Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Wednesday, March 12, 2008

அந்தச் சொவ்வறையை வெளியிடுவீர்களா தமிழச்சி?

அண்மைக் காலமாக பதிவர் தமிழச்சி 'கவிதைகள்' என்று சிலவற்றை அடிக்கடி எழுதி வருகிறார். இக்'கவிதை'களைக் கண்டுபிடிப்பதொன்றும் இமாலயச் சோதனையன்று. குறிப்பிட்ட ஓர் அடைப்பலகையில் போட்டு வார்க்கப்பட்டிருக்கும் அவ்விடுகை. காட்டாக, ஒருவரியில் ஒருசொல் மட்டும் இருக்கத்தக்கதாக சொற்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தால் அது 'கவிதை' யாக எழுதப்பட்ட இடுகை.

இப்போது இறுதியாக (இவ்விடுகை எழுதப்பட்டு முடிப்பதற்குள் சில கவிதைகளோ கட்டுரைகளோ அங்கு வெளிவந்திருக்கக் கூடும்) வந்த கவிதையைக் கீழே பாருங்கள்.

உனக்கு
பிடிக்காதது
எனக்கு
பிடித்திருந்தது
எனக்கு
பிடித்தது
உனக்கு
பிடிக்காதிருந்தது
ஆனாலும்
உனக்கு
என்னை
பிடித்திருந்தது
எனக்கு
உன்னை
பிடித்திருந்தது.
இன்றோ
உனக்கும்
எனக்கும்
நம்மை
பிடித்திருக்கிறதா?


இது 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா' எனும் வகையில் வரும் ஒரு வடிவம். தமிழச்சியின் முக்கால்வாசிக் கவிதைகள் இவ்வகையின. அதாவது ஒருவரியில் ஒருசொல் மட்டும் வருவன.
மிக அருந்தலாக 'மூவடி முட்டையடி சலிப்பா' வகையில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அதாவது ஒருவரியில் மூன்று சொற்கள் வரும்வண்ணம் எழுதப்பட்டது அக்கவிதை. அதிலும் கடைசிக்கு முதல்வரியில் இரண்டு சொற்களையும் கடைவரியில் நான்கு சொற்களையும் போட்டு ஓரிடத்தில் மட்டும் 'தளை' தட்டும்படி தவறு வந்துவிட்டது. அது கவிதை சுடும் அடைப்பலகையின் குறையோ தெரியவில்லை.

இவ்விடுகை அவரின் கவிதைகளைப் பற்றி விமர்சனமோ ஆய்வோ அன்று.
சரி, நான் இவ்விடுகை எழுதவேண்டி வந்த நோக்கத்தை விட்டுவிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். (ஒருவரோடு தொடர்புபட்டு எழுதப்புறப்பட்டாலே அவரைப்போலவே எழுதத் தலைப்படுகிறோம். என்ன கொடுமையிது???)

நான் நீண்டகாலமாக ஒரு முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அது என்னவென்றால், கவிதை எழுதுவதற்கான சொவ்வறை(அல்லது மென்பொருள் or Software; இதைச்சொல்லாவிட்டால் சொவ்வறைச் சொல்லுக்காகவே ஒரு மாமாங்கம் விளங்கப்படுத்திச் சாகவேண்டிவரலாம்.) ஒன்றைத் தயாரிப்பது.
பலவிதமான கவிதைகளைத் தரக்கூடிய சொவ்வறையாக அது இருக்க வேண்டும். பயனாளி தான் நினைப்பதை எழுதிக்கொடுத்துவிட்டால் அச்சொவ்வறை அவற்றை உடைத்து, சீரமைத்து 'கவிதை' போன்று தோன்றும்படி சொற்களை ஒழுங்கமைத்துத் தரவேண்டும்.

இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, கலிப்பா, அருட்பா, மருட்பா என்று யாப்பிலக்கணம் பார்த்துக் கவிதை செய்வதற்கு முன்பு மிக எளிய வடிவத்தை முதலில் முயற்சிப்பதென்று தீர்மானித்தேன். அதன்படி குறிப்பிட்ட எண்ணிக்கையான சொற்கள் ஒருவரியில் வரும்படி சொற்களை அடுக்குவது முதற்படியாக இருந்தது. தனக்கு வேண்டியதை எழுதிக்கொடுத்துவிட்டு ஒருவரியில் எத்தனை சொற்கள் வேண்டுமென பயனாளி குறித்துவிட்டால் அம்மென்பொருள் சொற்களுக்கிடையிலிருக்கும் இடைவெளியைக் கருத்திற்கொண்டு அதன்படியே சொற்களை அடுக்கித் தந்துவிட வேண்டும். அதாவது space bar விசையின் பெறுமானம் வருமிடங்களைக் கவனித்து இதைச் செய்ய வேண்டும்.
அந்தோ பரிதாபம், முதற்கட்டத்திலேயே எனது திட்டம் தோல்வியைத் தழுவியது.

'சீச்சீ இந்தப்பழம் புளிக்கு'மென்ற நிலையில் இதைக் கைவிட்டுவிட்டேன். ஆனால் தமிழச்சியின் கவிதைகளைப் பார்த்தபோது அவரும் இதுபோல் ஒரு மென்பொருள் பயன்படுத்துகிறார் என்பதை உணர்ந்தேன். தொடர்ச்சியாக அவரின் கவிதைகள் 'ஒற்றையடி மட்டையடி விருத்தப்பா'வாகவே இருந்தது இதை உறுதி செய்தது.
எனவே இப்போது அவரிடம் பகிரங்கமாகவே வேண்டுகோள் வைப்பதென்று முடிவெடுத்துவிட்டேன்.

தமிழச்சி!!!
தமிழிலக்கியத்தின் நன்மை கருதி, எதிர்கால தமிழ்க்கவிஞர்களின் நன்மை கருதி நீங்கள் பயன்படுத்தும் அந்தச் சொவ்வறையை (மென்பொருளை) வெளியிடுவீர்களா? நீங்கள் மட்டுமே தனியாக எவ்வளவு காலம்தான் எழுதிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? நாங்களும் 'கவிதை' எழுத வேண்டாமா?

இப்படியான மென்பொருள் பாவித்து வரிக்கொரு சொல்லாக எழுதியிருந்தால், சரிநிகரில் வெளிவந்த கோணேஸ்வரியின் கொலையைப் பாடிய கலாவின் கவிதை "இது கவிதையாம்" என்று உங்களிடமிருந்து ஏளனத்தையும் திட்டையும் பெற்றிருக்குமா?

ஏனைய கவிதைகளும் (கவனிக்க: இவ்வரியிலும் இதற்கு முந்தியவரியிலும் கவிதையென்பது மேற்கோளிடப்படவில்லை.) உங்களிடமிருந்து இவ்வாறான திட்டுக்கள் வாங்குவதைத் தவிர்க்கவாவது அந்தச் சொவ்வறையை வெளியிடுங்களேன்.

Please!!!

Friday, October 19, 2007

ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்; அனைவரும் அணிதிரள்க!

நம்ப ஏலாமல் கிடக்கோ? இருந்து பாருங்கோ இப்பிடியோர் அறிவிப்பு கெதியில வரத்தான் போகுது.

சித்தாந்தங்களையும் புத்தகங்களையும் அப்பிடியே வரிவிடாமல் தூக்கிப்பிடிச்சுக் கொண்டு காவடியாடுற கூட்டம் இப்பவும் நிறைய இருக்கத் தான் செய்யுது. பிரதேச, கலாசார, நுட்பங்களுக்கு ஏற்றாற்போல் அவற்றின் பயன்பாடும் தேவையும் மாறுமென்ற அடிப்படைப் புரிதல்கூட இருப்பதில்லை இவர்களுக்கு.

மாஸ்கோவில் மழை பெய்தால் மானிப்பாயில் குடைபிடித்தவர்களும் சீனாவில் வெயிலடித்தால் சித்தங்கேணியில் நிழல் தேடியவர்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்தார்கள். துன்பம் என்னவென்றால் இன்றும் அப்படியான கூட்டங்களைப் பார்க்கமுடியும்.

தமிழ்வலைப்பதிவுகளில் அப்படியான நிறையப்பேரைப் பார்க்கலாம்.

