Saturday, September 29, 2007

ஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்

மாயாவுக்கு னந்திறந்த டல் (உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ)

இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.
மாயா எழுதிய வரி.
//கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.//
இனி கொண்டோடியின்ர முறை.

மாயா அண்ணை,
எனக்கொரு ஆசை.

உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ?

இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ.
நம்பமாட்டியள்.
இண்டைக்கு இல்லாட்டியும் எண்டைக்காவது ஒருநாள் 'இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது' எண்டு 'கம்பனுக்குக் கோட்டம் அமைத்துத் தமிழ் வளர்த்த இலங்கைத் தமிழர்களிடமிருந்து' (நல்ல வேளை, கவனமாத்தான் சொற்களைப் பாவிக்கிறியள். ஈழத்தமிழர் எண்டு பாவிக்காமல் விட்டியள் பாருங்கோ, அங்க நிக்கிறியள் நீங்கள்) ஒப்பாரியொண்டு வரும்.
இப்போதைக்கு உவங்கள் சேது சமுத்திரத் திட்டத்தை முடிக்கப் போறேல எண்டபடியா உது கட்டாயம் நடக்கத்தான் போகுது.

உங்கட அரசியல் சார்பை வைச்சே கம்பன் கழகத்தைக் கேள்விக்குள்ளாக்க முடியும்.

உவையளை ஏன் யாழ்ப்பாணத்தைவிட்டு ஓடச்சொல்லிச் சொல்ல வேணும்?(சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற முன்பு)

புலிகள் நடத்திய "மானுடத்தின் தமிழ்க்கூடல்" கருத்தரங்குக்கு இல்லாத தமிழ் அக்கறையா? பேர் ஊர் அறியாத யார் யாரையோவெல்லாம் எங்கெங்கோ இருந்து அழைத்து - வருவதற்குச் சாட்டுச் சொன்ன நாலைந்து பேரைக்கூட "அதென்ன மாட்டன் எண்டுறது? வாவெண்டா வரவேண்டியது தானே?" எண்டு செல்லமாக அதட்டி வரவழைத்து நடத்தப்பட்ட
இக்கருத்தரங்குகளில் ஏன் கம்பன் கழகத்துத் தலைகள் திட்டமிட்டுத் தவிர்க்கப்பட்டார்கள்?

அரசியல் ரீதியில் ஓரளவு எதிர்நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்கள்கூட அக்கருத்தரங்குக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டார்கள். 'வானம் எம்வசமென'ப் பாடியவர்கள் உங்கு வந்துள்ளார்கள்' என புதுவையால் நையாண்டி பண்ணப்பட்டவர்கள்கூட அதே புதுவையால் அழைக்கப்பட்டார்கள். ஆனால் கம்பன் கழகத்தாருக்கு என்ன நடந்தது?

இராமாயணம், இராமன், அனுமன் தொடர்பில் புலிகளின் நிலையென்ன என்பதையும் பார்க்க வேண்டும். கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்ட பொன்.கணேசமூர்த்தியால், இராவணனை நாயகனாகவும் இராமனை வில்லனாகவும் வைத்து எழுதப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்ற 'இலங்கை மண்' என்ற நாடகத்தையும், அந்நாடகப்பிரதி புத்தகமாக வெளிவந்தபோது அதற்குப் பிரபாகரன் எழுதிய வாழ்த்துரையையும் படித்தால் சில தெளிவு பிறக்கும்.

"இராமாயணம் உண்மையானால் அனுமனை எதிர்க்கிறேன்;
அவன்தான் எம்மண்ணை மிதித்த முதல் ஆக்கிரமிப்பாளன்.
அது புனைவானால் வான்மீகியை எதிர்க்கிறேன்;
அவனது ஆக்கிரமிப்புச் சிந்தனைக்காக"
என்ற பொருளில் கவிதை பாடிய (புதுவையின் கவிதை வரிகளைச் சரியாகப் பதியவில்லை. பாடுபொருள் இதுதான். இது கம்பன் கழகத்தாரின் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தது) புதுவை இரத்தினதுரைதான் புலிகளின் ஆஸ்தான கவிஞனாகச் சொல்லப்படுபவர்.

