Sunday, August 28, 2005

இசையும் அரைமணிக் கதையும்

ஈழநாதன் சிலநாட்களின் முன் இசை பற்றிய ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் நான், என்னால் அரைமணித்தியாலம் ‘தகரமடிப்பதை’ப் பற்றி பேச முடியுமென்று பின்னூட்டம் இட்டுவிட்டேன். அதைக்கண்ட சயந்தன், அப்படி அரைமணித்தியாலம் கதைப்பதென்பது அபூர்வமான விசயம் போலச் சொல்லி அதைப் பதிவாக இடும்படிக் கேட்டுக்கொண்டார். அதனால் இந்தப் பதிவு.
(அரை மணித்தியாலம் கதைக்கக் கூடிய விசயத்தையெல்லாம் பதிவாகப் போடலாமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. இன்று காலை நான் சாப்பிட்ட இடியப்பமும் சொதியும் பற்றிக்கூட என்னால் அரைமணித்தியாலம் கதைக்க முடியும்.)

சரி, விளையாட்டுப் போட்டிகளுக்கு வெறுமனே ஒரு பார்வையாளனாக மட்டும் போகாமல் குறிப்பிட்ட அணியொன்றின் விசிறியாகப் போயிருந்தீர்களென்றால் உங்களுக்கு இப்பதிவு புரியும். குறிப்பாக உதைபந்தாட்டப் போட்டிகளுக்குச் சென்றிருந்தால்.

எனது பாடசாலையணி விளையாடியபோது உற்சாகமூட்டுவதற்காக நாங்கள் சிலர் நிறைய வேலைகள் செய்வோம். அதிலொன்று விளையாட்டின்போது (அதற்குப்பின்னும்கூட) தகரம் தட்டி, கோசம் போடுதல்.

முதலில் நல்ல கறள் பிடிச்ச ஒரு மண்ணெண்ணெய் உருளையை எடுத்துக்கொள்ள வேணும். பெரும்பாலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்திலும் ஒரு மூலையில் குறைந்த பட்சம் இரண்டு அரை உருளைகளாவது இருக்கும் (அணிக்கு ஒரு உருளையாக). அதில் நல்லதை எடுப்பதற்குப் போட்டிகளுமுண்டு. அதிஸ்டமுள்ளது அதிஸ்டம் கெட்டது எண்டுகூட இந்தத் தெரிவில பாக்கிறதுண்டு. ஒரு மணித்தியாலத்துக்கு முதலேபோய் நல்ல தகரத்தை எடுத்துவச்சு, அதிகமான நேரம் நிழல் விழக்கூடிய இடமாப் பாத்து, சகல ஆயத்தங்களோடயும் இருப்பம்.

நல்ல தடிகள் 4 தேவை. பொதுவாகப் பூவரசம் தடிகள்தான் பாவிப்பம். ஆனா சவுக்கந்தடி கிடைச்ச நல்லம். அதின்ர ‘நாதம்’ அந்த மாதிரியிருக்கும். தடிகளை முறச்சு எடுக்கக்கூடாது. முறிச்ச தடியின்ர நுனி தும்பு போல இருக்கிறதால சரியான ‘நாதம்’ வராது. ஜங், ஜங் எண்ட ஒரு ஒலிதான் வரும். அதால நுனிய மட்டமா வெட்டி வச்சுக்கொள்ள வேணும்.


விளையாட்டு வீரர்கள் மைதானத்துக்குள்ள போகேக்க தகரத்தைத் தட்டத் துவங்க வேணும். முதல் ஒருத்தர் தான் தட்டவேணும். சூடுபிடிக்கப் பிடிக்க இன்னொராள் சேரலாம்.
பந்து எங்கட ஆக்களின்ர காலுக்குள்ள நிக்கேக்க, அதுவும் எதிர்ப்பக்கத்தின் கோல்போஸ்டுக்குக் கிட்டவா நிக்கேக்க தட்டலாம். தனிய தகரம் மட்டும் தட்டுறது காணாது. அதோட பக்கத்தில ஒரு கோஸ்டி நிண்டு கத்த வேணும். அதுவும் இசைநயத்தோட கத்த வேணும். இதுக்கெல்லாம் நிரந்தரமா சில ‘ராகங்கள்’ இருக்கு. நான் பாக்கத்தக்கதா பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் ஒரே மெட்டைத்தான் இப்படிக் கத்துறதுக்கு பாவிக்கிறவை. "ஏழு ஸ்வரங்களுக்குள்ள தானே முழு இசையும் இருக்கு?"