தமிழகத்தில் பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்ததால் அவரின் அடிபொடிகள் அதை அப்பிடியே ஈழத்திலும் கொப்பி (காப்பி) பண்ணி அங்கும் பார்ப்பனிய எதிர்ப்புச் செய்கிறார்களென்பதைப் பார்க்கும்போது இவர்களுக்கும் பெரியாருக்கும் இருக்கும் தொடர்பு மாஸ்கோவுக்கும் மானிப்பாய்க்கும் இருக்கும் தொடர்பு போற்றான் தெரிகிறது.
அதே அடிபொடிகளிடமிருந்து விரைவில் வரப்போகும் அடுத்த "கலக" அறிவிப்புத்தான் ஈழத்தமிழரிடையே இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

அப்படியொரு போராட்டத்தை அறிவித்து நோட்டீசு அடித்துப் "போராட"ப்போகும் தளபதி, தலைவிகளை வாழ்த்தி விடைபெறுகிறேன்

வணக்கம்! நன்றி!

முத்திரைகள்: தமிழ் இஞ்சி மிளகு மா சீனி மணி கலகம் கலக்கம்

Wednesday, October 10, 2007

வள்ளலார் சிறிரங்கனை வாழ்த்தியும் வளவளாப் பதிவரைத் தூற்றியும்

கொழுவிக்கு சிறிரங்கன் அண்ணா எழுதிய வாழ்த்துப் பாவொன்றை கடந்த பதிவில் இட்டிருந்தேன். அதுதொடர்பாக ஒரு தெளிவிப்பு அறிவிப்பும், அவரோடு ஒப்பிட்டு வேறு இரண்டொருவரின் "நன்னடத்தை" பற்றியும் 'உரையாடும்' வண்ணம் இவ்விடுகை செய்யப்பட்டுள்ளது.

முதலில் தெளிவிப்பு அறிவிப்பு.

அந்த வாழ்த்துப்பாவை நான் வெளியிட்டதற்கும், தமிழச்சி கொளத்தூர் மணி ஐயாவின் அறிக்கையை வெளியிட்டதற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன்.
இனிமேலும் 'அது' மாதிரி, கொண்டோடியிடமிருந்து கொழுவிக்கு ஆதரவு அறிக்கையோ கொக்கோ கோலாவிடமிருந்து கோள்மூட்டிப் பதிகமோ வாங்கிப் பதிவிட மாட்டேனென்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன். (கிட்டத்தட்ட டோண்டுசார் செய்துகொண்டிருந்த விளையாட்டுப் போலக் கிடக்கிறதே இப்படி ஆதரவு அறிக்கை பிரசுரிப்பது? என்று மனத்தில் கேள்வி வந்தாலும் கேட்கமாட்டோம். காரணம் வெளியுறவுக்கொள்கை)
தேவையற்ற சண்டையில் கொழுவியை இறக்கிவிட விசமிகள் சிலர் செய்யும் சதிவேலைகளை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். பிறநாட்டு அரசியலில் தலைபோடுவதில்லையென காலங்காலமாகக் கொழுவி கடைப்பிடித்து வரும் வெளியுறவுக்கொள்கை தான் இப்போதுமுள்ளதென்பதறிக.

++++++++++++++++++++++++++++++++++++++

இனி, வேறிருவரின் "நன்னடத்தை" பற்றியது.

இரண்டு மாதங்களின் முன்னால் வலைப்பதிவுகளில் ஒரு போக்கு நிலவியது. இன்னார் இருநூறாம் பதிவைக் கடந்துவிட்டார், இன்னார் இரண்டு வருடங்களை நிறைவு செய்துவிட்டார் எனக் கொண்டாட்டங்கள் நடந்தன. அவ்வலைப்பதிவரின் இடுகைகளை இன்னொருவர் 'ஆகா ஓகோ' வெனப் புகழ்ந்து "விமர்சிப்பார்".

அந்தக் காலகட்டத்தில்தான் கொழுவியின் வலைப்பதிவும் இரண்டுவருடங்களை நிறைவு செய்தது. இரண்டாம் வருட நிறைவு தொடர்பாகவும், அந்நாளில் எழுதப்படும் ஓரிடுகை தொடர்பாகவும் ஓர் அறிவிப்புக்கூட கொழுவியால் வெளியிடப்பட்டுமிருந்தது.

