Friday, December 29, 2006

இந்தியா அமெரிக்காவின் மாநிலமாக

ஜடாயுவின் ஒரு பதிவினை இன்னு தான் பார்க்க நேர்ந்தது. அதில் இடம் பெற்றிருந்த ஒரு பின்னூட்டம் இலங்கையில் கொழுந்து விட்டெரியும் தமிழர் பிரச்சனைக்கு இது வரை சொன்ன சாத்வீக ஆத்வீக சமாதானத் தீர்வுகள் அனைத்திலும் ரொம்ப (நகை)ச் சுவையானது.

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. தனிக்காட்டு ராஜாவாக இருக்க விரும்பு ராஜப§க்ஷ, ஈழத்தலைவர்களுக்கு அது உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.


ஆனால், இலங்கையில் இருக்கும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் அதுதான் நல்லது.

இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது.

எட.. இப்பிடியொரு தீர்வு இவ்வளவு நாளும் எங்கடை தலைவர்மாருக்கும் எங்களுக்கும் தெரியாமல்ப் போட்டுதே. இதில மிகப் பெரும் பகிடி என்னெண்டால் அப்படி நாங்கள் மாநிலமா இணைஞ்ச பிறகு அதைப் பாத்து நேபாளம் பூட்டான் நாடுகளும் இந்தியாவோடு வந்து இணைவினமாம். பச்சையாச் சொன்னா உது அந்தக் காலச் சோழ சேர பாண்டியரின் நாடு பிடிக்கும் எண்ணத்தின்ர மிச்ச சொச்ச எண்ணம் தான்.

இதைப் படித்த உடனை எனக்கும் சில தீர்வுகள் தோன்றியது.
இந்தியாவில் வறுமை ஒரு முக்கிய பிரச்சனை. இதிலிருந்து விடுபட இந்திய மக்கள் தங்களை அமெரிக்காவுடன் இணைக்கச் சொல்லி கேட்கலாமே..Green Card ம் இலகுவாக கிடைக்கும். அவ்வளவும் ஏன் அடிமையாயிருந்தால் என்ன குறைஞ்சா போயிடுவம்.. இங்கிலாந்துக்கு கீழையே தொடர்ந்தும் இருந்திருந்தால் எல்லா வசதிகளும் கொண்ட (உண்மையாகவே) ஊழல் அற்ற ஆட்சியொன்று கிடைத்திருக்குமே..

இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. இந்தியா இலங்கை சிங்கப்பூர் அவுஸ்திரேலியா முதலான எல்லா நாடுகளும் அமெரிக்காவோடு இணைந்தால் நாடுகளுக்கு இடையில் ஒரு பிரச்சனையும் வராது. உலகத்துக்கு ஒரு நாடு உண்மையில நல்ல விசயம் தான். முதலில இந்தியா போய் இணைந்தால் வறுமைப் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காணலாம். அதனைப் பார்த்து நேபாளம் பாகிஸ்தான் முதலிய நாடுகளும் அமெரிக்காவோடு இணைய முன்வரும்.

ஆகக் குறைந்தது காஸ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காவது இந்தியா பாகிஸ்தானின் 15 மாநிலங்களானால் அது நல்ல ஒரு தீர்வைத் தரும்.

இறுதியாக

இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?

இந்தக் கேள்வியின் படி கட்டாயமான ஒரு சூழ்நிலை வருமென்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோமே.. கண்டிப்பாக இந்தியாவுடன் தான் இணைந்து கொள்ள வேண்டுமா..?
அவுஸ்திரேலியாவுடன் இணையலாமே..

Thursday, December 28, 2006

ஈழம் வீடியோ பாடல்

பச்சை வயலே என்ற இந்தப் பாடலுக்காக பிரத்தியேகமாக எந்தக் காட்சியையும் ஒளிப்பதியாமல் தினம் தினம் ஈழத்தின் காட்சிகளை மட்டும் கொண்டு பாடலுக்கு காட்சியமைத்திருக்கிறார்கள்.
காட்சியில் இடம் பெற்றிருக்கும் குண்டு வீச்சு காட்சிகளும் மக்களின் அவலச் சாவும் நிதம் நிதம் ஈழத்தில் நடக்கும் காட்சிகள்.
தேனிசை செல்லப்பாவின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலின் வீடியோ பதிவு இது


Friday, December 22, 2006

அரசியல் அண்ணாச்சியும் வயிறெரிந்த தம்பியும்

டேய் ரங்கா வாடா வா!என்னமாதிரிப் போகுது பாடு?

மணியண்ணை! என்னத்தைச் சொல்லிறது? வயிறெரியுது.

ஏன்ராப்பா, மனுசி ஏதும் உறைப்பாத் தந்திட்டாளோ?

சும்மா விசர்க்கதை கதைக்காதையுங்கோண்ணை. நாட்டில உலகத்தில நடக்கிறதுகளைப் பாத்து எரியுது எண்டுறன்.

எட, அதையோ சொல்லிறாய். அப்பிடி எரியிறதுக்கு புதுசா என்ன தான் நடந்தது?

என்னண்ணோய் இப்பிடிச் சொல்லுறியள்?
அண்ணர்களின்,தம்பிமார்களின்-தோழர்களின்,நண்பர்களின் கூட்டமெண்டு பெரிய கூட்டமெல்லோ? உலகப்புகழ்பெற்ற டயானாவுக்கே இப்பிடியில்லையெண்டு வெள்ளையளே சொல்லுதுகளாம்.


நீ எதைச்சொல்லிறாய், எதுக்கு வயிறெரியிறாய் எண்டு எனக்குச் சரியாத் தெரியேல. சரி அதைவிடு... வாற ஞாயிறு வீட்டில கூழ் காய்ச்சிறன். வாவென் ஒருபிடி பிடிப்பம்.

அண்ணை, நீங்கள் கதைய மாத்தாதையுங்கோ. விளங்கியும் விளங்காத மாதிரி நடியாதையுங்கோ.

உன்னைப் போல அனுபவஸ்தானாலதான் பட்டும் படாமலும்,பல்லில நாக்குப்படாமல் கதைக்க முடியுது.எங்கேயடா தம்பி இப்படிப் படிச்சாய்?

ஓ, அண்ணோய் என்ர படிப்புப் பற்றிக் கேட்டுப்போட்டீங்க.உங்களுக்குச் சொல்லாட்டி...பிறகு பெயருக்கு முன்னாலயாவது தமிழுக்குள்ளாவது போடாமல் போனால் என்ர ஆத்துமா அந்தரிக்குமெல்லோ!அண்ணோய் மந்திகையில எம்.ஏ.பிறகு அங்கொடயில கலாநிதிப் பட்டம்.எனக்கும் கலாநிதியைச் சேர்ப்பீங்களோ?

அதுதான் நீயாய்ச் சேர்த்து ஏற்கனவே நாறிப்போயிட்டியே. நக்கலுக்கு மட்டும் குறைவில்லை. அவங்களெண்டாலும் கலாநிதிக்குப் படிச்சு கடசிவருசத்தை முடிக்காமல் விட்டாங்கள்.. அதுவும் ஏலாமல் விடேல, இடையில போராட்டப் பாதையைத் தெரிவுசெய்து படிப்பை முடிக்காமல் வந்திட்டாங்கள். எண்டாலும் அவங்களுக்கு கலாநதிக்கும் மேல அறிவும் திறமையும் இருந்தது.
நீ என்னத்தைக் கிழிச்சுப்போட்டு இங்கிலீசில இருவத்தாறு எழுத்தையும் அங்க இஞ்சையெண்டு மாத்திப்போட்டு டாக்குத்தர் எண்டு பட்டம் போட்டுக்கொண்டு அலம்பித் திரிஞ்சனி?

பத்ததாததுக்கு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கிறனெண்டும் சிலருக்கு டோஸ் விட்டுக்கொண்டிருந்தாய். டாக்குதர் வேலைக்குரிய மாதிரி ஒரு துரும்பாவது படிச்சனியோ? நீர் ஊருக்க உப்பிடி புழுகித் திரியேக்க அதையும் நம்பிக்கொண்டு, உன்னை ஆரோ வெருட்டினவங்கள் எண்டு நீ கதைவிடேக்க, உனக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரிய கூட்டமே வந்ததுதான்.
உந்தளவுக்கு 'ஓட்டு மாட்டு' வேலைகள் செய்த உனக்கு மற்றவங்கள் பட்டம் குடுக்கிறதைப்பற்றி, அதுவும் தகுதிக்குரிய பட்டம் குடுக்கிறதைப்பற்றி நக்கலடிக்க என்ன அருகதை மோனே கிடக்கு?


சரிசரி, எதுக்கண்ணை இப்ப உதுகளைக் கிழறுறியள். நான் என்ன கதைச்சாலும் உதைச்சொல்லி குத்திக்காட்டிக்கொண்டிருக்கிறியள். நான்தான் பழசுகளையெல்லாம் மறைச்சுப்போட்டேனே?

அடடா! பழசுகளை மறைச்சுப் போட்டால் மட்டும் நீ அப்பாவியோ?
இந்த ஊருக்குப் புதுசா வந்த மனுசருக்கு வேணுமெண்டால் அதுகள் தெரியாமல் இருக்கும். ஆனா பழய மனுசருக்குத் தெரியாமலிருக்குமோ? மறந்துதான் போயிருப்பினமோ?


சரியண்ணை, அதை விடுங்கோ. அதுவொரு துன்பியல் சம்பவம். உவங்கள் ரெண்டொருபேர் உதைப்பற்றிக் கதைக்காமல் விட்டால் பிரச்சினைவராது.

அதுதான்ராப்பா பிரச்சினை. நீயும் உப்பிடி பட்டம் குடுக்கிறதைப்பற்றி வயித்தெரிச்சலில விழல்தனமா உளறாமல் இருக்கும்வரைதான் உன்ரபேர் சந்திசிரிக்காது.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

என்னடாப்பா சத்தத்தைக் காணோம்.
சரி, வாற ஞாயிறு மறக்காமல் கூழுக்கு வந்திடுது.
அங்க மிச்சத்தைத் தொடருவம்.


இல்லையண்ணை, நீங்களும் நாசுக்கா, பம்பல் பம்பலாக் குத்துறதில விண்ணன்.

ஏன்ராப்பா, உனக்கு மட்டும்தான் உப்பிடிக் குத்தத் தெரியுமெண்டோ இவ்வளவுநாளும் நினைச்சுக்கொண்டிருந்தனி?

*****************************
இங்கு நாசுக்காகக் குத்துவது மட்டுமே அனுமதிக்கப்படும்.
சிலவசனங்கள் அப்படியே திருடப்பட்டவை.

Friday, December 15, 2006

பாலாண்ணை நினைவுப் பாடல்

பாடல் இசை வர்ண இராமேஸ்வரன்
நன்றி தமிழ்நாதம் இணையம்


பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் 2

தேசத்தின் குரல் பாலாண்ணையின் மறைவையொட்டி தமிழகத்தின் அரசியல் பிரமுகர்களின் இரங்கல் செய்திகளின் இரண்டாவது பதிவு
நன்றி பதிவு இணையம்
தியாகு



ராமகிருஸ்ணன்



இல கணேசன்



வைகோ


பரிசோதனை

பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் என்ற பதிவை தமிழ்மணத்தில் இணைத்தால் புதிய இடுகைகள் எதுவுமில்லை என செய்தி வருகிறது. அதனால் இந்தப் பரிசோதனை.

பாலாண்ணைக்கு தமிழகத்தின் இரங்கல் 1

தேசத்தின் குரல் பாலாண்ணையின் மறைவையொட்டி தமிழக அரசியல் சமூக பிரமுகர்களின் கண்ணீர் அஞ்சலிகளை கீழே தொகுத்திருக்கிறேன்.
நன்றி பதிவு இணையம்

பழ நெடுமாறன்



சுப வீரபாண்டியன்



திருமாவளவன்



குளத்தூர் மணி


Thursday, December 14, 2006

மதியுரைஞர் பாலா அண்ணை நினைவாக

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இன்று லண்டனில் காலமாகினார். தமிழீழ தேசிய விடுதலைப் போரில் கடந்த 30 வருடங்களாக பக்கத் துணையாக இருந்து வந்த அவரது இழப்பு நிரப்பிக் கொள்ள முடியாத இழப்பாகும்.

