியிடப் பட வில்லை. எந்த வித ஆபாச ஆசாபாசத் தாக்குதலும் அற்று எழுதப் பட்ட அந்தப் பின்னூட்டம் வெளியிடப் படாமைக்கு ஒரே காரணம் அதில் கேட்கப் பட்டிருந்த கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லாமையே..

தன்னால் (பட்டிமன்றத்தைப் போல ) வெட்டிச் சளாப்பக் கூடிய கருத்துக்களை அவர் அனுமதிப்பதுவும் தன்னால் பதில் சொல்ல முடியாத கருத்துக்களை அமுக்கித் தான் மட்டும் வாசித்து விட்டு அனுமதியாமலும் விடுவது அவரிஸ்டம் எனச் சொல்ல முடியாது.

தனது கருத்துக்களுக்கு பதில் தேவையில்லையெனில் பின்னூட்டப்பகுதியை அவர் மூடி விடலாம். தனது பதிவில் அவர் அனுமதித்து இருக்கும் கருத்து எல்லாமே மிதுளனோ மிதிலனோ அல்லது திவ்யாவோ வந்து பதில் சொல்ல முடியும் என நம்புகின்ற கருத்துக்கள். அவ்வாறு மிதிலனாலோ மிதுளனாலோ அல்லது திவ்யாவாலோ பதில் சொல்ல முடியாத கருத்துக்களை அவர் அனுமதிப்பதில்லைப் போலும்.

எனினும் இவ்வாறு கருத்து வீச்சைக் கம்மியாக்கிக் கொண்டோருக்கு பதில் எழுதும் போது எங்கிருந்தோ கேட்கும் அசரீரிக்கு ஏற்ப அவற்றைப் படியெடுத்து வைப்பது உண்டு.

தொடக்கத்தில் இருந்தே வருகிறேன்.
இங்கே நீலக் கலரில் உள்ளவை எல்லாம் மிதுளன் எழுதியவை. சிவப்புக் கலர் கொழுவி எழுதியது.

ஏனென்றால் சேலை இந்தியாவின் தேசிய உடை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்

பிறகெப்பிடி.. தமிழ் பொம்பிளையளும் சேலை அணிந்தால் அவ இந்தியா எண்டு தானே அறியாத ஆட்கள் நினைப்பினம்..

சரி உந்தப் பாரம்பரியம் எல்லாம் எப்ப தோன்றினது..? மனிதன் தோன்றி எத்தினை வருசத்தக்கு பிறகு அவை அவை தங்களுக்கான பாரம்பரிய உடைகளை தேர்வு செய்தவை..? என்ன என்ன காரணங்களை முன்னிட்டு தங்களுக்கான உடைகளை தேர்வு செய்தவை..? அப்பிடி தமக்கான உடைகளை தேர்வு செய்யும் போது என்ன என்ன காரணிகளை முன்னிறுத்தியவை எண்டு ஏதாவது தெரியுமோ..?

அது சரி வேட்டி எப்ப தமிழரின் பாரம்பரிய உடையானது. வேஸ்டி என்பது தானே அதனது மூலச்சொல்..
அதை தானே நாம் ட்... சேர்த்து வேட்டியாக்கினோம்.. நிமிஸத்தை நிமிடம் என்றாக்கியது போலவும்.. விஸயத்தை விடயம் ஆக்கியது போலவும்..

வேஸ்டியம் தமிழன் ஏதோ ஒரு மோகத்தில் அல்லது அவனது காலநிலைக்கு வசதியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தனது பாரம்பரிய உடையாக்கியதாகத் தான் இருக்க வேண்டும். அப்பவும் உம்மைப் போல சிலர் அதற்கெதிராக குதித்திருப்பார்கள். ..

சப்பையான முகமுள்ளவர்கள் அனைவரையும் சீனர்கள் என்று நாம் எடைபோடுவதில்லையா? வெள்ளைக்காரன் என்று வெளுத்த தோலுடைய எல்லோரையும் நம்மவர்கள் சொல்வதில்லையா? கருப்பாக இருந்தால் எல்லாம் கறுவல்கள் என்று நாம சொல்வதில்லையா? அதுபோன்றுதான் சேலை அணிந்தவர்களை இந்தியர்கள் என்று பிற நாட்டுக்காரர் தவறாகக் கருதுவார்கள். அப்போது நீங்கள் விளக்கலாம், அய்யா, அம்மா நான் இந்தியனல்ல, தமிழன் என்று.