அந்த நேரத்துப் போக்குக்கு ஏற்றாற்போல கொழுவியை "விமர்சிக்கும்படி" இரண்டு தலைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துலகில் புத்தகம் போட்ட அந்தத் தலைகளும் தலைக்கனமில்லாமல்
'அதுக்கென்ன! அந்தமாதிரி எழுதித்தாறம்'
என்று உறுதிமொழியும் அளித்திருந்தனர்.

எங்கட ஊர்ப்பக்கம் ஒண்டு சொல்லுவினம்.
குரங்கிட்ட மருந்துக்கு மூத்திரம் கேட்டா கொப்புக்கொப்பாத் தாவுவாம் எண்டு (அல்லது இதை மாதிரி ஏதோ ஒண்டு).
அது மாதிரிப் போச்சுது கொழுவியின்ர கதை. தாறம் தாறம் எண்டவங்களை பிறகு காணவேயில்லை.
(உந்தச் சொலவடை ஒரு 'இது'க்காகக் சொன்னது. பிறகு, அவையள் ரெண்டு பேரையும் கொழுவி குரங்கு எண்டு சொன்னதெண்டோ அவையளின்ர படைப்புக்களை கொழுவி வேறயொண்டுக்கு ஒப்பிட்டதெண்டோ வரிஞ்சுகட்டிக் கொண்டு வரக்கூடாது)

இப்பிடியே இந்த ரெண்டு தலைகளையும் நம்பி கொழுவியின்ர ரெண்டாம் வருசக் கொண்டாட்டம் திண்டாட்டமாயே போயிட்டுது. அது நடக்கவேயில்லை.

இப்பிடி விண்ணப்பம் விடுக்கப்பட்டு, அதுவும் தாங்கள் எழுதித் தருகிறோம் (அதுக்குள்ள, 'நக்கல் நளினங்கள் இருக்கும் தம்பி கண்டுகொள்ளாதையும்' எண்டு ஒரு முன்னறிவிப்பு வேற தந்திருந்தார் ஒருத்தர்) என்று ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாமல் வலையாடும் அந்த இருவரும் இருக்கும் அதே வலைப்பதிவுச்சூழலில், கேட்காமலே பாமாலை கோர்த்துப் பரிசளிக்கும் சிறிரங்கன் போன்ற வள்ளலார் (நான் 'வாடிய பயிரைக் கண்டு வாடிய'வரைச் சொல்லவில்லை, சிறிரங்கன் வாடக்கூடியவர் என்ற போதும்கூட.) நிறைந்திருப்பது ஒரு முரண்.

இப்படிப்பட்டவர்கள் பெருக வேண்டும். இப்படிப்பட்ட பாமாலைகள் அதிகம் கோர்க்கப்பட வேண்டும். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்.
"இன்ஷா அல்லா" (இதுக்கு என்ன பொருளெண்டு தெரியாது. ஆனா இப்பிடிப் பாவிக்கவேண்டிய கட்டாயம் ஒண்டு இருக்கிறதாக நினைக்கிறன். அவ்வளவுதான்.)

++++++++++++++++++++++++++++++++++++++
பின்குறிப்பு1:
சிறிரங்கனும் வள்ளலார் போல வாடக்கூடியவர் (கவனிக்க: பாடக்கூடியவர் என்று சொல்லவில்லை, அவர் பாடக்கூடியவர் என்ற போதும்கூட) என்று சொல்லப்பட்டதன் மூலம் சிறிரங்கன் அண்ணன் பாமாலையில் வைத்த ஐஸுக்கு பதில் ஐஸ் வைக்கப்பட்டாயிற்று என்று ஒரு குஞ்சும் நின்று கத்த ஏலாது.

பின்குறிப்பு2:
சிறிரங்கன் வள்ளலார் போலப் பாடக்கூடியவர் என்று பின்குறிப்பு ஒன்றில் கொழுவி சொன்னதன்மூலம், கொழுவிக்கு அவர் வைத்த ஐஸ் மீண்டும் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதென எந்தப் புடுங்கியும் எழுத ஏலாது.

