Wednesday, October 26, 2005

ஐரோப்பிய ஒன்றியத் தடை இல்லை.

விடுதலைப் புலிகள் ஐரோப்பாவுக்கு வர ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்கவில்லை - சட்டவல்லுனர் உருத்திரகுமார்

விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் ஜரோப்பாவிற்கு வருவதற்கு எந்த விதமான தடைகளும் ஜரோப்பிய யூனியன் போடவில்லையென்றும் சிங்கள அரச ஊடகங்களும் அவர்களுடன் தொடர்புள்ள ஊடகங்களும் போலியான பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ்சில் இயக்கிக் கொண்டிருக்கும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிர பல சட்டவல்லுனர் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 நாள் பெல்ஜியத்தில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டு ஐரோப்பிய ஒன்றிய பிதிநிதிகளிடம் மனுக் கையளித்து விட்டு திரும்புகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் சுமார் 2.30 மணி நேரம் இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன. தமிழர் தரப்பில் 10 பிரதிநிதிகள் கலந்து தமிழர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினர்.

விடுதலைப் புலிகளுக்கு ஜரோப்பிய நாடுகளும் ஜரோப்பிய ஒன்றியமும் பயணத்தடை விதிக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வ சந்திப்புக்களை மட்டும் மறு அறிவித்தல் வரை தவிர்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்களே தவிர அவர்கள் எந்த ஒரு பயணத்தடையும் விதிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை சமாதான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இலங்கை சமாதான முயற்சிகளில் தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர் என்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்புக்களை ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ப்பதானது சமாதானப் பேச்சுகளில் ஈடுபடும் தமிழர் தரப்பின் பிரதிநிதிகளின் சமனிலைத் தன்மையினைப் பாதிக்கும் என்றும் சமாதானப் பேச்சுக்களைப் பாதிக்கும் அரச இனவாதிகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய நகர்வுகள் இருக்கக்கூடாது என்பதனையும் தமிழர் தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி பதிவு இணையம்
www.pathivu.com

Saturday, October 22, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை-3.

யாழ் மருத்துவமனைப் படுகொலை 1
யாழ் மருத்துவமனைப் படுகொலை 2

பகுதி 3
ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த இன்னொரு மருத்துவர் தொடர்ந்து கூறினார்.

"கதிரியக்கப் பகுதியிலிருக்கும் ஓய்வறையை விட்டு விலகிச்செல்லும் நடைபாதையில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன. அவற்றின்மீது திறந்திருந்த ஜன்னலொன்றின் வழியே வந்துகொண்டிருந்த மாலைச் சூரியஒளி பட்டுக்கொண்டிருந்தது. பயத்தில் உறைந்துபோயிருந்த நான் என்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக மரக்கட்டைபோலப் படுத்துக்கிடந்தேன். உண்மையில் நான் உயிர்தப்பியது பெரிய அதிஸ்டம்தான். அந்த இராணுவவீரர்கள் ஒரு கிரனைற்றை வீசி எறிந்திருந்தார்கள். அக்குண்டு வெடித்ததில் எனக்கு முன்னால் படுத்துக்கிடந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டதைக் காலையில்தான் பார்த்தேன். குண்டுகள் வெடிப்பதைப்போல கிறனைற்றுக்கள் வெடித்துச் சிதறும்போது பயங்கரச் சத்தத்தை எழுப்பியது. பின் கட்டிடச் சிதறல்களும் பெருஞ்சத்தத்துடன் எங்கள் மீது படிந்தன. இறந்தவர்களிடமிருந்தும் காயமுற்றவர்களிடமிருந்தும் பெருகிவழியும் இரத்தத்தில் தோய்ந்து கட்டியாகும்.

"அந்த இரவுமுழுவதும் விழித்துக்கொண்டே படுத்துக்கிடந்த நான் பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்போது எங்கள் தலைக்கு மேலால் சீறிப்பாயும் வேட்டுக்கள் அல்லது கிரனைற் எறியப்படும் சத்தம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா டீ,...டீ...டீ... என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது. இன்னொரு குழந்தை கதறி அழுதது. ஒருவேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடுமென நினைத்தேன்.