தமிழர் தமது அடையாளத்தை உணர்த்த சேலை அணிய வேண்டும் எனச் சொல்லும் நீங்கள் பின்னர் சேலை அணிந்தால் அவர்கள் இந்தியர்களாக தவறாக நோக்கப் படுவர் எனவும் அப்போது நாமாகச் சென்று அய்யா அம்மா நான் இந்தியன் இல்லை தமிழன் எனவும் விளக்க வேண்டும் எனவும் சொல்லுகிறீர்கள். பஞ்சாபியை அணிந்து விட்டும் யாராவது தவறாக வட இந்தியப் பெண் என நினைத்தால் நாமாகச் சென்று அய்யா அம்மா நான் வட இந்திய பெண் இல்லை. தமிழிச்சி என விளக்கலாம். என்ன அணிந்தாலும் நாமாக விளக்கினால்த் தான் நாம் யாரென்று புரியுமென்றால் எது அணிந்தால்த் தான் என்ன..?

கொழுவி, வேஷ்டியில் இருந்து வேட்டி வந்தது என்று கூறுகின்றீர். அந்த வேஷ்டிக்கு வேர்ச்சொல் தருவீரோ? உம்முடைய அறிவின்படி வர்ஷசத்திலிருந்துதான் வருடம் வந்தது என்றும் சொல்வீர். ஏனென்றால் நீர் படித்த இடம் அப்படிப்பட்டது.

அரைகுறை அறிவாளிகள் சிலர் ஊரிலையும் வெளிநாடுகளிலும் கவிதை தமிழில்லை, சன்னல் தமிழில்லை என்று தங்களுக்குத் தெரியாதவற்றைத் தமிழல்ல என்றுசொல்ல அதுபோல நூல்களும் அச்சிட்டு வெளிவருகின்றன. அவர்களிடம் வகுப்பெடுத்த உங்களை மீட்டெடுப்பது கடினம்.

வேஸ்டிக்கு வேர்ச் சொல்லா.. வேட்டிக்கு வேர்ச்சொல் வேஸ்டி என்பது தெரியும் . வேஸ்டிக்கு எது வேர்ச்சொல் என அறிய நான் வடமொழி அறிந்திருக்க வேண்டும். ஜன்னல் என்பதில் இருந்து மருவியது சன்னல். இதற்கு தமிழில் அழகான சாளரம் என்ற சொல் உள்ளது.

அன்றாடம் வீட்டில் சாரம் கட்டும் நம் தமிழர்கள் அதற்குப் பதிலாக வேட்டி கட்டினால் குறைந்துபோக மாட்டார்கள

வேட்டிக்கும் சாரத்திற்கும் இடையில் நிறம் ( சில வெள்ளை நிற சாரமும் உள்ளன) மற்றும் துணி வேறுபாடு தவிர நன்றாக காற்றுப்புகும் என்பதில் ஒற்றுமை ஒன்று தான். வேட்டி கட்டினால் எந்த விதத்தில் தமிழர் கூடிப் போவார்கள். ?

முஸ்லீம்களின் வருகையுடன் வந்த சாரம் தமிழர்களிடம் நிலைத்திருக்கும்போது, தமிழர்களின் ஆடையான வேட்டி நிலைத்திருக்க வேண்டும்,

முஸ்லீம்களின் வருகையோடு சாரம் வந்தது போலவே வேட்டியும் வந்தது. இரண்டையும் வசதி கருதியும் கால நிலை கருதியும் ஏற்றுக் கொண்டோம். அது போலவே தமிழனின் வெளியேறுகையோடு பஞ்சாபியும் ஜீன்சையும் வசதி கருதியும் இலகு கருதியும் ஏற்றுக் கொள்ளலாம்.

சேலையும் வேட்டியும் தமிழரின் பாரம்பரிய உடையென்று ஆரூரனுக்கு சொன்னவர் யார்..?

இத்தனை முரண்கள் உள்ள போதும் நான் உமது தாய் தந்தையரையோ அல்லது படித்த இடத்தையோ இங்கே இழுத்து வரவில்லை. அதற்க காரணமும் நான் படித்த இடம் தான் என நீர் சொன்னால் மகிழ்வுறுவேன்.-

அனைத்து வகைப் பின்னூட்டங்களும் ஏற்கப் படும் (ஆபாசாப் பின்னூட்டங்களை என்ன செய்வாய் என ஒர அசரீரி கேட்கிறது.)

