Sunday, November 04, 2007

சிரிப்பு வந்தால் ஏன் சிரிக்கிறாய்? அழுகை வந்தால் ஏன் அழுகிறாய்?

தமிழீழ அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவைத் தொடர்ந்து வலைப்பதிவர் இரண்டொருவர் புதிய வாதமொன்றைத் தொடங்கியுள்ளனர்.

"தமிழ்ச்செல்வனின் இரத்தத்திலிருந்து இளைஞர்களல்ல; ஈக்களே பிறக்கும்" என்ற சொறிக்கதைகளை விட்டுவிடுவோம்.
தாங்கள் வாதமென நம்பும், வெளிப்பார்வைக்கும் அப்படியே தோன்றும் விசயங்கள் சிலவற்றை அவர்கள் எழுதியுள்ளனர்.

அனுராத புரத்துத் தாக்குதலின் பின்னர், 21 கரும்புலிகளைப் பற்றிய கவலையின்றி இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்கள், தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு அழுது வடிக்கின்றனர். இது ஏன்? இதன் பின்னாலுள்ள அரசியல் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இதன்பின்னால் என்ன கோதாரி அரசியல் இருக்கிறதென்பது அந்த இரண்டொரு விண்ணர்களுக்குத்தான் தெரியும். எதையாவது சூசகமாகச் சொல்லி எங்கட மரமண்டையளுக்குத்தான் விளங்கேலயோ தெரியேல. (பெயரிலியின்ர எழுத்தாவது அவரின்ர ஆதரவாளர் எதிரிகள் எண்டு பலருக்கும் விளங்குது.)

சரி. அனுராதபுரத்தில நடந்தது என்ன? 21 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். இலகுவில் எவராலும் செய்துவிட முடியாத மிகப்பெரும் சாதனையும் தியாகமும் நிறைந்தது அவர்களின் செயற்பாடு.
அதே நிகழ்வில் சிறிலங்கா அரசபடையினருக்கு மிகப்பெரும் தோல்வியொன்று கிடைத்தது. சிறிலங்கா அரசபடையினரை எதிரியாகப் பார்க்கும் அனைவருக்கும் அது மிகப்பெரும் வெற்றியாக அமைந்தது. நாளாந்தம் குண்டுவீச்சினாலும் இன்னபிற வழிகளினாலும் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டபோது, அச்சூழலில் வாழ்ந்த மக்களுக்கும் சரி, அம்மக்களின் உறவுகளுக்கும் சரி அது மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தரும் நிகழ்வுதான். இதை இல்லையென்று ஒரு புல்லனும் சொல்லிவிட முடியாது.

ஒரே சம்பவத்தில் மிகப்பெரும் வெற்றி கிடைத்த அதேவேளை அவ்வெற்றிக்காக 21 கரும்புலிகளை இழக்கவேண்டி வந்தது. ஈழப்போராட்டத்தின் நீண்டவரலாற்றில் அனைத்து வெற்றிகளின் பின்னாலும் தியாகங்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை யாரும் நினைவுகூராமல் விட்டதில்லை; அதேவேளை வெற்றிகளைக் கொண்டாடாமல் விட்டதுமில்லை.
அனுராதபுரத் தாக்குதலின்பின்னும் அதுதான் நிலைமை. மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேர வெளிப்படுத்த வேண்டிய நிலை. அதெப்படி இரண்டு உணர்வுகளும் ஒரேநேரத்தில் வரமுடியுமென மோட்டுக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதிலில்லை. ஈழப்போராட்டத்தின் காலநீட்சியில் இப்படி ஆயிரக்கணக்கான பொழுதுகளைக் கடந்துவந்திருக்கும் ஏராளமான மக்களுக்கு அது தெரியும்.

அனுராதபுர வெற்றியைக் கொண்டாடினர் மக்கள். தமக்குத் தெரிந்த் வழிகளில் கொண்டானர். அதேவேளை அந்த இரண்டொருவர் எழுதுவதுபோல் 21 கரும்புலிகளின் இறப்புக்காக இனிப்பு வழங்கிக் கொண்டாடவில்லை. இனிப்பு வழங்கியது அந்த வெற்றிக்காகத்தான்.
மகிழ்ச்சியைத் தெரிவிக்க இனிப்பு வழங்கிய மக்கள், துக்கத்தைத் தெரிவிக்க என்ன செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறாரகள்? வீதிகளில் ஒப்பாரி வைத்து அழுதிருக்க வேண்டுமென்பதையா?

