Saturday, January 31, 2009

கலைஞர் சொல்லியா போர் நிறுத்தம்?

ஆசைப்பட்டது கிடைக்கவில்லையென்றால் கிடைத்ததை ஆசைப்படு என ஏதோ படத்தில் ரஜினி சொல்வார். பாவம் அந்த நிலைமை இப்போது கலைஞருக்கு ஏற்பட்டிருக்கிறது. நேற்று மகிந்த 48 மணிநேர போர்நிறுத்த நாடகம் அறிவித்த போதே நினைத்தேன். (செய்தி - போர் நிறுத்தம் என்று சிறிலங்கா அரசாங்கமானது அறிவித்த போதிலும் இன்றும் தொடர்ச்சியாக உடையார்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள உலக கத்தோலிக்க திருச்சபையின் தொண்டு நிறுவனமான கியூடெக் நிறுவனத்தின் மீதும் சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டதனால் அங்குள்ள உணவுக்களஞ்சியங்கள் எரிந்த வண்ணம் உள்ளன.)

மச்சான் முதுகுவலிக்கு தலையணை முண்டுகொடுத்தாவது இந்த போர்நிறுத்தம் தன்னால் விளைந்தது என சொல்வார் என்று நேற்றே நினைத்தேன். அதுமாதிரியே சொல்லியிருக்கிறார்கள். கலைஞரின் அழுத்தத்தை தொடர்ந்து 48 மணிநேர போர் நிறுத்தம் ஒன்றை மகிந்த மேற்கொண்டிருக்கிறாராம். அட.. மனித சங்கிலி, பதவி விலகல் மிரட்டல், தந்தி போராட்டம் இதெல்லாம் வெறும் 48 மணிநேர போர் நிறுத்தத்திற்குத் தானா.. ? இதை முன்பே மகிந்தவின் காதில் போட்டிருந்தால் ஒக்டோபரிலேயே ஒரு நல்ல நாளில் 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்திருப்பாரே மகிந்த?

என்னிடம் ஒரு ஆசையும் ஒரு கேள்வியும் உண்டு.

ஆசையென்னவெனில் கலைஞரின் இந்த அறிக்கையை கண்ட பிறகு மகிந்த ஓர் அறிக்கையை இவ்வாறு விட வேண்டும். அதாவது கலைஞருக்கும் போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமேயில்லை. அந்த கோரிக்கையை நாம் கணக்கெடுக்கவேயில்லை. இது முழுக்க முழுக்க இலங்கை அரசின் விருப்பத்தில் நடக்கும் நாடகம்.

கேள்வியென்னவெனில் கலைஞருக்கு 50 வருட அரசியல் அனுபவம் உண்டென்கிறார்கள். ஆனால் இப்படியான வெற்று ஏமாற்று அறிக்கைகளை நம்பக் கூடியவர் யாரேனும் உண்டென்று அவரால் நம்ப முடிகிறதா? அல்லது அட.. நம்ம தலைவராலதான் இலங்கையில் 48 மணிநேரம் போர் நிறுத்தம் கொண்டு வந்திருக்கிறாங்க என நம்பும் தொண்டர்கள் இன்னும் இருக்கிறார்களா... ?

Thursday, January 29, 2009

முத்துகுமரன்கள் வேண்டாம்.


ஈழத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்காக நாள் தோறும் மணி தோறும் காடு மேடு பதுங்கு குழியென ஓடித்திரிகிறது ஒரு இனம். ஏனெனில் உயிர் பெறுமதியானது.

தமிழகத்திலிருந்து செய்தி வந்தபோது என்ன செய்வது என்றே குழம்பிப் போய் இருக்கிறோம். தயவு செய்து தமிழகத்து ஈழ உணர்வாளர்களே - உங்களது உணர்வை நாம் புரிந்து கொள்கிறோம். அதனை உயிரைக் கொடுத்தே நிரூபிக்கும் முடிவை எடுக்காதீர்கள். அரசுகளின் கையாலத் தனங்களுக்கு நீங்கள் எதற்கு கருக வேண்டும்.?

தயவு செய்து திருமா வைகோ முதலான சிங்கங்களே - உங்கள் கர்ச்சனையை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மொழியால் ஒன்று பட்ட ஒரு இனத்தின் இளைய சமூகத்தை உசுப்பி உசுப்பி விடுவதால் - தற்போதைய நிலை எவ்வகையிலும் மாறப் போவதில்லை.