Tuesday, January 23, 2007

LIC யின் பரபரப்பு அறிவிப்பு

தமிழகத்தின் LIC காப்புறுதி நிறுவனம் திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. தமது நிறுவனத்தில் காப்புறுதி பெற்றிருக்கும் யாராவது வீராசாமி திரைப்படத்தினைப் பார்த்த பின்னர் மரணமடைந்தால் அவர்களுக்கான காப்புறுதி வழங்கப்பட மாட்டாது என அவ்வறிக்கை கூறுகிறது.

ஏனெனில் இவ்வகையான மரணங்கள் தற்கொலைப் பிரிவின் கீழ் வருவதாலும் தற்கொலைக்கு தமது நிறுவனம் காப்புறுதி வழங்காது என்பதாலும் இந்த முடிவினை எடுக்க நேர்ந்ததாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Saturday, January 06, 2007

வக்கிரம் பிடித்த கொழுவி - சிறீரங்கன்

இந்த நிலையில் பேடித்தனமாகக் கொழுவியும்,பெடியன்களும் பதிவிட்டு,நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.இதற்கு மேலால் இத்தகைய தலைமுறையால் என்னத்தைப் புதிதாகச் சிந்தித்திருக்க முடிந்தது?பெடியன்களின் பெயரால் சுவிஸ்,சிங்கப்ப+ர்,அவுஸ்திரேலியாவில் இருக்கும் பேடிகள் எழுதுவதற்கு வக்கற்று மற்றவர்களைக் கேலி பேசுவது ஒரு வகை மாபியத்தனத்தின் திமிர்தான்.இத்தகைய திமிரில் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் என்பது ஊரறிந்த விடையம்.

சிறிரங்கன் அவர்கள் கொழவி குறித்து எழுதிய மேற்படி விடயம் பற்றிய சில எண்ணங்கள் இவை.
இதிலே பேடித்தனமாக கொழுவி என்ன எழுதினார் என்பதை அவர் தெளிவாக குறிப்பிட வில்லையாயினும், கொழுவியில் வெளியான அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு தொடர்பாகவே தனக்கேற்பட்ட சூட்டை இவ்வாறு தணித்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. பேடிகள், வக்கிரம், மாபியா, திமிர் இத்தகைய வார்த்தைகள் எல்லாமே அவருக்குள் கிளர்ந்தெழுந்த சூட்டின் வெளிப்படுத்தல்கள் தான்.

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும் என்ற பதிவு, சிறிரங்கன் தனது பதிவில் ஏலவே எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற அவரது பதிவின் நீட்சிதான். தொடர்ச்சி தான். தழுவல் தான்.

இதில் எங்கிருந்து மன வக்கிரம் எழுகிறதோ, அல்லது எங்கு கொழுவிக்கு திமிர் பிடிக்கிறதோ தெரியவில்லை. அவ்வாறேதும் இருப்பின், அது அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவினை எழுதும் போது சிறிரங்கனுக்குள் இருந்த மன வக்கிரம், மற்றும் மாபியாத்தனம் ஆகியவற்றின் நீட்சியே பின்னர் அது தொடர்பான பதிலெழுதும் போதும் எனக்குள்ளும் எழுந்திருக்கும்.

அடுத்த பந்திக்குள் செல்வதற்கு முன் இந்த இடைச்செருகல் அவசியமாகிறது. சிறிரங்கன் அகரன் போன்ற பதிவர்களுக்கிடையிலும் இராயகரன் போன்ற பதிவர்களுக்கிடையில் என்னளவில் அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இராயகரனின் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வாசிக்கும் போது அதனை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் மற்றவர்கள் தாம் என்ன நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களோ அது நடக்கும் வரை காத்திருந்து நடந்ததும் அது பற்றி காரசாரமாக எழுதுகிறவர்களாகத் தான் தோன்றுகிறார்கள். இதோ கிழக்கில் புலிகளுக்கு, அல்லது ஒட்டு மொத்தமாகவே புலிகளுக்கு இராணுவத் தோல்வி ஏற்பட்டு விடும் என்பதனை முன் கூட்டியே இவர்கள் தீர்மானித்த பிறகு மிகுந்த மன உற்சாகத்துடன் எழுதித் தள்ள காத்திருக்கும் இவர்கள் இது போலவே இன்னும் நிறைய விடயங்களில் ஒன்று படுகிறார்கள்.

