Showing posts with label விளக்கம். Show all posts
Showing posts with label விளக்கம். Show all posts

Friday, March 21, 2008

அவளா சொன்னாள்? இருக்காது.

'அப்படி அதுவும் நடக்காது' - இது அடுத்த வரி.

பதிவர் தமிழச்சியிடம் 'கவிதை எழுதும் சொவ்வறையை' வெளியிடச்சொல்லிக் கேட்டு ஓர் இடுகை எழுதியிருந்தேன்.
பலரும் படித்திருப்பீர்கள்.

எதிர்பார்த்தது போலவே 'எவண்டா சொன்னான் கவிதைன்னு'? என்று ஓரிடுகையை தமிழச்சி எழுதியிருந்தார்.

நானெழுதிய இடுகை தன்னை நக்கல் பண்ணுகிறது என்று பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். குறிப்பிட்ட சில வசனங்களை மேற்கோளிட்டு விளக்கியுள்ளார்.
அவ்விடுகை நக்கல் செய்கிறது என்று தமிழச்சி புரிந்திருப்பது ஒருபக்கம் ஆச்சரியமும் இன்னொரு பக்கம் அதிர்ச்சியுமாக உள்ளது.
சரி அதைவிட்டுவிட்டு விடயத்துக்கு வருவோம்.


அவ்விடுகையிலே, தான் எழுதியது கவிதை என்று யார் சொன்னது என்று காட்டமாகக் கேள்வி கேட்டிருந்தார்.
சிக்கல் என்னவென்றால், நான் சுட்டிக்காட்டிய குறிப்பிட்ட 'சொற்கூட்டம்' (நன்றி கொழுவி: அந்தக்காலத்து கவிதன் - மஸ்ட்டூ சண்டை ஞாபகம் வருதா? பாவம், கவிஞர் மணிகண்டனும் மாட்டுப்பட்டிருந்தார்.) வெளிவந்த இடுகை, 'கவிதை / சிறுகதை' என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழச்சி அச்சொற்கூட்டத்தை சிறுகதை என்று சொல்லமாட்டார் என நம்புகிறேன்.

அவ்விடுகைக்கு முன்பு அவர் எழுதிய ஒருவரியில் ஒரு சொல்லைப் போட்டு எழுதிய 'சொற்கூட்டங்களும்' இவ்வாறே வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் காதலைச் சொல்லும் சொற்கூட்டங்களும் இருந்தன.
அவற்றுக்கான பின்னூட்டங்கள் 'கவிதை ரொம்ப சூப்பர்' என்ற தொனியில் வந்திருந்தபோதும்கூட, அவை கவிதையில்லை என்ற மறுப்பை அம்மணி வெளியிட்டதாக ஞாபகமில்லை.

இவையெல்லாம் சேர்ந்தே, அச்சொற்கூட்டங்களை 'கவிதை' என்று அவரே சொல்கிறார் என்று எம்மை நம்ப வைத்தன.
சரி, ஓரிடுகையை வகைப்படுத்திய முறையை வைத்து தீர்மானமாக நாம் வாதிட முடியாதுதான். வகைப்படுத்தல் எழுதியவரால் மட்டுமன்றி வேறு நபர்களாலும் செய்யக்கூடியவை என்ற நுட்பத்தையும் நாம் அறிந்தேயுள்ளோம். (ஆனால் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரேமாதிரி நடப்பதிலுள்ள நிகழ்தகவைக் குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது.)

சரி.
அச்சொற்கூட்டங்களைக் 'கவிதை' என்று தவறாகக் குறிப்பிட்டதற்காக மனுஷியிட்ட வருத்தம் தெரிவித்து ஓரிடுகை எழுதுவம் எண்டு நினைச்சா, வேறோர் இடத்தில அம்மணி பிளந்து கட்டினது சிக்குப்பட்டிச்சு.

சிறில் அலெக்ஸ் எழுதின கவிதை (இதை அவரே கவிதை எண்டுதான் சொல்லிறார்) ஒண்டுக்கு தமிழச்சி பின்னூட்டம் போட்டிருக்கிறா இப்பிடி:


//
ஆனால் எனக்கும் உங்களைப் போல் தான் மிக சமீபத்தில் கவிதை எழுத தோன்றியது. அதை கவிதை என்று சொல்வதை விட கிறுக்கல்கள் என்றால் விமர்சனங்களில் இருந்து
தப்பித்துக் கொள்ளலாம் என்று டெக்னீக்கலாக தமிழச்சியின் கிறுக்கல்கள் என்ற ப்ளாக் திறந்து கிறுக்கிக் கொண்டு இருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.//

ஆகா... ஆகா...

அதாவது 'கவிதை' எழுதத் தோன்றி எழுதுவாவாம். எங்களை மாதிரி ஆக்கள் நையாண்டி பண்ணிப் போடுவம் எண்டதுக்காக அதிலயிருந்து தப்ப, 'கிறுக்கல்கள்' எண்டு சொல்லிப் போடுவாவாம். விமர்சனங்களிலிருந்து தப்ப (அதுசரி, இப்பிடித் தப்பியோடுறது மறத்தமிழச்சிக்கு இழுக்கெல்லோ? இது வீரத்துக்குள்ள அடங்குமா இல்லையா எண்டதை ஆய்வாளர் சுகுணா திவாகரிட்ட கேக்க வேணும். ;-)) இது நல்ல 'டெக்னிக்'காம்.

இதுக்குப்பிறகு என்ன கோதாரிக்கு நான் வருத்தம் தெரிவிக்க வேணும்?
நீங்களே சொல்லுங்கோ...

=========================
"எவண்டா சொன்னான் அந்தப்பின்னூட்டம் எழுதியது நான்தானென்று? எனது பெயரில் எந்த நாதா'றி'யோ அதை எழுதிவிட்டது" என்று ஒரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து சிலவேளை வரக்கூடும்.
அப்போது எனது பதில் என்னவென்பதை முற்கூட்டியே எழுதிவிடுகிறேன்.

"எனக்குத் தெரியும் நீங்கள் அதை எழுதியிருக்க மாட்டீங்களெண்டு. அதாலதான் 'அவளா சொன்னாள்? இருக்காது" என்று தலைப்பு வைத்து இடுகையை எழுதியிருந்தேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா?"

=========================
சிலவேளை இப்படியொரு மறுப்பு தமிழச்சியிடமிருந்து வராமலேகூடப் போகலாம். அப்போது மேற்குறிப்பிட்ட 'தலைப்பு வைத்துத் தப்புதல்' முறை கேலிக்குரியதாகிவிட்டதே என உங்களில் யாராவது கேட்கலாம். அதற்கும் பதலளித்து விடுகிறேன்.

'ஐயையோ....
அதனால்தான் இவ்விடுகையின் தொடக்கத்திலேயே எழுதியிருக்கிறேன்... அப்பாடலின் இரண்டாம் வரி - இவ்விடுகையின் முதல்வரி.
==அப்படி எதுவும் நடக்காது==
நான் தீர்க்கதரிசி தானே?

========================

எதற்காக இப்பிடி முற்கூட்டியே பதில்களைத் தயார் பண்ணி வெளியிட வேணும்? எண்டு கேக்கிறியளோ?
சும்மா சும்மா ஒவ்வோர் இடுகைக்கும் பதிலிடுகை எழுதிக்கொண்டிருக்கிறதை விட முன்னமே எழுதிவிட்டா எங்களுக்கு நேரம் மிச்சம் தானே? அவைக்குக்கூட பதிலைப் பார்த்ததால எதிர்க்கேள்வி கேட்கவேண்டிய அவசியமில்லாததால நேரம் மிச்சம்.
சும்மா சும்மா எழுதிக்கொண்டிருக்க நாங்களென்ன வேலை வெட்டியில்லாமல் குந்திக்கொண்டா இருக்கிறம்? உழைக்க வேணும்... நாட்டுக்குக் காசனுப்ப வேணும்... வீட்டுக் காசனுப்ப வேணும்... இன்னும் கனக்க...

