Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Friday, October 19, 2007

ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அனைவரும் அணிதிரள்க!

நம்ப ஏலாமல் கிடக்கோ? இருந்து பாருங்கோ இப்பிடியோர் அறிவிப்பு கெதியில வரத்தான் போகுது.

சித்தாந்தங்களையும் புத்தகங்களையும் அப்பிடியே வரிவிடாமல் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு காவடியாடுற கூட்டம் இப்பவும் நிறைய இருக்கத் தான் செய்யுது. பிரதேச, கலாசார, நுட்பங்களுக்கு ஏற்றாற்போல் அவற்றின் பயன்பாடும் தேவையும் மாறுமென்ற அடிப்படைப் புரிதல்கூட இருப்பதில்லை இவர்களுக்கு.

மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில் குடைபிடித்தவர்களும் சீனாவில் வெயிலடித்தால் சித்தங்கேணியில் நிழல் தேடியவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். துன்பம் என்னவென்றால் இன்றும் அப்படியான கூட்டங்களைப் பார்க்கமுடியும்.

தமிழ்வலைப்பதிவுகளில் அப்படியான நிறையப்பேரைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்ததால் அவரின் அடிபொடிகள் அதை அப்பிடியே ஈழத்திலும் கொப்பி (காப்பி) பண்ணி அங்கும் பார்ப்பனிய எதிர்ப்புச் செய்கிறார்களென்பதைப் பார்க்கும்போது இவர்களுக்கும் பெரியாருக்கும் இருக்கும் தொடர்பு மாஸ்கோவுக்கும் மானிப்பாய்க்கும் இருக்கும் தொடர்பு போற்றான் தெரிகிறது.
அதே அடிபொடிகளிடமிருந்து விரைவில் வரப்போகும் அடுத்த "கலக" அறிவிப்புத்தான் ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

அப்படியொரு போராட்டத்தை அறிவித்து நோட்டீசு அடித்துப் "போராட"ப்போகும் தளபதி, தலைவிகளை வாழ்த்தி விடைபெறுகிறேன்

வணக்கம்! நன்றி!

முத்திரைகள்: தமிழ் இஞ்சி மிளகு மா சீனி மணி கலகம் கலக்கம்

Monday, April 23, 2007

இந்தத் தமிழ் எப்படிப் புரிகிறது?

கீழே ஒருவசனம் தந்திருக்கிறேன்.
அவ்வசனத்தை நீங்கள் எப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்பதைப் பின்னூட்டமாகத் தெரிவியுங்கள்.
இது எனது தமிழ்ப்புரிதலை மீள்பார்வைக்கு உட்படுத்தும் ஒரு நடவடிக்கை.
'இயன்றவரை தமிழில்' எழுதப்பட்ட ஒருவசனம் என்போன்ற சிலருக்கு ஒருமாதிரியும், இன்னும் சிலருக்கு முற்றாக வேறுமாதிரியும் விளங்குவது ஏனென்றுதான் எனக்கு விளங்கவில்லை.

இனி கீழே வருவது தமிழ்மண நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றில் வந்த வசனம்.

இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் அமெரிக்கநீதித்துறையின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை'




மேற்படிப் பத்தியில்,
எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.


என்றுவரும் வசனத்தின் பொருள்தான் சிக்கலைக் கொடுக்கிறது.
இதில் நான் விளங்கிக்கொள்வது:
தமிழ்மணத் திரட்டி நிர்வாகத்தில் இருப்பவர்கள் "தமது செயற்பாட்டு விவரங்களை" தார்மீகக் காரணங்களுக்காக' தாமே விரும்பினால் மட்டுமே சக வலைப்பதிவர்களுக்குத் தரலாம் என்று சொல்கிறார்கள்.
அதாவது யார்யார் திரட்டியில் என்னென்ன பணி செய்கிறார்கள், என்பது தொடர்பான விவரங்களை என்று கருதிக்கொள்ளலாம்.

இதுதான் மேற்படி வசனத்தில் என்போன்றவர்களுக்கு விளங்கிக்கொண்டது.

ஆனால் வேறுசிலரோ வேறுமாதிரி இதை விளங்கிக்கொள்கிறார்கள். எப்படியென்றால்,

"திரட்டி நிர்வாகம் தார்மீகக் காரணங்களுக்காக தாமே விரும்பினால், திரட்டியில் இணைந்திருக்கும் பதிவர்களின் விவரங்களை சக பதிவர்களுக்கு வெளியிடும்"

மேலே நீலநிறத்தில் இருக்கும் முறையில் விளங்கிக்கொண்டவர்களுக்கும் அதற்கும்மேலேயுள்ள முறையில் விளங்கிக்கொண்ட என்னைப்போன்றவர்களுக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு?

மற்றவர்கள் தற்செயலாகத்தான் தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால் -/பெயரிலியின் இடுகையைப் படித்தபின்னும் தொடர்ந்தும் அதேகருத்தில் இருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு எனது தமிழ்மேலேயே ஐயம் வந்துவிட்டது.
நாங்கள் கொஞ்சப்பேர்தான் தமிழைப் பிழையாகப் பயன்படுத்துகிறோமோ?

சரி, தனியே அந்த வசனத்தை மட்டும் வாசித்தறிவதில்தான் சிக்கல் என்றால் அவ்வசனம் வரும் பத்தியை (இவ்விடுகையின் தொடக்கத்தில் மேற்கோளிடப்பட்ட பத்தி) வாசித்தால் இன்னும் விளக்கம் கிடைக்கும்.

அதனால்தான் யார்யாருக்கு எப்படியெப்படி தமிழ்மண நிர்வாகத்தினரின் அறிவிப்பு வசனம் விளங்கியுள்ளது என்பதை அறிய இவ்விடுகை.
மேலே இரண்டுவிதமான புரிதல்களைத் தந்துள்ளேன். அதில் கொழுவியின் புரிதலா, மற்றவர்களின் புரிதலா உங்களுடைய புரிதல் என்பதைப் பின்னூட்டத்தில் சொன்னால்போதும். அவை இரண்டையும்விட வேறேதாவது புரிந்தால் அதையும் எழுதுங்கள்.

யார் சொன்னது மொழி தொடர்பாடலுக்கானது மட்டுமென்று?
தமிழ் மிகச்சிறந்த அரசியல் மொழியாகவும் உள்ளது.

***
இவ்விடுகையும் விளங்காமல் வழமைபோல் 'இலங்கைத் தமிழில் காமடிப் பதிவாகவே' தெரியச் சாத்தியமுள்ள சிலருக்கு, அவர்களுக்குப் புரியும்வண்ணம் ஒருவர்மூலம் மொழிபெயர்த்து இடஇருப்பதால் அதுவரை அவர்கள் பொறுமை காக்கும்படி கொழுவியாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்.


****
இவ்விடுகைக்கு, 'விழிப்புணர்வு' என்ற குறிசொல் கொடுக்கப்பட்டது தற்செயலானதே. யாரும் கண்டுகொள்ள வேண்டாம்.