சிறிரங்கன் ஆரம்பம் முதலே குழப்பான கருத்துக்களை அந்த, அந்த நேரத்து உணர்ச்சிகளுக்கு அமைய எழுதிவருபவர் என்பது நான் எனக்குள் தீர்மானித்து விட்ட ஒன்று. குறிப்பாக சில காலங்களுக்கு முன்னர் புலிகளின் தொண்டரடிப்பொடிகள் சிலரின் இணையத்தில் வெளிவந்த அவருடைய படத்துடனான ஒரு செய்தியை மட்டும் (அது மன உளைச்சலைத் தரக்கூடிய செய்தியே என்பதில் மறுப்பேதும் இல்லை) வைத்துக் கொண்டு மிக அழகாக திரைக்கதை அமைத்து தன் மீதான நேரடிக் கொலை மிரட்டல் நாடகத்தினை அரங்கேற்றியவர். கூடவே ஜேர்மனியில் உள்ள இணைய மையங்களில் தனது புகைப்படத்துடன் கூடிய நோட்டிஸ் அச்சடித்து விநியோகிக்கப்படுவதாக வேறு கூறியவர்.

அது போலவே பொடியன்கள் என்ற இலக்கற்ற பதிவொன்றின் தொடக்கத்தில், அது ஈபிடிபி என்னும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது என்றும், இதய வீணைக் காரரின் வலை, என்றும் டக்ளசின் பதிவு என்றும் பயமுறுத்திய அதே சிறிரங்கன் தான் இப்போது அதற்கு வேறு முகவர்களை நியமித்திருக்கிறார்.

(சிறிரங்கன் ஜனநாயகம் கருணா பரமுவேலன் நிர்மாணம் என பல்வகை பதிவுகளின் சொந்தக்காரர் ஆயினும் அதில் ஏதும் தவறு இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் அவை அனைத்துமே அவரது சொந்தக் கருத்துக்களையே பிரதிபலிக்கின்றன. )

அவருக்குள் இயல்பாக எழும் உணர்ச்சிகளை சில சமயங்களில் வார்த்தைகளாக அவர் ஆக்கி விடுவது சில சமயங்களில் அவரை தெளிவாக இனம் காட்டும். அவ்வாறான ஒரு பதிவை இங்கு படியுங்கள்

இத்தனைக்குப் பிறகும் சிறிரங்கன் பிரபாகரனை மோடன், முட்டாள் என்பதையோ அல்லது அன்ரன் பாலசிங்கத்தை தனது எரிந்த வார்த்தைகளால் நாற்றமடிக்க அர்ச்சிப்பதையோ நான் எந்த வித கோப தாப எழுச்சி உணர்ச்சிகளும் அற்று வாசிக்கிறேன்.

ஆனால் அவ்வாறு எழுதுவதற்கு அவருக்கு உள்ள அதே சுதந்திரத்தையும் உரிமையையும் நானும் கொண்டிருக்கிறேன். அவ்வாறே நானும் எழுதுவேன். ஆனால் அப்போது மட்டும் அவர் ஓடிவந்து உது வக்கிரம், மாபியா தனம், திமிர் என்று சொல்வது மீளவும் அவரைத்தான் முகமுரித்துக் காட்டுகிறது.

புலிகள் தொடர்பான முக்கிய குற்றச்சாட்டுக்களில் ஒன்று அவர்கள் மீதான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாத போது வேறு வழிகளில் கேள்வியை நிறுத்துவது என்பது. அதுவே சிறிரங்கனிடமும் உள்ளது. அடிப்படையில் அனைவரிடமும் உள்ளது.

அன்ரன் பாலசிங்கத்தை கிண்டலடிக்க அவர் பயன்படுத்திய அதே வார்த்தைகளை அதே வசனங்களை அவர் மீது பிரயோகித்தவுடன் பொறுக்க முடியாமல் பொங்கியெழும் அவரைத்தான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் வார்த்தைகளாகப் பார்த்தோம்.

அவர் தொடர்ந்தும் பிரபாகரனைப் பற்றியும் பாலசிங்கத்தைப் பற்றியும் இன்னும் எல்லோர் பற்றியும் தொடர்ந்து எழுத வேண்டும் . ஏனெனில் எமக்கும் எழுத நிறைய இருக்கிறது.

சிறிரங்கன் எழுதிய அரசியல் அண்ணாச்சியும் ஒரு தம்பியும், ஆசியன் கடையும் என்ற பதிவை வாசித்த பின்னர் இதோ அவர் எழுதிய அவரது சொந்த வார்த்தைகளையும் வாசியுங்கள்.
நக்கல் நையாண்டி பண்ணுவதுகூட ஒரு வகை மனவக்கிரம்தாம்.