=====================
'இதெல்லாம் எப்பிடியண்ணை?' எண்டு கேக்கிற ஆக்களுக்கு....
இன்ன இன்னார் இப்பிடித்தான் எண்டதை அறிஞ்சிருக்கிறம்.

விஜய் பாணியில் சொன்னால்,

"எவ்வளவோ கண்டுபிடிக்கிறோமாம்..
இந்தக் கண்டுகளையும் பிடிக்க மாட்டோமே?

Sunday, November 04, 2007

சிரிப்பு வந்தால் ஏன் சிரிக்கிறாய்? அழுகை வந்தால் ஏன் அழுகிறாய்?

தமிழீழ அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவைத் தொடர்ந்து வலைப்பதிவர் இரண்டொருவர் புதிய வாதமொன்றைத் தொடங்கியுள்ளனர்.

"தமிழ்ச்செல்வனின் இரத்தத்திலிருந்து இளைஞர்களல்ல; ஈக்களே பிறக்கும்" என்ற சொறிக்கதைகளை விட்டுவிடுவோம்.
தாங்கள் வாதமென நம்பும், வெளிப்பார்வைக்கும் அப்படியே தோன்றும் விசயங்கள் சிலவற்றை அவர்கள் எழுதியுள்ளனர்.

அனுராத புரத்துத் தாக்குதலின் பின்னர், 21 கரும்புலிகளைப் பற்றிய கவலையின்றி இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்கள், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அழுது வடிக்கின்றனர். இது ஏன்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதன்பின்னால் என்ன கோதாரி அரசியல் இருக்கிறதென்பது அந்த இரண்டொரு விண்ணர்களுக்குத்தான் தெரியும். எதையாவது சூசகமாகச் சொல்லி எங்கட மரமண்டையளுக்குத்தான் விளங்கேலயோ தெரியேல. (பெயரிலியின்ர எழுத்தாவது அவரின்ர ஆதரவாளர் எதிரிகள் எண்டு பலருக்கும் விளங்குது.)

சரி. அனுராதபுரத்தில நடந்தது என்ன? 21 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இலகுவில் எவராலும் செய்துவிட முடியாத மிகப்பெரும் சாதனையும் தியாகமும் நிறைந்தது அவர்களின் செயற்பாடு.
அதே நிகழ்வில் சிறிலங்கா அரசபடையினருக்கு மிகப்பெரும் தோல்வியொன்று கிடைத்தது. சிறிலங்கா அரசபடையினரை எதிரியாகப் பார்க்கும் அனைவருக்கும் அது மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது. நாளாந்தம் குண்டுவீச்சினாலும் இன்னபிற வழிகளினாலும் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது, அச்சூழலில் வாழ்ந்த மக்களுக்கும் சரி, அம்மக்களின் உறவுகளுக்கும் சரி அது மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தரும் நிகழ்வுதான். இதை இல்லையென்று ஒரு புல்லனும் சொல்லிவிட முடியாது.

ஒரே சம்பவத்தில் மிகப்பெரும் வெற்றி கிடைத்த அதேவேளை அவ்வெற்றிக்காக 21 கரும்புலிகளை இழக்கவேண்டி வந்தது. ஈழப்போராட்டத்தின் நீண்டவரலாற்றில் அனைத்து வெற்றிகளின் பின்னாலும் தியாகங்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை யாரும் நினைவுகூராமல் விட்டதில்லை; அதேவேளை வெற்றிகளைக் கொண்டாடாமல் விட்டதுமில்லை.
அனுராதபுரத் தாக்குதலின்பின்னும் அதுதான் நிலைமை. மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேர வெளிப்படுத்த வேண்டிய நிலை. அதெப்படி இரண்டு உணர்வுகளும் ஒரேநேரத்தில் வரமுடியுமென மோட்டுக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலில்லை. ஈழப்போராட்டத்தின் காலநீட்சியில் இப்படி ஆயிரக்கணக்கான பொழுதுகளைக் கடந்துவந்திருக்கும் ஏராளமான மக்களுக்கு அது தெரியும்.

அனுராதபுர வெற்றியைக் கொண்டாடினர் மக்கள். தமக்குத் தெரிந்த் வழிகளில் கொண்டானர். அதேவேளை அந்த இரண்டொருவர் எழுதுவதுபோல் 21 கரும்புலிகளின் இறப்புக்காக இனிப்பு வழங்கிக் கொண்டாடவில்லை. இனிப்பு வழங்கியது அந்த வெற்றிக்காகத்தான்.
மகிழ்ச்சியைத் தெரிவிக்க இனிப்பு வழங்கிய மக்கள், துக்கத்தைத் தெரிவிக்க என்ன செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறாரகள்? வீதிகளில் ஒப்பாரி வைத்து அழுதிருக்க வேண்டுமென்பதையா?

இவ்வெற்றியின் பின்னர் வன்னியில் நடந்ததென்ன? தாக்குற் செய்தி கேட்டதும் மக்கள் ஆரவாரித்தனர். மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கரும்புலிகளின் நினைவில் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதுவரையில்லாதளவுக்கு 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்ந்தன. வன்னி முழுவதும் உணர்ச்சிப் பிரவாகமாயிருந்தது. இதுபற்றிய செய்திகளை எந்த 'நடுநிலை' ஊடகங்களோ பன்னாட்டு ஊடகங்களோ தரவில்லை. ஆகவே அந்த இரண்டொருவருக்கு அதுபற்றித் தெரியாமற் போயிருக்கலாம். தமிழ்நெற், புதினம், சங்கதி, பதிவு போன்றவற்றில் தேடிப்பார்த்து அறிந்துகொள்ளுங்கள். வன்னியின் அனைத்து இடங்களிலும் வீரவணக்க நிகழ்வுகள் இடைவிடாது நடந்தன. அப்படியான நிகழ்வொன்று சிறிலங்கா அரசபடையின் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் எட்டுமாதக் கர்ப்பிணியொருவருட்பட நால்வர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையின் பின்னரும் வன்னியில் மிக எழுச்சியாக வீரவணக்க நிகழ்வுகள் நடந்தன.

மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒருதடவையாவது கலந்துகொண்டவர்களுக்குத் தெரியும், அந்த நாளின் உணர்வுகள் எப்படியிருக்குமென்று. வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத உணர்வுக்குவியலாக அன்றைய நாளிருக்கும். நானறிந்தவரை மாவீரர் நாளுக்கு இணையாக இந்த 21 கரும்புலிகளதும் நினைவுநாள் அமைந்திருந்தது. இதை வன்னியோடு தொடர்புடைய யாருமே கேட்டு அறிந்துகொள்ளலாம்.
அந்தளவுக்கு மிக உயரியளவில் அந்த 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் தாயகத்தில் அனுட்டிக்கப்பட்டன. அனுராதபுரத் தாக்குதல் நடந்த அன்றைய நாளைவிடுத்து அதற்குப்பின் வன்னியில் அதுவொரு வெற்றியாகக் கருதுமளவுக்கு நிலைமை இருக்கவில்லை என்பதே உண்மை.

தாங்கள் புலம்பெயர்ந்த மக்களைத்தான் குறிப்பிட்டோமென அந்த ஓரிருவர் சொல்லக்கூடும். ஆம். ஒத்துக்கொள்கிறோம். புலம்பெயர்ந்தோரிடத்தில் ஒப்பீட்டளவில் அசட்டுத்தனமான வெற்றிக் களிப்பு மேலோங்கியிருந்தது. ஆனால் இவர்கள் சொல்வதுபோல் யாருமே கரும்புலிகளைப் பற்றி கரிசனைப்படவில்லையென்பது பொய். வெற்றிக்களிப்பில் துள்ளியர்வகளின் செயற்பாடுகள் மட்டுமே பெரிதாகத் தெரிந்தன. அப்படித்தான் தெரியும். ஆனால் எல்லோரிடமும் கரும்புலிகளைப் பற்றிய ஏக்கம், கவலை நிரம்பவே இருந்தன. அதை நோட்டீஸ் அடித்து ஒட்டியா வெளிக்காட்ட முடியும்?