பாலா அண்ணையின் நினைவாக அவர் கடந்த 2005 மாவீரர் தின நிகழ்வில் லண்டனில் ஆற்றிய உரையின் வீடியோ வடிவம் இது.


Thursday, December 07, 2006

மீள்பதிவு இடுவது எப்படி?

இதோ இப்படித்தான்

தரகு முதலாளித்துவமும் மனைவியும்.

அப்பப்பா என்ன வெயில்?
இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள். அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்…
அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?

பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சுரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும்.
நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம்.
எனக்கெதுக்கு அதெல்லாம்.
நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம்.
சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

ஆம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாரும்.

Sunday, December 03, 2006

யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது?

யாழ்ப்பாணத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என அகரனும் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது என சூரமணியும் பதிவிட்டிருந்தனர். என் பங்குக்கு நானும் ஒரு பதிவிட விரும்புகிறேன். யாழ்ப்பாணத்தில் இப்போது ஆடு மாடு நாய் கோழி என்பன நடக்கின்றன. அது தவிர நடப்பன வகையைச் சேர்ந்த அனைத்து விலங்குகளும் நடக்கின்றன. இப்ப வாகனங்களுக்கு பெற்றோல் மண்ணெண்ணையில்லாததால் சனமும் நடக்கினம்.


Wednesday, November 29, 2006

நன்றி இந்தியா..

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்கள்இ பொருளாதாரத் தடை மற்றும் பட்டினி அவலங்களைக் கண்டித்து ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தக் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐப்பான் நியூசிலாந்து சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்கள் உரிமைகளுடன் வாழ்வதற்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர்கள் இரும்புச் சிறைக்குள் தமிழ் மக்களை சிறிலங்கா வைத்திருக்கின்றது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

விவாதத்தின் போது சிறிலங்கா அரசுக்கு சார்பாகப் பேசிய பிரித்தானிய நாட்டுப் பிரிதிநிதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்தார். அவரின் கருத்தை மறுத்துப் பேசிய சுவிற்சர்லாந்தின் ஐ.நா. பிரதிநிதி தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தார். பின்னர் பிரித்தானியப் பிரதிநிதியின் கருத்து நிராகரிக்கப்பட்டு சுவிற்சர்லாந்துப் பிரதிநிதியின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்து பேசிய நியூசிலாந்து நாட்டுப் பிரதிநிதி தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்ட இனமாக இருக்கின்ற போதும் அவர்கள் உறுதி குலையாதவர்களாக இருப்பதாகவும் அவர்களுக்கு மனித உரிமைகள் என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனையடுத்து ஜப்பானியப் பிரதிநிதி தமிழ் மக்களின் நியாயமான குரல்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் இதற்கான முழு உத்தரவாதத்தை சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்கா விட்டால் சிறிலங்கா அரசு மீது பாரிய பொருளாதாரத்தடையை ஜப்பான் கொண்டு வர நேரிடும் என்ற எச்சரிக்கையையும் ஜப்பானியப் பிரதிநிதி விடுத்தார்.

இனிதான் நாம் இந்தியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆம் இந்தக் கண்டனத்தீர்மானத்தில் இந்தியா சிறிலங்கா அரசு சார்பான நிலையை எடுத்து சிறிலங்காவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறது. அதாவது சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மதிக்கிறது என பக்கத்து நாடு பரிந்து பேசியிருக்கிறது.

நன்றி இந்தியா..
கோடி நன்றி

மாவீரர்நாள் உரையில் ஏமாற்றிய பிரபாகரன்

உலகத் தமிழரையும் ரஜனி ரசிகர்களையும் ஏமாற்றிய தலைவர்.

'உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும்' என்ற அடைமொழியுடன் கொஞ்சநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மாவீரர்நாள் உரை முடிந்துவிட்டது.
பலதரப்பட்டவர்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்கள். பலருக்கு நிறைவையளித்து அவர்களின் எதிர்பார்ப்புக்களை ஓரளவாவது தீர்த்து வைத்துள்ளது அவ்வுரை. சிலருக்கு எரிச்சலையும் விசனத்தையும் கொடுத்துள்ளது.
பலதரப்பட்டவர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகள் இருந்தாலும் எல்லோருக்கும் ஒரு விடயத்தில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது பிரபாகரனின் இவ்வருட உரை.

அது என்ன விடயம்?

எதிர்பார்க்கப்பட்டபடி இலங்கையின் இப்போதைய நிலைவரம், அரசியற்சூழல், போர் நிலைமை என்பவற்றைச் சொல்லி, தமிழரின் பாடுகள், வேதனைகள் என்பவற்றைச் சொல்லி, இன்னும் பன்னாட்டு அரசியலையும் அவர்களின் கண்ணாமூச்சி விளையாட்டையும் குறிப்பிட்டு இறுதியில் புலிகளின் நிலைப்பாட்டையும் சொல்லியவிதத்தில், அவரின் உரை சரியானதே. ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய விடயமொன்றைப் பற்றி வாயே திறக்காமல் விட்டுவிட்டார்.

அது என்ன விடயம்?

உலகத் தமிழர்கள் அனைவரும் பிரபாகரனிடமிருந்து எதிர்பார்த்த கருத்து ஒன்றுண்டு.
கடந்த மாவீரர் நாள் உரையிலேயே தெளிவுபடுத்தவேண்டியிருந்தும் தவறவிட்ட 'சந்திரமுகி' படம் பற்றிய பிரபாகரனின் கொள்கை விளக்கவுரையை இவ்வருட மாவீரர் உரையிலாவது தருவார் என்ற 'உலகத் தமிழர்களின்' எதிர்பார்ப்பில் அவர் மண்ணைப்போட்டுவிட்டார்.
மேலும் வெளிவரவிருக்கும் 'சிவாஜி' படம்பற்றியும் எந்தவொரு சொல்தானும் சொல்லவில்லை என்றளவில் தமிழர்களை இன்னும் கடுப்பில் ஆழ்த்திவிட்டார்.

அந்தவகையில் 'சந்திர முகி' பற்றியும் இனி வெளிவரவிருக்கும் 'சிவாஜி' பற்றியும் எந்தவொரு குறிப்பையையும் சொல்லாமல் விட்டதன்மூலம் உலகத்தமிழர்களை ஏமாற்றியுள்ளார் பிரபாகரன்.

இதன்பின்னாலுள்ள அரசியல் சூட்சுமங்களை இனிவரும் காலத்தில்தான் நாம் அறிந்துகொள்ள முடியும்.


கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்
விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும்

Monday, November 27, 2006

விரைவில் எதிர்பாருங்கள்

விரைவில் எதிர்பாருங்கள்.

இன்னும் சில மணி நேரங்களில் அல்லது சில தினங்களில் உலக நாடுகள் புலிகளின் தலைவரின் உரையை கண்டிக்க இருக்கின்றன. அது தவிர புதிய ஜனநாயகப் புரட்சியை வேண்டுவோர் மற்றும் மாற்று (இயக்கக் காரர்) கருத்தாளர்களும் பிரபாகரனின் உரையை வரிக்கு வரி ஆராய்ந்து முட்டையில் மயிர் பிடுங்க இருக்கிறார்கள்.

ஆகவே நண்பர்களே அனைத்தையும் படித்து இன்புற இப்போதே தயாராகுங்கள்.

தனியரசை நிறுவுவோம் - வே.பிரபாகரன்

இலங்கை அரசின் கபடத்தனத்திற்கு நாம் பலியாகப் போவதில்லை

மகிந்தவிற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டது.

சுதந்திர தனியரசை நிறுவுவதென தீர்க்கமாக இன்றைய நாளில் உறுதியெடுக்கிறோம்

உலக நாடுகள் தமிழீழ தனியரசை அங்கீகரிக்க வேண்டும்.

தமிழக மக்களுக்கும் மற்றும் தலைவர்களுக்கும் நன்றி

உரையினை முழுமையாகக் கேட்க

என்ர அப்பா எதுவும் கொண்டு வாறேல்லை

கடைகளில எதுவுமில்லையெண்டு அப்பா சொன்னார். ஏன் எதுக்காக எண்டு காரணங்கள் சொல்லுகினம். ஆனா எனக்கெதுவும் விளங்கேல்லை. இனிப்புக்கள், பிஸ்கற்கள், பட்டர், பால்மா.. ஏன் முட்டை, மீன் இவையெல்லாம் எங்கை போயிட்டுதுகள்..

என்னை விரும்பிற ஆக்கள் எனக்கென்ன வேணும் எண்டு போனில கேட்கினம். என்னட்டை ஒரு பெரிய லிஸ்ற் இருக்கு. ஆனா அதை அனுப்பத்தான் ஒரு வழியும் இல்லை.

மூண்டு நாளைக்கு முன்னாலை என்ர நண்பன் தன்ரை அன்ரி தனக்கு பார்சல் அனுப்பியிருக்கிறதா வகுப்பறையில வைச்சு சொன்னான். அதுக்குள்ளை பால் மா, சீனி, பிஸ்கற், சவர்க்கார பவுடர் எல்லாம் இருந்ததாம்.அதை திறந்து பாக்க சீனியும் சவர்க்கார பவுடரும் ஒண்டா கலந்து கிடந்ததாம். எண்டாலும் பிஸ்கற்றும் பால்மாவும் தாங்கள் எடுத்தவையாம்.

என்ர அன்ரியும் நாங்கள் எப்பிடி இருக்கிறமெண்டு அறிய போன் பண்ணினவ. நான் அவவிட்டை பிஸ்கற்றும் பால்மாவும் அனுப்ப சொன்னனான். ஆனா சவக்கார பவுடர் அனுப்ப வேண்டாம் எண்டும் சொல்லியிருக்கிறன். இப்ப ஒவ்வொரு நாளும் தபால்க்காரனை பாத்துக்கொண்டிருக்கிறன்.

நேற்று என்ர அப்பா பாண் வாங்கிற கியுவில நிக்கிறதுக்கு போக பிந்திட்டார். அவருக்கு பாண் கிடைக்கவில்லை. நான் காலை எதுவும் சாப்பிடாமல்த்தான் பள்ளிக்குடம் போனன். இடைவேளைக்கும் எதுவும் சாப்பிட இல்லை.

இண்டைக்கும் வழமை போல காலமை 5 மணிக்குத்தான் ஊரடங்குச் சட்டம் எடுத்தவை. சனம் எல்லாக் கியுவிலையும் நிக்கினம். கப்பல்ல கொழும்பு போறதுக்கு ஒரு கியு, சாமான் வாங்க ஒரு கியு, மண்ணெண்ணை வாங்க ஒரு கியு. என்ரை அப்பாவும் விடிய பாண் வாங்கிறதுக்கு கியுவில நிக்கப் போனார். அவர் ஒரு பாண்துண்டோடை வந்தார்.

நான் அதில ரண்டு துண்டைச் சாப்பிட்டு விட்டு ஒரு துண்டைப் பள்ளிக்குடம் கொண்டு போனன்.

இன்ரெர்வெல் நேரம் நான் என்ர பாண் துண்டு வைச்சிருக்கிற பெட்டியை திறந்தன். அதை பக்கத்தில இருக்கிற என்ர நண்பி எட்டிப் பாத்தா.. பாவம் அவ.. அவ இன்ரெர்வெலுக்குச் சாப்பிட ஒண்டும் கொண்டு வரேல்லை. அதோடை அவ காலையும் ஒண்டும் சாப்பிடேல்லையாம்.

அவவின்ர அப்பாவை ஆமிக்காரன் சுட்டுப் போட்டான். அதாலை காலைமை எழும்பிப்போய் கியுவில நிண்டு பாண் வாங்க அவவுக்கு ஆருமில்லை.

நான் என்ர பாண் துண்டை ரண்டா பிய்த்தேன். பிறகு என்ன நினைச்சனோ தெரியாது. முழுவதையும் அவவுக்கே குடுத்திட்டன். பாவம் இன்று முழுதும் சாப்பிட வில்லைத்தானே..

எனக்கு இப்ப பசிக்குது. எனக்கு பசித்தாலும் பரவாயில்லை. அவவின்ர அப்பாவை சுட்ட மாதிரி என்ர அப்பாவையும் ஆமி சுட்டுவிடக் கூடாது கடவுளே..

