Saturday, November 19, 2005

வாழ்த்துக்கள் மகிந்த.. வாருங்கோ..

வாங்கோ மகிந்த.. வந்திட்டியள்.. வாழ்த்துக்கள்..

வாய் விட்டு சொல்லாட்டியும்.. நீங்கள் வாறது தான் எனக்கு விருப்பம்.

ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே.. யுத்த நிறுத்தம் ஆராயப்படும் எண்டு சொல்லுறியள், தமிழருக்கு ஆழிப்பேரலை நிதி கிடைக்க வழி செய்கிற பொதுக்கட்டமைப்பை தடுக்கப் போவதாகவும் சமஷ்டி முறையில் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது எனவும் சொல்லியிருக்கிறியள்.

நல்லது. முதலில அதுகளை செய்யுங்கோ.. பார்த்துக் கொண்டிருக்கிறன்.

Monday, November 14, 2005

வசனம் தேவையில்லை!!!!!!

Image hosted by Photobucket.com
பி.கு 'கட்டுடல் தலைவனின் மேற்கண்ட படத்துக்கு வசனம் தேவையில்லை.

Thursday, November 10, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-4

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-3
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2
யாழ் மருத்துவமனைப் படுகொலை.-1

அக்டோபர் 22 ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை இக்குழுவினர் தங்களின் மனவிசாரங்கள் அனைத்தோடும் தன்னந்தனியாக இரவுபகலாய் காயமுற்றோருக்குத் தேவையான சிகிச்சைகளைத் தைரியமாய் அளித்துவந்தனர். ஓர் அறுவைச்சிகிச்சை நிபுணர் கூறியதுபோல்,
"என்னுடைய மனைவிக்கும் எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்றுகூட எனக்குத் தெரியாது. அவர்களை அகதி முகாமில் விட்டுவிட்டு வந்திருந்தேன். முதல் இரண்டு நாட்களுக்குப்பிறகு நாங்கள் குரூரமாகக் கொலை செய்யப்படப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. அதுதான் பெரிய ஆறுதல். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில்... கத்தியின் மீது நடந்துகொண்டிருந்தோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. எறிகணைகள் விழுந்து நோயாளிகள் தாக்குண்டபோது நான் முற்றாய் பொறுமை இழந்துபோனேன். ஆத்திரம் எனக்குள் பொங்கி வெடித்தது. நிலக்கண்ணி வெடிகளால் காயமடைந்த இந்திய இராணுவ வீரர்ரகளும் எங்கள் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டார்கள் பூரணமாய்ச் சிதைந்துபோன நிலையில். அவர்களுக்குச் சிகிச்சையளிக்குமாறு எங்களைக் கேட்டனர். மருத்துவர்களாகிய எங்களுக்கு அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் வந்த கணத்திலிருந்து அவர்கள் நோயாளர்கள் மட்டுமே. அவர்கள் சிகிச்சையை நாடி நிற்கின்றனர். எங்களது கடமையோ அளவிறந்த முக்கியம் கொண்டன."

தன் துயரக்கதையைக் கொட்டி அவருக்கேயுரிய நகைச்சுவையுணர்வு விரவ அவர் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது யுத்தத்தால் சிதையுண்டதுபோய்க்கிடக்கும் யாழ்நகரின் இந்த மருத்துவமனையில் மருத்துவ அக்கறை குறித்து உத்வேகம் வியாபித்து நிற்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