"'என் கால்கள் விறைத்துப்போயிக்கிறது. நல்லாய்க் குளிர்ந்து போயிருக்கிறது. என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது. தயவு செய்து அதை யாராவது எடுத்துவிடுங்கள்' என்று ஒரு பெண்மணி கேட்டுக்கொண்டிருந்தார்.
"அப்பெண்மணியின் வலி முனகலைப்பொறுக்க முடியாமல்,
'யாராவது அவருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் அப்பிணத்தை எடுத்துதவினால் என்ன? உங்களுக்குக் காது செவிடா?'
என்று கத்தினேன். அந்தப் பெண்மணி தொடர்ந்து முனகிக்கொண்டிருந்தார். காலையில் அங்கு நிலவிய அமைதிக்கான காரணத்தை நான் அறியும்போது சுற்றியிருந்த எல்லோரும் அந்தப் பெண்மணி உட்பட இறந்துபோயிருந்தனர். ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார். கூடவே ராஜீவ் வாழ்க, இந்திரா வாழ்க என்றும் கூவிக்கொண்டிருந்தார். காலையில் அவரும் கிரனைட் குண்டுக்குப் பலியாகக் கிடப்பதைக் கண்டோம். வேறுசிலர் கழிப்பறைக்குள் போய் உயிர்பிழைத்திருப்பதைக் கண்டோம். பின் எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்:
"இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மருத்துவமனை இயக்குநரும் மற்றவர்களும் உடனடியாக வந்து எங்களை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களெல்லாம் அகதி முகாமில் இருப்பார்கள். அநேகமாய் அவர்களெல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து முறையிட்டு சிலவேளை ஒருகுழுவாக வெள்ளைக்கொடிகள் ஏந்திக்கொண்டு வெளியே வரக்கூடும். அவர்கள் நம்மை மீட்பார்கள். நாங்கள் காலைவிடியும்வரை அவர்களுக்காகக் காத்திருப்போம்."

"எப்போது விடியுமென்று ஆவலாய்ப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கையோடு இருந்தோம்.

"22 ஆம் திகதி காலை 8.00 மணி அல்லது 8.30 மணியிருக்கும். வைத்தியர் சிவபாதசுந்தரத்தின் குரலைக் கேட்டேன்.
"நாங்கள் அப்பாவி டாக்டர்கள் நர்சுகள். நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் சரணடைகிறோம்."
என்று உரக்கக் கத்தியவாறு அவர் வந்துகொண்டிருந்தார். அந்த ஓய்வறைக்கு அவர் திரும்பியதும், ஓய்வறையிலிருந்து செல்லும் மாடிப்படிகளின் மேல் நின்றுகொண்டிருந்த இராணுவவீரனொருவன் அவர் மீது விடாமல் தொடர்ந்து சுடுவதை நாம் பார்த்தோம். வைத்தியர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டுவிட்டார். தன்கூட வந்த தாதியரை தானே தன் இருபக்கமும் தள்ளிவிட்டதால் அத்தாதியர் காயங்களுடன் தப்பிவிட்டனர். எங்களுடைய தலைவிதி அவ்வளவுதான் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு கிடந்தோம்.

"பின்னர் காலை 10.30 அல்து 11.00 மணியளவில் எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் பெண் வைத்தியரொருவர் உயிரோடிருப்பவர்களையும் காயமடைந்தவர்களையும் கைகளைத் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைக் கேட்டோம். எங்கள் அறையில் ஆறுபேர் மாத்திரமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அனால் எங்களில் குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோமென்பது அப்போது புரிந்தது. நாங்களெல்லோரும் கைகளை மேலே உயர்த்தியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தோம். எங்களின் முன்னால் கிடந்த பிணங்களின் மீதெல்லாம் ஏறி நடந்தோம். அச்சடலங்கள் ஒருமைல் தூரத்துக்கு மேல் பரவிக்கிடந்தது போல் அப்போது தோன்றியது. இந்தியப் படை எங்களை நெருங்கிவர முடியாமல் அவை பெருந்தடை போலச் செயற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் தப்பிப் பிழைத்திருக்கிறோம். அப்போது எங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்தினார்.

"அழாதீர்கள். நாம் அழுதுகொண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் நிறைய, மிக நிறைய இழந்துவிட்டிருக்கிறோம். அனால் நாம் செய்ய வேண்டிய பணிகள், பெரும்பணிகள் நிறைய இருக்கின்றன. நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்." என்று அவர் கூறினார்.