Tuesday, November 21, 2006

குழப்பியின் கதை - கதையின் கதை

இதோ.. மாபெரும் மானுட சாசனம் என்றவாறொன்றும் அல்லாத உண்மைக்கதையை உங்களுக்கு சொல்ல விளைகிறேன்.

இந்தக் கதை ஒரு கறுப்புச் சரித்திரம்..

வரலாறு இப்போதே குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டிய (இப்போதில்லாவிட்டாலும் இன்னொரு நாளைக்கு) கதையிது.

வாருங்கள்..

சோதனைகளும் வேதனைகளும் நட்புக்களும் துரோகங்களும் நிறைந்த கொழுவி குழப்பி என்ற இருவரினது வாழ்க்கையையும் படியுங்கள்.

கதைக்கு முன்பாக கொஞ்சம் கதைக்கலாமா?

சமீபத்தில்..( நிஜமாகவே சமீபத்தில்) இலங்கையில் சண்டைநிறுத்தம் நிலவிய காலமது.

யுத்தத்தில் சனம் நித்தம் செத்துப்போக வில்லை..

எந்தச் செய்தி கேட்டும் மனசு வறண்டு விடுவதில்லை.. எப்போது யார் செத்தார் என்ற செய்தி வருமோ எண்ட கவலையில்லை..

அது கொஞ்சம் சந்தோசமாய் இருந்து விட்டுப் போங்கள் என கடவுள் கஞ்சத்தனத்துடன் கிள்ளி வீசிய காலம்..

சாவு பற்றிய எந்த சிந்தனையும் இன்றி இறங்கி நடந்த நேரம்..

இன்புற்றிருத்தல் என்ற ஒரு நோக்கில் மட்டுமே குழப்பி (அப்போது இந்த வலையின் பெயர் குழப்பி) உதயமாகிறான்.

மற்றவரைக் கலாய்ப்பது மட்டுமே முழுநேரத் தொழிலாயிருந்தது.

குழப்பி ஆரம்பித்த காலங்களில்த்தான் வலைப்பதிவுகளில் மிக மோசமான பின்னூட்டங்கள் வரத் தொடங்கியிருந்தன. அது பற்றிய ஒரு தொகுத்தலே குழப்பியின் முதற்பாகம் முடிவுற காரணமாயிருந்தது என்பதை கதையில் பார்க்கலாம். ஏனெனில் இது கதைக்கு முந்திய கதையல்லவா.

அப்போதைய காலத்தில் திரு டோண்டு அவர்கள் என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள் என்ற ஒரு பதிவு இட்டிருந்தார். இற்றை வரையும் தமிழ் வலையுலகில் ஓடிக்கொண்டிருக்கிற சுப்பர் டுப்பர் காவியம் அது. அவரது பெயரில் வேறும் சிலர் பின்னூட்டங்களை இட அது தொடர்பான எச்சரிக்கைப் பதிவு அது.

நாமும் ஒரு எச்சரிக்கை பதிவு இட்டோம். அது இது தான்..

Thursday, May 26, 2005
என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன.

அந்த பின்னூட்டங்களை நான்தான் இட்டேன் என்பதையும் எனது பெயரை பாவித்து எவரும் அவற்றை இடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


(டோண்டு அவர்களே குழப்பியை ஆரம்பிக்க ஒரு தூண்டுகோலாக இருந்தார். அது எவ்வாறென்பதை பின்னர் கதையில் பார்ப்போம். )

கதையின் கதை நீளும்..

Sunday, November 19, 2006

சின்னப்பெடியனா நான்?

பெடியங்கள் எண்ட யாரும் வாசிக்காத ஒரு பதிவில் கொழுவியை சின்னப்பெடியன்கள் எண்டு விளித்திருக்கிறார்கள். அமெரிக்காவில் கள்ள ஓட்டுப் போட்ட புலிகள் என்ற அவர்களது செய்தியை நாம் கிண்டலடித்தது குறித்து அவர்கள் அப்படி சொல்லியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் தீவிரவாதிகள் எண்டும், வலைப்பதிவுகளை முடக்குவோம் எண்டும் புறப்பட்ட, பொடியங்கள் இப்ப பாசிசம் பற்றியும் புதிய ஜனநாயகப் புரட்சி பற்றியும் பேசுவது நல்ல வேடிக்கை. பாக்கப்போனால் இன்றைய நாளில் சனநாயகம், மக்கள் புரட்சி, பாசிச எதிர்ப்பு பற்றியெல்லாம் பேசுபவர்கள் முன்னாளில் தீவிரவாதத்தில் ஏதோ ஒரு வகையில் அங்கம் வகித்தவர்களே என்பதனால் பெடியங்களும் அதற்கு விதிவிலக்கல்லத்தானே.

கருத்து வெளியிடும் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானதென்பத்திற்கூடாக, அவர்கள் பாசிச எதிர்ப்பு, புதிய ஜனநாயகப் புரட்சி, கூகிளில் கைவைத்த புலிகள், அமெரிக்காவில் கை வைத்த புலிகள், பிரபாகரனுக்கு உணவு அனுப்பும் இலங்கையரசு என பலதும் எழுதுவார்கள். ஆயினும் இவர்களின் எழுத்தினூடு மறைந்திருக்கும் நச்சினையும் வாசிப்பவனை முட்டாளாக்கும் நடவடிக்கையையும் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர் என்பது பொடியங்களுக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து தெளிவாகிறது.

மக்களே யதார்த்தத்தினையும் நடைமுறை வாழ்வியலையும் புரிந்து கொள்ளுங்கள் .
பட்டினியாலும் பசியாலும் துடிப்பவனிடத்தும் அடுத்த வினாடி செத்துவிடலாம் என்ற நிலைக்குள் வாழ்பவனிடத்தும் சித்தாந்தங்களும் தத்துவங்களும் செல்லாது.

பெடியங்களே.. நாம் சின்னப்பெடியள் தான்.

Thursday, November 16, 2006

என்னைச் செருப்பால் அடிக்கவும்

என்னை எல்லோரும் செருப்பால் அடிக்கவும் ஏனெனில் நான் இன்று வல்லவன் படம் பார்த்தேன்.

Thursday, November 09, 2006

அமெரிக்காவில் புலிகள் கள்ள ஓட்டு

மாற்றுக்கருத்து இணையமொன்றில் வெளிவந்த இச்செய்தியினை இங்கே இணைத்திருக்கிறேன். இதுதாம் இவர்களுடைய மாற்றுக்கருத்து வெளியிடுவதற்கான உரிமையாம்.

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வன்னிபுலி ஆதரவாளரான டேனிஸ் டேவில் 87 வீத கள்ளவாக்குகளை பெற்றுள்ளார். திருட்டுவாக்குகள் போடுவதில் கில்லாடிகளான வ.புலிகள், அமெரிக்காவிலும் அதனை நிலைநாட்ட தயங்கவில்லை. இலங்கையின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் தமது அடிவருடிகளான தமிழ்கூட்டமைப்பினரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வடகிழக்கின் ஜனநாய நடைமுறையை வ.புலிகள் மறுத்ததுடன், தமது பினாமிகளை கள்ளவாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமைக்குரியவர்கள். அமெரிக்காவிலும் தமது ஆதரவாளரான டேனி டேவிஸ் என்பவரை வெற்றியீட்ட வைப்பதற்காக அங்குள்ள தமது பினாமிகள் மூலம் கள்ளவாக்கு வாங்கியை அமெரிக்காவிலும் வ.புலிகள் திறந்து வைத்துள்ளதாக தெரிவிக்கின்றன. இவரை எதிர்த்து போட்டியிட்டவர். டேனி டேவிஸின் புலி ஆதரவு நிலைப்பாட்டினை முன்நிலைப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால். வன்னிபுலிகள் தமது ஆதரவாளரை வெற்றியீட்ட வைக்கவேண்டும் என்பதற்காகவே இவ் கள்ளவாக்கு வங்கியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியதாகவும், இவ் வாக்கு வங்கியானது இலங்கையை கடந்து கனடாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது அங்கே தமது ஆதரவாளர்களிற்காக வ.புலிகள் அறிமுகப்படுத்தியிருந்தனர், அடுத்தவாரம் கனடாவின் உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடவுள்ள தமது ஆதரவாளர்களான, இலகுப்பிள்ளை, சாண் தயாபரன், நீதன், தர்சிகா, லோகன் கணபதி, நடராஜ்குமார் போன்ற தமது பினாமிகளை வெற்றியீட்ட வைப்பதற்காக இவ் கள்ளவாக்குகளை இவ் முறையும் அதிகளவில் கனடாவில் புலிகள் பயன்படுத்தும் வாய்ப்புக்கள் உள்ளமையால் கனடா அதிகாரிகள் இது விடயமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதே ஜனநாயகமாக தேர்தல் நடைபெறுவதற்கு சிறந்ததாகும் என எமது அமெரிக்கச் செய்தியாளர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியின்ர திறத்தில அமெரிக்காவில இருந்து செய்தியாளர் வேறை! ம்.. செய்திப்படி பார்த்தால் 87 வீத வாக்குகள் பெற்று வெல்கின்ற அளவுக்கு கள்ள ஓட்டு போடும் திறமை அமெரிக்காவிலும் புலிகளுக்கு உள்ளது என்பது தான்.
செய்தி நன்றி - நெருப்பு

கண்காணிப்பாளரை காப்பாத்த வேணும்

மட்டக்களப்பில் வாகரைப் பகுதிகளில் இலங்கை அரசு (அரசுதான்) நடத்திய எறிகணைத்தாக்குதலில் சிறுவர்கள் முதியவர்கள் உட்பட 45 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இலங்கையில் இப்போதெல்லாம் இது வழமையான செய்திகளாகி விட்டது. நோர்வேயோ அல்லது சமாதானவழி மூலம் தீர்வு காணச் சொல்கின்ற வேறு உலக நாடுகளோ இது பற்றி அரசிடம் விளக்கம் கேட்பதுமில்லை. கண்டனம் தெரிவிப்பதும் இல்லை.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இது துரதிஷ்ட வசமானது என்கிறார். துரதிஷ்ட சம்பவம் என அவரே ஒப்புக்கொண்ட பின்னர் அங்கு யுத்தத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிற (யுத்த நிறுத்தத்தை அல்ல) போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவோ இந்தத் தாக்குதல்களுக்கு காரணம் யாரென இது வரை சரியாக தெரியவில்லை. அநேகமாக இது அரசாங்கத்தின் வேலையாக இருக்கலாம். இருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து விளக்கம் ஏதும் வரவில்லை என மென்று விழுங்குகிறது.

வலிந்த இராணுவ நடவடிக்கை காரணமாக மூதூர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வாகரைப்பகுதியில் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களே இந்த அவலத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரும் விமானப்படையினரும் இணைந்து மேற்கொண்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டோரின் 40 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் 125-க்கும் மேற்படடோர் படுகாயமடைந்த நிலையில் உள்ளனர் என்றும் அவசரகால மீட்பு அணியினரும் மருத்துவமனை பணியாளர்களும் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் ஆறு மாதத்திற்கு உட்பட்ட ஆறு குழந்தைகளும் அடங்குவர் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என விரும்புகின்ற இணைத்தலைமை நாடுகள் துணைத்தலைமை நாடுகள் பெரிய நாடுகள் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்ற போதெல்லாம் அமைதியை கடைப்பிடிக்கின்றமை இப்போதெல்லாம் ஆச்சரியம் தருவதில்லை.



உண்மையில் யுத்த நிறுத்தத்தினை கண்காணிக்க சென்றவர்களே தங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அரசிடம் கோரிக்கை வைக்கின்ற இந்த நிலையில் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் என்ன செய்து விட முடியும்? புநகரிப் பகுதிகளுக்கு சென்றிருந்த போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் மீது இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதலில் போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் லார்ஸ் ஜொஹான் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். பாவம்.. தனக்கான பாதுகாப்பையே அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. மக்களுக்கான பாதுகாப்பை அவரிடம் எப்படி கேட்க முடியும்..

Monday, October 30, 2006

சர்வதேசத்தை ஏமாற்றுவோம்.