இலங்கை அரசபடைகள் எம்மைச் சூழ்ந்திருந்த வேளையில் யுத்தகாலங்களில் கூட ஒரு மருத்துவமனை எவ்வாறு இராணுவத்தால் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் முன்னர் விடுத்திருந்த பிரகடனங்களின் பின்னணியில் வைத்து நோக்கும்போது யாழ் மருத்துவமனைக்கு நேர்ந்த இந்த விஷப்பரீட்சை, இதற்குமுன் வேறு எங்குமே இப்படி நேர்ந்திராத ஒன்றாகும். பல கேள்விகள் விடைகளின்றி அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன. நோயாளிகளையும் மருத்துவர்களையும் ஊழியர்களையும் எச்சரிக்கை செய்வதற்கோ, அவ்விடத்தை விட்டு அகற்றுவதற்கோ, தனியே ஒதுக்கிவிடவோ எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்?
மருத்துவமனையைச் சுற்றிலும் ஏன் வளைத்து முற்றுகையிடவில்லை?
நோயாளர்களும் நோயாளர்களைக் கவனித்துக்கொண்டிருந்தவர்களும் கொல்லப்படுவதற்காகப் பின்தங்கி நின்றதுபோலிக்க, த்பி வெளியேறிக் கொள்ளக்கூடியவர்கள் ஆஸ்பத்திரியின் பின்வாயிலால் வெளியே சென்றுவிட வசதியாய் வெளிவாசல் திறந்துகிடக்க, இந்திய இராணுவம் முன்வாசல் வழியாக மட்டுமே நுழைந்தது ஏன்?

விடுதலைப் புலிகள் முன்பு அந்த மருத்துவமனையில் இருந்தார்கள் என்பது உண்மைதான். அவ்வாறே இருந்துவிட்டுப்போனாலும், ஒரு மகத்தான் தேசத்தின் தொழில் நுண்முறை மிகுந்த இராணுவம் சர்வதேச விதிமுறைகளைப் பற்றியோ, ஒருநாளுமே துல்லியமாக மதிப்பிட்டுக் கூறமுடியாத மனிதஉயிர்களின் பெறுமதியைப் பற்றியோ ஒருதுளிகூட அக்கறை காட்டாமல், எதிர்ப்புகள் எதுவுமே இல்லாத நிலையில் பொதுமக்களைக்கொண்ட ஒரு மருத்துவமனையைத் தாக்கிச் சிதறடித்தது ஏன்? இச்சம்பவம் குறித்து எந்தப் பொதுவிசாரணையும் இருக்க முடியாதென இந்திய அதிகாரிகள் தீர்மானித்துவிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

இச்சம்பவத்தின்போது இந்திய இராணுவம் செயற்பட்ட விதம் பற்றி நிதானமாகவே சொல்வதானாற்கூட, அது தன்னுடைய கடந்தகாலப் பிரகடனங்களிலெல்லாம் வகுத்துக்கொண்டதாகச் கூறப்படும் நெறிமுறைகளுக்கு மிக இழிவாக நடந்துகொண்டது என்று நிச்சயமாகக் கூறலாம். யாழ் மருத்துவமனைக்குள் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்த சமயங்களிலெல்லாம் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைப் பொறுப்பேற்று நடத்திய இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு எதிரேயிருந்த கட்டங்களில்தான் முகாமிட்டிருந்தனர் என்று நேரிற்பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றனர்.

இந்திய இராணுவத்தினரின் அத்துமீறிய பிழையான நடவடிக்கைகள் பற்றி வரும் புகார்களை எல்லாம் இதற்கு முந்திய சமயங்களிலெல்லாம் முரட்டுத்தனமாக உதறித்தள்ளிவிடும் ஓர் உயர்மட்ட இராணுவ அதிகாரி சில மாதங்களுக்கு முன் (மருத்துவமனைப் படுகொலை நடந்தபின்) அபூர்வமாக ஒன்றை ஒப்புக்கொண்டார். அந்த மருத்துவமனைத் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயம் இராணுவம் பலவீரர்களை இழந்துவிட்டிருந்ததென்றும், அவர்கள் மிகப்பயந்து போயிருந்தனரென்றும் அவர் தெரிவித்தார். "மாலை ஆகிக்கொண்டே வரவர வேகமாக இருள்சூழ ஆரம்பித்தது. வானத்தில் கருமுகில்கள் திரண்டு வந்துகொண்டிருந்தன. யாழ்நகர் இருண்ட விநோதமான தோற்றம் கொண்டிருந்தது" என்றார்.
அச்சங்கொண்டிருந்த - சரியான முறையில் அறிவுறுத்தப்படாத - பொறுப்பான யாருடைய வழிநடத்தலும் இல்லாத - தமிழோ ஆங்கிலமோ இந்த நபர்கள், ஆஸ்பத்திரிக்குள் உயிர்ப்பிச்சை கேட்டுநிற்கும் குரல்கள், வேதனை முனகல்கள், சத்தங்கள் அனைத்தையுமே தங்களுக்கு எப்படியெப்படி எல்லாம் சரியென்று அர்த்தப்படுத்த முடியுமோ அந்த மாதிரியெல்லாம் விளங்கிக்கொண்டு நினைத்தபடி நடந்துகொள்ளத் தக்கதாக தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