Friday, December 29, 2006

இந்தியா அமெரிக்காவின் மாநிலமாக

ஜடாயுவின் ஒரு பதிவினை இன்னு தான் பார்க்க நேர்ந்தது. அதில் இடம் பெற்றிருந்த ஒரு பின்னூட்டம் இலங்கையில் கொழுந்து விட்டெரியும் தமிழர் பிரச்சனைக்கு இது வரை சொன்ன சாத்வீக ஆத்வீக சமாதானத் தீர்வுகள் அனைத்திலும் ரொம்ப (நகை)ச் சுவையானது.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. தனிக்காட்டு ராஜாவாக இருக்க விரும்பு ராஜப§க்ஷ, ஈழத்தலைவர்களுக்கு அது உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.


ஆனால், இலங்கையில் இருக்கும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் அதுதான் நல்லது.

இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது.

எட.. இப்பிடியொரு தீர்வு இவ்வளவு நாளும் எங்கடை தலைவர்மாருக்கும் எங்களுக்கும் தெரியாமல்ப் போட்டுதே. இதில மிகப் பெரும் பகிடி என்னெண்டால் அப்படி நாங்கள் மாநிலமா இணைஞ்ச பிறகு அதைப் பாத்து நேபாளம் பூட்டான் நாடுகளும் இந்தியாவோடு வந்து இணைவினமாம். பச்சையாச் சொன்னா உது அந்தக் காலச் சோழ சேர பாண்டியரின் நாடு பிடிக்கும் எண்ணத்தின்ர மிச்ச சொச்ச எண்ணம் தான்.

இதைப் படித்த உடனை எனக்கும் சில தீர்வுகள் தோன்றியது.
இந்தியாவில் வறுமை ஒரு முக்கிய பிரச்சனை. இதிலிருந்து விடுபட இந்திய மக்கள் தங்களை அமெரிக்காவுடன் இணைக்கச் சொல்லி கேட்கலாமே..Green Card ம் இலகுவாக கிடைக்கும். அவ்வளவும் ஏன் அடிமையாயிருந்தால் என்ன குறைஞ்சா போயிடுவம்.. இங்கிலாந்துக்கு கீழையே தொடர்ந்தும் இருந்திருந்தால் எல்லா வசதிகளும் கொண்ட (உண்மையாகவே) ஊழல் அற்ற ஆட்சியொன்று கிடைத்திருக்குமே..

இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இந்தியா இலங்கை சிங்கப்பூர் அவுஸ்திரேலியா முதலான எல்லா நாடுகளும் அமெரிக்காவோடு இணைந்தால் நாடுகளுக்கு இடையில் ஒரு பிரச்சனையும் வராது. உலகத்துக்கு ஒரு நாடு உண்மையில நல்ல விசயம் தான். முதலில இந்தியா போய் இணைந்தால் வறுமைப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காணலாம். அதனைப் பார்த்து நேபாளம் பாகிஸ்தான் முதலிய நாடுகளும் அமெரிக்காவோடு இணைய முன்வரும்.

ஆகக் குறைந்தது காஸ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காவது இந்தியா பாகிஸ்தானின் 15 மாநிலங்களானால் அது நல்ல ஒரு தீர்வைத் தரும்.

இறுதியாக

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இந்தக் கேள்வியின் படி கட்டாயமான ஒரு சூழ்நிலை வருமென்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோமே.. கண்டிப்பாக இந்தியாவுடன் தான் இணைந்து கொள்ள வேண்டுமா..?
அவுஸ்திரேலியாவுடன் இணையலாமே..

Thursday, December 28, 2006

ஈழம் வீடியோ பாடல்

பச்சை வயலே என்ற இந்தப் பாடலுக்காக பிரத்தியேகமாக எந்தக் காட்சியையும் ஒளிப்பதியாமல் தினம் தினம் ஈழத்தின் காட்சிகளை மட்டும் கொண்டு பாடலுக்கு காட்சியமைத்திருக்கிறார்கள்.
காட்சியில் இடம் பெற்றிருக்கும் குண்டு வீச்சு காட்சிகளும் மக்களின் அவலச் சாவும் நிதம் நிதம் ஈழத்தில் நடக்கும் காட்சிகள்.
தேனிசை செல்லப்பாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் வீடியோ பதிவு இது


Friday, December 22, 2006

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும்

டேய் ரங்கா வாடா வா!என்னமாதிரிப் போகுது பாடு?

மணியண்ணை! என்னத்தைச் சொல்லிறது? வயிறெரியுது.

ஏன்ராப்பா, மனுசி ஏதும் உறைப்பாத் தந்திட்டாளோ?

சும்மா விசர்க்கதை கதைக்காதையுங்கோண்ணை. நாட்டில உலகத்தில நடக்கிறதுகளைப் பாத்து எரியுது எண்டுறன்.