1
யாழ்ப்பாணம் இலங்கையின் இதர பகுதிகளிலிருந்து A 9 என்ற வீதியினூடாக இணைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணளவாக 4 லட்சம் மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர்.

இலங்கை அரச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் A 9 வீதியானது புலிகளின் பகுதிகளினூடாகவே செல்கிறது.

யாழ்ப்பாணத்திற்கான ஒரேயொரு தரைவழிப்பாதையான இந்த வீதியை 2002 ம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி மக்கள் பாவனைக்கும், உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்வதற்குமாக, திறந்து விடுவதென புலிகள் தரப்பிலும் இலங்கை அரச தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

1995 புலிகள், யாழ்ப்பாணத்தை விட்டு வெளியெறிய பின்னர் 2002 வரை யாழ்ப்பாணம் தரைவழித் தொடர்பேதுமற்ற, இலங்கையின் இதர பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாக இருந்தது.

இக்கால கட்டத்தில் உணவுப்பொருட்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவியது. கப்பலினூடாகவே உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து இதர பகுதிகளுக்கு விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் பயணிப்பதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியும், பாதுகாப்பு அனுமதியை இராணுவத்திடமிருந்து பெறவேண்டியும் இருந்தது.

2002 புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் A 9 வீதி திறக்கப்பட, அது மக்களின் போக்குவரத்துக்கும், அவர்களின் உணவுத்தேவைக்கும் மிகுந்த வசதியாக அமைந்தது.

2
பாதையை மூடிவிடுவதானது ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும்.

இவ்வருட நடுப்பகுதியில், இலங்கை இராணுவம் இந்தப் பாதையினை மூடியது. மீண்டும் யாழ்ப்பாணம் ஒரு சிறைச்சாலையானது. உணவுப் பொருட்களுக்கு அங்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதை மூடப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்லியிருக்கிறது.

அதென்ன பாதுகாப்புக் காரணம்..?

இந்த வீதியின் முன்னரங்க புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாக இராணுவம் எறிகணைத்தாக்குதல்களையும் அவ்வப்போது முன்னேற்ற முயற்சிகளையும் மேற்கொள்கிறது. (யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி இராணுவ முன்னகர்வுகளும் இடங்களைக் கைப்பற்றுதலும் ஒப்பந்த மீறலாகும்.)

இன்னொரு காரணம் மக்கள் மீது பட்டினியை ஏவி விட்டு உளவியல் ரீதியாக அவர்களை மழுங்கடித்தல்.

3
சுவிற்சர்லாந்துக்குப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மனிதாபிமான பிரச்சனைகள் பற்றி, மக்களின் பட்டினி பற்றி தாம் பேசப்போவதாய் புலிகள் அறிவிக்க..

மக்களின் பட்டினி பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்காமல் இறுதித் தீர்வு பற்றி பேசப்போவதாக இலங்கை சொன்னது.

சர்வதேசமோ ஏதாவதென்றாலும் பேசுங்கள்.. ஆனால் பேசுங்கள் என்ற நிலையைத்தவிர வேறெதனையும் எடுத்ததாய் தெரியவில்லை.

பேச்சுவார்த்தையின் போது அரசு இறுதித் தீர்வு பற்றிப் பேசுவதே பொருத்தம் என சொல்ல, அப்படியானால் உங்களிடம் என்ன இறுதித் தீர்வு உள்ளது என புலிகள் தரப்பில் கேட்கப்பட்டதாம். அதற்கு அரசின் பதில் -

இப்போதுதான் இலங்கையில் இரு கட்சிகளும் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கின்றன. இனித்தான் இறுதி தீர்வு பற்றி நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றார்களாம்.ஆக அவர்கள் என்ன பேசுவது என்ற தெளிவே இல்லாமல்த்தான் பேச்சுக்கு வந்துள்ளார்கள் போல..

--நோர்வேக்கு ஒரு கோரிக்கை: இனி புலிகளை சுவிசுக்கு அழைத்து வராமல் ரணில் கட்சியையும் மகிந்த கட்சியையும் ஒரு தரப்பாகவும் எதிர்த்தரப்பில் JVP கட்சியையும் அழைத்து வந்து இறுதி தீர்வு குறித்து பேச விட்டு வேடிக்கை பாருங்கள். அவர்களுக்குள் ஒரு இணக்கம் வருகிறதா என..--

இரு பிரதான கட்சிகளும் ஒன்றாய் இணைந்திருக்கின்றன என்பது உண்மைதான். இனி அவர்களுக்குள் பிக்கல்கள், பிடுங்கல்கள், முரண்கள் உண்டாகி அது தீர்ந்து, அப்படியே ஒரு தீர்வை உண்டாக்கினாலும், இருக்கவே இருக்கிறது நீதிமன்றம்.. அது தீர்வை முடக்க.. பிறகு முதலிடத்திலிருந்து பேச ஆரம்பிக்க..

அதுவரை மக்களின் பட்டினிக்கு என்ன தீர்வு?

நாள்தோறும் சாகும் பத்துக்கு மேற்பட்ட உயிர்களுக்கு என்ன தீர்வு..?

4
சுவிசில் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கையில் இராணுவம் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தது. இராணுவ முன்னகர்வுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன.

ஒப்பந்தத்தின் படி இராணுவ முன்னகர்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என சர்வதேசத்தினால் இலங்கை அரசை அழுத்த முடியவில்லையா?

சர்வதேசத்தின் அழுத்தங்களை மீறித்தான் இலங்கை அரசு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா..?

வரும் நாட்களில் வடக்கில் இன்னொரு பாரிய இராணுவ நடவடிக்கையொன்றினை மேற்கொள்ள இராணுவம் தயாராவதாக சொல்லப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வுகளுக்கும் படுகொலைகளுக்கும் சர்வதேசத்திடம் ஏதாவது பதில் உள்ளதா..?

5
இது ஒரு சந்தேகம்

புலிகள் இராணுவ வலிமை பெற்றிருக்கும் வரை மட்டுமே சர்வதேசம் விழுந்தடித்து புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. உண்மையில் புலிகள் ஒரு பலமிழந்த அமைப்பாக இலங்கை அரசால் இலகுவாக வெற்றி கொள்ள முடிகிற ஒரு அமைப்பாக இருப்பின் இவ்வளவு ஈடுபாடு காட்டுவார்களா..?

அல்லது இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என சொல்லி விட்டு இருந்திருப்பார்களா..?

இனியும், ஒருவேளை இராணுவம் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து விட்டால், புலிகளைச் சர்வதேசம் பேச்சுக்கு அழைத்து வருமா? வராது..

6
புலிகள் தாம் தயாரித்து விட்ட நிகழச்சி நிரலில் தேவையான மாற்றங்களோடு பயணிக்கப் போகின்றார்கள். அவ்வப்போது சர்வதேசம் அழைத்தால் பேச்சுக்கு போவது உட்பட இலங்கை அரசின் பொருளாதார இராணுவ மையங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி விட்டார்கள். சர்வதேசம் பற்றிய தெளிவான முகம் தெரிந்த பிறகு அதனை ஏமாற்றினால் தவறென்ன..? அவர்கள் ஏமாற்றவில்லையா..

Monday, October 23, 2006

தீபாவளிப் படுகொலை

எல்லோரும் தீபாவளி கொண்டாடியபோது நாங்கள் பலரைப் பலிகொடுத்துத் துக்கம் கொண்டாடினோம்.
அப்பாவி மக்கள் பத்தொன்பது பேரைக்கொன்று வெறியாட்டமாடியவர் என்ன நினைத்திருப்பர்?

அம்மக்களை நரகாசுரன்களாக நினைத்திருப்பரோ?

1987 ஓக்டோபர் 21 இல் யாழ்ப்பாண மருத்துவமனையில் நடைபெற்ற 'தீபாவளிப் படுகொலை'யின் நினைவு விரைவிலேயே அகன்றுவிட்டதா?
அக்கொடிய தீபாவளி நாளின்பின் இம்முறைதான் யாழ்ப்பாணம் தீபாவளி கொண்டாடவில்லை.
அன்று படுகொலை காரணம்; இன்று படுகொலைகளுடன் பட்டினியும் காரணம்.



யாழ் மருத்துவமனைப் படுகொலை பற்றி முன்பு எழுதிய பதிவுகள்.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 1.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 2.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 3.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 4.



படம்: யாழ்க்களம்

Wednesday, October 11, 2006

பலவீனப்பட்டுத்தான் போனோமா - 1

என்றுமில்லாத என்று சொல்ல முடியாதவாறான ஒரு இக்கட்டான நெருக்கடி நிலையில் ஈழத்தமிழர்களின் போராட்டம் சிக்கி நிற்பதானது ஈழ அபிமானிகள் அனைவரையும் குழப்பத்திலும், மனச்சோர்விலும், ஒரு விரக்தி நிலையிலும் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

இந்த ஒருவருட காலமாகவே யுத்தமொன்றே தீர்வாகுமெனவும், புலிகள் காலவரையொன்றைச் சொல்லி போரினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் எழுதிய, பேசிய, ஆயினும், யுத்தத்திற்கு வெளியில் வாழ்கின்ற சிலர், தற்போது தமிழ்த்தேசியம் பலவீனமடைந்து விட்டதாயும், வேறொரு போராட்ட வடிவம் குறித்துச் சிந்திக்க வேண்டியவர்களாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர், இந்த ஒருவருட காலமாக புலிகளின் யுத்தத்தை எதிர்பார்த்து ஏமாந்து போனதாய் சொல்கிறார்கள். பலர் இதனை ஒரு மானப் பிரச்சனையாக நோக்குகின்றனர்.

இவர்களில் பலர் யுத்தத்திற்கு வெளியில் வாழ்கின்றவர்கள். ஒவ்வொரு தடவையும் புலிகளின் தோல்விகளின் போதெல்லாம் இவர்களிடம் ஏற்படும் சலிப்பானது, இவர்களின் குத்தகைக்கார மனநிலையைச் சொல்கிறது. நிலத்தை குத்தகைக்கு கொடுத்து விட்டு வெளியிலிருந்து விளைச்சலை எதிர்பார்ப்பவராயும், எதிர் பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லையெனில் குத்தகைக்கு கொடுத்தவன் மேல் சினப்பவர் போலவும் இவர்களை உருவகித்துக் கொள்ளலாம். அல்லது ஒப்பந்த காரராயும் நோக்கலாம்.

இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இவர்களை இத்தகையை ஒரு மனநிலையில் வளர்த்து விட்ட பெருமை புலத்தில் இயங்கும் தமிழ் ஊடகங்களையும் சாரும். புலிகள் என்பவர்கள் எமக்கு வெற்றிச் செய்திகளை மட்டுமே தரவேண்டுமென்ற இவர்களது எதிர்பார்ப்பு சரிவுறும் போதெல்லாம் சலித்துக்கொள்வதும், சினப்படுவதும் இவர்களின் இயல்பாகி விடுகிறது.

இன்னொரு வகையினர் ஈழப்போரின் பலவீனம் இதுவென வாதிட்டு இதற்கான காரணங்களை ஆதி முதல் விளக்குபவர்கள். ஈழப்போர் எப்போதெல்லாம் பின்னடைகிறதோ அப்போதெல்லாம் இவர்கள் எழுச்சியுறுவர்.

உண்மையில் ஈழப்போரின் இன்றைய நிலை என்ன?

பலரும் சொல்வது போல அரசியல் ரீதியாக இன்றைய திகதியில் பெரிதாக எதனையும் சாதித்து விடவில்லைத்தான். அல்லது தமிழரின் அரசியல் ரீதியான செயற்பாட்டிற்கான நேர் விளைவுகள் எதுவும் நடந்து விட வில்லைத்தான். இங்கே அரசியல் ரீதியான செயற்பாடென்பது இலங்கை அரசுடனானதாகவோ அல்லது இலங்கைக்குள் உட்பட்டதாகவோ அல்லாமல் சர்வதேசம் நோக்கிய செயற்பாடுகள் என அர்த்தப்படுகின்றன. இலங்கையின் உண்மையான கண்காணிப்பாளர்களாக மாறி விட்ட அமெரிக்கா யப்பான் இணைத்தலைமை நாடுகள் நோர்வே ஆகியவற்றுடனான நேரடித் தொடர்பொன்றை புலிகள் பெற்றுக்கொண்டமையானது அரசியல் ரீதியாக எந்தப் பலாபலனையும் தரவில்லை. மாறாக அவ்வாறு ஏற்பட்டுவிட்ட தொடர்புகளே புலிகளைக் கட்டி வைக்கும் கயிறுகளாகவும் மாறிவிட்டன.