இராணுவவீரர்களுக்கு அவர்களின் உள்ளுணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும் என்று எடுத்துக்கொண்டாலும், அவர்களைவிட அதிகம் பயந்து, அனாதரவான அப்பாவி மக்களின் மனநிலையை - உணர்ச்சிளைச் சிந்தித்துப்பார்க்க அவர்களுக்கு யாருமே கற்றுக்கொடுக்கவில்லை போலிருக்கிறது. பயம் என்பது உயிர்வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று என்பதால், பெருந்தேசங்களின் நெறிசமைக்கும் தளபதிகளெல்லாம் பலநேரங்களில் பயந்துபோன தனிநபர்களே என்பதை ஒத்துக்கொள்வது இந்தியாவிற்கோ அல்லது வேறெந்த வலிமைவாய்ந்த நாட்டிற்கோ தலைகுனிவைத் தரும் ஒன்றாக நினைத்துக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.

பலமாதங்கள் கழித்து சமயச்சடங்குகள் சகிதம் தாகூரின் வந்தே மாதரம் என்ற பாடலைப்பாடி இராணுவம் தங்கள் முகாம்களைக் கலைத்துக் கொண்டிருந்த சமயம் கப்டன் டாக்டர் சித்தத் டே விடைபெற்றுச் செல்லும் முகமாகத் தனக்குப் பரிச்சயமான ஒரு பழைய நண்பரைப் பார்க்க வந்திருந்தார். பார்ப்பதற்கு இளைய, நிதானமான, மென்மையாகப் பேசும் சுபாவத்தினராக அவர் காணப்பட்டார். இராணுவ மருத்துவரான இவர் மருத்துவமனை நிகழ்ச்சியில் இவர் வகித்த பங்குபற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவரைப் பொறுத்தவரை அவர் ஆற்றிய பங்கு நிந்திப்பதற்குரியதல்ல.

நண்பரொருவரைப் பார்க்க வந்தநேரம் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். "உங்களுடைய மருத்துவப் பணிக்கான கருவிகளில் ஒன்று அல்ல இது என நான் நம்புகிறேன்" என்று அவரின் நண்பர் தமாஷாகக் குறிப்பிட்டார். வெட்கத்தோடு மிகவும் தர்மசங்கடப்பட்டுப்போன அவர், "இல்லையில்லை. என்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் இதை வைத்திருக்கிறேன். என்னுடைய தொழில் சார்ந்த கருவிகளெல்லாம் பேக்கில் வைத்திருக்கிறேன்" என்று சீரியசாகப் பதிலளித்தார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்தவர், தான் வேடிக்கையாக ஏன் அப்படிச் சொல்லப்போனோம் என்று மனம் வருந்தினார். இதை யாருக்காவது சொல்லியிருந்தால் அவர் மனம் புண்பட்டுப்போயிருப்பார். நெஞ்சை வருத்தும் யுத்தத்தின் கரும்புகையினூடே மற்றவர்களின் மத்தியில் மனிதாபிமானத்தைத் தரிசிப்பதென்பது ஒரு வினோதமான அனுபவம்தான்.--------------------------------------
நன்றி:- "முறிந்த பனை"
--------------------------------------
நேரமில்லாத காரணத்தால் இறுதிப்பகுதி தக்க காலத்தில் போடப்படவில்லை. நினைவு நாளின் காலம் கடந்துவிட்டாலும் தொடங்கப்பட்ட கட்டுரையை முடிக்க வேண்டுமென்ற காரணத்தால் போடப்படுகிறது.

இவை முறிந்தபனைப் புத்தகத்தின் 323 ஆம் பக்கத்திலிருந்து 333 ஆம் பக்கம் வைரயுமான பகுயிலிருந்து எடுக்கப்பட்டவை.