கம்பன் கழகத்தாரோ வெறும் காப்பியக் கதைசொல்லல் என்றளவோடு நின்று கொள்வதில்லை. அதுதான் முதற்சிக்கல். அதையும் தாண்டி வேறு பல வேலைகளைச் செய்கிறார்கள்.
இராமனையும் அனுமனையும் எங்களிடம் புகுத்த அயராது உழைப்பவர்களல்லவா இந்தக் கம்பன் கழகத்தார்?

இராவணனின் பூட்டன்களிடம் இவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும்?
இராம, அனுமன் பாதந்தாங்கிகள், அந்தக் கருத்தாக்கத்தையே ஓர் ஆக்கிரமிப்பு வடிவமாய்க் கருதும் சமூகத்திடம் எப்படி செல்வாக்குச் செலுத்த முடியும்?

முன்பொரு முறை சகபதிவர் சூரமணி கேட்டிருந்த கேள்விதான் இங்கும்.
"இராம - இராவணச் சண்டை முடிந்துவிட்டதென்று யார் சொன்னது?"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த கோட்டம் அமைத்து, சிலை வைத்துத் தமிழ் வளர்ப்பதென்பது அடிப்படையில் நகைச்சுவையான கதைதான். அதைப்பற்றியே தனியே விவாதங்கள் செய்யலாம்.

Friday, September 21, 2007

புலிகளிடத்தில் வாரிசு அரசியல்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் வாரிசு அரசியல் ஊடுருவியிருப்பதாக ஆய்+வ்+உ+க் கட்டுரைகளும் செய்திகளும் எழுதப்படும் வேளையில், நாமும் இதுபற்றி - ஆனால் மேற்குறிப்பிட்ட கட்டுரைகளையும் செய்திகளையும் படைக்கும் பிரம்மாக்கள் குறிப்பிட மறந்த - வாரிசு அரசியல் பற்றி பேசவேண்டும்.


முதலில் சிறு குழப்பம். பிரபாகரனின் முத்த மகன் சாள்ஸ் அன்ரனி
சிலவருடங்களின் முன்னர் தம்மை இயக்கத்தில் முழுநேர உறுப்பினராக இணைந்து கொண்டமை
எமக்குத் தெரிந்த உண்மை. தனது உயர்தரப் பரீட்டைக்குத் தோற்றாமல் அவர்
இணைந்துகொண்டார்.

இற்றைக்கு ஏறத்தாழ இரண்டு வருடங்களின் முன்பு சாள்ஸ்
வெளிநாட்டுக்குப் படிக்க வந்ததாக செய்திகள் வெளிவந்தன. கூடவே பிரபாகரனின் மீது
கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. சாள்ஸ் விமானப்படை தொடர்பான ஏதோ
படிப்பதாகத் தகவல்கள் வந்தன. இதில் அவர் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கிறார்
என்ற தகவல் குழப்பகரமானது.
சரி, அவற்றை விட்டுவிடுவோம்.

இந்நிலையில்
விடுதலைப்புலிகளின் விமானப்படை பற்றி அவ்வப்போது சிறிலங்காவும் இந்தியாவும்
புலம்பிக்கொண்டிருந்தன. புலிகள் தமது விமானப்படைத் தாக்குதலைச் செய்வதற்கு மூன்று
வருடங்களுக்கு முன்பிருந்தே இவை கடுமையாகப் புலம்பத் தொடங்கிவிட்டன.
அப்போதெல்லாம் புலிகளின் விமானப்படைக்குத் தலைமை தாங்கியவர் கெனடி என்ற நிலவன்
என்றே நாம் அறிகிறோம்; இத்தகவல் இயலுமானவரை வெளி ஊடகங்களிலும் வெளிவந்திருந்தன.