பின்குறிப்பு3:
பின்குறிப்பு இரண்டில் சொல்லப்பட்டது போல் ஐஸ் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதால், சிறிரங்கன் கொழுவிமீது இன்னொரு புகழ்மாலை புனைந்தளித்துச் சமன்செய்யக் கடப்பாடுடையவர் என எந்தப் புறம்போக்கும் சொல்ல முடியாது.

பின்குறிப்புக்கள் அவ்வப்போது தொடரும் சங்கிலியாக.

++++++++++++++++++++++++++++++++++++++

முத்திரைகள்: வள்ளலோசிறிபாமோபியா, ஆதரவறிக்கோமோபியா, பெயரிடிதசேமிழோபியா

Tuesday, October 02, 2007

நான் புலி, ரயாகரன் துரோகி

நிதர்சனம் வலைத்தளம் யாருடையது என்பது தொடர்பாக காலங்காலமாக சர்ச்சை நடந்துவருகிறது. சர்ச்சை என்பதைத்தாண்டி பலநேரங்களில் புலிகள் மீதான அவதூறு பரப்புவதற்கு இந்த விசயம் கையாளப்படுகிறது. புலியெதிர்ப்பு வாதிகள் அடிக்கடி சொல்லும் 'நிதர்சனம் புலிகளுடையதுதான்' என்ற கோசம் வழமைபோல ரயாகரனால் சொல்லப்பட இன்னொருமுறை தீப்பற்றிக் கொண்டது.
நிதர்சனம் புலிகளுடையதுதான் என்பதற்கு புலியெதிர்ப்புக் 'கும்பல்' சொல்லும் காரணம், அது புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது என்பதுதான்.
புலிகளை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லாரையும் 'துரோகி' என்ற சொல்லால் அழைக்கும் சில புலி வால்பிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் செய்வதும் அந்த வால்பிடிகளின் வேலையைத்தான்.
வலைப்பதிவு எழுதுபவர்களில்கூட புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். புலிகளை ஆதரித்து எழுதுகிறார்கள். இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி பார்த்தால் வலைப்பதிவில் புலிகள் ஆதரவுப்போக்குக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் புலிகள்தான். அதன்படி பார்த்தால் கொண்டோடி புலியாகத்தான் இருக்க வேண்டும். (ஆனால் புலியாதரவாளர்கள் நிதர்சனம் வலைத்தளம் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புவதோடு, அதை வெளிப்படையாக எழுதியுமிருக்கிறார்கள் என்பது இங்கொரு நகைமுரண்)
மறுவளத்தில், புலியை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லோரும் துரோகிகள்தாம் (இதை நாம் சொல்லவில்லை; புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி தான்). அவ்வகையில் ராயகரன் துரோகிதான்.
இப்போது புதுவாதம் வைக்கப்படுகிறது.
"நிதர்சனம் புலிகளுடையதா இல்லையா என்று வாதிடுவதால் எந்த மாற்றமும் நடந்துவிடாது".
மேலும், புலிகளின் வரலாற்றைப்போலவே நிதர்சனத்தின் வரலாறும் இருக்கிறதாம். ஆகவே இது புலிகளினது தானாம்.
நிதர்சனம் தமது வலைத்தளமில்லை என்பதை புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்து அறிக்கை விட்டிருந்தார்கள். நிதர்சனம் தளமும் புலிகளுடனான தமது தொடர்பை மறுத்திருந்தது.
சரி, ரயாகரன் சொல்வதுபோல் புலிகளின் மறுப்பை நம்புவதற்கில்லை என்பது நியாயமான வாதம் தான். புலிகள் தாம் செய்தவற்றை மறுத்திருக்கிறார்கள்.