இவ்வெற்றியின் பின்னர் வன்னியில் நடந்ததென்ன? தாக்குற் செய்தி கேட்டதும் மக்கள் ஆரவாரித்தனர். மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் கரும்புலிகளின் நினைவில் அப்பகுதி சோகத்தில் மூழ்கியது. இதுவரையில்லாதளவுக்கு 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் பெருமெடுப்பில் நிகழ்ந்தன. வன்னி முழுவதும் உணர்ச்சிப் பிரவாகமாயிருந்தது. இதுபற்றிய செய்திகளை எந்த 'நடுநிலை' ஊடகங்களோ பன்னாட்டு ஊடகங்களோ தரவில்லை. ஆகவே அந்த இரண்டொருவருக்கு அதுபற்றித் தெரியாமற் போயிருக்கலாம். தமிழ்நெற், புதினம், சங்கதி, பதிவு போன்றவற்றில் தேடிப்பார்த்து அறிந்துகொள்ளுங்கள். வன்னியின் அனைத்து இடங்களிலும் வீரவணக்க நிகழ்வுகள் இடைவிடாது நடந்தன. அப்படியான நிகழ்வொன்று சிறிலங்கா அரசபடையின் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் எட்டுமாதக் கர்ப்பிணியொருவருட்பட நால்வர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலையின் பின்னரும் வன்னியில் மிக எழுச்சியாக வீரவணக்க நிகழ்வுகள் நடந்தன.

மாவீரர் நாள் நிகழ்வுகளில் ஒருதடவையாவது கலந்துகொண்டவர்களுக்குத் தெரியும், அந்த நாளின் உணர்வுகள் எப்படியிருக்குமென்று. வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாத உணர்வுக்குவியலாக அன்றைய நாளிருக்கும். நானறிந்தவரை மாவீரர் நாளுக்கு இணையாக இந்த 21 கரும்புலிகளதும் நினைவுநாள் அமைந்திருந்தது. இதை வன்னியோடு தொடர்புடைய யாருமே கேட்டு அறிந்துகொள்ளலாம்.
அந்தளவுக்கு மிக உயரியளவில் அந்த 21 கரும்புலிகளதும் நினைவு நிகழ்வுகள் தாயகத்தில் அனுட்டிக்கப்பட்டன. அனுராதபுரத் தாக்குதல் நடந்த அன்றைய நாளைவிடுத்து அதற்குப்பின் வன்னியில் அதுவொரு வெற்றியாகக் கருதுமளவுக்கு நிலைமை இருக்கவில்லை என்பதே உண்மை.

தாங்கள் புலம்பெயர்ந்த மக்களைத்தான் குறிப்பிட்டோமென அந்த ஓரிருவர் சொல்லக்கூடும். ஆம். ஒத்துக்கொள்கிறோம். புலம்பெயர்ந்தோரிடத்தில் ஒப்பீட்டளவில் அசட்டுத்தனமான வெற்றிக் களிப்பு மேலோங்கியிருந்தது. ஆனால் இவர்கள் சொல்வதுபோல் யாருமே கரும்புலிகளைப் பற்றி கரிசனைப்படவில்லையென்பது பொய். வெற்றிக்களிப்பில் துள்ளியர்வகளின் செயற்பாடுகள் மட்டுமே பெரிதாகத் தெரிந்தன. அப்படித்தான் தெரியும். ஆனால் எல்லோரிடமும் கரும்புலிகளைப் பற்றிய ஏக்கம், கவலை நிரம்பவே இருந்தன. அதை நோட்டீஸ் அடித்து ஒட்டியா வெளிக்காட்ட முடியும்?

ஆக, மகிழ்ச்சியும், துக்கமும் சேர்ந்த நிகழ்வு தொடர்பில் அந்த இரு உணர்வுகளையும் மக்கள் கொண்டிருந்தனர்.