ஒரு கோல் எமது அணியால் போடப்பட்டுவிட்டால் தகரமடி உச்சஸ்தாயியில இருக்க வேணும். கூடவே கத்துற வரிகளும்.


அதில வாற ஒரு வரி,

இந்த அடி போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?’

இந்த வரிகளையும் மெட்டையும் அப்படியே ‘களவெடுத்து’ கில்லி படத்தில பாவிச்சிட்டாங்கள். (பாட்டுவரியில மட்டும் சின்ன மாற்றம் செய்திருக்கிறாங்கள். ‘இந்த அடி’ எண்டு திரிசாவும் விஜயும் பாடினா அர்த்தம் பிசகிப்போடும் எண்டாக்கும்)

மேலும், பொதுவான நேரங்களில்,
கொலிஜ் கொலிஜ் எண்டு ஒருத்தர் கத்த, மற்றவர்அந்தப் பள்ளிக்கூடத்தின்ர பேரச் சொல்லுவார்.எப்பிடிக் கத்தினாலும் நாகரிகம் குறையாமல் இருக்கும்.

தள்ளுங்கராஜா
உள்ளுக்க போடா
எட்டு கோல்
எண்ணியடி

எண்டும் வரிகள் வரும்.

உந்த 'தள்ளுங்கராஜா' எண்டது ஆரெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எங்கட பள்ளிக்கூடத்துக்கான கோசத்திலதான் இந்தப்பேர் வரும். மற்றப் பள்ளிக்கூடத்துக்கானதில வேறயொரு பேர் வரும். ஆக அது அந்தந்தப் பள்ளிக்கூடத்துக்கான ஒரு வீரனின்ர பேர நிரப்பிற இடம். ஆனா எங்கட பள்ளிக்கூடத்தில அப்பிடியொருத்தன் விளையாடினதா எனக்குத் தெரியேல. விசாரிச்சுப்பாத்ததில ஒரு வாத்தி சொன்னார், 15 வருசத்துக்கு முந்தி, தான் படிக்கேக்கயும் இந்தப்பேரத்தான் கத்திறனாங்களெண்டு. அப்ப இது ஆரோ ஒரு மூத்த விளையாட்டுவீரனின்ர பேராத்தான் இருக்கோணும். எவ்வளவு பேரும் புகழும் பாத்தியளோ அந்த வீரருக்கு?

எதிரணி பந்து கொண்டந்து கோலடிக்க முடியாமல் போனாலும் தகரமடிக்க வேணும். இதில தகரமடிக்கிறவனுக்கு இருக்கிற கஸ்டம் என்னெண்டா விளையாட்ட சரியா ரசிக்க முடியாது. ஆனா மற்றவங்கள் அவ்வளவு நல்லா அடிக்கவும் மாட்டாங்கள். சரியான ‘ராகதாளத்தோட’ அடிக்கிற கலை சிலருக்குத்தான் வரும். ஆனா அந்தக் கலைஞனுக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். ஒரு சிறந்த விளையாட்டு வீரனுக்கு நிகரான மரியாதை கிடைக்கும். முக்கியமான போட்டியில வெண்ட பிறகு எங்கயாவது ஒரு சாப்பாட்டுக்கடைக்கு அந்த அணியக் கூட்டிக்கொண்டு போவினம். அப்ப விளையாடின வீரர்கள், பயிற்சியாளர் தவிர உள்ள போற ஒரேஆள் இந்த தகரமடிக்கிறவன் தானெண்டா அதுக்கு இருக்கிற மரியாதையைப் பாருங்கோவன். பின்னேரம் போட்டி எண்டா, கடைசி ரெண்டு பாடத்துக்கு இருக்கத் தேவையில்லாமல் விளையாட்டு வீரர்கள வெள்ளன வீட்டை விடுவினம். அதோட இந்த தகரமடிக்கிறதெண்டு 3 பேரையும் வெள்ளன பள்ளிக்கூடத்தியிருந்து போக அனுமதிப்பினம்.