சாள்ஸ் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருப்பதாகச்
சொல்லப்பட்டுக்கொண்டிருந்த அதேகாலப்பகுதியில் சடுதியாக இன்னொரு கதை வந்தது.
சாள்ஸ்தான் புலிகளின் விமானப்படைத் தளபதியென்று அந்தக் கதை சொன்னது. சாள்ஸ்
படிப்பு முடிந்து நாடு திரும்பினாரா? (வெறும் இரண்டு வருடத்துக்குள் படிப்பு
முடித்தாரா என்பது இன்னொரு கேள்வி) நாடு திரும்பிய சாள்ஸை புலிகளே
விமானப்படைத்தளபதியாக மாற்றினார்களா அல்லது இந்த ஊடகங்கள்தாம் மாற்றினவா என்பதை
நாமறியோம்.
[புலிகளின் விமானபடைத் தாக்குதலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட
படங்கள், மாற்றம் நடக்கவில்லையென்பதைச் சொல்வதாகவே தெரிகிறது]

சரி... இனி நான் கதைக்கப் புறப்பட்ட வாரிசு அரசியலுக்கு வருவோம். புலிகளின் வாரி அரசியல் பற்றிக் கதைப்பவர்கள் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தையும் அது சொல்லும் வாரிசு அரசியலையும் தவிர்த்து விடுகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை அவர்கள் அண்மையில் நடந்த படகு வெடிவிபத்தொன்றில் கடுமையாக விழுப்புண்ணடைந்தார். தற்போது அவர் தேறிவிட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளார்கள்.

சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகக் களப்பணியாற்றிய மூத்த தளபதி, தானே நேரில் நின்று பரிசோதனையை நடத்துவதோ உயிராபத்தான பணிகளைச் செய்வதோகூட முக்கியமற்றவையாகக் கருதி விட்டுவிடுவோம்.

ஆனால் அந்த வெடிவிபத்தில் கேணல் சூசை மிகக்கடுமையாகக் காயமடைய, அவரது மகன் சாரங்கன் கொல்லப்பட்டுள்ளார். தான் மட்டுமன்றி தனது மகனையும் உயிராபத்தான அச்சோதனையில் ஈடுபடுத்திய தந்தையின் வாரிசு அரசியல் எப்படிப்பட்டது?

[இங்கு, சாரங்கன் போராளியா அல்லது சூசையின் மகன் என்ற முறையில் சோதனையில் கலந்துகொண்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை. பொதுவாகவே வன்னியில் போராளிக்கும் பொதுமக்களுக்குமான மிக நுண்ணிய வித்தியாசமே இருக்கும். அதுவும் தற்போது இன்னும் நெருக்கம்]

தனது மகனையும் உயிராபத்தான பணியில் ஈடுபடுத்திச் சாகக்கொடுக்கும் தளபதியின் வாரிசு அரசியல் பற்றியும் நாம் பேசவேண்டும்.
இது தவிர்த்து வேறும் பல சம்பவங்கள் போராட்டத்திலுண்டு.

விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞன் எனக் கூறப்படும் புதுவை இரத்தினதுரை ஒரு மூத்த போராளி. களத்தில் வீரச்சாவடைந்த தன் மகனுக்கு சீருடையுடன் நின்று கொள்ளிவைத்த போராளி அப்பன் தான் இந்தக் கவிஞன். (தொன்னூறுகளின் தொடக்கத்தில் புலிகளின் வித்துடல்களை புதைப்பதில்லை; எரிப்பதுதான் நடைமுறையிலிருந்தது)
தற்போதும் மிகத்தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு போராளி தமிழ்க்கவி. படைப்பாளியான இவரின் இளையமகன் களத்தில் வீரச்சாவு. தனது இன்னொரு மகனையும் தானாகவே முன்வந்து போராளியாக இணைத்தவர். இவரது மகள் வயிற்றுப்பேரனும் போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்.



தற்போது விடுதலைப்புலிகளின் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளராக இருப்பவர் பொன்.தியாகம். முதிய வயதிலும் முழுநேரப் போராளியாகச் செயற்படுபவர்.
கணேஸ், தினேஸ் என்று இவரது இரு மகன்கள் இயக்கத்தில் போராடி வீரச்சாவடைந்தனர். மூத்தவர் எண்பதுகளிலேயே வீரச்சாவு. மூன்றாவதாக மகளும் தேன்மொழி என்ற பெயரில் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே இருவர் வீரச்சாவென்பதல் இவர் களப்பணிகளில் இருந்து விலத்தி, அரசியல் வேலைகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். ஆனாலும் சண்டைக்குச் செல்லும் உத்வேகத்தோடு விடாமல் போராடினார்.
'எடேயப்பா உவளை சண்டை ரீமுக்கு மாத்திவிடுங்கோ' என்று தானே முயன்று மகளை யாழ்செல்லும் படையணியின் தாக்குதல் அணியில் இணைத்துக் களமனுப்பிய கிழவன்தான் இந்தப் பொன்.தியாகம். ரணகோச என்ற பெயரில் முன்னேறிய படையினருடன் ஏற்பட்ட மோதலில் பள்ளமடுப்பகுதியில் மேஜர் தேன்டிமொழி வீரச்சாவு.
பெத்த பிள்ளைகள் மூன்றும் வளர்த்த பிள்ளை ஒன்றுமென நான்கு பிள்ளைகளைக் களமனுப்பிப் பலிகொடுத்த தகப்பன் இன்றும் முழுநேரப்போராளியாக தனது எழுபதுகளில் செயற்பட்டு வருகிறார்.