எட, அதையோ சொல்லிறாய். அப்பிடி எரியிறதுக்கு புதுசா என்ன தான் நடந்தது?

என்னண்ணோய் இப்பிடிச் சொல்லுறியள்?
அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் கூட்டமெண்டு பெரிய கூட்டமெல்லோ? உலகப்புகழ்பெற்ற டயானாவுக்கே இப்பிடியில்லையெண்டு வெள்ளையளே சொல்லுதுகளாம்.


நீ எதைச்சொல்லிறாய், எதுக்கு வயிறெரியிறாய் எண்டு எனக்குச் சரியாத் தெரியேல. சரி அதைவிடு... வாற ஞாயிறு வீட்டில கூழ் காய்ச்சிறன். வாவென் ஒருபிடி பிடிப்பம்.

அண்ணை, நீங்கள் கதைய மாத்தாதையுங்கோ. விளங்கியும் விளங்காத மாதிரி நடியாதையுங்கோ.

உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?

ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?

அதுதான் நீயாய்ச் சேர்த்து ஏற்கனவே நாறிப்போயிட்டியே. நக்கலுக்கு மட்டும் குறைவில்லை. அவங்களெண்டாலும் கலாநிதிக்குப் படிச்சு கடசிவருசத்தை முடிக்காமல் விட்டாங்கள்.. அதுவும் ஏலாமல் விடேல, இடையில போராட்டப் பாதையைத் தெரிவுசெய்து படிப்பை முடிக்காமல் வந்திட்டாங்கள். எண்டாலும் அவங்களுக்கு கலாநதிக்கும் மேல அறிவும் திறமையும் இருந்தது.
நீ என்னத்தைக் கிழிச்சுப்போட்டு இங்கிலீசில இருவத்தாறு எழுத்தையும் அங்க இஞ்சையெண்டு மாத்திப்போட்டு டாக்குத்தர் எண்டு பட்டம் போட்டுக்கொண்டு அலம்பித் திரிஞ்சனி?

பத்ததாததுக்கு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிறனெண்டும் சிலருக்கு டோஸ் விட்டுக்கொண்டிருந்தாய். டாக்குதர் வேலைக்குரிய மாதிரி ஒரு துரும்பாவது படிச்சனியோ? நீர் ஊருக்க உப்பிடி புழுகித் திரியேக்க அதையும் நம்பிக்கொண்டு, உன்னை ஆரோ வெருட்டினவங்கள் எண்டு நீ கதைவிடேக்க, உனக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரிய கூட்டமே வந்ததுதான்.
உந்தளவுக்கு 'ஓட்டு மாட்டு' வேலைகள் செய்த உனக்கு மற்றவங்கள் பட்டம் குடுக்கிறதைப்பற்றி, அதுவும் தகுதிக்குரிய பட்டம் குடுக்கிறதைப்பற்றி நக்கலடிக்க என்ன அருகதை மோனே கிடக்கு?


சரிசரி, எதுக்கண்ணை இப்ப உதுகளைக் கிழறுறியள். நான் என்ன கதைச்சாலும் உதைச்சொல்லி குத்திக்காட்டிக்கொண்டிருக்கிறியள். நான்தான் பழசுகளையெல்லாம் மறைச்சுப்போட்டேனே?

அடடா! பழசுகளை மறைச்சுப் போட்டால் மட்டும் நீ அப்பாவியோ?
இந்த ஊருக்குப் புதுசா வந்த மனுசருக்கு வேணுமெண்டால் அதுகள் தெரியாமல் இருக்கும். ஆனா பழய மனுசருக்குத் தெரியாமலிருக்குமோ? மறந்துதான் போயிருப்பினமோ?


சரியண்ணை, அதை விடுங்கோ. அதுவொரு துன்பியல் சம்பவம். உவங்கள் ரெண்டொருபேர் உதைப்பற்றிக் கதைக்காமல் விட்டால் பிரச்சினைவராது.

அதுதான்ராப்பா பிரச்சினை. நீயும் உப்பிடி பட்டம் குடுக்கிறதைப்பற்றி வயித்தெரிச்சலில விழல்தனமா உளறாமல் இருக்கும்வரைதான் உன்ரபேர் சந்திசிரிக்காது.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

என்னடாப்பா சத்தத்தைக் காணோம்.
சரி, வாற ஞாயிறு மறக்காமல் கூழுக்கு வந்திடுது.
அங்க மிச்சத்தைத் தொடருவம்.


இல்லையண்ணை, நீங்களும் நாசுக்கா, பம்பல் பம்பலாக் குத்துறதில விண்ணன்.