ஆனால், நிதர்சனம் தமது தளமில்லையென்ற நிலையில் அதை நிறுத்த புலிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை ரயாகரன் கேட்பது வியப்பானது. என்னதான் செய்ய வேண்டும், ஓர் அறிக்கை விடுவதைத்தவிர?
நிதர்சனத்தை நடத்துபவரை மண்டையில் போடச் சொல்கிறீர்களா? முதலில் நிதர்சனம் தளத்தை நிறுத்துவதை வரவேற்கிறீர்களா? நீங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளில் இருந்து, அதை முழுமையாக மறுப்பீர்கள் என்றுதான் புரிகிறது.
பிறகு என்னதான் செய்வது? நிதர்சனத்தை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று புலிக்கு ரயாகரன் கோரிக்கை வைப்பது வேடிக்கையானதல்லவா?
அடுத்து, நிதர்சனம் யாருடைய நலனுக்குப் பாடுபடுகிறது என்ற கேள்வியை கேட்டுவைப்போம். நிதர்சனம் தொடர்ந்து இயங்குவதில் யார் பலனடைகிறார்கள் எனற கேள்வியைக் கேட்டு வைப்போம். நிதர்சனம் நிறுத்தப்பட்டால் யாருக்குத் தீமை என்பதைக் கேட்டுவைப்போம்.
இவற்றுக்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நிதர்சனமானது புலிகளின் எதிர்த்தரப்பின் நலனையே தனது முதன்மை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது. நிதர்சனத்தால் பலனடைவது புலியெதிர்ப்பாளர்களே. நிதர்சனம் நிறுத்தப்பட்டால் நட்டமடைவது புலியெதிர்ப்பாளர்களும் சிறிலங்கா அரசுமே.
நிதர்சனத்தை நிறுத்துவோம்; அதன்மீது வழக்குப்போடுவோம் என்று கரடி விட்டுக்கொண்டிருந்தவர்கள் எங்கே போனார்கள்? ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை? ஏன் நிதர்சனம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது?
ஆனந்தசங்கரி துள்ளினார், புளொட் அமைப்பு கொக்கரித்தது. இறுதியில் என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை.
ஏன் சிறிலங்கா அரசின் உயர்மட்டத்தில்கூட நிதர்சனம் தளம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையும் கண்டனமும் வெளியிடவேண்டி வந்தது. இவ்வளவுக்கும் நிதர்சனத்துக்கு எதிர்ப்பக்கம் நின்று கொக்கரித்தவர்களிடம் தான் நூறுவீத நியாயமும் இருந்தது. அதுவும் சிறிலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால் அந்த படம் வெளியிட்ட பிரச்சினைக்கு நிதர்சனத்தை முடக்கியிருக்கலாம். அனால் சும்மா அறிக்கை விட்டதோடு நின்றுவிட்டது. அதுபோல்தான் புளொட் மற்றும் ஆனந்தசங்கரி வகையறாக்களின் வெற்றுச் சவடால்கள். நிதர்சனத்தைப் புரட்டுறோம் புடுங்குறோம் என்று அறிக்கை விட்டவர்கள், தமது பக்கம் முழுமையாக நியாயம் இருந்தபோதும்கூட எதுவும் செய்யவில்லை. இது, ஏதோ ஜனநாயகப்பண்பால் வந்ததென்று யாரும் நம்பமுடியாது. ஒரே காரணம், நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்பதுதான்.
நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்று விரும்புவர்கள் சிறிலங்கா அரசாங்கமும் ஆனந்தசங்கரியும், புளொட்டும்தான். ஏனென்றால் அதில் அவர்களின் புலியெதிர்ப்பு வியாபாரம் இருக்கிறது. நிதர்சனத்தை வைத்து புலிகளை வசைபாடும் அருமையான வாய்ப்பை அவர்கள் நழுவவிடத் தயாரில்லை.
இப்போது சொல்லுங்கள், நிதர்சனம் யாருடைய நன்மைக்காக இயங்குகிறது?