இது தவிர வெளிநாடுகளில் தமிழர்கள் நடாத்துகின்ற பேரணிகள், ஊர்வலங்கள் உலக செவிகளில் உறைத்ததாகவோ ,அல்லது கண்டுகொள்ளப்பட்டதாகவோ இல்லை. இதனை இன்னொரு வகையில் சொல்லப்போனால் தமிழர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதினாலும், கவனமெடுப்பதனாலும் உலகத்திற்கு எந்தவகையிலும் தனிப்பட்ட விதத்தில் அரசியல், பொருளாதார இலாபங்கள் கிடைக்கப் போவதில்லை. ஆக இது தமிழர்களின் தவறாகாது.

அதுதவிர இலங்கை அரசுடன் அரசியல் ரீதியாக பேசி தீர்வுகளைப் பெறலாம் என எவராவது எழுதின், பேசின் அவர்களைப் பற்றி இரண்டு வாக்கியமாவது எழுதுவது விசர் வேலை.

அரசியல் நிலையில் சார் விளைவெதனையும் பெறாத நிலையில் இராணுவ நிலையில் தமிழர் தரப்பு பலவீனப்பட்டு விட்டதா?

அண்மைய சம்பூர் மாவிலாறு தவிர வடபகுதி போர்முனைகளில் புலிகளின் பின்வாங்கல்கள் அவர்களது இராணுவ ரீதியான பலவீனத்தை உணர்த்துகிறதா?

புலிகள் இதுவரை படைகளுக்கெதிராக வலிந்த பாரிய தாக்குதல்கள் எதனையும் என் செய்ய வில்லை.?

Tuesday, October 10, 2006

குழப்பியின் கதை

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை நாராயணசுவாமி எழுதுகிறார். மாத்தையாவின் கதையை திருவடியான் எழுதுகிறார். விட்டால் எனது கதையையும் யாரேனும் எழுதி அதை படிக்க எனக்குக் கிடைக்கின்ற வேளைகளில் சொல்லொணாச் சிரிப்பையும் அழுகையையும் ஒருங்கே பெறுகின்ற துர்ப்பாக்கிய நிலை எனக்கு வாய்த்துவிடலாகாது என்ற அவசரத்தில் எனது கதையை எழுதத் தொடங்குகிறேன். ஆயின் கொழுவியின் கதை என்றுதானே தலைப்பிடுதல் பொருத்தம் எனினும் குழப்பியின் கதை என்பதே எனது தெரிவாகிறதெனில் அது ஏன்?

யார் அந்த குழப்பி?

அவருக்கும் கொழுவிக்கும் என்ன தொடர்பு?

கொழுவி யார்..? இது வரை யார் யார் மீது இவர் தொடர்பான சந்தேகங்கள் விழுந்துள்ளன?

தமிழ்மணத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட முதல் வலைப்பதிவு என்ற பெருமை ஏன் கிடைத்ததது.?

குழப்பிக்கும் கொழுவிக்கும் எங்கே ஏன் எப்படி தெறித்தது?

இவை பற்றிச் சொல்வதே குழப்பியின் கதை.

இதனை குழப்பிக்கு அர்ப்பணிப்பதே இதன் பெயரில் குழப்பி வர காரணம்.

இனி வரும் நாட்களில் குழப்பியின் கதை..

Wednesday, October 04, 2006

கருணாநிதியும் சால்ஜாப்புக் கதைகளும்

இந்தியாவுக்கு போன எங்கடை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கொஞ்சப்பேரை சந்திச்சும் சில பேரை சந்திக்காமல் சால்ஜாப்பு கதையள் சொல்லிக்கொண்டும் சிலரை சந்திக்க கால் கடுக்க நிண்டு போட்டும் வந்திருக்கினம்.
இந்திய பிரதமரை இந்தா சந்திக்கிறம் அந்தா சந்திக்கிறம் எண்டு செய்தியள் வந்துது. பிறகு இல்லையாம் எண்டு வந்திட்டினம். ஏன் பிரதமர் சந்திக்க வில்லையெண்டு தெரியவில்லை. ஒருவேளை பிரதமரைச் சந்திக்க விருப்பதாக தமிழ்க் கூட்டமைப்பினர் சொல்லியிருந்ததும் வெறும் சால்ஜாப்புத் தானோ ?

கருணாநிதி அவர்கள் தெளிவாச் சொல்லிட்டார். கூட்டமைக் காரர் தன்னை சந்திக்க முயற்சித்ததா சொன்னது வெறும் சால்ஜாப்பு எண்டு. ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கிறதும் சந்திக்காமல் விடுவதும் அவையின்ரை விருப்பம் எண்டிட்டு இருந்தாலும் கருணாநிதி அப்பிடி சொல்லும் போது கூட்டமைக்குக் காரர் என்ன செய்திருக்க வேணும்?. நாங்கள் கருணாநிதியை சந்திக்க எவ்வாறான முயற்சிகள் செய்தோம் என்பதையும் அந்த ஒவ்வொரு முயற்சிகளுக்கும் எவ்வாறான எதிர்வினைகள் கிடைத்தன என்பதனையும் தெரியப் படுத்தியிருக்க வேணும். ஆனா அவை செய்தது என்ன? எனக்கென்னவோ அவையின்ர பதிலில வார்த்தைக்கு வார்த்தை வழியல் தான் தெரியுது.

பெரியண்ணா நீங்கள் என்னெண்டாலும் சொல்லுங்கோ.. உங்கடை காலைப் பிடிச்சுக்கொண்டுதான் நாங்கள் நிப்பம் எண்ட மாதிரி இருக்கு அவையின்ரை கதையள்.

இதைப்பற்றின கேள்வியொண்டுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் என்னெண்டு வளைஞ்சு நெளிஞ்சு பதில் சொல்லுறார் எண்டு பாருங்கோ.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.
நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

இதன் சாரம்சம் இதுதான். அண்ணை.. எங்களை சந்திக்காமல் விட்டது உங்கடை பிழையில்லை. நாங்கள் வந்து நிண்டதும் உங்களை சந்திக்க கேட்டதும் உங்கடை காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கும். அவ்வளவும் தான். மற்றும்படி பிரச்சனையில்லை. இன்னொருமுறை வாய்ப்புத் தாங்கோ..

ஆனால் கருணாநிதியும் தான் ஏன் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லையெண்ட உண்மையைச் சொல்லியிருக்கலாம். பின்னையென்ன? அவர் ஒரு முதல்வர் எண்ட பெயரில இருக்க கூட்டமைப்புக்காரர் முதலில அவரிடமெல்லோ போய் குனிஞ்சு விழுந்து வணங்கி ஆசி பெற்று எழும்பியிருக்க வேணும். அதை விட்டுவிட்டு எப்பிடி வைகோவை முதலில சந்திப்பினம்?. அதுவும் வைகோவூடாக பிரதமரை வேறை சந்திக்க முயற்சி செய்தவையாம். இதென்ன வெளிநாடே..? கட்சி வேறுபாடில்லாமல் எல்லாரையும் சந்திக்க..? இங்கை நீங்கள் வைகோவை முதலில சந்திச்சால் நீங்களெல்லாம் அவரின்ரை ஆட்கள்தான்.

உண்மையில கருணாநிதி அவர்களுக்கு நேரமில்லையெண்டதோ அல்லது கூட்டமைப்புக்காரர் சந்திக்க முயற்சிக்கவில்லையென்பதோ இங்கே கவனத்திலெடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்கள் இல்லை. பட்டென்று நெற்றியடித்தால் போலான காரணம் கூட்டமைப்புக்காரர் முதலில் வைகோவை சந்தித்துக் கொஞ்சிக் குலவியதே. அந்த ஆத்திரத்தில் விளைந்த மூன்றாந்தரத்திற்கும் குறைவான அரசியல்ப் பண்பாடே..

இங்கே கூட்டமைப்புக்காரர் என்ன செய்திருக்க வேணும். முதலில கருணாநிதியைச் சந்திச்சிருக்க வேணும். ஆனா.. அதுக்கு பிறகு அவர்களை வைகோ சந்திப்பாரா எண்டது சந்தேகம் தான்.

எங்கடை சனம் தான் பாவம். கருணாநிதி சபையில இலங்கை அரசுக்கு எதிரா கண்டனத்தீர்மானம் கொண்டு வரும்போது அவரைப் போற்றிப் புகழுவதும் பிறகு சால்ஜாப்பு கதையள் சொல்லும் போது துரோகியெண்டுறதுமா குழம்பி போய் நிக்கினம். அதுவும் சரிதான்.. சனம் தெளிவா எப்பதான் இருந்திருக்கினம்?

Thursday, September 21, 2006

புலிகளுக்கு சீனா இராணுவ உதவி

தலைவர் மீசை வைச்சா அதுக்கொரு இராணுவ காரணமும் மீசையெடுத்தா அதுக்குகொரு அரசியல் காரணமும் மண்டைதீவைப் பிடிச்சால் அதுக்கொரு இராணுவ காரணமும் அதே மண்டை தீவை விட்டுப்போட்டு வந்தால் அதுக்கும் ஒரு அரசியல் காரணமும் சொல்லுற அளவுக்கு எங்கடை எல்லாச் சனமும் அறிவும் ஆற்றலும் பெற்றிருக்கினம் எண்டதை நினைக்க சந்தோசமாக்கிடக்கு. எல்லாம் எங்கடை தமிழ் ஊடகங்களின்ரை புண்ணியத்தில தானே எண்ட உண்மை தெரிய தமிழ் ஊடகங்கள் மேலையும் ஒரு நன்மதிப்பு உருவாகுது.

நானும அப்பிடித்தான். எனக்கும் உந்த ஆய்வுகள் அரசியல் வியாக்கியானங்கள் செய்யிறதெண்டால் சரியான ஆசை. இப்ப சீனா புலிகளுக்கு உதவி செய்யிறதையும் அது ஏன் உதவி செய்யுது எண்டதையும் அதுக்கு பின்னாலை இருக்கிற பிராந்திய நலன்களையும் விரிவா உங்களுக்கு சொல்ல இருக்கிறன்.

முதலில இந்தப் படத்தைப் பாருங்கோ. இதில புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் திரு சு ப தமிழ்ச்செல்வன் ஒரு ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். இதைப் பாத்த உடனை சிலர் அரசியல்ப் பிரிவைச் சேந்தவரே ஆயுதம் தூக்கிட்டார். இனி புலிகள் தரப்பில சமாதானம் எண்ட பேச்சுக்கே இடமில்லை எண்டு அறிவு பூர்வமா முடிவெடுப்பினம். அதுவும் தமிழ்நாட்டில வாற உந்த ராணி தேவி மாதிரியான புத்தகங்கள் இப்பிடியும் தலைபெழுதலாம் - ஆயுதம் ஏந்தினார் புலிகளின் அரசியல்த்துறை தலைவர். புலிகள் தரப்பில் இனி பேச்சுக்கு இடமில்லை

Photobucket - Video and Image Hosting

இந்தப்படத்தில தமிழ்ச்செல்வன் வைச்சிருக்கிற ஆயுதம் என்ன வகையைச்சோந்தது.. இதை முதலில ஆராய்வம். இது PF-89, a portable 80mm light anti-tank weapon அதாவது இது ஒரு டாங்கி எதிர்ப்பு ஆயுதம். சோவியத்தின்ர RPG -7 வகைக்கு மாற்றீடாக செய்யப்பட்டிருக்கெண்டு ஒரு தகவல் சொல்லுது. இதைப்பற்றி இன்னும் தேடுவம் எண்டு வெளிக்கிட எனக்குக் கிடைத்தது இந்தப்படம்.