முத்துகுமரா - அஞ்சலி சொல்வது கூட ஊக்குவிப்பது போல தெரிகிறது. ஏன் குமரா?.. இனியென்ன? கொஞ்ச காலத்தில் உன்னை மறந்து விடுவர். ஏன் ஈழத் தமிழர்களே மறந்து விடுவர். இதை படித்துகொண்டிருக்கிற எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?

ஈழத்தமிழர்களே
எங்களுக்காக இன்னொரு தேசத்தில் இன்னொருவன் தன்னையே மாய்த்தான் என்பது பெருமைப்படக் கூடிய விடயமில்லை. மகிழ்வடையக் கூடிய விடயமில்லை. வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம். வாருங்கள் ஒருவரையொருவர் எங்கள் மூஞ்சிகளில் துப்பிக் கொள்வோம்.

முத்துகுமரன்கள் வேண்டாம்.


Tuesday, January 27, 2009

ஒரு வீத புலிகளை அழிக்க இத்தனை டாங்கியா?

சிறிலங்காவில் அண்மையில் கேகலிய ரம்புக்கெல ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது 99 வீத புலிகளை அழித்து விட்டதாகவும் மீதம் ஒரு வீதத்தினரே அவர்களில் மீத மிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு வழியாக கொச்சின் துறைமுகம் கொண்டுசெல்லப்பட்ட யுத்த டாங்கிகள் சிறிலங்காவிற்கு அனுப்பப் பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. 

1700 புலிகளே மீதமுள்ளனர் என சரத் பொன்சேகாவினால் திருவாய் மலரப்பட்ட நிலையில் அவர்களை அழிப்பதற்கு 70 000 இராணுவத்தினர் முல்லைத் தீவு மாவட்டத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக இத்தனை டாங்கிகள் ...? 

ஆனால் விடயமே வேறு.
1700 புலிகளை அழிக்க 70 000 இராணுவத்தினரும் இத்தனை டாங்கிகளும் தேவையில்லைத்தான். ஆனால் நான்கரை லட்சம் மக்களைக் கொல்ல 70 000 இராணுவம் போதுமா...? இல்லையே.. ஆக ஆதரவிற்கு இன்னும் ஆயுதங்கள் தேவைதானே..

சீனாவிலிருந்தும் 150 டாங்கிகள் இலங்கைக்கு அனுப்பப் படுகின்றன. 


அதானே பார்த்தேன்....

பிரணாப்முகர்ஜியை இலங்கைக்கு செல்லுங்கள் இலங்கைக்கு செல்லுங்கள் என தமிழகத்திலிருந்து வற்புறுத்திக் கொண்டே வந்தார்கள். போய்....? என்பது கேள்விக்குறியாகவே இருந்தாலும் முதலில் போகட்டும் என அனைவரும் வற்புறுத்தி வந்தார்கள்.

பிரணாப்போ போவேன்.. ஆனா போகமாட்டேன் என என்னத்த கன்னயா போல இழுத்துக் கொண்டிருந்தார். போர் நிறுத்தம் பேச்சு அரசியல் தீர்வு என்ற இலக்குகளை விட்டுவிட்டு - காவலருக்கு பிரணாப்பின் பயணமே இறுதித் தீர்வு போலானது.

இறுதியில் திடீரென்று இன்று பிரணாப் கொழும்புக்கு விரைந்தார். போவதற்கு முன் காவலரிடம் பேசியுமிருக்கிறார். நமது கோரிக்கையை இறுதி வேண்டுகோளை கவனத்திற்கொண்டு பிரணாப் கொழும்பு விரைகிறார் என்ற கடிதம் நாளை வருவதற்கிடையில் இன்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உண்மையை போட்டு உடைத்தது.

வந்து சந்திக்கவும் என்ற தமது அழைப்பை ஏற்று பிரணாப் தம்மைச் சந்திக்க வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அது உண்மையில்லாதும் இருக்கலாம். ஆனால் அவ்வாறு சொன்னால் இந்தியா வழமைபோலவே `சொங்கி´ த்தனத்தோடு மறுப்பேதும் தெரிவிக்காமல் பல்லிளிக்கும் என்பது இலங்கைக்கு நன்றாகவே தெரியும்.

புலிகளை ஒழித்து விட வேண்டும் என்ற ஒரேயொரு விருப்பத்திற்காக இலங்கையின் எல்லா ஆணைகளுக்கும் வாலாட்ட வேண்டிய நிலை..

இதெல்லாம் ஒரு பொழைப்பு....
0 0 0
இலங்கையின் அழைப்பு கிடைக்காமல் எப்படி செல்வது என்று காங்கிரஸ் ராஜா கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சொல்லியிருந்தமை நினைவிருக்கலாம்.
0 0 0
எங்களிடம் ஒரு நாய் இருந்தது. ஞ்ஞ்சு... வா என்றால் வரும். போ என்றால் போகும். வராதே என்றால் வராது. நன்றியுள்ள நாய் அது.