ஒருக்கா ஒரு பள்ளிக்கூடத்தில நடந்த மாவட்ட மட்ட உதைபந்தாட்டப் போட்டியில எங்கட பள்ளிக்கூடம் வெண்டிட்டுது. சந்தோசம் தாங்க முடியேல. அப்ப ஒரு வாகனம் பிடிச்சுத்தான் திரும்பவும் எங்கட இடத்துக்கு வாறம். அப்ப வாறவழயில சும்மா வரலாமோ? அதுக்காக அந்தப் பள்ளிக்கூட மைதானத்திலயிருந்த தகரத்தையும் தூக்கி வாகனத்தில ஏத்திக்கொண்டு வெளிக்கிட்டாச்சு.

பள்ளிக்கூடத்தைவிட்டு வாகனம் தாண்டின உடன ஒரே கும்மாளம்தான். தகரம் தட்டி கோசம் போடுப்படுது. நிறையச் சனம் பாதையில போய்வந்ததால வாகனம் நல்ல மெதுவாத்தான் வந்துது. ஒரு அரை மைல் வந்திருப்பம், பின்னால சைக்கிளில கலைச்சுக்கொண்டு வந்த பொடிப்பிள்ளையள் மறிச்சுப்போட்டாங்கள். என்ன பிரச்சினையெண்டா அந்த மைதானத்துக்குரிய தகரத்தைத் தூக்கிக்கொண்டு வந்திட்டமெண்டதுதான் பிரச்சினை. அவங்கள் விடுறமாதிரித் தெரியேல. கடசியா தகரத்தைத் தாரை வாத்திட்டு வந்தது தான்.

ம்… இந்தக் காலத்தில அந்தக் கலைஞர்களை எங்க மதிக்கப் போயினம்?




Saturday, August 13, 2005

பேசாதிருப்போம்.

பேசிப் பேசி என்னத்தைக் கண்டோம்?
பேசாமலிருப்பது கடினமில்லை.
இயலாதது யாதெனில்,
நாம் பேசாமலிருக்கும் போது
பேசிப் பேசியே கொல்வதைக்
கேட்டுக் கொண்டிருப்பது.

பேசிப் பேசியே
பேசாமலிருப்பவனைப் பேச வைப்பதில்
கில்லாடிகள் அவர்கள்.

பேச்சும் மூச்சும் ஒன்றுதான்.
எதுகை எவ்வளவு அழகாக வருகிறது.
பேசும்போது இயல்பாகவே மூச்சு விடுகிறோம்
எனவே பேசாமல் இருந்தாலும்
மூச்சுவிட மறக்காதீர்கள்
பின்னர்,
பேச்சு மூச்சற்றுப் போய் வீடுவீர்கள்.

நீ பேசுவதைக் களவெடுத்து
இன்னொருவன் பேசுவானென்று
கவலை கொள்ளாதே.
நீ விடும் மூச்சைக் கூட
இன்னொருவன் எடுத்துச் சுவாசிக்கிறான்,
உன்னைப் போலவே.
ஆக
இன்னொருவனின் மூச்சை
எடுத்துவிடுவதைப் போல
பேச்சையும் எடுத்துவிடுவதில்
என்ன தப்பு?
இரண்டுமே உயிர்வாழத்
தேவை தானே?

ஆகவே,
பேசு பேசு பேசு.
நீ
பேசவில்லையென்றாலும்
பேசும் கலையை மறக்கவில்லையென்றாவது
பிறருக்குத் தெரிய(ப்) பேசு.

;-) ;-) ;-) ;-) ;-) ;-)