ஆக, மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்த நிகழ்வு தொடர்பில் அந்த இரு உணர்வுகளையும் மக்கள் கொண்டிருந்தனர்.

தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு மகிழ்ச்சி எப்படி வரும்? அது தனியே துக்கம் சார்ந்த நிகழ்வு. சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர்களிற்பலர் வெளிப்படையாகவே அதை அறிவித்துக்கொண்டவர்கள். ஆனால் அனுராதபுர வெற்றிக்கு மகிழ்ந்தவர்களில் எவருக்காவது தமிழ்ச்செல்வனின் மறைவில் மகிழ்ச்சி வருமா?
துக்கம் மட்டுமே உணர்வாகக் கொண்ட இந்த நிகழ்வில் மக்கள் தமது துயரை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், "அனுராதபுரத்துக்குச் சிரிச்சனியள், இப்ப ஏன் அழுறியள்" என்று கேட்டால் என்ன சொல்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்விடுகையில் சிறிரங்கனுக்கோ, 'விழுந்தபாட்டுக்குக் குறிசுடும்' பாணியில் அங்கிங்குப் பின்னூட்டமிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கோ எவ்வித சேதியுமில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிரங்கனின் இரண்டாவது இடுகையிலே நாம் ஒத்துவரும் ஒரு விசயமுள்ளது. அது இந்திய 'ஆய்வாளர்' இராமன் பற்றிய கூற்று.

தமிழ்த்தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கருதிக்கொண்டு புலிக்குப் பக்கப்பாட்டுப் பாடும் ஊடகங்களின் மலட்டுத் தன்மைக்கு அதுவோர் எடுத்துக்காட்டு. இராமனின் கட்டுரைகளை மட்டுமன்றி யார் யாரெனத் தெரியாதவர்களின் எழுத்துக்களெல்லாம் அப்படியே படியெடுத்துப் போடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையானால் காணும். நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எவன் என்ன எழுதுவான் என்று காத்திருப்பதே இவ்வூடகங்களின் இப்போதைய பணி. சண்டே ரைம்ஸ் என்ன எழுதுகிறது, நேசன் என்ன எழுகிறது, டெய்ல மிரர் என்ன சொல்கிறது என்று வாய்பார்த்துக்கொண்டிருந்து, வந்ததும் மொழிபெயர்த்துப் போடுவதுதான் இப்போதைய பணி.
ஒன்றுமில்லாத இக்பால் அத்தாசை வானளவுக்கு உயர்த்திவிட்டவர்களும் இந்த தமிழ்த்தேசியச் சாயம் பூசிய ஊடகங்கள்தாம். கட்டுநாயக்காவில குண்டுபோட்டதும் அவரிட்ட ஒலிவடிவில பேட்டிகூட எடுத்துப்போடுகிற அளவுக்கு நாக்குத் தொங்குகிறது.

அட.. எப்பவாவது தாங்கள் சொல்லவாற கருத்துக்கு ஆதரவா ஒரு எடுத்துக்காட்டையோ துணைத்தரவையோ அங்கயிருந்து எடுப்பம் எண்டில்ல, கிழமைக்குக் கிழமை ஈயடிச்சுக் கதையெழுதி ஒட்டுறது சகிக்க முடியேல.
"ஈராக் அரசியல் வாதிகள் தங்களைப் பற்றிய அதீத கற்பனையில் இருந்ததே அவர்களின் தோல்விக் காரணமென" மேற்குலக ஆய்வைச் சுட்டி, இதேநிலைமை சிங்களத்துக்கும் வருகிறது என ஆய்வெழுதும் அதே ஊடகங்கள்தாம், அதே தலைக்கன நிலைக்கு எம்மை இட்டுச்செல்ல ஏதுவானவகையில் எதிர்த்தரப்பால் எழுதப்படுபவற்றைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன என்பது பெரிய முரண்நகை.

Tuesday, October 23, 2007

மார்க்ஸிசம் காலாவதியாகிவிட்டதா? - பாலகுமார் விளக்கம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கெனத் தோன்றி ஈரோசின் தலைவராக இருந்தவரும் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினராக இருப்பவருமான திரு. க.வே பாலகுமாரன் புலம்பெயர் சஞ்சிகையொன்றுக்கு அண்மையில் அளித்த செவ்வியிலிருந்து ஒரு பகுதி இங்குப் பிரசுரிக்கப்படுகிறது.

கேள்வி: "ஒருவருக்காக சமூகம். சமூகத்துக்காக ஒருவர்" என்ற பொது உடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு அரசியலில் பிரவேசித்தவர் நீங்கள். "மார்க்சிசம் காலாவதியாகிப் போன ஒரு சித்தாந்தம்" என ஒரு சாரார் கூறி வருவது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: எதுவும் இவ்வுலகில் காலாவதியாவதில்லை. காலத்திற்கேற்ப அவை தம்மை மாற்றியமைக்கின்றன. இதுவே மாக்சிய சித்தாந்தத்தின் உட்கரு. எனவே எவ்வாறு மாக்சியம் காலாவதியாக முடியும்? இயங்கியல் அணுகுமுறையும் முரண்பாடுகளைக் கையாளும் திறனும் மார்க்சியம் மனிதத்திற்கு அளித்தகொடை. எனவே எங்கு மனிதர் போராடுகிறார்களோ, எங்கே அவர்கள் பாதகமான சூழலை மாற்ற முனைகின்றார்களோ- அங்கு அவர்களுக்கு இவை கைகொடுக்கும். வெற்றியைத் தேடித்தரும். மனிதர் விடும் தவறுகளுக்கு மார்க்சியம் பொறுப்பல்ல.