"அவர் மட்டும் அந்த வார்த்தைகளை எங்களிடம் கூறியிராவிட்டால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாய் இடிந்து போயிருப்போம். யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதியர்கள மற்றும் ஊழியர்கள் அடங்கிய இச்சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்பும் தான் முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் கூட இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனைகளில் யாழ் மருத்துவமனையைத் தனித்துவத்தோடும் பெருமையோடும் நிலைநிறுத்துகிறது. இமால் முற்றுகையின் கீழ் பெய்ரூட் இருந்தபோது போர்ஜ் அல் பராஜ்னே என்ற முகாமில் இருந்த மருத்துவமனை என் நினைவுக்கு வந்தது."
தொடரும்....
----------------------------------------------
நன்றி: முறிந்தபனை.
மிகுதியை இதன் அடுத்த பகுதியிற் படிக்கவும்.


Friday, October 21, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2

யாழ் மருத்துவமனைப் படுகொலைகள் பாகம் 1.

பாகம் இரண்டு. தொடர்ச்சி......

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

"நாங்கள் அப்போது கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர். ஏழாம் இலக்க விடுதியைக் காலி செய்துவிட்டு நோயாளிகளும் அங்கிருந்தனர். சூட்டுச்சத்தம் எங்களுக்குக் கிட்டவாக வந்துகொண்டிருப்பது கேட்டது. 'இந்திய இராணுவம் உள்ளே நுளைந்தாலும் அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விசயங்களை விழங்கப்படுத்தலாம்' என்று நாங்கள் நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தோம். எங்களோடிருந்த வைத்தியர் கணேசரட்ணம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சகஊழியர்கள் சிலர் இன்னமும் தங்கள் விடுதிகளில் தான் இருந்தனர். சூட்டுச் சத்தங்கள் இப்போது எங்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. எங்களைச் சுற்றிலும் ஒரே சூட்டுச்சத்தம். எங்களைச் சுற்றியுள்ள அபாயத்தை எல்லோரும் அப்படியே தரையில் படுத்துவிட்டோம். சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்த இராணுவம் அங்கே நெருக்கியடித்துக்கொண்டிருந்த மக்கள்கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளியது. நோயாளிகள் இறந்துவீழ்வதைக் கண்களால் கண்டோம். விரலைக்கூட அசைக்காமல் செத்துப்போனவர்களைப்போல நாங்கள் தரையில் கிடந்தோம். இறந்துபோனவர்களின் சடலங்களை அகற்ற வரும்போது எங்களையும் அவற்றோரு போட்டு எரித்துவிடுவார்களோ அல்லது சுட்டுவிடுவார்களோ என்று முழுநேரமும் நடுங்கிக்கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்களைக் கேட்டோம். எங்களுடைய குவாட்டர்ஸ் அமைந்திருந்த மேல்மாடியில் அவர்கள் அங்குமிங்கும் போய்வந்துகொண்டிருக்கும் சத்தம் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாட்காலை 11.00 மணிவரை கிட்டத்தட்ட 18 மணிநேரம் பிணங்களோடு பிணங்களாக அப்படியே கிடந்தோம்."

இந்த இடத்திலிருந்து இன்னொருவர் விவரிக்கிறார்:

"இந்திய இராணுவம் வேளிகேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளரின் அலுவலகத்துக்குள்ளும் வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் சுட்டார்கள். என்னோடு பணிபுரிந்த பலர் இறப்பதை நேரிற்கண்டேன். இன்னொரு சகஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார், 'அப்பிடியே அசையாமல் படுத்துக்கிடவுங்கோ' என்று.

