Tuesday, June 20, 2006

நான் எப்பிடியோ நீச்சலடிச்ச 'ஆறு'கள்

அந்தக்காலம் முதலே என்னை யாருமே கண்டு கொள்வதில்லை. அதனால் என்ன? சொல்லிச் செய்வர் மனிதர் சொல்லாாமல் செய்வர் பெரியர் எண்டதை மனசில வைச்சு -

எப்படியோ நான் நீச்சலடிச்ச ஆறுகள்

1- வழுக்கியாறு - யாழ்ப்பாணம்

2- பறங்கியாறு - மணலாறு

3- பேராறு - முத்தையன் கட்டு

4- பாலியாறு - வன்னி

5- பாலாறு - மன்னார்

இவ்வளவும் தான் எப்பிடியோ நான் நீச்சலடிச்ச ஆறுகள். என்ன 5 ஆறுதான் கிடக்கு ஆறாவது ஆறு எங்கையெண்டு கேக்கிற ஆக்களுக்கு -

வடிவா பாருங்கோ -

பறங்கியாறு - மணலாறு எண்டு இரண்டு ஆறு வருகுது -

இனி நான் அழைக்கும் ஆறு நபர்கள்

சிறீரங்கன்

ஜனநாயகம்

கருணாநந்தன்

வசந்தன்

சோ.தமிழவன்

ஈழநாதன்

Friday, June 16, 2006

தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி

உலகமே கண்மூடி நிற்க நாளும் பொழுதும் செத்துப் போகின்றன எங்கள் உயிர்கள்!

வாய் திறப்பார் யாரும் இல்லை!

எங்களின் அழுக்குரல் யாரையும் எட்டுவதாய் இல்லை!

இந்தப் பாடல் கடல் தாண்டி சோகம் சுமந்து வருகிறது. சோதரரின் காதுகளில் எம் துயரச்செய்தி கொண்டு வருகிறது.


Wednesday, June 14, 2006

பற்றியெரியுது சிறீரங்கன் மனசு

வார்த்தைகளாகி வருகின்றன
வயிற்றெரிச்சல்கள்!

சிறீரங்கன் ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். இங்கு கிளிக்குக.

கொல்லப்பட்ட வங்காலைப் பிள்ளைகளின் மேல் அரசியல் நடத்தப்படுவதாய் அவர் சொல்கின்ற எங்களின் உணர்வுகள், எங்களின் கோபங்கள், வலைபதிந்த தமிழக உறவுகளின் ஆறுதல்களின் மேல் தனது அரசியலை நடத்தப் புறப்படுகின்றார்.

வருக! வருக!

உங்கள் வயிற்றெரிச்சல்களை வார்த்தைகளாக்கித் தருக!

பிணங்களின் மேல் நின்று தான் அழுகின்றோம் .

என்ன செய்ய?

செத்துப் போன அந்தச் சிறுவன் என்னைத் தேடும் ஆமி என்று எந்த இடத்திலும் எழுதி வைக்க வில்லையே!

தூக்கில் தொங்கிய அந்தச் சகோதரன் என்னைத் தமிழனை வாழ வேண்டாம் என மனைவியும் குழந்தைகளும் கதறுவதாய் எந்த இடத்திலும் எமக்குச் சொல்லவில்லையே..

இது என் கடைசி வார்த்தையென அந்தச் சகோதரி ஒரு சொல்த் தானும் சொல்லவில்லையே!

அவ்வாறெனின் ஆறுதல் சொல்லியிருப்போம்.

அவ்வாறெனில் பாதுகாப்பாய் இருக்க சொல்லிருப்போம்

அவ்வாறெனில் வாழும் உரிமை பற்றி சொல்லியிருப்போம்.

அவ்வாறெனில் சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லியிருப்போம்.

அவ்வாறெனில் இது தான் சாட்டு என்று ஆமிக்கும் அரசாங்கத்துக்கும் ஜனநாயகம் சொல்லித்தந்திருப்போம்.

அவ்வாறெனில் அவர்களின் வாழ்வுரிமைக்காக எங்களின் எழுத்தை நிறுத்தியிருப்போம்.

என்ன செய்ய?

அவர்கள் அப்பாவிகள்.

தங்களை வைத்து அரசியல் பண்ணத் தெரியாதவர்கள்.

இணையமொன்றில் வந்த செய்தியை வைத்து நீங்கள் அரசியல் செய்த போது அது அருவருக்கத்தக்கதாக தெரியவில்லையா?