ஏன்ராப்பா, உனக்கு மட்டும்தான் உப்பிடிக் குத்தத் தெரியுமெண்டோ இவ்வளவுநாளும் நினைச்சுக்கொண்டிருந்தனி?

*****************************
இங்கு நாசுக்காகக் குத்துவது மட்டுமே அனுமதிக்கப்படும்.
சிலவசனங்கள் அப்படியே திருடப்பட்டவை.

Friday, December 15, 2006

பாலாண்ணை நினைவுப் பாடல்

பாடல் இசை வர்ண இராமேஸ்வரன்
நன்றி தமிழ்நாதம் இணையம்


பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் 2

தேசத்தின் குரல் பாலாண்ணையின் மறைவையொட்டி தமிழகத்தின் அரசியல் பிரமுகர்களின் இரங்கல் செய்திகளின் இரண்டாவது பதிவு
நன்றி பதிவு இணையம்
தியாகு



ராமகிருஸ்ணன்



இல கணேசன்



வைகோ


பரிசோதனை

பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் என்ற பதிவை தமிழ்மணத்தில் இணைத்தால் புதிய இடுகைகள் எதுவுமில்லை என செய்தி வருகிறது. அதனால் இந்தப் பரிசோதனை.

பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் 1

தேசத்தின் குரல் பாலாண்ணையின் மறைவையொட்டி தமிழக அரசியல் சமூக பிரமுகர்களின் கண்ணீர் அஞ்சலிகளை கீழே தொகுத்திருக்கிறேன்.
நன்றி பதிவு இணையம்

பழ நெடுமாறன்



சுப வீரபாண்டியன்



திருமாவளவன்



குளத்தூர் மணி


Thursday, December 14, 2006

மதியுரைஞர் பாலா அண்ணை நினைவாக

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று லண்டனில் காலமாகினார். தமிழீழ தேசிய விடுதலைப் போரில் கடந்த 30 வருடங்களாக பக்கத் துணையாக இருந்து வந்த அவரது இழப்பு நிரப்பிக் கொள்ள முடியாத இழப்பாகும்.

பாலா அண்ணையின் நினைவாக அவர் கடந்த 2005 மாவீரர் தின நிகழ்வில் லண்டனில் ஆற்றிய உரையின் வீடியோ வடிவம் இது.


Thursday, December 07, 2006

மீள்பதிவு இடுவது எப்படி?

இதோ இப்படித்தான்

தரகு முதலாளித்துவமும் மனைவியும்.

அப்பப்பா என்ன வெயில்?
இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள். அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்…
அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?

பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சுரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும்.
நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம்.
எனக்கெதுக்கு அதெல்லாம்.
நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம்.
சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

ஆம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாரும்.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

யாழ்ப்பாணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என அகரனும் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என சூரமணியும் பதிவிட்டிருந்தனர். என் பங்குக்கு நானும் ஒரு பதிவிட விரும்புகிறேன். யாழ்ப்பாணத்தில் இப்போது ஆடு மாடு நாய் கோழி என்பன நடக்கின்றன. அது தவிர நடப்பன வகையைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும் நடக்கின்றன. இப்ப வாகனங்களுக்கு பெற்றோல் மண்ணெண்ணையில்லாததால் சனமும் நடக்கினம்.


Wednesday, November 29, 2006

நன்றி இந்தியா..

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள்இ பொருளாதாரத் தடை மற்றும் பட்டினி அவலங்களைக் கண்டித்து ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தக் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐப்பான் நியூசிலாந்து சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் உரிமைகளுடன் வாழ்வதற்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்கள் இரும்புச் சிறைக்குள் தமிழ் மக்களை சிறிலங்கா வைத்திருக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவாதத்தின் போது சிறிலங்கா அரசுக்கு சார்பாகப் பேசிய பிரித்தானிய நாட்டுப் பிரிதிநிதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். அவரின் கருத்தை மறுத்துப் பேசிய சுவிற்சர்லாந்தின் ஐ.நா. பிரதிநிதி தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார். பின்னர் பிரித்தானியப் பிரதிநிதியின் கருத்து நிராகரிக்கப்பட்டு சுவிற்சர்லாந்துப் பிரதிநிதியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்து பேசிய நியூசிலாந்து நாட்டுப் பிரதிநிதி தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாக இருக்கின்ற போதும் அவர்கள் உறுதி குலையாதவர்களாக இருப்பதாகவும் அவர்களுக்கு மனித உரிமைகள் என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனையடுத்து ஜப்பானியப் பிரதிநிதி தமிழ் மக்களின் நியாயமான குரல்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இதற்கான முழு உத்தரவாதத்தை சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்கா விட்டால் சிறிலங்கா அரசு மீது பாரிய பொருளாதாரத்தடையை ஜப்பான் கொண்டு வர நேரிடும் என்ற எச்சரிக்கையையும் ஜப்பானியப் பிரதிநிதி விடுத்தார்.