Monday, January 26, 2009

அறிவிப்பு :)

அண்மைகாலமாக அதிகரித்து வரும் வதந்திகளை தவிர்க்கும் பொருட்டு கொழுவி தளம் - முதன்மை கொழுவியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

Friday, January 16, 2009

யாரெல்லாம் இலங்கையிடம் பயிற்சி பெறுகிறார்கள்


வன்னி யுத்த களமுனையில் இராணுவத் தளபதிகள் சில ஒளிபடங்களை சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ளது. தீவிர வாதத்தை தங்கள் நாடுகளில் ஒடுக்க இலங்கையிடம் பயிற்சியெடுக்க யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என கண்டுபிடியுங்கள்.

இன்னும் முடிந்து விடவில்லை! இனியும் இருக்கிறது.


A battle tank used by the Tigers in Tharmapuram today(16-01)

Liberation Tigers of Tamileelam (LTTE) media reported Friday that the advance by the Sri Lanka Army (SLA) from Tharmapuram on three fronts were repulsed at 14:00 p.m. 51 SLA soldiers were killed and 150 troops sustained injuries in the confrontation that lasted for 14 hours from the early hours of Friday


Tuesday, January 06, 2009

சென்னைப் புத்தக கண்காட்சியில் கொழுவியின் இரு புத்தகங்கள்

வரும் எட்டாம்திகதி சென்னையில் ஆரம்பிக்கும் புத்தக கண்காட்சியில் கொழுவி எழுதிய இரு புத்தகங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஈசானமூலைப் பதிப்பகம் அவ்விரு புத்தகங்களையும் பதிப்பித்திருக்கிறது. அவை பற்றிய சிறு அறிமுகத்தை இங்கு தருகின்றேன்.

1. கிளிநொச்சி வீழ்ந்தது எப்படி? ஓர் இரவின் முடிவு -
ஈழத்தில் புலிகளின் பலமான கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி வீழ்ந்தமை தமிழ் உலகில் பரபரப்பான செய்தியானது. கிளிநொச்சியை விட்டுப் புலிகள் பின்வாங்க நேர்ந்ததன் பின்னால் உள்ள இதுவரை வெளிவராத இராணுவ சூட்சுமங்கள் அரசியல் முடிச்சுக்களை கொழுவி இப்புத்தகத்தில் அழகாக அவிழ்க்கிறார். கிளிநொச்சிப் போர் குறித்த ஒரு குறுக்கும் நெடுக்குமான வெட்டுப் பார்வையை இப்புத்தகம் வாசகர்களுக்கு வழங்கும். 234 பக்கங்கள் உடைய இப்புத்தகம் ஒரு இராணுவவியற் பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது. விலை வெறும் 100 ரூபாய் மட்டுமே.

2. முல்லைத் தீவு வீழுமா ? முடிவா ஆரம்பமா?
கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் இலங்கைப் படைகள் முல்லைத்தீவை நெருங்குகின்றன. முல்லைத்தீவும் புலிகளின் பலமான கோட்டைதான். புலிகளின் தலைவரது அலுவலகமும் தங்குமிடமும் முல்லைத்தீவில் அமைந்துள்ளதாகவே இலங்கை அரசு கூறுகிறது. இந்நிலையில் முல்லைத் தீவையும் இலங்கை படைகளிடம் புலிகள் கைவிடுவார்களா மாட்டார்களா என்பதை இராணுவ அரசியல் நோக்கில் ஆராய்கிறது இப்புத்தகம். முல்லைத் தீவு வீழ்ச்சியின் பிறகு புலிகளின் எதிர்காலம் குறித்தும் இப்புத்தகம் விரிவாக பேசுகிறது. 366 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை வெறும் 200 ரூபா மட்டுமே.

மேற்குறித்த இரு பிரதிகளும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகளே அச்சிடப் பட்டுள்ளமையால் பதிவுக்கு முந்துங்கள்.

அடுத்த புத்தக கண்காட்சியில் புலிகள் அழிந்தது எப்படி அல்லது சிங்கள இராணுவம் வீழ்ந்தது எப்படி என்ற இரண்டில் ஏதாவது ஒரு புத்தகம் போடும் அருமையான வாய்ப்பும் எமக்கு கிடைத்திருக்கிறது. வாருங்கள் காற்றுள்ள போதே தூற்றுவோம்.