(அந்தச் செய்தி தவிர்ந்து வேறெவரும் உங்கள் சகலனையோ உங்களையோ மிரட்டவில்லையென்பது உங்களுக்கு தெரிந்தது போலவே இன்னும் சிலருக்கும் தெரியும் . இணையத்தில் செய்தி வந்த பின்னர் மிரட்டல் நாடகத்தினை பொய்யாக அரங்கேற்றி பின்னர் அனுதாபம் தேடி, அதன் பின்னதாக எட்டப்பர் இணையச் செய்தியை பின்னூட்டங்களாக பலருக்கு இட்டு அவர்கள் அவையை மட்டுநிறுத்தி வெளியிடாத சமயம், உங்கள் வலையில் நீங்களாகவே அந்த எட்டப்பர் செய்தியை அநாமதேயமாக வெளியிட்டு அநாமதேயத்திற்கு நன்றி சொல்லி.. ஆஹா அடடா ..இது பற்றி ஆறுதலாக எழுத வேணும் )

உங்கள் உயிர் மீது ஏறி நின்று அழுதது எதற்காக?

புலிகளின் படுகொலைகளின் மீது ஏறி நின்று அழுவது எதற்காக?

உங்களுக்கான அனுதாபம் தமிழ்நாட்டிலிருந்து வரும் போது அதில் எங்கே போயிற்று திராவிட அரசியலின் திரு நோக்கு?

உங்கள் மீது அக்கறையுடன் ஆதரவு தந்த போது என் உயிர் மீது ஏறி நின்று எழுத்துரிமைக்கும் , ஜனநாயகத்திற்கும் இரங்கற்பா பாட வேண்டாம் என்று கவிதை பாடத் தோன்றவில்லையே உங்களுக்கு?

பற்றியெரியும் உங்கள் வயிற்றெரிச்சலின் பின்னுள்ள நோக்கு என்ன?

சிறு சிறு திரி மூட்டி நீவிர் வளர்த்த பேதங்கள் உடைவது கண்டா?

மக்கள் மீதான அனுதாபமும் அக்கறையும் Automatic ஆக புலிகள் பால் செல்லுதல் உணர்ந்தா?

இந்த ஒரு விடயத்தில் புலிகள் பெரும் பேசுபொருளாகினர் என்ற விரக்தியா?

அல்லது

உங்கள் மீது விடுக்கப்பட்ட இணைய அச்சுறுத்தலின் (கவனிக்க இணைய அச்சுறுத்தல் மாறாக சகலையூடானதல்ல) போது உங்களுக்கு வந்த அனுதாபப் பின்னூட்டஙகளை விட அதிகளவான தனிப்பதிவகளும் கூடிய கவனமும் இந்த விடயத்திற்கு வந்ததையிட்ட எரிச்சலா?

அப்படியாயின் அப்படிப்பட்ட ஒரு மனிதரா நீங்கள்

Sunday, June 11, 2006

என்னைத் தேடுது சாவு

என்னை உங்களுக்கு ஆரெண்டு தெரியாது. நான் ஒரு சின்னப்பிள்ளை. தமிழ்ச் சின்னப்பிள்ளை..

தமிழ்ச் சின்னப்பிள்ளையெண்டதை நான் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கு.
ஏனெண்டால் தமிழ் எண்ட படியாலைதான் நான் சாகப் போறனாம். ஆனா எனக்கு அது ஏனெண்டு விளங்கேல்லை. பள்ளிக்குடத்தில எனக்கு கணக்குப் பாடத்தை விட, விஞ்ஞான பாடத்தை விட தமிழ்ப் பாடம் நிறைய விருப்பம். இதனாலை ஏன் சாகப்போறன் எண்டும் இதுக்காக என்னை எதுக்கு அவையள் சாக்கொல்ல வேணும் எண்டும் எனக்கு விளங்கேல்லை.
Photobucket - Video and Image Hosting

எனக்கு சாகிறதெண்டால் சரியான பயம். செத்தால் பேயா வந்து அலைவனாம்.

எனக்கு பேயெண்டாலும் சரியான பயம். ஆனால் அம்மா சொல்லுறா பேய்கள் தானாம் உந்தப் படங்களில இருக்கிற மாதிரி மனிசரை கொல்லுமாம். அதோடை அம்மா இன்னொண்டையும் சொல்லுறா..