கடற்புலிகள் அமைப்பில் தாயும் மகனும் சுடுகலனேந்தி சமர் செய்த வரலாறுண்டு. ஒரே கடற்சண்டையில் இருவரும் பங்குபற்றி அதில் தாய் வீரச்சாவடைந்த சம்பவம் நடந்தது. இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வீதிநாடகம் வன்னியில் ஓர் எழுச்சியை உண்டுபண்ணியது.


இவையும் புலிகளிடத்திலுள்ள வாரிசு அரசியல்தான். இவை பற்றியும் நாம் பேச வேண்டும்.

சாள்ஸ் விமானப்படைப் பொறுப்பை வகித்தாற்கூட அதுவொன்றும் சும்மா காலாட்டிக்கொண்டிருக்கும் வேலையன்று. ஆபத்தில்லாத சொகுசு வாழ்க்கையுமன்று. எதிரிகளால் அதிகளவுக்குக் குறிவைக்கப்படும் துறையும்கூட.

சாள்ஸ் ஏதோ வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார் என்றளவுக்கு விமர்சித்துக்கொண்டிருந்தவர்களே, இப்போது அவர் மீண்டும்வந்து விமானப்படைத் தளபதியாக இருக்கிறார் என்று சொல்வதையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சிலகாலம் கழித்து, சாள்ஸ் நாடு திரும்பவில்லை, அவர் வேறு ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார் என்றும் கதை வரும்.
அதுவரைக்கும் இப்போதிருக்கும் கதையைப் பற்றி அலசுவோம்; ஆராய்வோம்; விமர்சிப்போம்; விவாதிப்போம்.

எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.

பிரபாகரனின் பிள்ளைகளிற்குள் பிளவு

இவை என்னுடைய கற்பனைகள் ஆகும். ஆயினும் எப்போதாவது காமடி டைம்ஸ் ஆப்பு (Of) இந்தியாவில் வெளிவர இருக்கும் சிரத்தையுடன் சிலரால் எடுத்து தமிழ்ப்படுத்த இருக்கும் கட்டுரையின் தமிழ் வடிவம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் இளைய புதல்வரும் கடந்த வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவருமான பாலச்சந்திரன் தற்போது 12 வயதை அடைகிறார்.

கடந்த முறை நாங்கள் சொன்ன நம்பத்தகுந்த செய்தியின் படி (நாங்கள் சொன்னா நீங்கள் நம்பத்தான் வேண்டும்) விமானத் தொழில்நுட்பம் படித்து முடித்து திரும்பியிருக்கும் பிரபாகரனின் மூத்த புதல்வர் சாள்ஸ் அன்ரனிக்கும் பாலச்சந்திரனுக்கும் இடையில் முறுகல்கள் தோன்றுவதாக சிங்கப்பூரில் இயங்கும் பெயர் குறிப்பிடத் தெரியாத அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பாலச்சந்திரன் தனது சகோதரனிடம் விதம் விதமான விமானங்களை பேப்பரில் செய்து தருமாறு கேட்டதாகவும் அதற்கு சாள்ஸ் மறுத்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இந்த விவகாரம் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாகவும் பாலச்சந்திரனுக்கு ஆதரவாகவும் பல உயர் மட்டத் தளபதிகள் கருத்து தெரிவித்து வருவதால் புலிகள் பிளவு படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

Monday, September 17, 2007

திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ

தியாகி திலீபனின் பத்தொன்பதாவது நினைவு தினம் இப்போது. எங்கள் தேசத்தின் இளைய, எதிர்காலத் தூர நோக்கோடு செயலாற்றிய, வசீகரம் மிக்க தலைவனை அகிம்சை நாட்டின் ஆணவத்தால் இழந்து 20 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் சோகம் ஆறாத துயராய் கிடக்கிறது.
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.