"எனவே நாங்கள் அன்றிரவு முழுவதும் இம்மிகூட அசையாமல் அங்குகிடந்த சடலங்களின் அடியிற் படுத்துக்கிடந்தோம். ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்தவர்களில் ஒருவருக்கு இருமல் வந்தது. அவர் இரவில் அவ்வப்போது முனகியவாறு மெதுவாக இருமிக்கொண்டிருந்தார். ஓர் இந்தியவீரன் அப்போது அவர்மீது கிரனைற்றை (கைக்குண்டு) வீசினான். அவரோடு வேறு பலரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதி அதில் இறந்தது எனக்குத் தெரியும். இன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று இரத்துக்கூவினார்:
"நாங்கள் அப்பாவிகள், நாங்கள் இந்திராகாந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு"
அவர்மீதும் ஒரு கிரனேற் வீசப்பட்டது. அவரும் அவரோடு கூட படுத்துக்கிடந்த சகோதரரும் கொல்லப்பட்டார்கள்".
---------------------------------------

அன்றிரவு கடந்துபோய் காலையாகிவிட்டது. நிலைமை பயங்கரமாகவே இருந்தது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம் அவர்கள் மூன்று தாதிகளுடன் தாழ்வாரம் வழியாக நடந்துவந்தார். தாம் யாரென்று காட்டிக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்துவிடுவது உசிதமென்று அவர்களிடம் சிவபாதசுந்தரம் எடுத்துரைத்திருக்கிறார். கைகளை மேலே உயர்த்தியபடி,
'நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் ஒன்றுமறியாத டாக்டர்களும் நர்சுகளும்தான்.'
என்று உரத்துக்கூறியவாறு அவர்கள் நடந்து வந்தனர்.

வைத்தியர் சிவபாதசுந்தரத்தை அவர்கள் வெகுகிட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். நர்சுகள் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிக்கிக்கொண்ட குழந்தைகளையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த அந்த உன்னத மனிதன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். சமாதானத்தினதும் அகிம்சையினதும் காவலன் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு தேசத்து இராணுவத்தின் கரங்களிலிருந்து அம்மருத்துவனுடைய தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு வன்முறையும் மரணமுமே பதிலாகக் கிடைத்தன.

உயிர் பிழைத்தவர்கள் மறுநாட்காலை 11.00 மணிவரையும் இறந்துபோனவர்களின் பிணங்களுக்கிடையில் தாமும் இறந்துவிட்டவர்கள்போல் அப்படியே கிடந்தனர். இராணுவ அதிகாரியொருவர் அந்த ஆஸ்பத்திரி விடுதியொன்றுக்கு வந்தபோது அங்கிருந்த பெண் வைத்தியர் ஒருவர் அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய பின்புதான் தாங்கள் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தோர் அனைவரும் கூறினர். அந்த டாக்டர் அவ்வதிகாரிக்கு நிலைமையை விளக்கிக்கூறி தனது இருகைகளையும் மேலுயர்த்திவாறு அவர்கள் இராணுவத்தாரோடு இருக்கும் பகுதிக்கு வந்தார். தன்னுடன் பணிபுரிபவர்களையும் காயுமுற்றுக் கிடந்தோரையும் அவர் குரல் கொடுத்து அழைத்தார். தங்களின் சகமருத்துவர் டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் கீழே இறந்துகிடப்பதைக் கண்டார். ஆஸ்பத்திரியில் தங்கியிருப்பவர்கள் மேலே தங்களின் அறைகளுக்குச் சென்று பார்த்தபோது முழுப்பகுதியும் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர். தரையிற் சிந்திக்கிடந்த அவர்களின் துணிமணிகள் ரத்தம்தோய்ந்த பூட்ஸ்களின் தடங்கள் காணப்பட்டன. அவர்களின் விலைமதிப்புள்ள உடைமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன. அதற்குப்பின்னர் அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர்களின் கதவருகில் ஒரு இராணுவவீரன் நின்றுகொண்டிருந்தான். அந்த நாட்களில் அவர்கள் பயங்கரப் பீதிக்குள்ளாகியிருந்தனர்.

நன்றி: முறிந்த பனை.

-----------------------------------------------------
அடுத்த பகுதியில் இன்னொரு மருத்துவரின் வாக்குமூலம் தொடரும்.


யாழ் மருத்துவமனைப் படுகொலை.