Wednesday, August 15, 2007

கொழுவியும் கொண்டோடியும்

வலைப்பதியும் தமிழர்கள் பலருக்கு மகிழ்ச்சியான, சிலருக்குத் துக்கமான செய்தி.
கொழுவியும் கொண்டோடியும் இணைகிறார்கள்.

இதுவரை, கொழுவி என்ற பெயரூடாக வலைப்பதிந்து வந்தவரும் கொண்டோடி என்ற பெயரூடாக வலைப்பதிந்து வந்தவரும் ஒன்றாக இணைந்து வலைப்பதிய உள்ளார்கள்.

இனி கொழுவியின் 'கொழுவலும் தழுவலும்' வலைப்பதிவில் இருவரும் இணைந்து எழுதுவார்கள். இனிமேல் இந்த வலைப்பதிவு ஒரு கூட்டு வலைப்பதிவு.

கொண்டோடி பற்றிய சிறு பின்குறிப்பு.
______________________

தொடக்கத்தில் கொண்டோடியின் வலைப்பதிவு இதுதான்.

'ஆழிப்பேரலை' என்ற பெயரோடு தொடங்கப்பட்ட வலைப்பதிவு, பின்னர் 'நிகழ்வுகள்' என்று பெயர் மாற்றம் பெற்றது. இப்போது கவிஷன் போன்றோர் செய்வதைப்போல - ஆனால் முக்கியமான சில ஈழத்து நிகழ்வுகள் பதிவாக்கப்பட்டன. மற்றும்படி பெரிதாக எதுவுமில்லை. சிலவிடங்களில் பின்னூட்டங்களில் கொண்டோடியின் பங்களிப்பு இருந்தது.

பின்னர் கடவுச்சொல்லை மறந்த காரணத்தாலோ வேறு யாராவது ஊடுருவி மாற்றிய காரணத்தாலோ தொடர்ந்தும் கொண்டோடியால் தளத்துள் புகமுடியவில்லை. இந்நிலையில் 'ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது'' என்பதைப்போல பின்னூட்டங்கள் போடாமல் கொண்டோடியால் இருக்க முடியவில்லை. கையெல்லாம் உதறத் தொடங்கியது. எனவே பின்னூட்டங்கள் இடுவதற்காக கொண்டோடி என்ற பெயரில் புதிதாக கணக்கொன்று தொடங்கப்பட்டு ஆங்காங்கே பின்னூட்டங்கள் இடப்பட்டன. தற்போது உள்ள சூழலில், தனியே பின்னூட்டங்களில் மட்டும் எமது கருத்தைச் சொல்லிச் செல்வது சாத்தியமல்லை என்பதோடு போதாமையும் உணரப்பட்டது. இனி, தனியொரு தளம் தொடங்கி, திரட்டியில் இணைந்து எழுதுவதும் 'பஞ்சி பிடிச்ச' வேலையாக உணரப்பட்டது. இடுகைகள் எழுதத் தொடங்கி, அதற்குரிய கவனிப்புக்கள் பெற்று, ஒரு கும்பலைச் சேர்க்கும் வரையான காலப்பகுதிவரை இருக்கும் சங்கடங்கள் உணரப்பட்டன. இந்தநிலையில் ஏற்கனவே பிரபலமான வலைப்பதிவொன்றினூடு கருத்தைச் சொல்வது சாலச் சிறந்ததென்ற முடிபு கொண்டோடியால் எடுக்கப்பட்டு அதற்குரிய வலைப்பதிவு எது என்பது பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது.
இதில் வெற்றிபெற்றது கொழுவியின் வலைப்பதிவு.

கொண்டோடியின் விருப்பத்தை, கொழுவியும் ஏற்ற நிலையில் இன்று உங்கள் முன் இப்புதியகூட்டணி தோன்றியுள்ளது.

பின்குறிப்பு முற்றிற்று.
_____________________

இனி, கொழுவியும் கொண்டோடியும் இரட்டைக்குழல் பீரங்கிகளாகச் (கவனிக்க: பீரங்கிதான், துப்பாக்கியன்று) செயற்படுவார்கள்.

இப்புதிய கூட்டணி பற்றிய அறிவிப்பை உங்களெல்லோருக்கும் அறிவிப்பதில் நாங்கள் பெருமிதமடைகிறோம்.

(மேடையொன்றில், இரண்டுபேர் தங்களின் ஒவ்வொரு கையைப் பற்றியபடி உயர்த்தி நின்று சிரிப்பது போன்ற படமொன்றை இவ்விடத்தில் கற்பனை செய்து கொளள்வும்.)

குந்த ஓரடி நிலம் தந்த கொழுவிக்கு கொண்டோடியின் நன்றிகள் பல.

நன்றி வாசகர்களே.
இனி களத்தில சந்திப்போம்.

கொழுவி(க்) கொண்டோடி அடிக்கும் அடியில் -சிலர்
நழுவி(த்) திண்டாடிப் போவது உறுதி.