சிந்திக்கத் தூண்டுவதும் சரியான இடத்திற்கு உங்களைக் கொண்டு சேர்ப்பதுமே மார்க்சியம் எனும் அறிவியலின் பணி. கடவுளை நம்புவோர் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் தவறுகளுக்காக கடவுளை நம்பாமல் விடவில்லையே?

~~~~~~~~~~~~~~~~~~~~~
சுவிசிலிருந்து மாதமிரு முறை வெளிவரும் "நிலவரம்" வார இதழின் 20 ஆவது இதழுக்கு க.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணலிலிருந்து...

Wednesday, October 10, 2007

வள்ளலார் சிறிரங்கனை வாழ்த்தியும் வளவளாப் பதிவரைத் தூற்றியும்

கொழுவிக்கு சிறிரங்கன் அண்ணா எழுதிய வாழ்த்துப் பாவொன்றை கடந்த பதிவில் இட்டிருந்தேன். அதுதொடர்பாக ஒரு தெளிவிப்பு அறிவிப்பும், அவரோடு ஒப்பிட்டு வேறு இரண்டொருவரின் "நன்னடத்தை" பற்றியும் 'உரையாடும்' வண்ணம் இவ்விடுகை செய்யப்பட்டுள்ளது.

முதலில் தெளிவிப்பு அறிவிப்பு.

அந்த வாழ்த்துப்பாவை நான் வெளியிட்டதற்கும், தமிழச்சி கொளத்தூர் மணி ஐயாவின் அறிக்கையை வெளியிட்டதற்கும் யாதொரு தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன்.
இனிமேலும் 'அது' மாதிரி, கொண்டோடியிடமிருந்து கொழுவிக்கு ஆதரவு அறிக்கையோ கொக்கோ கோலாவிடமிருந்து கோள்மூட்டிப் பதிகமோ வாங்கிப் பதிவிட மாட்டேனென்பதையும் ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்கிறேன். (கிட்டத்தட்ட டோண்டுசார் செய்துகொண்டிருந்த விளையாட்டுப் போலக் கிடக்கிறதே இப்படி ஆதரவு அறிக்கை பிரசுரிப்பது? என்று மனத்தில் கேள்வி வந்தாலும் கேட்கமாட்டோம். காரணம் வெளியுறவுக்கொள்கை)
தேவையற்ற சண்டையில் கொழுவியை இறக்கிவிட விசமிகள் சிலர் செய்யும் சதிவேலைகளை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். பிறநாட்டு அரசியலில் தலைபோடுவதில்லையென காலங்காலமாகக் கொழுவி கடைப்பிடித்து வரும் வெளியுறவுக்கொள்கை தான் இப்போதுமுள்ளதென்பதறிக.

++++++++++++++++++++++++++++++++++++++

இனி, வேறிருவரின் "நன்னடத்தை" பற்றியது.

இரண்டு மாதங்களின் முன்னால் வலைப்பதிவுகளில் ஒரு போக்கு நிலவியது. இன்னார் இருநூறாம் பதிவைக் கடந்துவிட்டார், இன்னார் இரண்டு வருடங்களை நிறைவு செய்துவிட்டார் எனக் கொண்டாட்டங்கள் நடந்தன. அவ்வலைப்பதிவரின் இடுகைகளை இன்னொருவர் 'ஆகா ஓகோ' வெனப் புகழ்ந்து "விமர்சிப்பார்".

அந்தக் காலகட்டத்தில்தான் கொழுவியின் வலைப்பதிவும் இரண்டுவருடங்களை நிறைவு செய்தது. இரண்டாம் வருட நிறைவு தொடர்பாகவும், அந்நாளில் எழுதப்படும் ஓரிடுகை தொடர்பாகவும் ஓர் அறிவிப்புக்கூட கொழுவியால் வெளியிடப்பட்டுமிருந்தது.

அந்த நேரத்துப் போக்குக்கு ஏற்றாற்போல கொழுவியை "விமர்சிக்கும்படி" இரண்டு தலைகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எழுத்துலகில் புத்தகம் போட்ட அந்தத் தலைகளும் தலைக்கனமில்லாமல்
'அதுக்கென்ன! அந்தமாதிரி எழுதித்தாறம்'
என்று உறுதிமொழியும் அளித்திருந்தனர்.

எங்கட ஊர்ப்பக்கம் ஒண்டு சொல்லுவினம்.
குரங்கிட்ட மருந்துக்கு மூத்திரம் கேட்டா கொப்புக்கொப்பாத் தாவுவாம் எண்டு (அல்லது இதை மாதிரி ஏதோ ஒண்டு).
அது மாதிரிப் போச்சுது கொழுவியின்ர கதை. தாறம் தாறம் எண்டவங்களை பிறகு காணவேயில்லை.
(உந்தச் சொலவடை ஒரு 'இது'க்காகக் சொன்னது. பிறகு, அவையள் ரெண்டு பேரையும் கொழுவி குரங்கு எண்டு சொன்னதெண்டோ அவையளின்ர படைப்புக்களை கொழுவி வேறயொண்டுக்கு ஒப்பிட்டதெண்டோ வரிஞ்சுகட்டிக் கொண்டு வரக்கூடாது)

இப்பிடியே இந்த ரெண்டு தலைகளையும் நம்பி கொழுவியின்ர ரெண்டாம் வருசக் கொண்டாட்டம் திண்டாட்டமாயே போயிட்டுது. அது நடக்கவேயில்லை.

இப்பிடி விண்ணப்பம் விடுக்கப்பட்டு, அதுவும் தாங்கள் எழுதித் தருகிறோம் (அதுக்குள்ள, 'நக்கல் நளினங்கள் இருக்கும் தம்பி கண்டுகொள்ளாதையும்' எண்டு ஒரு முன்னறிவிப்பு வேற தந்திருந்தார் ஒருத்தர்) என்று ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையிலும், தந்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாமல் வலையாடும் அந்த இருவரும் இருக்கும் அதே வலைப்பதிவுச்சூழலில், கேட்காமலே பாமாலை கோர்த்துப் பரிசளிக்கும் சிறிரங்கன் போன்ற வள்ளலார் (நான் 'வாடிய பயிரைக் கண்டு வாடிய'வரைச் சொல்லவில்லை, சிறிரங்கன் வாடக்கூடியவர் என்ற போதும்கூட.) நிறைந்திருப்பது ஒரு முரண்.

இப்படிப்பட்டவர்கள் பெருக வேண்டும். இப்படிப்பட்ட பாமாலைகள் அதிகம் கோர்க்கப்பட வேண்டும். இவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும்.
"இன்ஷா அல்லா" (இதுக்கு என்ன பொருளெண்டு தெரியாது. ஆனா இப்பிடிப் பாவிக்கவேண்டிய கட்டாயம் ஒண்டு இருக்கிறதாக நினைக்கிறன். அவ்வளவுதான்.)

++++++++++++++++++++++++++++++++++++++
பின்குறிப்பு1:
சிறிரங்கனும் வள்ளலார் போல வாடக்கூடியவர் (கவனிக்க: பாடக்கூடியவர் என்று சொல்லவில்லை, அவர் பாடக்கூடியவர் என்ற போதும்கூட) என்று சொல்லப்பட்டதன் மூலம் சிறிரங்கன் அண்ணன் பாமாலையில் வைத்த ஐஸுக்கு பதில் ஐஸ் வைக்கப்பட்டாயிற்று என்று ஒரு குஞ்சும் நின்று கத்த ஏலாது.

பின்குறிப்பு2:
சிறிரங்கன் வள்ளலார் போலப் பாடக்கூடியவர் என்று பின்குறிப்பு ஒன்றில் கொழுவி சொன்னதன்மூலம், கொழுவிக்கு அவர் வைத்த ஐஸ் மீண்டும் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதென எந்தப் புடுங்கியும் எழுத ஏலாது.

பின்குறிப்பு3:
பின்குறிப்பு இரண்டில் சொல்லப்பட்டது போல் ஐஸ் வர்க்கித்துத் திருப்பிக் கொடுக்கப்பட்டதால், சிறிரங்கன் கொழுவிமீது இன்னொரு புகழ்மாலை புனைந்தளித்துச் சமன்செய்யக் கடப்பாடுடையவர் என எந்தப் புறம்போக்கும் சொல்ல முடியாது.

பின்குறிப்புக்கள் அவ்வப்போது தொடரும் சங்கிலியாக.

++++++++++++++++++++++++++++++++++++++

முத்திரைகள்: வள்ளலோசிறிபாமோபியா, ஆதரவறிக்கோமோபியா, பெயரிடிதசேமிழோபியா

Tuesday, October 02, 2007

நான் புலி, ரயாகரன் துரோகி

நிதர்சனம் வலைத்தளம் யாருடையது என்பது தொடர்பாக காலங்காலமாக சர்ச்சை நடந்துவருகிறது. சர்ச்சை என்பதைத்தாண்டி பலநேரங்களில் புலிகள் மீதான அவதூறு பரப்புவதற்கு இந்த விசயம் கையாளப்படுகிறது. புலியெதிர்ப்பு வாதிகள் அடிக்கடி சொல்லும் 'நிதர்சனம் புலிகளுடையதுதான்' என்ற கோசம் வழமைபோல ரயாகரனால் சொல்லப்பட இன்னொருமுறை தீப்பற்றிக் கொண்டது.
நிதர்சனம் புலிகளுடையதுதான் என்பதற்கு புலியெதிர்ப்புக் 'கும்பல்' சொல்லும் காரணம், அது புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது என்பதுதான்.