Photobucket - Video and Image Hosting

படத்தில பாருங்கோ.. சீன எழுத்தில ஏதோ எழுதிக்கிடக்கு. இதுதான் என்ரை ஆராய்ச்சியை மேலும் தூண்டினது. இது சீன ஆயுத வகைதான் எண்டதை உறுதிப்படுத்தினது இந்த தளம். அது மட்டுமில்லை.. இன்னும் ஆச்சரியத்தை தந்த தகவல் என்னெண்டால் இந்த வகை ஆயுதம் இந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதிச் செய்தியின் படி அத் திகதிக்கு கிட்டவா அறிமுகப்படுத்தியிருக்கிறது சீன இராணுவம்

March 1, 2006: The Chinese army has begun issuing the PF-89, a portable 80mm light anti-tank weapon, to replace obsolete Soviet-era RPG-7 type weapons
ஆக.. இந்த வருட ஆரம்பத்தில அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆயுதம் வருட முடிவிற்குள் புலிகளிடம் வந்தது எப்படி?

ஆம் சீனா.. புலிகளுக்கு இராணுவ உதவிகளை வழங்குகிறது. இப்போது இதன் பின்னணிகளைப்பார்ப்போம்.

ஆசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் பகைத்துக்கொண்ட புலிகள் அந்த உறவினை இனி ஒட்ட முடியாது என்று கருதுகின்றனர். இந்நிலையில் 2020 களில் உலக வல்லரசாக வருவதற்குரிய வகையில் இரகசியமாய் செயற்படும் சீனாவுடன் உறவுகளைப் பேண புலிகள் விரும்புகின்றனர். இதன் மூலம் வல்லரசு ஒன்றின் ஆதரவும் துணையும் அவர்களுக்கு கிடைக்கிறது.

சிறிலங்கா இந்திய ஆதரவு நிலையினை எடுத்ததாகவே சீனா கருதுகிறது. ஆகவே அந்த நாட்டின் அரசுக்கு எதிராகப் போராடும் புலிகளுக்கு ஆதரவு நிலையினை எடுத்துள்ளது.

இனி இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.

அமெரிக்காவும் பாகிஸ்தானும் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி வழங்குவது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் என்பதால் முன்பொருமுறை யாரோ ஒருவர் இந்தியாவே சிறீலங்காவிற்கு ஆயுத உதவிகள் வழங்க வேண்டும் என வலைப்பதிவில் சொல்லியிருந்தார்.
அதே போலவே புலிகளுக்கு சீனா உதவி வழங்குவது என்பதும் இந்திய இறையாண்மையை பாதிக்கின்றமையால் இந்தியா அந்த உதவியினை தடுத்து விட்டு தானே புலிகளுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்.

இந்த நேரத்தில் ... பிராந்தியமாவது வல்லரசாவது.. காசிருந்தா எங்கை குடுத்தும் ஆயுதம் வாங்கலாம் எண்ட உண்மை எனக்கு உறைக்க.. அது புலிகளால் முடியும் என்பதும் தெரிய வர.. என்னுடைய ஆய்வை இத்துடன் முடிக்கிறேன்.

அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து றொக்கெட் லோஞ்சர்கள் ஆந்திராவுக்கு போகாமல் இராமேஸ்வரப்பக்கம் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கற்பனையுடன்..

Tuesday, September 19, 2006

ஈழப்போரில் தமிழக வீரன்

போராடும் தன் சகோதர தேசத்திற்காக கரும்புலியாகி தன் உடல்வெடித்த தமிழக வீரன் இவன்.

கருமபுலி லெப். செங்கண்ணன்.

சாத்தூர் சிவகாசியை சேர்ந்த இவன் 1993 நவம்பர் 11ம் திகதி பலாலி இலங்கை இராணுவ படைத்தளத்தினில் நடந்த ஊடுருவிய கருமபுலித்தாக்குதல் ஒன்றில் வீரகாவியமானான்.

அந்த இளைய வீரனுக்கு ஈழத்தமிழினத்தின் வீர வணக்கங்கள்.

Photobucket - Video and Image Hosting


Monday, September 18, 2006

திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ

தியாகி திலீபனின் பத்தொன்பதாவது நினைவு தினம் இப்போது. எங்கள் தேசத்தின் இளைய எதிர்கால தூர நோக்கோடு செயலாற்றிய வசீகரம் மிக்க தலைவனை அகிம்சை நாட்டின் ஆணவத்தால் இழந்து 19 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் சோகம் ஆறாத துயராய் கிடக்கிறது.
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.



"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்
உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..

வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..

அவன் என்ன தான் கேட்டான்?

அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..

அதற்காகவா இந்த விலை?

அதற்காகவா இந்த துயரம்?

வன்னியனின் இப்பதிவில் திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள் என்ற பதிவு இடம் பெறுகிறது. பன்னிரண்டு நாட்கள் திலீபனுடன் அருகிலேயே நின்றிருந்த மு.வே.யோ வாஞ்சிநாதன் அப்போ நடந்தேறிய அந்த துயரத்தை தன் எழுத்துக்களில் சொல்லியிருக்கின்றார். தான் நேசித்த மக்களுக்காக ஒரு இளைஞன் சொட்டுச் சொட்டாய்ச் செத்தானே அவனைப் படியுங்கள்

Friday, September 15, 2006

ஈழத்தமிழக திரைப்பட புகைப்படங்கள்

ஆணிவேர் பற்றிய வீடியோ முன்னோட்டம் ஒன்றினை முன்பு இணைத்திருந்தேன். அகலப்பட்டை இணைய வசதி உள்ளவர்கள் மட்டுமே பார்த்திருக்க முடிந்திருப்பதால் இங்கே அத்திரைப்படத்தின் சில புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். லண்டனில் இந்த வாரம் படம் வெளியாகிறது.

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Wednesday, September 13, 2006

ஈழ - தமிழக உருவாக்கத்தில் - திரைப்படம்

கொஞ்சக் காலத்துக்கு முதலில புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் ஒரு படப் பிடிப்பை வன்னியில ஆரம்பிச்சு வைச்சார். அந்த நிகழ்வில தமிழக முன்னணி கலைஞர்களான மகேந்திரன் பாரதிராசா எல்லோரும் கலந்து கொண்டிருந்தவை. அது தமிழக இயக்குனர் ஒருவரை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈழத்திரைப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பு.

இதோ மிக்க தத்துருபமாக வெளிவந்து விட்டது அந்த திரைப்படம் ஆணிவேர். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் (சச்சின் பட இயக்குனர்) திரைப்படத்தை இயக்க நந்தா மற்றும் குடைக்குள் மழை கதாநாயகி (யாராச்சும் பெயர் சொல்லுங்க) ஆகியோருடன் இன்னும் பல தமிழக- ஈழ கதை மாந்தர்கள் படத்தில நடிச்சிருக்கிறார்கள்.

இந்த படம் பண்ணுவதாக கேள்விப்பட்டு நந்தா இரவு 12 மணிக்கு வீட்டுக்கு வந்து இப்படத்தில் தனக்கொரு வாய்ப்புக் கொடுக்குமாறு கேட்டதாக இயக்குனர் ஒரு செவ்வியில் சொல்லியிருந்தார்.

ஆணிவேர் வெளிநாடுகளில் இம்மாத இறுதியில் வெளிவருகிறது. தமிழகத்தில் தணிக்கை செய்யப்படுமா அல்லது தடை செய்யப்படுமா என தெரியவில்லை. ஆயினும் இது புலிகளின் கதை அல்ல மக்களின் கதை என்கிறார் இயக்குனர்.

இங்கே இப்படத்தின் இரண்டு முன்னோட்டங்களை இணைக்கிறென். வீடியோ வடிவிலேயே பார்க்கலாம். தினம் தினம் செத்துப் பிழைக்கின்ற ஈழ மக்களின் வாழ்வினை ஆணிவேர் சரியாக பதிவு செய்திருக்கிறது என நம்பலாம்.

ஒரு வேளை இந்த திரைப்படமும் இணையங்களில் வெளிவரலாம். அப்போது இணையங்களில் புதிய படங்களை புலிகள்தான் வெளியிடுகிறார்கள் என்ற கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் முகங்களில் கரியை பூசட்டும்.





Tuesday, September 12, 2006

எல்லாருக்கும் இன்னொரு வணக்கம்

சிறிரங்கன் அண்ணை சுவிசுக்கு வந்து தன்னை சந்திக்க சொல்லி கேட்ட உடனை காணாமல் போனவன் தான். இப்பதான் வாறன். சுவிசில அவரை சந்திக்கிறதெண்டது நடக்கவே நடக்காத காரியம் எண்டதை அவருக்கு சொல்லவும் இல்லை. மன்னிக்க வேணுமண்ணை. இடையில சில இடங்களில கொழுவப்பட்டு போனன்.
சரி திரும்ப வரேக்கை புதுசா வருவமெண்டுதான் ஏதோ என்ரை அறிவை பாவிச்சு வலையையும் புதுப்பிச்சிருக்கிறன். பாருங்கோ இனி தொடர்ந்து பொளந்து கட்டுவன்.. அடுத்த பதிவே பாருங்க ஒரு புலனாய்வுப் பதிவு தான்..

Sunday, July 02, 2006

நாங்க தான் செய்தம் ! ஆனா வருந்தக்கூட மாட்டோம்

இந்திய அமைதி காக்கும் ? படைகள் ஈழத்தில நடத்திய கொலைகள், கொள்ளைகள், அட்டுழியங்கள், ஈவிரக்கமற்ற ஈனச்செயல்கள், வன்புணர்வுகள் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளை கீழ் இணைப்புக்களில் காணலாம்.

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 1

இந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 2

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 1

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 2

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 3

யாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 4

--இன்னும் வரும் --

Tuesday, June 20, 2006

நான் எப்பிடியோ நீச்சலடிச்ச 'ஆறு'கள்

அந்தக்காலம் முதலே என்னை யாருமே கண்டு கொள்வதில்லை. அதனால் என்ன? சொல்லிச் செய்வர் மனிதர் சொல்லாாமல் செய்வர் பெரியர் எண்டதை மனசில வைச்சு -

எப்படியோ நான் நீச்சலடிச்ச ஆறுகள்

1- வழுக்கியாறு - யாழ்ப்பாணம்

2- பறங்கியாறு - மணலாறு

3- பேராறு - முத்தையன் கட்டு

4- பாலியாறு - வன்னி

5- பாலாறு - மன்னார்

இவ்வளவும் தான் எப்பிடியோ நான் நீச்சலடிச்ச ஆறுகள். என்ன 5 ஆறுதான் கிடக்கு ஆறாவது ஆறு எங்கையெண்டு கேக்கிற ஆக்களுக்கு -

வடிவா பாருங்கோ -

பறங்கியாறு - மணலாறு எண்டு இரண்டு ஆறு வருகுது -

இனி நான் அழைக்கும் ஆறு நபர்கள்

சிறீரங்கன்

ஜனநாயகம்

கருணாநந்தன்

வசந்தன்

சோ.தமிழவன்

ஈழநாதன்

Friday, June 16, 2006

தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதி

உலகமே கண்மூடி நிற்க நாளும் பொழுதும் செத்துப் போகின்றன எங்கள் உயிர்கள்!

வாய் திறப்பார் யாரும் இல்லை!

எங்களின் அழுக்குரல் யாரையும் எட்டுவதாய் இல்லை!

இந்தப் பாடல் கடல் தாண்டி சோகம் சுமந்து வருகிறது. சோதரரின் காதுகளில் எம் துயரச்செய்தி கொண்டு வருகிறது.


Wednesday, June 14, 2006

பற்றியெரியுது சிறீரங்கன் மனசு

வார்த்தைகளாகி வருகின்றன
வயிற்றெரிச்சல்கள்!

சிறீரங்கன் ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். இங்கு கிளிக்குக.

கொல்லப்பட்ட வங்காலைப் பிள்ளைகளின் மேல் அரசியல் நடத்தப்படுவதாய் அவர் சொல்கின்ற எங்களின் உணர்வுகள், எங்களின் கோபங்கள், வலைபதிந்த தமிழக உறவுகளின் ஆறுதல்களின் மேல் தனது அரசியலை நடத்தப் புறப்படுகின்றார்.

வருக! வருக!

உங்கள் வயிற்றெரிச்சல்களை வார்த்தைகளாக்கித் தருக!

பிணங்களின் மேல் நின்று தான் அழுகின்றோம் .

என்ன செய்ய?