இன்று பாரதப் படைகளால் யாழ்மருத்துவமனையில் நடத்தப்பட்ட படுகொலையின் பதினெட்டாம் ஆண்டு நினைவுநாள். அதையொட்டி, அச்சம்பவம் பற்றி 'முறிந்த பனை'யில் எழுதப்பட்ட பத்திகளை இங்கே தருகிறோம். 'முறிந்த பனை' பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லையென்றே நினைக்கிறேன். 'அழ வேண்டாம் சோதரி' யின்போதோ வேறு சந்தர்ப்பங்களிலோ றாஜனி திரணகம பற்றிய விவாதங்களில் தாராளமாக இந்நூல் பற்றிக் கதைக்கப்பட்டதுண்டு. இனி அந்நூல் சொல்லும் அப்படுகொலை பற்றிய பத்திகளைப் பார்ப்போம். நீளம் கருதி பகுதிகளாக இடப்படுகிறது.

யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவனைக்கு வந்து கொண்டிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமலிருந்தது. எழுபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தன. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரச அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து எறிகணைத் தாக்குதலின் தீவிரம் குறைந்துவிட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் பாதுகாப்புப் பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13 ஆம் திகதி எறிகணைத்தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அப்பாவி மக்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதென்று இந்தியத் தூதரகம் மறுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்டோபர் 21 ஆம் திகதி - தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் யாழ் மருத்துவனையின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் கோட்டை இராணுவ முகாமிலிருந்தும் ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானது. காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைக் கூடத்தின்மேல் ஓர் எறிகணை விழுந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத்துருப்புக்கள் காணப்பட்டதாக அங்கிருந்த மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 க்கு 8 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் ஓர் எறிகணை விழுந்ததில 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்ற இம் மருத்துவ நிபுணர் 2.00 மணியளவில் ஆயுதம் தாங்கிய சில விடுதலைப்புலிகள் அங்கு நிற்பதைக் கண்டிருக்கிறார். பின் அவர் மருத்துவர் கணேசரட்ணத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த புலித்தலைவன் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து குழுவினரோடு வெளியேறிவிட்டான். சற்று நேரத்தின் பின் வேறொரு புலிகளின் கோஸ்டி அவ்விடத்துக்கு வந்தது. அவர்களிடமும் நிலைமையை விளக்கிய பின் அவர்களும் அங்கிருந்து சடுதியில் காணாமற்போயினர்.

பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது.
"ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் அவ்வாறே சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவம் மிகக்கிட்டத்தில் இருந்ததாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியாகப் பசித்தபடியால் வீட்டுப்போகலாம் என முடிவெடுத்தேன். என்கூட வேலை செய்யும் இன்னொரு வைத்தியருடன் பிற்பகல் 2.30 க்கு ஆஸ்பத்திரி பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டேன். பிற்பகல் 4.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிடங்களுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரிப் பக்கமிருந்து திருப்பிச் சுடும் சத்தமேதும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை"
என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார்.

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

நன்றி : முறிந்தபனை.
----------------------------------------------------------------------------
இதன்பின்தான் அந்த அதிபயங்கரக் கொடூரம் இந்தியப்படைகளால் நடத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதியர், நோயாளிகள் எனப் பலர் அம்மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறப்பை இயன்றவரை உறுதிப்படுத்தும் அத்தனை வேலைகளும் செய்யப்பட்டன. மயிர் கூச்செறியும் அந்த அனுபவம் அடுத்த பகுதியாக வருகிறது.



Wednesday, October 19, 2005

தமிழ்மணம் - ஒரு கருத்துக்கணிப்பு

இங்க நா சொல்லப்போறது எதிர்மறையான விமர்சனமோ அல்லது மத நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயமோ இல்லைங்கிற துணிவோட, (ஆமா இனி என்ன பதிவு எழுதினாலும் அங்கே ஏதாவது எதிர்மறையான விசயம் வந்திருக்காண்ணு ஒண்ணுக்கு ரண்டுவாட்டி செக் பண்ணிடணும்)

பெருசா ஒண்ணும் இல்லங்க! இங்கே காசியின் முடிவில் அதிருப்தி உள்ளவங்க இந்தப் பதிவுக்கு அதாவது என் பதிவுக்கு ஒரு - குத்தும் அதை ஆதரிக்கிறவங்க ஒரு + குத்தும் போட்டிட்டு போயிட்டே இருங்க! அம்புட்டும்தேன்...

ஆமா.. விடுதலைப்புலிகள் பயங்கர வாதிகள் என்கிறது எதிர்மறையான விமர்சனமா?