தமிழ்ச்செல்வனின் இறப்புக்கு மகிழ்ச்சி எப்படி வரும்? அது தனியே துக்கம் சார்ந்த நிகழ்வு. சிலருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர்களிற்பலர் வெளிப்படையாகவே அதை அறிவித்துக்கொண்டவர்கள். ஆனால் அனுராதபுர வெற்றிக்கு மகிழ்ந்தவர்களில் எவருக்காவது தமிழ்ச்செல்வனின் மறைவில் மகிழ்ச்சி வருமா?
துக்கம் மட்டுமே உணர்வாகக் கொண்ட இந்த நிகழ்வில் மக்கள் தமது துயரை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், "அனுராதபுரத்துக்குச் சிரிச்சனியள், இப்ப ஏன் அழுறியள்" என்று கேட்டால் என்ன சொல்வது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்விடுகையில் சிறிரங்கனுக்கோ, 'விழுந்தபாட்டுக்குக் குறிசுடும்' பாணியில் அங்கிங்குப் பின்னூட்டமிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கோ எவ்வித சேதியுமில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிறிரங்கனின் இரண்டாவது இடுகையிலே நாம் ஒத்துவரும் ஒரு விசயமுள்ளது. அது இந்திய 'ஆய்வாளர்' இராமன் பற்றிய கூற்று.

தமிழ்த்தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கருதிக்கொண்டு புலிக்குப் பக்கப்பாட்டுப் பாடும் ஊடகங்களின் மலட்டுத் தன்மைக்கு அதுவோர் எடுத்துக்காட்டு. இராமனின் கட்டுரைகளை மட்டுமன்றி யார் யாரெனத் தெரியாதவர்களின் எழுத்துக்களெல்லாம் அப்படியே படியெடுத்துப் போடப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையானால் காணும். நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எவன் என்ன எழுதுவான் என்று காத்திருப்பதே இவ்வூடகங்களின் இப்போதைய பணி. சண்டே ரைம்ஸ் என்ன எழுதுகிறது, நேசன் என்ன எழுகிறது, டெய்ல மிரர் என்ன சொல்கிறது என்று வாய்பார்த்துக்கொண்டிருந்து, வந்ததும் மொழிபெயர்த்துப் போடுவதுதான் இப்போதைய பணி.
ஒன்றுமில்லாத இக்பால் அத்தாசை வானளவுக்கு உயர்த்திவிட்டவர்களும் இந்த தமிழ்த்தேசியச் சாயம் பூசிய ஊடகங்கள்தாம். கட்டுநாயக்காவில குண்டுபோட்டதும் அவரிட்ட ஒலிவடிவில பேட்டிகூட எடுத்துப்போடுகிற அளவுக்கு நாக்குத் தொங்குகிறது.

அட.. எப்பவாவது தாங்கள் சொல்லவாற கருத்துக்கு ஆதரவா ஒரு எடுத்துக்காட்டையோ துணைத்தரவையோ அங்கயிருந்து எடுப்பம் எண்டில்ல, கிழமைக்குக் கிழமை ஈயடிச்சுக் கதையெழுதி ஒட்டுறது சகிக்க முடியேல.
"ஈராக் அரசியல் வாதிகள் தங்களைப் பற்றிய அதீத கற்பனையில் இருந்ததே அவர்களின் தோல்விக் காரணமென" மேற்குலக ஆய்வைச் சுட்டி, இதேநிலைமை சிங்களத்துக்கும் வருகிறது என ஆய்வெழுதும் அதே ஊடகங்கள்தாம், அதே தலைக்கன நிலைக்கு எம்மை இட்டுச்செல்ல ஏதுவானவகையில் எதிர்த்தரப்பால் எழுதப்படுபவற்றைக் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன என்பது பெரிய முரண்நகை.

நித்திய புன்னகை அழகன் நீள் துயில் கொள்கிறான் - பாடல்



வீடியோவில்






Saturday, November 03, 2007

செல்வா எங்கு சென்றாய்? - கலைஞர் இரங்கல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி- முதலமைச்சர் கலைஞர் இரங்கல்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசாங்கத்தின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

எப்போதும் சிரித்திடும் முகம் -
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை இளமை இதயமோ
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய் பக்குவம்பெற்ற படைத் தளபதி!

உரமாய் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிர் அணையான்
உடன் பிறப்பணையான்
தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா- எங்கு சென்றாய்?

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

-புதினம்-