செத்துப் போன அந்தச் சிறுவன் என்னைத் தேடும் ஆமி என்று எந்த இடத்திலும் எழுதி வைக்க வில்லையே!

தூக்கில் தொங்கிய அந்தச் சகோதரன் என்னைத் தமிழனை வாழ வேண்டாம் என மனைவியும் குழந்தைகளும் கதறுவதாய் எந்த இடத்திலும் எமக்குச் சொல்லவில்லையே..

இது என் கடைசி வார்த்தையென அந்தச் சகோதரி ஒரு சொல்த் தானும் சொல்லவில்லையே!

அவ்வாறெனின் ஆறுதல் சொல்லியிருப்போம்.

அவ்வாறெனில் பாதுகாப்பாய் இருக்க சொல்லிருப்போம்

அவ்வாறெனில் வாழும் உரிமை பற்றி சொல்லியிருப்போம்.

அவ்வாறெனில் சட்ட நடவடிக்கை எடுக்க சொல்லியிருப்போம்.

அவ்வாறெனில் இது தான் சாட்டு என்று ஆமிக்கும் அரசாங்கத்துக்கும் ஜனநாயகம் சொல்லித்தந்திருப்போம்.

அவ்வாறெனில் அவர்களின் வாழ்வுரிமைக்காக எங்களின் எழுத்தை நிறுத்தியிருப்போம்.

என்ன செய்ய?

அவர்கள் அப்பாவிகள்.

தங்களை வைத்து அரசியல் பண்ணத் தெரியாதவர்கள்.

இணையமொன்றில் வந்த செய்தியை வைத்து நீங்கள் அரசியல் செய்த போது அது அருவருக்கத்தக்கதாக தெரியவில்லையா?

(அந்தச் செய்தி தவிர்ந்து வேறெவரும் உங்கள் சகலனையோ உங்களையோ மிரட்டவில்லையென்பது உங்களுக்கு தெரிந்தது போலவே இன்னும் சிலருக்கும் தெரியும் . இணையத்தில் செய்தி வந்த பின்னர் மிரட்டல் நாடகத்தினை பொய்யாக அரங்கேற்றி பின்னர் அனுதாபம் தேடி, அதன் பின்னதாக எட்டப்பர் இணையச் செய்தியை பின்னூட்டங்களாக பலருக்கு இட்டு அவர்கள் அவையை மட்டுநிறுத்தி வெளியிடாத சமயம், உங்கள் வலையில் நீங்களாகவே அந்த எட்டப்பர் செய்தியை அநாமதேயமாக வெளியிட்டு அநாமதேயத்திற்கு நன்றி சொல்லி.. ஆஹா அடடா ..இது பற்றி ஆறுதலாக எழுத வேணும் )

உங்கள் உயிர் மீது ஏறி நின்று அழுதது எதற்காக?

புலிகளின் படுகொலைகளின் மீது ஏறி நின்று அழுவது எதற்காக?

உங்களுக்கான அனுதாபம் தமிழ்நாட்டிலிருந்து வரும் போது அதில் எங்கே போயிற்று திராவிட அரசியலின் திரு நோக்கு?

உங்கள் மீது அக்கறையுடன் ஆதரவு தந்த போது என் உயிர் மீது ஏறி நின்று எழுத்துரிமைக்கும் , ஜனநாயகத்திற்கும் இரங்கற்பா பாட வேண்டாம் என்று கவிதை பாடத் தோன்றவில்லையே உங்களுக்கு?

பற்றியெரியும் உங்கள் வயிற்றெரிச்சலின் பின்னுள்ள நோக்கு என்ன?

சிறு சிறு திரி மூட்டி நீவிர் வளர்த்த பேதங்கள் உடைவது கண்டா?

மக்கள் மீதான அனுதாபமும் அக்கறையும் Automatic ஆக புலிகள் பால் செல்லுதல் உணர்ந்தா?

இந்த ஒரு விடயத்தில் புலிகள் பெரும் பேசுபொருளாகினர் என்ற விரக்தியா?

அல்லது

உங்கள் மீது விடுக்கப்பட்ட இணைய அச்சுறுத்தலின் (கவனிக்க இணைய அச்சுறுத்தல் மாறாக சகலையூடானதல்ல) போது உங்களுக்கு வந்த அனுதாபப் பின்னூட்டஙகளை விட அதிகளவான தனிப்பதிவகளும் கூடிய கவனமும் இந்த விடயத்திற்கு வந்ததையிட்ட எரிச்சலா?

அப்படியாயின் அப்படிப்பட்ட ஒரு மனிதரா நீங்கள்

Sunday, June 11, 2006

என்னைத் தேடுது சாவு

என்னை உங்களுக்கு ஆரெண்டு தெரியாது. நான் ஒரு சின்னப்பிள்ளை. தமிழ்ச் சின்னப்பிள்ளை..

தமிழ்ச் சின்னப்பிள்ளையெண்டதை நான் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கு.
ஏனெண்டால் தமிழ் எண்ட படியாலைதான் நான் சாகப் போறனாம். ஆனா எனக்கு அது ஏனெண்டு விளங்கேல்லை. பள்ளிக்குடத்தில எனக்கு கணக்குப் பாடத்தை விட, விஞ்ஞான பாடத்தை விட தமிழ்ப் பாடம் நிறைய விருப்பம். இதனாலை ஏன் சாகப்போறன் எண்டும் இதுக்காக என்னை எதுக்கு அவையள் சாக்கொல்ல வேணும் எண்டும் எனக்கு விளங்கேல்லை.
Photobucket - Video and Image Hosting

எனக்கு சாகிறதெண்டால் சரியான பயம். செத்தால் பேயா வந்து அலைவனாம்.

எனக்கு பேயெண்டாலும் சரியான பயம். ஆனால் அம்மா சொல்லுறா பேய்கள் தானாம் உந்தப் படங்களில இருக்கிற மாதிரி மனிசரை கொல்லுமாம். அதோடை அம்மா இன்னொண்டையும் சொல்லுறா..

சாகிறதெண்டால் நான் இப்பவே செத்துப் போக வேணுமாம். ஏனெண்டால் பொம்பிளைப்பிள்ளையா பிறந்த நான் பெரியாளா வளந்த பிறகு பேய் பிசாசுகள் என்னை கதறக் கதறக் கொல்லுமாம். ஆனா என்ரை அம்மா நான் கவலைப் படக் கூடாது எண்ட படியாலை அம்மாவையும் அந்தப் பேய்கள் கொல்லும் எண்டதை சொல்லாமல் மறைச்சுப் போட்டா.

எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். இன்னும் பள்ளிக்குடம் போகேல்லை. கதைக்கவும் மாட்டான். எண்டாலும் அவனும் தமிழன் தானே. அவனை மாதிரித்தான் ஒரு தம்பியை அம்மாக்கும் அப்பாக்கும் இடையில படுத்துக் கொண்டிருந்தவனை நித்திரைப்பாயிலையே வைச்சு கொலை செய்து போட்டாங்கள்.
Photobucket - Video and Image Hosting
எனக்கு பயமாக்கிடக்கு. நானும் என்ரை தம்பியும் அம்மாக்கும் அப்பாக்கும் இடையில தான் படுக்கிறனாங்கள். என்ர கனவிலையெல்லாம் என்ர தம்பி குடல் வெளியில தெரிய தூக்கில தொங்கிற மாதிரி வருகுது. அதை நான் அம்மாக்கு சொல்ல அம்மா என்னைக் கட்டிப்பிடிச்சு ஓவெண்டு கத்தி அழுகிறா. ஆனா தம்பி அதைப்பாத்துச் சிரிக்கிறான். அவனுக்கு ஒண்டும் விளங்கேல்லை.. இப்பிடித்தானே அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற அந்தத் தம்பியும் சிரிச்சு விளையாடியிருப்பான். ஒரு வேளை சாகிற நேரத்திலும் ஒண்டும் விளங்காமல் சிரிச்சுக் கொண்டிருந்திருப்பானோ?

எனக்கு சிலது விளங்கிற மாதிரியும் சிலது விளங்காத மாதிரியும் ஒரே குழப்பாமாக்கிடக்கு.

நான் பிறக்கேக்கை இங்கை சண்டை நடந்ததாம். ஆனால் தம்பி பிறக்கும் போது சண்டை இல்லை. அம்மா சொல்லுவா அவனைப் பாத்து நீ அதிஸ்டக்காரன் எண்டு. ஆனா செத்துப் போன இந்த தம்பி பிறக்கும் போதும் சண்டை இல்லாமல் தான் இருந்திருக்கும். அப்ப அவன் ஏன் அதிஸ்டக்காரனா இல்லை. ஒரு வேளை என்ர தம்பியும் அதிஸ்டக்காரனா இருந்து இப்படிச் செத்துப் போடுவானோ? எனக்கு கவலையாக் கிடக்கு.

எனக்கும் அவனுக்கும் சின்னச் சின்ன சண்டையள் வந்தாலும் அவனில நான் நல்ல பாசம். கடவுளே அவன் இந்த மாதிரி செத்துப் போன கோலத்தில இருக்கிறதை என்னாலை கண் கொண்டு பாக்கவே முடியாது.. எனக்கிப்ப அழுகையா வருது.. ஆனா.. தம்பி இப்பிடி செத்துப் போனால் கடைசியா நான் அவனைப் பாக்கத்தானே வேணும். என்ரை தம்பியெல்லோ அவன்?

எனக்கு சாகிறதுக்கு சரியான பயம்தான் எண்டாலும் தம்பி சாகிறதெண்டால் என்னையும் சாக்கொல்லட்டும். ஒரு வேளை என்னப்போலத்தான் தூக்கில தொங்கிற அக்காவும் கேட்டிருப்பாவோ? அவவைப் பாக்க எனக்கு அழுகையா வருது. அவக்கு என்ரை வயசுதானே இருக்கும்.

அவவுக்கும் தன்ரை தம்பியில நல்ல பாசம் வைச்சிருப்பா தானே என்னை மாதிரி!
Photobucket - Video and Image Hosting
எனக்கு வடிவாத் தெரியாது. ஆனா கேள்விப்பட்டனான். ஏதோ சில நாடுகளில மிருகங்களை கொன்றால் கூட பொலிஸ் பிடிக்குமாம். நீதி மன்றம் எல்லாம் கொண்டு போவினமாம். ஆனால் இங்கை நாங்கள் குடும்பம் குடும்பமாக் கொல்லுப்படுறம். ஒருத்தரையும் பிடிக்கிறதுமில்லை. ஏன் எண்டும் கேக்கிறதில்லை.

சரி அந்த மிருகங்களாவது சந்தோசமா உயிரோடை வாழட்டும்

நான் ஒரு படம் பாத்தனான். இதில அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற தம்பியின்ர படத்தைப் பிடிச்சுக்கொண்டு வெளிநாட்டில - அது நல்ல வடிவான நாடு - ஒரு தங்கச்சி - அவ நல்ல வடிவான தங்கச்சி - இருந்தவ. அவ குளிர்சட்டையெல்லாம் போட்டு காலுக்கு சொக்ஸ் சப்பாத்து எல்லாம் போட்டிருந்தவ. அவவக்கும் என்ர வயசுதான் இருக்கும். அவ சந்தோசமா இருக்கிறது எனக்கும் சந்தோசமாத்தான் கிடக்கு. ஆனா நாளைக்கு செத்துப் போன என்ரை படத்தையும் அவயள் தூக்கிப் பிடிப்பினமோ எண்டதை நினைக்க பயமாக்கிடக்கு.

அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது எண்டு அப்பா சொல்லுறவர். எண்டாலும் எனக்கு சொல்லாமல் இருக்க முடியேல்லை. அந்த வெளிநாட்டுத் தங்கச்சி மாதிரியே நானும் காலுக்கு சொக்ஸ் சப்பாத்து போட்டு நல்ல உடுப்புப் போட்டு பள்ளிக்குடம் போக வேணும் எண்டு ஆசையாக் கிடக்கு. என்ன செய்ய எல்லாத்தக்கும் முதலில உயிரோடை இருக்கத்தானே வேணும்..

எனக்கு இந்த இடத்தில என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை.. நான் உயிரோடை இருப்பனா எண்டது எனக்கு தெரியேல்லை. உங்களில ஆருக்காவது தெரியுமா ? நானும் தம்பியும் அம்மாவும் அப்பாவும் இன்னும் என்னைப்போல இருக்கிற எல்லாரும் உயிரோடை இருப்பமா?