புலிகளை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லாரையும் 'துரோகி' என்ற சொல்லால் அழைக்கும் சில புலி வால்பிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் செய்வதும் அந்த வால்பிடிகளின் வேலையைத்தான்.
வலைப்பதிவு எழுதுபவர்களில்கூட புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். புலிகளை ஆதரித்து எழுதுகிறார்கள். இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி பார்த்தால் வலைப்பதிவில் புலிகள் ஆதரவுப்போக்குக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் புலிகள்தான். அதன்படி பார்த்தால் கொண்டோடி புலியாகத்தான் இருக்க வேண்டும். (ஆனால் புலியாதரவாளர்கள் நிதர்சனம் வலைத்தளம் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புவதோடு, அதை வெளிப்படையாக எழுதியுமிருக்கிறார்கள் என்பது இங்கொரு நகைமுரண்)
மறுவளத்தில், புலியை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லோரும் துரோகிகள்தாம் (இதை நாம் சொல்லவில்லை; புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி தான்). அவ்வகையில் ராயகரன் துரோகிதான்.
இப்போது புதுவாதம் வைக்கப்படுகிறது.
"நிதர்சனம் புலிகளுடையதா இல்லையா என்று வாதிடுவதால் எந்த மாற்றமும் நடந்துவிடாது".
மேலும், புலிகளின் வரலாற்றைப்போலவே நிதர்சனத்தின் வரலாறும் இருக்கிறதாம். ஆகவே இது புலிகளினது தானாம்.
நிதர்சனம் தமது வலைத்தளமில்லை என்பதை புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்து அறிக்கை விட்டிருந்தார்கள். நிதர்சனம் தளமும் புலிகளுடனான தமது தொடர்பை மறுத்திருந்தது.
சரி, ரயாகரன் சொல்வதுபோல் புலிகளின் மறுப்பை நம்புவதற்கில்லை என்பது நியாயமான வாதம் தான். புலிகள் தாம் செய்தவற்றை மறுத்திருக்கிறார்கள்.
ஆனால், நிதர்சனம் தமது தளமில்லையென்ற நிலையில் அதை நிறுத்த புலிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை ரயாகரன் கேட்பது வியப்பானது. என்னதான் செய்ய வேண்டும், ஓர் அறிக்கை விடுவதைத்தவிர?
நிதர்சனத்தை நடத்துபவரை மண்டையில் போடச் சொல்கிறீர்களா? முதலில் நிதர்சனம் தளத்தை நிறுத்துவதை வரவேற்கிறீர்களா? நீங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளில் இருந்து, அதை முழுமையாக மறுப்பீர்கள் என்றுதான் புரிகிறது.
பிறகு என்னதான் செய்வது? நிதர்சனத்தை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று புலிக்கு ரயாகரன் கோரிக்கை வைப்பது வேடிக்கையானதல்லவா?
அடுத்து, நிதர்சனம் யாருடைய நலனுக்குப் பாடுபடுகிறது என்ற கேள்வியை கேட்டுவைப்போம். நிதர்சனம் தொடர்ந்து இயங்குவதில் யார் பலனடைகிறார்கள் எனற கேள்வியைக் கேட்டு வைப்போம். நிதர்சனம் நிறுத்தப்பட்டால் யாருக்குத் தீமை என்பதைக் கேட்டுவைப்போம்.
இவற்றுக்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நிதர்சனமானது புலிகளின் எதிர்த்தரப்பின் நலனையே தனது முதன்மை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது. நிதர்சனத்தால் பலனடைவது புலியெதிர்ப்பாளர்களே. நிதர்சனம் நிறுத்தப்பட்டால் நட்டமடைவது புலியெதிர்ப்பாளர்களும் சிறிலங்கா அரசுமே.
நிதர்சனத்தை நிறுத்துவோம்; அதன்மீது வழக்குப்போடுவோம் என்று கரடி விட்டுக்கொண்டிருந்தவர்கள் எங்கே போனார்கள்? ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை? ஏன் நிதர்சனம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது?
ஆனந்தசங்கரி துள்ளினார், புளொட் அமைப்பு கொக்கரித்தது. இறுதியில் என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை.
ஏன் சிறிலங்கா அரசின் உயர்மட்டத்தில்கூட நிதர்சனம் தளம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையும் கண்டனமும் வெளியிடவேண்டி வந்தது. இவ்வளவுக்கும் நிதர்சனத்துக்கு எதிர்ப்பக்கம் நின்று கொக்கரித்தவர்களிடம் தான் நூறுவீத நியாயமும் இருந்தது. அதுவும் சிறிலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால் அந்த படம் வெளியிட்ட பிரச்சினைக்கு நிதர்சனத்தை முடக்கியிருக்கலாம். அனால் சும்மா அறிக்கை விட்டதோடு நின்றுவிட்டது. அதுபோல்தான் புளொட் மற்றும் ஆனந்தசங்கரி வகையறாக்களின் வெற்றுச் சவடால்கள். நிதர்சனத்தைப் புரட்டுறோம் புடுங்குறோம் என்று அறிக்கை விட்டவர்கள், தமது பக்கம் முழுமையாக நியாயம் இருந்தபோதும்கூட எதுவும் செய்யவில்லை. இது, ஏதோ ஜனநாயகப்பண்பால் வந்ததென்று யாரும் நம்பமுடியாது. ஒரே காரணம், நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்பதுதான்.
நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்று விரும்புவர்கள் சிறிலங்கா அரசாங்கமும் ஆனந்தசங்கரியும், புளொட்டும்தான். ஏனென்றால் அதில் அவர்களின் புலியெதிர்ப்பு வியாபாரம் இருக்கிறது. நிதர்சனத்தை வைத்து புலிகளை வசைபாடும் அருமையான வாய்ப்பை அவர்கள் நழுவவிடத் தயாரில்லை.
இப்போது சொல்லுங்கள், நிதர்சனம் யாருடைய நன்மைக்காக இயங்குகிறது?

Saturday, September 29, 2007

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்

மாயாவுக்கு னந்திறந்த டல் (உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ)

இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.
மாயா எழுதிய வரி.
//கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.//
இனி கொண்டோடியின்ர முறை.

மாயா அண்ணை,
எனக்கொரு ஆசை.

உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ?

இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ.
நம்பமாட்டியள்.
இண்டைக்கு இல்லாட்டியும் எண்டைக்காவது ஒருநாள் 'இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது' எண்டு 'கம்பனுக்குக் கோட்டம் அமைத்துத் தமிழ் வளர்த்த இலங்கைத் தமிழர்களிடமிருந்து' (நல்ல வேளை, கவனமாத்தான் சொற்களைப் பாவிக்கிறியள். ஈழத்தமிழர் எண்டு பாவிக்காமல் விட்டியள் பாருங்கோ, அங்க நிக்கிறியள் நீங்கள்) ஒப்பாரியொண்டு வரும்.
இப்போதைக்கு உவங்கள் சேது சமுத்திரத் திட்டத்தை முடிக்கப் போறேல எண்டபடியா உது கட்டாயம் நடக்கத்தான் போகுது.

உங்கட அரசியல் சார்பை வைச்சே கம்பன் கழகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.

உவையளை ஏன் யாழ்ப்பாணத்தைவிட்டு ஓடச்சொல்லிச் சொல்ல வேணும்?(சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்பு)