இனிதான் நாம் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆம் இந்தக் கண்டனத்தீர்மானத்தில் இந்தியா சிறிலங்கா அரசு சார்பான நிலையை எடுத்து சிறிலங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறது. அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மதிக்கிறது என பக்கத்து நாடு பரிந்து பேசியிருக்கிறது.

நன்றி இந்தியா..
கோடி நன்றி

மாவீரர்நாள் உரையில் ஏமாற்றிய பிரபாகரன்

உலகத் தமிழரையும் ரஜனி ரசிகர்களையும் ஏமாற்றிய தலைவர்.

'உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும்' என்ற அடைமொழியுடன் கொஞ்சநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மாவீரர்நாள் உரை முடிந்துவிட்டது.
பலதரப்பட்டவர்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள். பலருக்கு நிறைவையளித்து அவர்களின் எதிர்பார்ப்புக்களை ஓரளவாவது தீர்த்து வைத்துள்ளது அவ்வுரை. சிலருக்கு எரிச்சலையும் விசனத்தையும் கொடுத்துள்ளது.
பலதரப்பட்டவர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகள் இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு விடயத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது பிரபாகரனின் இவ்வருட உரை.

அது என்ன விடயம்?

எதிர்பார்க்கப்பட்டபடி இலங்கையின் இப்போதைய நிலைவரம், அரசியற்சூழல், போர் நிலைமை என்பவற்றைச் சொல்லி, தமிழரின் பாடுகள், வேதனைகள் என்பவற்றைச் சொல்லி, இன்னும் பன்னாட்டு அரசியலையும் அவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டையும் குறிப்பிட்டு இறுதியில் புலிகளின் நிலைப்பாட்டையும் சொல்லியவிதத்தில், அவரின் உரை சரியானதே. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய விடயமொன்றைப் பற்றி வாயே திறக்காமல் விட்டுவிட்டார்.

அது என்ன விடயம்?

உலகத் தமிழர்கள் அனைவரும் பிரபாகரனிடமிருந்து எதிர்பார்த்த கருத்து ஒன்றுண்டு.
கடந்த மாவீரர் நாள் உரையிலேயே தெளிவுபடுத்தவேண்டியிருந்தும் தவறவிட்ட 'சந்திரமுகி' படம் பற்றிய பிரபாகரனின் கொள்கை விளக்கவுரையை இவ்வருட மாவீரர் உரையிலாவது தருவார் என்ற 'உலகத் தமிழர்களின்' எதிர்பார்ப்பில் அவர் மண்ணைப்போட்டுவிட்டார்.
மேலும் வெளிவரவிருக்கும் 'சிவாஜி' படம்பற்றியும் எந்தவொரு சொல்தானும் சொல்லவில்லை என்றளவில் தமிழர்களை இன்னும் கடுப்பில் ஆழ்த்திவிட்டார்.

அந்தவகையில் 'சந்திர முகி' பற்றியும் இனி வெளிவரவிருக்கும் 'சிவாஜி' பற்றியும் எந்தவொரு குறிப்பையையும் சொல்லாமல் விட்டதன்மூலம் உலகத்தமிழர்களை ஏமாற்றியுள்ளார் பிரபாகரன்.

இதன்பின்னாலுள்ள அரசியல் சூட்சுமங்களை இனிவரும் காலத்தில்தான் நாம் அறிந்துகொள்ள முடியும்.


கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்
விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும்

Monday, November 27, 2006

விரைவில் எதிர்பாருங்கள்

விரைவில் எதிர்பாருங்கள்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் உலக நாடுகள் புலிகளின் தலைவரின் உரையை கண்டிக்க இருக்கின்றன. அது தவிர புதிய ஜனநாயகப் புரட்சியை வேண்டுவோர் மற்றும் மாற்று (இயக்கக் காரர்) கருத்தாளர்களும் பிரபாகரனின் உரையை வரிக்கு வரி ஆராய்ந்து முட்டையில் மயிர் பிடுங்க இருக்கிறார்கள்.

ஆகவே நண்பர்களே அனைத்தையும் படித்து இன்புற இப்போதே தயாராகுங்கள்.