"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்

உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..

வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..

அவன் என்ன தான் கேட்டான்?

அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..

அதற்காகவா இந்த விலை?

அதற்காகவா இந்த துயரம்?

Saturday, September 08, 2007

தமிழகத்து சொந்தங்களுக்கான, புலிகளின் குரலின் கலை இலக்கியப் போட்டி

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் 17 ஆவது ஆண்டு நிறைவையொட்டிக் கலை இலக்கியப் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

இது குறித்த விபரம்:

தமிழீழத்தில் வாழ்பவர்களுக்கான போட்டி,

புலம்பெயர்ந்து பன்னாடுகளில் வாழ்பவர்களுக்கான போட்டி,

தமிழகத்து தமிழர்களுக்கான போட்டி என மூன்றாக வகுத்துத் தனித்தனிப் போட்டியாக நடாத்தப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சான்றிதழும், பரிசும் வழங்கப்படும்.

இந்த ஆண்டு வானொலி நாடகம், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

ஆக்கங்கள் யாவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீச்சாக்கக் கூடியதாகவும், தமிழின மேம்பாடு கருதியதாகவும் அமைய வேண்டும்.

ஆக்கங்கள் எழுதுதாளில் ஒரு பக்கத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும்.

ஆக்கத்தை எழுது தாளில் கையெழுத்துச் சுவடியாகவோ, தட்டச்சுச் சுவடியாகவோ அனுப்பி வைக்கலாம்.

ஆக்கங்களைச் சுவடியாக்கும் போது பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பது சிறப்புக்குரியதாகும்.

போட்டிக்கான ஆக்கங்களை எழுதுபவர்கள் தங்கள் பெயர், முகவரி ஆகியவற்றைத் தனியான தாளில் எழுதிச் சுவடியோடு இணைக்க வேண்டும்.

எந்தப் போட்டிக்கான ஆக்கம் என்பதை மடல் உறையின் மேல் இடப்பக்க மூலையில் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

வானொலி நாடகம்:

20 நிமிடங்களுக்கு அமைவாக எழுதப்பட வேண்டும்.

எழுதுதாளில் பத்துப் பக்கங்களுக்குக் (10) குறையாமலும்

பன்னிரண்டு (12) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

சிறுகதை:

நான்கு (04) பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து (05) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதை:

மூன்று (03) பக்கங்களுக்குக் குறையாமலும், நான்கு (04) பக்கங்களுக்கு மேற்படாமலும் சுவடி அமைய வேண்டும்.

கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ, புதுக்கவிதைகளாகவோ அமையலாம்.

ஆக்கங்களை 31.10.2007-க்கு முன் எமக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வையுங்கள்.

போட்டிகளில் கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் பங்குபற்றலாம்.

ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டிய எங்கள் முகவரிகள்:

01) புலிகளின்குரல் நிறுவனம்
நடுவப்பணியகம்
முதன்மைச்சாலை
கிளிநொச்சி
தமிழீழம்.

02) மின்னஞ்சல் முகவரி: info@pulikalinkural.com

ஈழத்திற்கு வெளியில் வாழ்பவர்கள் தமது ஆக்கங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பலாம்.

Friday, September 07, 2007

வசந்தன், சோமி, டிசே இவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள்

நமது வலைச் சூழல் கண்காணிப்புக் குழுவின் கடந்த மற்றும் இந்த மாதத்து அறிக்கைகளின் பிரகாரம் வலையில் மீள வரவைப்போர் பேரவையின் சார்பில் கொழுவி ஆகிய நான் சுய நினைவுடன் எழுதும் கடிதம்:

அன்பிற்குரிய வலைப் பதிவர்களான சோமிதரன், வசந்தன் மற்றும் டிசே முதலானோருக்கு. நீங்கள் கடந்த சில மாதங்களாக வலைப் பதியாமல் இருக்கிறீர்கள். அதனால் ஒருவேளை நீங்கள் வலைப் பதிவை விட்டு விலகி விட்டீர்களோ என்ற ஐயத்தை எம்மத்தியில் தோற்றுவித்து விட்டது.