புலிகள் நடத்திய "மானுடத்தின் தமிழ்க்கூடல்" கருத்தரங்குக்கு இல்லாத தமிழ் அக்கறையா? பேர் ஊர் அறியாத யார் யாரையோவெல்லாம் எங்கெங்கோ இருந்து அழைத்து - வருவதற்குச் சாட்டுச் சொன்ன நாலைந்து பேரைக்கூட "அதென்ன மாட்டன் எண்டுறது? வாவெண்டா வரவேண்டியது தானே?" எண்டு செல்லமாக அதட்டி வரவழைத்து நடத்தப்பட்ட
இக்கருத்தரங்குகளில் ஏன் கம்பன் கழகத்துத் தலைகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டார்கள்?

அரசியல் ரீதியில் ஓரளவு எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்கூட அக்கருத்தரங்குக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டார்கள். 'வானம் எம்வசமென'ப் பாடியவர்கள் உங்கு வந்துள்ளார்கள்' என புதுவையால் நையாண்டி பண்ணப்பட்டவர்கள்கூட அதே புதுவையால் அழைக்கப்பட்டார்கள். ஆனால் கம்பன் கழகத்தாருக்கு என்ன நடந்தது?

இராமாயணம், இராமன், அனுமன் தொடர்பில் புலிகளின் நிலையென்ன என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்ட பொன்.கணேசமூர்த்தியால், இராவணனை நாயகனாகவும் இராமனை வில்லனாகவும் வைத்து எழுதப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற 'இலங்கை மண்' என்ற நாடகத்தையும், அந்நாடகப்பிரதி புத்தகமாக வெளிவந்தபோது அதற்குப் பிரபாகரன் எழுதிய வாழ்த்துரையையும் படித்தால் சில தெளிவு பிறக்கும்.

"இராமாயணம் உண்மையானால் அனுமனை எதிர்க்கிறேன்;
அவன்தான் எம்மண்ணை மிதித்த முதல் ஆக்கிரமிப்பாளன்.
அது புனைவானால் வான்மீகியை எதிர்க்கிறேன்;
அவனது ஆக்கிரமிப்புச் சிந்தனைக்காக"
என்ற பொருளில் கவிதை பாடிய (புதுவையின் கவிதை வரிகளைச் சரியாகப் பதியவில்லை. பாடுபொருள் இதுதான். இது கம்பன் கழகத்தாரின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது) புதுவை இரத்தினதுரைதான் புலிகளின் ஆஸ்தான கவிஞனாகச் சொல்லப்படுபவர்.

கம்பன் கழகத்தாரோ வெறும் காப்பியக் கதைசொல்லல் என்றளவோடு நின்று கொள்வதில்லை. அதுதான் முதற்சிக்கல். அதையும் தாண்டி வேறு பல வேலைகளைச் செய்கிறார்கள்.
இராமனையும் அனுமனையும் எங்களிடம் புகுத்த அயராது உழைப்பவர்களல்லவா இந்தக் கம்பன் கழகத்தார்?

இராவணனின் பூட்டன்களிடம் இவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும்?
இராம, அனுமன் பாதந்தாங்கிகள், அந்தக் கருத்தாக்கத்தையே ஓர் ஆக்கிரமிப்பு வடிவமாய்க் கருதும் சமூகத்திடம் எப்படி செல்வாக்குச் செலுத்த முடியும்?

முன்பொரு முறை சகபதிவர் சூரமணி கேட்டிருந்த கேள்விதான் இங்கும்.
"இராம - இராவணச் சண்டை முடிந்துவிட்டதென்று யார் சொன்னது?"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த கோட்டம் அமைத்து, சிலை வைத்துத் தமிழ் வளர்ப்பதென்பது அடிப்படையில் நகைச்சுவையான கதைதான். அதைப்பற்றியே தனியே விவாதங்கள் செய்யலாம்.

Friday, September 21, 2007

புலிகளிடத்தில் வாரிசு அரசியல்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் வாரிசு அரசியல் ஊடுருவியிருப்பதாக ஆய்+வ்+உ+க் கட்டுரைகளும் செய்திகளும் எழுதப்படும் வேளையில், நாமும் இதுபற்றி - ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரைகளையும் செய்திகளையும் படைக்கும் பிரம்மாக்கள் குறிப்பிட மறந்த - வாரிசு அரசியல் பற்றி பேசவேண்டும்.


முதலில் சிறு குழப்பம். பிரபாகரனின் முத்த மகன் சாள்ஸ் அன்ரனி
சிலவருடங்களின் முன்னர் தம்மை இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து கொண்டமை
எமக்குத் தெரிந்த உண்மை. தனது உயர்தரப் பரீட்டைக்குத் தோற்றாமல் அவர்
இணைந்துகொண்டார்.

இற்றைக்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களின் முன்பு சாள்ஸ்
வெளிநாட்டுக்குப் படிக்க வந்ததாக செய்திகள் வெளிவந்தன. கூடவே பிரபாகரனின் மீது
கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சாள்ஸ் விமானப்படை தொடர்பான ஏதோ
படிப்பதாகத் தகவல்கள் வந்தன. இதில் அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார்
என்ற தகவல் குழப்பகரமானது.
சரி, அவற்றை விட்டுவிடுவோம்.

இந்நிலையில்
விடுதலைப்புலிகளின் விமானப்படை பற்றி அவ்வப்போது சிறிலங்காவும் இந்தியாவும்
புலம்பிக்கொண்டிருந்தன. புலிகள் தமது விமானப்படைத் தாக்குதலைச் செய்வதற்கு மூன்று
வருடங்களுக்கு முன்பிருந்தே இவை கடுமையாகப் புலம்பத் தொடங்கிவிட்டன.
அப்போதெல்லாம் புலிகளின் விமானப்படைக்குத் தலைமை தாங்கியவர் கெனடி என்ற நிலவன்
என்றே நாம் அறிகிறோம்; இத்தகவல் இயலுமானவரை வெளி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.

சாள்ஸ் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருப்பதாகச்
சொல்லப்பட்டுக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் சடுதியாக இன்னொரு கதை வந்தது.
சாள்ஸ்தான் புலிகளின் விமானப்படைத் தளபதியென்று அந்தக் கதை சொன்னது. சாள்ஸ்
படிப்பு முடிந்து நாடு திரும்பினாரா? (வெறும் இரண்டு வருடத்துக்குள் படிப்பு
முடித்தாரா என்பது இன்னொரு கேள்வி) நாடு திரும்பிய சாள்ஸை புலிகளே
விமானப்படைத்தளபதியாக மாற்றினார்களா அல்லது இந்த ஊடகங்கள்தாம் மாற்றினவா என்பதை
நாமறியோம்.
[புலிகளின் விமானபடைத் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட
படங்கள், மாற்றம் நடக்கவில்லையென்பதைச் சொல்வதாகவே தெரிகிறது]

சரி... இனி நான் கதைக்கப் புறப்பட்ட வாரிசு அரசியலுக்கு வருவோம். புலிகளின் வாரி அரசியல் பற்றிக் கதைப்பவர்கள் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையும் அது சொல்லும் வாரிசு அரசியலையும் தவிர்த்து விடுகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் அண்மையில் நடந்த படகு வெடிவிபத்தொன்றில் கடுமையாக விழுப்புண்ணடைந்தார். தற்போது அவர் தேறிவிட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளார்கள்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகக் களப்பணியாற்றிய மூத்த தளபதி, தானே நேரில் நின்று பரிசோதனையை நடத்துவதோ உயிராபத்தான பணிகளைச் செய்வதோகூட முக்கியமற்றவையாகக் கருதி விட்டுவிடுவோம்.

ஆனால் அந்த வெடிவிபத்தில் கேணல் சூசை மிகக்கடுமையாகக் காயமடைய, அவரது மகன் சாரங்கன் கொல்லப்பட்டுள்ளார். தான் மட்டுமன்றி தனது மகனையும் உயிராபத்தான அச்சோதனையில் ஈடுபடுத்திய தந்தையின் வாரிசு அரசியல் எப்படிப்பட்டது?

