Showing posts with label கண்காட்சி. Show all posts
Showing posts with label கண்காட்சி. Show all posts

Tuesday, January 06, 2009

சென்னைப் புத்தக கண்காட்சியில் கொழுவியின் இரு புத்தகங்கள்

வரும் எட்டாம்திகதி சென்னையில் ஆரம்பிக்கும் புத்தக கண்காட்சியில் கொழுவி எழுதிய இரு புத்தகங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஈசானமூலைப் பதிப்பகம் அவ்விரு புத்தகங்களையும் பதிப்பித்திருக்கிறது. அவை பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு தருகின்றேன்.

1. கிளிநொச்சி வீழ்ந்தது எப்படி? ஓர் இரவின் முடிவு -
ஈழத்தில் புலிகளின் பலமான கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி வீழ்ந்தமை தமிழ் உலகில் பரபரப்பான செய்தியானது. கிளிநொச்சியை விட்டுப் புலிகள் பின்வாங்க நேர்ந்ததன் பின்னால் உள்ள இதுவரை வெளிவராத இராணுவ சூட்சுமங்கள் அரசியல் முடிச்சுக்களை கொழுவி இப்புத்தகத்தில் அழகாக அவிழ்க்கிறார். கிளிநொச்சிப் போர் குறித்த ஒரு குறுக்கும் நெடுக்குமான வெட்டுப் பார்வையை இப்புத்தகம் வாசகர்களுக்கு வழங்கும். 234 பக்கங்கள் உடைய இப்புத்தகம் ஒரு இராணுவவியற் பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது. விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே.

2. முல்லைத் தீவு வீழுமா ? முடிவா ஆரம்பமா?
கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் இலங்கைப் படைகள் முல்லைத்தீவை நெருங்குகின்றன. முல்லைத்தீவும் புலிகளின் பலமான கோட்டைதான். புலிகளின் தலைவரது அலுவலகமும் தங்குமிடமும் முல்லைத்தீவில் அமைந்துள்ளதாகவே இலங்கை அரசு கூறுகிறது. இந்நிலையில் முல்லைத் தீவையும் இலங்கை படைகளிடம் புலிகள் கைவிடுவார்களா மாட்டார்களா என்பதை இராணுவ அரசியல் நோக்கில் ஆராய்கிறது இப்புத்தகம். முல்லைத் தீவு வீழ்ச்சியின் பிறகு புலிகளின் எதிர்காலம் குறித்தும் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது. 366 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை வெறும் 200 ரூபா மட்டுமே.

மேற்குறித்த இரு பிரதிகளும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகளே அச்சிடப் பட்டுள்ளமையால் பதிவுக்கு முந்துங்கள்.

அடுத்த புத்தக கண்காட்சியில் புலிகள் அழிந்தது எப்படி அல்லது சிங்கள இராணுவம் வீழ்ந்தது எப்படி என்ற இரண்டில் ஏதாவது ஒரு புத்தகம் போடும் அருமையான வாய்ப்பும் எமக்கு கிடைத்திருக்கிறது. வாருங்கள் காற்றுள்ள போதே தூற்றுவோம்.