சாகிறதெண்டால் நான் இப்பவே செத்துப் போக வேணுமாம். ஏனெண்டால் பொம்பிளைப்பிள்ளையா பிறந்த நான் பெரியாளா வளந்த பிறகு பேய் பிசாசுகள் என்னை கதறக் கதறக் கொல்லுமாம். ஆனா என்ரை அம்மா நான் கவலைப் படக் கூடாது எண்ட படியாலை அம்மாவையும் அந்தப் பேய்கள் கொல்லும் எண்டதை சொல்லாமல் மறைச்சுப் போட்டா.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். இன்னும் பள்ளிக்குடம் போகேல்லை. கதைக்கவும் மாட்டான். எண்டாலும் அவனும் தமிழன் தானே. அவனை மாதிரித்தான் ஒரு தம்பியை அம்மாக்கும் அப்பாக்கும் இடையில படுத்துக் கொண்டிருந்தவனை நித்திரைப்பாயிலையே வைச்சு கொலை செய்து போட்டாங்கள்.
Photobucket - Video and Image Hosting
எனக்கு பயமாக்கிடக்கு. நானும் என்ரை தம்பியும் அம்மாக்கும் அப்பாக்கும் இடையில தான் படுக்கிறனாங்கள். என்ர கனவிலையெல்லாம் என்ர தம்பி குடல் வெளியில தெரிய தூக்கில தொங்கிற மாதிரி வருகுது. அதை நான் அம்மாக்கு சொல்ல அம்மா என்னைக் கட்டிப்பிடிச்சு ஓவெண்டு கத்தி அழுகிறா. ஆனா தம்பி அதைப்பாத்துச் சிரிக்கிறான். அவனுக்கு ஒண்டும் விளங்கேல்லை.. இப்பிடித்தானே அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற அந்தத் தம்பியும் சிரிச்சு விளையாடியிருப்பான். ஒரு வேளை சாகிற நேரத்திலும் ஒண்டும் விளங்காமல் சிரிச்சுக் கொண்டிருந்திருப்பானோ?

எனக்கு சிலது விளங்கிற மாதிரியும் சிலது விளங்காத மாதிரியும் ஒரே குழப்பாமாக்கிடக்கு.

நான் பிறக்கேக்கை இங்கை சண்டை நடந்ததாம். ஆனால் தம்பி பிறக்கும் போது சண்டை இல்லை. அம்மா சொல்லுவா அவனைப் பாத்து நீ அதிஸ்டக்காரன் எண்டு. ஆனா செத்துப் போன இந்த தம்பி பிறக்கும் போதும் சண்டை இல்லாமல் தான் இருந்திருக்கும். அப்ப அவன் ஏன் அதிஸ்டக்காரனா இல்லை. ஒரு வேளை என்ர தம்பியும் அதிஸ்டக்காரனா இருந்து இப்படிச் செத்துப் போடுவானோ? எனக்கு கவலையாக் கிடக்கு.

எனக்கும் அவனுக்கும் சின்னச் சின்ன சண்டையள் வந்தாலும் அவனில நான் நல்ல பாசம். கடவுளே அவன் இந்த மாதிரி செத்துப் போன கோலத்தில இருக்கிறதை என்னாலை கண் கொண்டு பாக்கவே முடியாது.. எனக்கிப்ப அழுகையா வருது.. ஆனா.. தம்பி இப்பிடி செத்துப் போனால் கடைசியா நான் அவனைப் பாக்கத்தானே வேணும். என்ரை தம்பியெல்லோ அவன்?

எனக்கு சாகிறதுக்கு சரியான பயம்தான் எண்டாலும் தம்பி சாகிறதெண்டால் என்னையும் சாக்கொல்லட்டும். ஒரு வேளை என்னப்போலத்தான் தூக்கில தொங்கிற அக்காவும் கேட்டிருப்பாவோ? அவவைப் பாக்க எனக்கு அழுகையா வருது. அவக்கு என்ரை வயசுதானே இருக்கும்.

அவவுக்கும் தன்ரை தம்பியில நல்ல பாசம் வைச்சிருப்பா தானே என்னை மாதிரி!
Photobucket - Video and Image Hosting
எனக்கு வடிவாத் தெரியாது. ஆனா கேள்விப்பட்டனான். ஏதோ சில நாடுகளில மிருகங்களை கொன்றால் கூட பொலிஸ் பிடிக்குமாம். நீதி மன்றம் எல்லாம் கொண்டு போவினமாம். ஆனால் இங்கை நாங்கள் குடும்பம் குடும்பமாக் கொல்லுப்படுறம். ஒருத்தரையும் பிடிக்கிறதுமில்லை. ஏன் எண்டும் கேக்கிறதில்லை.

சரி அந்த மிருகங்களாவது சந்தோசமா உயிரோடை வாழட்டும்

நான் ஒரு படம் பாத்தனான். இதில அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற தம்பியின்ர படத்தைப் பிடிச்சுக்கொண்டு வெளிநாட்டில - அது நல்ல வடிவான நாடு - ஒரு தங்கச்சி - அவ நல்ல வடிவான தங்கச்சி - இருந்தவ. அவ குளிர்சட்டையெல்லாம் போட்டு காலுக்கு சொக்ஸ் சப்பாத்து எல்லாம் போட்டிருந்தவ. அவவக்கும் என்ர வயசுதான் இருக்கும். அவ சந்தோசமா இருக்கிறது எனக்கும் சந்தோசமாத்தான் கிடக்கு. ஆனா நாளைக்கு செத்துப் போன என்ரை படத்தையும் அவயள் தூக்கிப் பிடிப்பினமோ எண்டதை நினைக்க பயமாக்கிடக்கு.

அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது எண்டு அப்பா சொல்லுறவர். எண்டாலும் எனக்கு சொல்லாமல் இருக்க முடியேல்லை. அந்த வெளிநாட்டுத் தங்கச்சி மாதிரியே நானும் காலுக்கு சொக்ஸ் சப்பாத்து போட்டு நல்ல உடுப்புப் போட்டு பள்ளிக்குடம் போக வேணும் எண்டு ஆசையாக் கிடக்கு. என்ன செய்ய எல்லாத்தக்கும் முதலில உயிரோடை இருக்கத்தானே வேணும்..

எனக்கு இந்த இடத்தில என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை.. நான் உயிரோடை இருப்பனா எண்டது எனக்கு தெரியேல்லை. உங்களில ஆருக்காவது தெரியுமா ? நானும் தம்பியும் அம்மாவும் அப்பாவும் இன்னும் என்னைப்போல இருக்கிற எல்லாரும் உயிரோடை இருப்பமா?

எனக்கு ஆரிட்டை கேட்கிறது எண்டு தெரியேல்லை . எண்டாலும் கெஞ்சிக் கேக்கிறன் ! எங்களுக்கு உயிர்ப்பிச்சை போடுறியளா?.. தம்பிக்கு கதைக்க தெரியாது. அவனுக்காக நான் கெஞ்சிக் கேட்கிறன்.. எங்களை உயிரோடை வாழ விடுவியளா..?

Friday, June 09, 2006

விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம்

என்ன செய்ய இப்போதெல்லாம் ஈழத்து செய்திகளை விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம் என்றும் செய்திப் படங்களை விரும்பாதவர்கள் பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடனும் தான் போட வேண்டியிருப்பது எங்களின் விதிஎன்றானது.

Photobucket - Video and Image Hosting

ஒஸ்லோவில் அரசும் புலிகளும் சந்திக்கிறதுக்குப் பிடுங்குப்பட்டு கொண்டிருக்கையில் வீடு புகுந்த பேய்கள் கொலை செய்து வெறிதீர்த்து தூக்கில் தொங்க விட்டுப் போயிருக்கிறார்கள்.

தமிழ்நெற்றின் செய்திகளின் படி மிகத்தெளிவாக நிதானமாக திட்டமிட்டு ஆணுறைகளுடன் அந்தப் பேய்கள் வந்து வெறி தீர்த்து சென்றிருக்கின்றன.

இது இன்னும் இன்னும் தொடரும்! மீண்டும் மீண்டும் தொடரும்!

ஆனாலும் இலங்கையில் அமைதியை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கை அரசினை இந்தியா மெச்சும்.

பயங்கர வாதத்தை ஒழிக்க அமெரிக்கா இலங்கை அரசிற்க துணை நிற்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசின் இதய சுத்தியுடனான அமைதிப் பேச்சுக்களுக்கான அதரவுக்கு நன்றி தெரிவிக்கும்..

ஆனாலும் அல்லைப்பிட்டியிலும் மன்னார் வங்காலையிலும் இன்னும் இன்னும் தமிழர் தேசமெங்கும் நாய்கள் வீடு புகும்!

பேய்கள் பிணந்தின்னும்!

ஆனாலும் அமைதிப்பேச்சுக்களுக்கு இலங்கை அரசு எப்போதும் தயாராக இருக்கும்.

பிறகும்

நாளைய விடியலில் நாமும் தூக்கில் தொங்குவோம் என குழந்தைகள் முன்னிரவில் பாடம் படிப்பார்கள்.

அப்போதும் அரசு பேச்சுக்களுக்கு வரும்படி புலிகளிடம் கேட்கும். அரசோடு சேர்ந்து அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் இந்தியா எல்லொரும் கேட்பார்கள்.

தயவு செய்து தமிழர்களை கொல்ல வேண்டாம் என்பதைக் கூட பேச்சு மேடையில் வந்து கேளுங்கள் என்கிறார்கள்.எங்கள் மக்களை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சத்தான் ஒரே மேடையில் பேச்சா?

இனியென்ன?

செத்துப்போன பிள்ளைகளின் புகைப்படம் ஏந்தி அடுத்த உரிமைக்குரல் நடக்கும். அதற்கடுத்த உரிமைக்குரலில் ஏந்துவதற்கு இன்னொரு பிள்ளை செத்துப் போக தயாராகும்.

போதும் எல்லாம்!

மக்களின் சாவு உலகக் கண்களில் மாற்றத்தை கொண்டு வரப்போவதில்லை.

பேய்களும் நாய்களும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணும் போது மட்டுமே மக்கள் உயிர்களை மறந்து போவார்கள்.