[இங்கு, சாரங்கன் போராளியா அல்லது சூசையின் மகன் என்ற முறையில் சோதனையில் கலந்துகொண்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை. பொதுவாகவே வன்னியில் போராளிக்கும் பொதுமக்களுக்குமான மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கும். அதுவும் தற்போது இன்னும் நெருக்கம்]

தனது மகனையும் உயிராபத்தான பணியில் ஈடுபடுத்திச் சாகக்கொடுக்கும் தளபதியின் வாரிசு அரசியல் பற்றியும் நாம் பேசவேண்டும்.
இது தவிர்த்து வேறும் பல சம்பவங்கள் போராட்டத்திலுண்டு.

விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞன் எனக் கூறப்படும் புதுவை இரத்தினதுரை ஒரு மூத்த போராளி. களத்தில் வீரச்சாவடைந்த தன் மகனுக்கு சீருடையுடன் நின்று கொள்ளிவைத்த போராளி அப்பன் தான் இந்தக் கவிஞன். (தொன்னூறுகளின் தொடக்கத்தில் புலிகளின் வித்துடல்களை புதைப்பதில்லை; எரிப்பதுதான் நடைமுறையிலிருந்தது)
தற்போதும் மிகத்தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு போராளி தமிழ்க்கவி. படைப்பாளியான இவரின் இளையமகன் களத்தில் வீரச்சாவு. தனது இன்னொரு மகனையும் தானாகவே முன்வந்து போராளியாக இணைத்தவர். இவரது மகள் வயிற்றுப்பேரனும் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்.



தற்போது விடுதலைப்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக இருப்பவர் பொன்.தியாகம். முதிய வயதிலும் முழுநேரப் போராளியாகச் செயற்படுபவர்.
கணேஸ், தினேஸ் என்று இவரது இரு மகன்கள் இயக்கத்தில் போராடி வீரச்சாவடைந்தனர். மூத்தவர் எண்பதுகளிலேயே வீரச்சாவு. மூன்றாவதாக மகளும் தேன்மொழி என்ற பெயரில் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே இருவர் வீரச்சாவென்பதல் இவர் களப்பணிகளில் இருந்து விலத்தி, அரசியல் வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனாலும் சண்டைக்குச் செல்லும் உத்வேகத்தோடு விடாமல் போராடினார்.
'எடேயப்பா உவளை சண்டை ரீமுக்கு மாத்திவிடுங்கோ' என்று தானே முயன்று மகளை யாழ்செல்லும் படையணியின் தாக்குதல் அணியில் இணைத்துக் களமனுப்பிய கிழவன்தான் இந்தப் பொன்.தியாகம். ரணகோச என்ற பெயரில் முன்னேறிய படையினருடன் ஏற்பட்ட மோதலில் பள்ளமடுப்பகுதியில் மேஜர் தேன்டிமொழி வீரச்சாவு.
பெத்த பிள்ளைகள் மூன்றும் வளர்த்த பிள்ளை ஒன்றுமென நான்கு பிள்ளைகளைக் களமனுப்பிப் பலிகொடுத்த தகப்பன் இன்றும் முழுநேரப்போராளியாக தனது எழுபதுகளில் செயற்பட்டு வருகிறார்.

கடற்புலிகள் அமைப்பில் தாயும் மகனும் சுடுகலனேந்தி சமர் செய்த வரலாறுண்டு. ஒரே கடற்சண்டையில் இருவரும் பங்குபற்றி அதில் தாய் வீரச்சாவடைந்த சம்பவம் நடந்தது. இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வீதிநாடகம் வன்னியில் ஓர் எழுச்சியை உண்டுபண்ணியது.


இவையும் புலிகளிடத்திலுள்ள வாரிசு அரசியல்தான். இவை பற்றியும் நாம் பேச வேண்டும்.

சாள்ஸ் விமானப்படைப் பொறுப்பை வகித்தாற்கூட அதுவொன்றும் சும்மா காலாட்டிக்கொண்டிருக்கும் வேலையன்று. ஆபத்தில்லாத சொகுசு வாழ்க்கையுமன்று. எதிரிகளால் அதிகளவுக்குக் குறிவைக்கப்படும் துறையும்கூட.

சாள்ஸ் ஏதோ வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார் என்றளவுக்கு விமர்சித்துக்கொண்டிருந்தவர்களே, இப்போது அவர் மீண்டும்வந்து விமானப்படைத் தளபதியாக இருக்கிறார் என்று சொல்வதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிலகாலம் கழித்து, சாள்ஸ் நாடு திரும்பவில்லை, அவர் வேறு ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார் என்றும் கதை வரும்.
அதுவரைக்கும் இப்போதிருக்கும் கதையைப் பற்றி அலசுவோம்; ஆராய்வோம்; விமர்சிப்போம்; விவாதிப்போம்.

எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.

Monday, April 23, 2007

இந்தத் தமிழ் எப்படிப் புரிகிறது?

கீழே ஒருவசனம் தந்திருக்கிறேன்.
அவ்வசனத்தை நீங்கள் எப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்பதைப் பின்னூட்டமாகத் தெரிவியுங்கள்.
இது எனது தமிழ்ப்புரிதலை மீள்பார்வைக்கு உட்படுத்தும் ஒரு நடவடிக்கை.
'இயன்றவரை தமிழில்' எழுதப்பட்ட ஒருவசனம் என்போன்ற சிலருக்கு ஒருமாதிரியும், இன்னும் சிலருக்கு முற்றாக வேறுமாதிரியும் விளங்குவது ஏனென்றுதான் எனக்கு விளங்கவில்லை.

இனி கீழே வருவது தமிழ்மண நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றில் வந்த வசனம்.

இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் அமெரிக்கநீதித்துறையின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை'




மேற்படிப் பத்தியில்,
எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.


என்றுவரும் வசனத்தின் பொருள்தான் சிக்கலைக் கொடுக்கிறது.
இதில் நான் விளங்கிக்கொள்வது:
தமிழ்மணத் திரட்டி நிர்வாகத்தில் இருப்பவர்கள் "தமது செயற்பாட்டு விவரங்களை" தார்மீகக் காரணங்களுக்காக' தாமே விரும்பினால் மட்டுமே சக வலைப்பதிவர்களுக்குத் தரலாம் என்று சொல்கிறார்கள்.
அதாவது யார்யார் திரட்டியில் என்னென்ன பணி செய்கிறார்கள், என்பது தொடர்பான விவரங்களை என்று கருதிக்கொள்ளலாம்.

இதுதான் மேற்படி வசனத்தில் என்போன்றவர்களுக்கு விளங்கிக்கொண்டது.

ஆனால் வேறுசிலரோ வேறுமாதிரி இதை விளங்கிக்கொள்கிறார்கள். எப்படியென்றால்,

"திரட்டி நிர்வாகம் தார்மீகக் காரணங்களுக்காக தாமே விரும்பினால், திரட்டியில் இணைந்திருக்கும் பதிவர்களின் விவரங்களை சக பதிவர்களுக்கு வெளியிடும்"

மேலே நீலநிறத்தில் இருக்கும் முறையில் விளங்கிக்கொண்டவர்களுக்கும் அதற்கும்மேலேயுள்ள முறையில் விளங்கிக்கொண்ட என்னைப்போன்றவர்களுக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு?

மற்றவர்கள் தற்செயலாகத்தான் தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால் -/பெயரிலியின் இடுகையைப் படித்தபின்னும் தொடர்ந்தும் அதேகருத்தில் இருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு எனது தமிழ்மேலேயே ஐயம் வந்துவிட்டது.
நாங்கள் கொஞ்சப்பேர்தான் தமிழைப் பிழையாகப் பயன்படுத்துகிறோமோ?

சரி, தனியே அந்த வசனத்தை மட்டும் வாசித்தறிவதில்தான் சிக்கல் என்றால் அவ்வசனம் வரும் பத்தியை (இவ்விடுகையின் தொடக்கத்தில் மேற்கோளிடப்பட்ட பத்தி) வாசித்தால் இன்னும் விளக்கம் கிடைக்கும்.

அதனால்தான் யார்யாருக்கு எப்படியெப்படி தமிழ்மண நிர்வாகத்தினரின் அறிவிப்பு வசனம் விளங்கியுள்ளது என்பதை அறிய இவ்விடுகை.