ஆயினும் உங்கள் இறுதிப் பதிவெதனிலும் வலையுலகை விட்டு விலகுவதாகவும் இனிமேல் பதிவதெனையும் எழுதப் போவதில்லையெனவும் நீங்கள் பதிவெதனையும் இட வில்லை. உங்கள் பதிவுகளை படிப்பதற்காக ஆவலுடன் தினம் தினம் உங்கள் பதிவுக்கு வந்து ஏமாந்து செல்லும் லட்சக்கணக்கான வாசகர்களின் மன வேதனையை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா..?

இந்நிலையில் வலையில் மீள வரவைப்போர் பேரவையினராகிய நாம் உங்களை மீள அழைத்து வருவதில் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம்.

அதாவது வலையில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்துப் பதிவெதனையும் இடாத வரைக்கும் உத்தியோக பூர்வமாக உங்களைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர முடியாமல் உள்ளது. உங்களை மீளவும் அழைத்து வருவதற்கான அன்புப் பின்னூட்டங்களை நாம் இடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நீங்கள் கட்டாயமாக விலகல் பதிவொன்றினை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது.

ஆகவே இந்த வரலாற்றுப் புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஒவ்வொருத்தரும் தனித்தனியாக நீங்கள் விலகுவதற்கான காரணங்களை உணர்ச்சி பூர்வமான பதிவுகளாக எழுதி வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறான பதிவொன்றினை நீங்கள் இடும் பட்சத்தில் பின்னூட்டப் பெட்டிகளுடனும் தொலைபேசிகளுடனும் தயாராக நிற்கும் மீள வர வைப்போர் பேரவை உறுப்பினர்கள் உங்கள் பதிவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உங்களை அழைத்து வருவார்கள். தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டால் உலகின் பிற நாடுகளில் இருந்தும் நேரடியாக உங்களை அழைத்து குரல் வழி வேண்டுதல் நடாத்தவும் வசதியாக இருக்கும்.

ஆகவே முதல் வேலையாக விலகிப் போவதை பதிவாக இடுங்கள். மற்றைய பதிவுகளை பின்னர் இடுங்கள். (முக்கிய குறிப்பு : பதிவுகளை இடும் போது கவனமாக இருங்கள். அவற்றை அவற்றிற்குரிய ஒழுங்கில் இடுங்கள். நினைவில் வைத்திருங்கள்: விலகுவதற்கான பதிவே முதலில் வரவேண்டியது)

Tuesday, September 04, 2007

மன்னிக்கவும் சிநேகிதர்களே - அன்பின் சூழ்ச்சிக்கு பலியாகிட்டேன்

-முற்குறிப்பு- அண்ணை திரும்ப வந்துவிட்டதால் இந்த பதிவு சென்சிட்டிவ் ஆன பதிவாக இருக்காது என நம்புகிறேன். அண்ணை கண்டுக்காதீங்க -)

சமீபத்தில் இன்று காலையிலிருந்து வந்த போன கால்கள் அல்ல போன் கால்கள் என்னைக் கரைத்துக் குடித்து விட்டன. அதிலும் சுச்சர்லாந்திலிருந்து அந்த பெரியண்ணன் பேசிய போது கரைந்து காணாமலேயே போய் விட்டேன். இதோ உருகி இளகி இறங்கி வருகிறேன் நண்பர்களே.

உங்கள் அன்புக் கோரிக்கைகளை மனதில் கொண்டு அதற்கு மதிப்பளித்து அடிபணிந்து மீண்டும் எழுத தயாராகி விட்டான் இந்த கொழுவி. நான் விடைபெறுவதாயச் சொல்லி பதிவெழுதிய போது அழுது துயர்கொண்டெழ எனையழைத்து அழைத்தவர் ஆயிரம் பேர். அவர்களுக்கு நன்றி.

கொண்டோடி என்னை மன்னித்துக் கொள்ளும். நான் உமது பாதையிலிருந்து விலகிப் போனாலும் இன்னொரு குறுக்கு வழியால் உமக்கு முன்பே வந்து நிற்பேன்.