மேலே இரண்டுவிதமான புரிதல்களைத் தந்துள்ளேன். அதில் கொழுவியின் புரிதலா, மற்றவர்களின் புரிதலா உங்களுடைய புரிதல் என்பதைப் பின்னூட்டத்தில் சொன்னால்போதும். அவை இரண்டையும்விட வேறேதாவது புரிந்தால் அதையும் எழுதுங்கள்.

யார் சொன்னது மொழி தொடர்பாடலுக்கானது மட்டுமென்று?
தமிழ் மிகச்சிறந்த அரசியல் மொழியாகவும் உள்ளது.

***
இவ்விடுகையும் விளங்காமல் வழமைபோல் 'இலங்கைத் தமிழில் காமடிப் பதிவாகவே' தெரியச் சாத்தியமுள்ள சிலருக்கு, அவர்களுக்குப் புரியும்வண்ணம் ஒருவர்மூலம் மொழிபெயர்த்து இடஇருப்பதால் அதுவரை அவர்கள் பொறுமை காக்கும்படி கொழுவியாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்.


****
இவ்விடுகைக்கு, 'விழிப்புணர்வு' என்ற குறிசொல் கொடுக்கப்பட்டது தற்செயலானதே. யாரும் கண்டுகொள்ள வேண்டாம்.

Thursday, February 22, 2007

உணர்வுகள் வலைப்பதிவில் பின்னூட்டமிட

உணர்வுகள் என்ற தமி்ழ் வலைப்பதிவாளர் ஈழத்தவரின் அரசியல்சார் பதிவுகள் பலவற்றை எழுதிவருவதும் அவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
அவருடைய வலைப்பதிவில் அவர் தனக்கேற்றபடி பின்னூட்டங்களை மட்டுறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக வந்துகொண்டுள்ளது. அதை அவரும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்.
பொதுவாக பின்னூட்டங்களை வெளியிடவில்லையென்பது தலைபோகிற சிக்கலாக இருப்பதில்லை. ஆனால் இதுவிடயம் தொடர்பாக வன்னியன் தனது தளத்தில் எழுதியது என் கவனத்தை ஈர்த்த்து.

பின்னூட்டங்களை வெளிவிடாத சிக்கல் மிகப்பாரதூரமானது.
அப்பதிவர் ஈழத்தவரின் ஒட்டுமொத்தக் குரலாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டும் கருதிக்கொண்டும்
கருத்துக்களை அள்ளிவீசிக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான மறுப்புப்பின்னூட்டங்களை வெளிவிடாமல் தணி்க்கை செய்வது மிகக்பெரிய வன்முறை மட்டுமன்றி, ஈழத்தமிழர் அனைவரின்
சார்பாகவும் தான்சொல்வதே சரியென்று நிறுவமுயலும் ஒற்றைத்தன்மையைக் கொண்டது. இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது.

ஆம்! இது ஈழத்தமிழர் அரசியலுக்கு மிகக்கேடானது. ஏற்கனவே அரைகுறை அறிவோடு ஈழத்தவர் பிரச்சினையை அணுகும் பதிவர்கள் (சிலர் இப்போதுதான் தொடக்கநிலையிலேயே இருக்கிறார்கள் என்பது வேறு) உணர்வுகள் போன்ற வலைப்பதிவூடாக அறிவது உண்மைக்குப் புறம்பாக அல்லது ஒற்றைத்தன்மையுடன் கூடிய விளக்கங்களையே. ஈழத்தமிழர் அரசியலில் அவ்வப்போது இடையில் குதித்து குரங்காட்டம் ஆடிவிட்டுப்போகும் நபர்களும் இப்படியானவர்களின் கூற்றுக்களை தமக்கேற்றபடி மேற்கோள்காட்டி ஏதாவது சொல்லிவிடப்போகும் நிலையை ஏற்படுத்தும்.

ஆகவே இவ்விடயத்தில் நாங்கள் ஏனோதானோ என்றிருக்காமல் கவனமாக இருக்கவேண்டிய தேவையுள்ளது. தான்மட்டும் எழுதிக்கொண்டு தனக்குப்பிடித்த கருத்துக்களை மட்டும் வெளியிட்டுக்கொண்டு சரியான எதிர்வினைகளை முடக்கி வலைப்பதிவுலகில் தனிக்காட்டு ராஜாவாக வலம்வரத் துடிக்கும் தனிப்பட்ட நபரொருவரின் நடவடிக்கை நேரடியாக ஈழத்தமிழர் அரசியலைத் தொடுவதால் நாங்கள் எங்கள் எதிர்வினைகளைப் பதிவாக்க வேண்டும்.

ஏற்கனவே சிலர் சொன்ன யோசனைப்படி ஓர் இடுகையை இங்கு இடுகிறேன்.
அதாவது அங்கு வெளியிடப்படாதென நினைக்கும் பின்னூட்டங்களை இவ்விடுகையில் பின்னூட்டமாகத் திரட்டுவதே அந்நோக்கம்.
அங்கு இடும் பின்னூட்டத்தை இங்கும் இடுங்கள். அங்கு அப்பின்னூட்டம் வெளியிடப்பட்டால் இங்கு அது வெளியிடப்பட வேண்டிய தேவையிருக்காது.
இங்கு வெளியிடப்படும் பின்னூட்டங்களும் 'தமிழ்மணத் திரட்டி தனது பின்னூட்டங்கள் திரட்டும் சேவையை இடைநிறுத்த ஏதுவாக இல்லாத" சந்தர்ப்பத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

பின்னூட்டமிடுவோர் கவனிக்க வேண்டியவை:
நீங்கள் பின்னூட்டமிடவேண்டிய உணர்வுகளின் இடுகைக்குரிய URL ஐக் குறிப்பிட்டு, அதன்கீழ் உங்கள் பின்னூட்டத்தை இடவேண்டும்.
அப்போதுதான் அப்பின்னூட்டம் எவ்விடுகைக்குரியது என்பதை மற்றவர்களால் அறியமுடியும்.
இப்படி பின்னூட்டங்கள் திரட்டும் செயற்பாடு எவ்வளவு காலத்துக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கொழுவியால் தற்போது உறுதியாகச் சொல்ல முடியாது.

Monday, February 05, 2007

ஆரம்பிச்சிட்டாங்கய்யா..

கொழுவி பேரில நேற்றொரு பின்னூட்டம் பார்த்தேன்.
ம்..
யாரோ ஆரம்பித்து விட்டார்கள் எண்டது விளங்கீட்டுது. இன்றும் யோகனின் பதிவில் ஒரு கீழ்த்தரப் பின்னூட்டம் எனது பெயரில்..

அப்பிடியே தமிழ் வலைப்பதிவுகளில் உலாவினால் பெயரிலியின் பெயரிலும் பின்னூட்டங்கள் வர ஆரம்பித்து விட்டன.

ஈழபாரதியின் பதிவொன்றில் வசந்தன், கானாபிரபா, தீவு ஆகியோர் பெயரிலும் இப்படியான போலிப் பின்னூட்டங்கள் வந்திருந்தன.

-/பெயரிலி.. கொழுவி.. வசந்தன்.. தீவு... கானா பிரபா இந்த வரிசையில் அடுத்ததாக டிசே மற்றும் சோமி இவர்களின் பெயர்களில் பின்னூட்டங்கள் எங்காவது வந்திருக்க வேண்டும் அல்லது வரவிருக்கின்றன.

குறிப்பிட்ட பதிவர்களுக்குள் என்ன "சீல"ம்பாய் உறவெண்டு நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட பதிவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கான தொடர்பு வசதியைத் தெரியப்படுத்தி வலைப்பதிபவர்கள். சிக்கலான சந்தேகமான பின்னூட்டங்கள் வந்தால் அவர்களுடன் தொடர்புகொண்டு பின் பிரசுரிக்கலாம்.
கொழுவிக்கான தொடர்பு முகவரி ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தாலும் இங்கும் தருகிறேன்.
koluvi@gmail.com

தயவு செய்து பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்வோர் கொஞ்சம் யோசிக்கவும்.
அப்படி யோசிக்கவும், சந்தேகம் வந்தால் மின்னஞ்சல் போட்டு தெளிவுபடுத்தவும் நேரமின்றியிருப்போர் அல்லது பஞ்சி பிடித்திருப்போர் தயவு செய்து உங்கள் வலைப்பதிவுகளுக்கு அனாமதேய பின்னூட்டும் வசதியை நீக்கிவிடுங்கள்.

இப்பிடி விளையாட்டு விளையாடுறவங்களின்ரை உணர்வுகளை நாங்கள் நல்லா புரிஞ்சு கொள்ளுறம். இதே ஆடடத்தைத் திருப்பி ஆடுவதொன்றும் பெரிய காரியமில்லை. இந்தப்பிரச்சினை வலைப்பதிவுகளில் தோன்றிய காலத்திலிருந்தே நாங்கள் வலையில் குப்பைகொட்டி வருபவர்கள்.
என்ன செய்ய?
பதிலுக்குத் தொடங்கு எண்டு மனசு அலைபாய்ந்தாலும்.. புத்தியும் மனசும் அடங்கு அடங்கு எண்டு அடக்குது.. பிழைச்சுப் போங்கோடா பொடியங்களா..