எனக்கு ஆரிட்டை கேட்கிறது எண்டு தெரியேல்லை . எண்டாலும் கெஞ்சிக் கேக்கிறன் ! எங்களுக்கு உயிர்ப்பிச்சை போடுறியளா?.. தம்பிக்கு கதைக்க தெரியாது. அவனுக்காக நான் கெஞ்சிக் கேட்கிறன்.. எங்களை உயிரோடை வாழ விடுவியளா..?

Friday, June 09, 2006

விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம்

என்ன செய்ய இப்போதெல்லாம் ஈழத்து செய்திகளை விரும்பாதவர்கள் வாசிக்க வேண்டாம் என்றும் செய்திப் படங்களை விரும்பாதவர்கள் பார்க்க வேண்டாம் என்ற குறிப்புடனும் தான் போட வேண்டியிருப்பது எங்களின் விதிஎன்றானது.

Photobucket - Video and Image Hosting

ஒஸ்லோவில் அரசும் புலிகளும் சந்திக்கிறதுக்குப் பிடுங்குப்பட்டு கொண்டிருக்கையில் வீடு புகுந்த பேய்கள் கொலை செய்து வெறிதீர்த்து தூக்கில் தொங்க விட்டுப் போயிருக்கிறார்கள்.

தமிழ்நெற்றின் செய்திகளின் படி மிகத்தெளிவாக நிதானமாக திட்டமிட்டு ஆணுறைகளுடன் அந்தப் பேய்கள் வந்து வெறி தீர்த்து சென்றிருக்கின்றன.

இது இன்னும் இன்னும் தொடரும்! மீண்டும் மீண்டும் தொடரும்!

ஆனாலும் இலங்கையில் அமைதியை கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கை அரசினை இந்தியா மெச்சும்.

பயங்கர வாதத்தை ஒழிக்க அமெரிக்கா இலங்கை அரசிற்க துணை நிற்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசின் இதய சுத்தியுடனான அமைதிப் பேச்சுக்களுக்கான அதரவுக்கு நன்றி தெரிவிக்கும்..

ஆனாலும் அல்லைப்பிட்டியிலும் மன்னார் வங்காலையிலும் இன்னும் இன்னும் தமிழர் தேசமெங்கும் நாய்கள் வீடு புகும்!

பேய்கள் பிணந்தின்னும்!

ஆனாலும் அமைதிப்பேச்சுக்களுக்கு இலங்கை அரசு எப்போதும் தயாராக இருக்கும்.

பிறகும்

நாளைய விடியலில் நாமும் தூக்கில் தொங்குவோம் என குழந்தைகள் முன்னிரவில் பாடம் படிப்பார்கள்.

அப்போதும் அரசு பேச்சுக்களுக்கு வரும்படி புலிகளிடம் கேட்கும். அரசோடு சேர்ந்து அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் இந்தியா எல்லொரும் கேட்பார்கள்.

தயவு செய்து தமிழர்களை கொல்ல வேண்டாம் என்பதைக் கூட பேச்சு மேடையில் வந்து கேளுங்கள் என்கிறார்கள்.எங்கள் மக்களை கொல்ல வேண்டாம் என்று கெஞ்சத்தான் ஒரே மேடையில் பேச்சா?

இனியென்ன?

செத்துப்போன பிள்ளைகளின் புகைப்படம் ஏந்தி அடுத்த உரிமைக்குரல் நடக்கும். அதற்கடுத்த உரிமைக்குரலில் ஏந்துவதற்கு இன்னொரு பிள்ளை செத்துப் போக தயாராகும்.

போதும் எல்லாம்!

மக்களின் சாவு உலகக் கண்களில் மாற்றத்தை கொண்டு வரப்போவதில்லை.

பேய்களும் நாய்களும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணும் போது மட்டுமே மக்கள் உயிர்களை மறந்து போவார்கள்.

Monday, May 29, 2006

பின்லாந்து உரிமைக்குரல் நிகழ்வு

உலகின் பலபாகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரின் உரிமைக்குரல் நிகழ்வினையொட்டி பின்லாந்தில் நடந்த நிகழ்வுக்குரிய படங்களை இங்கே காணலாம்.






நன்றி: சங்கதி

Wednesday, May 24, 2006

சர்வதேச சமூகமெண்டால் நாங்கள் தான் மச்சான்

சர்வதேச சமூகம் எண்டால் நாங்கள் தான் மச்சான்

குசினிக்குள்ளை இண்டைக்கு நிறையக் கோப்பைகள் வந்துகொண்டே இருந்தன. சுந்தர மூர்த்தி சரியா களைச்சுப் போட்டான். இந்த வசனத்தில இருந்து அவனை நான் சுந்து எண்டு தான் கூப்பிடுவன். ஏனெண்டால் அவன் அந்தப் பெயரினூடாகவே எல்லாருக்கும் அறிமுகம். சுந்து பக்கத்தில நிண்ட குமரேசன் தனக்கு கோப்பயளைக் கழுவியடுக்க உதவுவான் எண்டு எதிர்பாத்துக்கொண்டு நின்றான். ஆனால் குமரேசு நாளைக்காரோ காது குத்துப் பார்டிக்கு இண்டைக்கே போய் கொத்துரொட்டி போட வேணும் எண்டு போட்டு போயிட்டான். அவன் கொத்து ரொட்டி போடுறதில பெரிய விண்ணன். இங்கை ஆருக்கு கல்யாண வீடெண்டாலும் பிறந்த நாள் விழா எண்டாலும் ஏன் வெடிங் அனிவெர்சிறி எண்டாலும் அவனைத்தான் கொத்து ரொட்டி போட கூப்பிடுறது. அது அவனுக்கு ஒரு சைட் வருமானமும் கூட. ஆனால் இயக்கக்காரரின்ர ஏதாவது எழுச்சி ஊர்வலங்களுக்கும் நிகழ்ச்சியளுக்கும் கொத்துரொட்டி போடேக்கை அவன் ஒரு சல்லிக் காசும் வாங்கிறதில்லை.

சுந்து இப்பவும் கோப்பையளை தேய்ச்சுக்கொண்டிருந்தான். எண்டைக்கோ ஒரு நாளைக்கு குமரேசு அம்பிடுவர் தானே.. அப்ப வைக்கிறன் அரிவாளை எண்டு அவன் மனசுக்கள்ளை நினைச்சான்.

ஒரு பன்னிரண்டு வருசமா இதைத்தான் சுந்து செய்யிறான். வந்த புதுசில உது மாதிரி கன வேலையளை அவன் செய்திருக்கிறான். வேலைக்கு கொண்டு போய்ச் சேத்து விடுங்கோடா எண்டு முன்னுக்கும் பின்னுக்கும் திரிஞ்சால் அப்ப அவனைக் கொண்டு போய் உப்பிடியான வேலையளில தான் சேத்து விட்டாங்கள்.

சரியா கவலைப்பட்டுப்போனான். நான் படிச்ச படிப்புக்கு எண்டு அவன் ஒருக்காலும் நினைக்கேல்லையெண்டாலும் இந்த வேலையள் அவனை சரியா பாதிச்சிட்டுது. பிறகு பழகப் பழக அதுவே பழகி.. செய்யிறது என்ன வேலையெண்டாலும் அதை நிறைவாச் செய்யதால் போதும் எண்ட மனப்பக்குவம் அவனுக்கு வந்திட்டுது.

எண்டாலும் ஊர்ப்பக்கம் கடைசியா போகேக்கை.. சிலர் நக்கலா என்ன வேலை செய்யிறியள் எண்டும் கேட்டவை. அவனுக்கு தெரியும் அப்படி கேட்டவையின்ர ஆரோ ஒரு உறவு எங்கேயோ இப்பிடி ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும் எண்டு.

சுந்துவுக்கு சரியா நாரி நொந்தது. வீட்டை வரவும் நேரம் செண்டு போட்டுது. எண்டாலும் சம்மர் தானே.. இன்னும் பகல் மிச்சமிருந்தது. றூமுக்கு வந்து கட்டிலில விழுந்தான். கட்டிலும் றுமும் அலங்கோலமாக் கிடந்திச்சு. ஊத்தை உடுப்பக்கள் நிறைஞ்சு மணத்தால் சென்ற் அடிச்சுப்போட்டுப் படுப்பான். இல்லாட்டி தனக்கு தண்ணியடிச்சுப்போட்டுப் படுப்பான்.

எல்லாம் கொஞ்ச நாளுக்குத்தானே. பிறகு அவ வந்த பிறகு வீட்டை ஒரு கட்டுக்குள்ளை வைச்சிருப்பா தானே.. அவ வந்த கையோடை தமிழச்சனம் இல்லாத ஒரு வீட்டைப்பாத்து குடியேற வேணும் எண்டு சுந்து நினைக்க.. நீங்கள் சுந்துவுக்கு இன்னும் கல்யாணம் ஆகேல்லையோ எண்டு நினைப்பியள்.

ஓம்.. சுந்துவுக்கு இன்னும் கல்யாணம் ஆகேல்லை.. ஆனா ஆகப்போவுது. அது பெரிய கதை.. கொஞ்சம் பொறுங்கோ ஆற அமர இருந்து முதலேயிருந்து தொடங்கிறன்..

சும்மா பம்பலுக்கு

வேறையொண்டுமில்லை.. நேரம் கிடைச்சிது.. அது தான் இதிலை விளையாடிப்பாத்தனான்.. எல்லாம் ஒழுங்கா வருகுதோ எண்டு பாக்க ஒரு அலம்பல் பதிவு இது.. இதுக்கு இனி நானே பின்னூட்டம் ஒண்டும் போட்டுப்பாக்க வேணும்.. ஹி ஹி

Saturday, May 20, 2006

இவன் கோவக்காரன்!

தமிழ்த் தளங்களைத் தட்டும் போது இந்தக் கோவக்கார வலைப்பதிவு கண்ணில் பட்டது. இன்னமும் தமிழ் மணத்தில இல்லாத இதற்கு ஒரு அறிமுகத்தை கொடுத்திடத்தான் இந்தப் பதிவு. தமிழ் மணத்தில சேக்க சொல்லியும் ஒரு பின்னூட்டம் அங்கை குடுத்திருக்கிறன். சேக்கினமோ இல்லையோ என்ர கடமையை நான் செய்வன்..

இது தான் அந்த வலைப்பதிவு

www.kovam25.blogspot.com

Sunday, May 14, 2006

இந்த பாலகனுக்கு பதில் என்ன?

யாழ்ப்பாணத்தில் தூக்கத்திலிருந்த தமிழ்க் குடும்பம் ஒன்றினை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய பாதுகாப்புப் படைகள் குதறித் தள்ளியிருக்கின்றன. தாயுக்கும் தந்தைக்கும் இடையில் தாலாட்டில் உறங்கிய அந்த தளிரின் மீது கொப்பளித்துக் கிடக்கின்ற இரத்தம் எந்தப் பேய்களின் பசியாற்றியது..?

இன்னும் தமிழ் கூட சரியாக உச்சரிக்க தெரியாத அந்த தளிர், இலங்கையின் தேசிய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் பயங்கரவாதிகளோடு எப்படி தொடர்புற்றது?

இது எவ்வகையான மட்டுப் படுத்தப்பட்ட நடவடிக்கை?

பயங்கர வாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் என்பது பாலகரின் உயிர் குடித்தலா?

கடற்படை தாக்கப்பட்டால் கண்ணீர் வடிக்கின்ற,

இராணுவம் தாக்கப்பட்டால் கண்டனம் சொல்லுகின்ற,

அமெரிக்க இந்திய இன்னும் உலக பெரியண்ணன், பெரியப்பு நாடுகளே..

இந்தப் பாலகனின் மரணத்திற்க பதில் சொல்வீர்களா..?



Photobucket - Video and Image Hosting

Sunday, April 30, 2006

ஒட்டுப்படை முகாம் தாக்கியழிப்பு

எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது.
பொலநறுவைப் பகுதியில் அமைந்திருந்த 'கருணா குழு' எனப்படும் துணைஇராணுவக் குழுவின் முகாம் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் கவனத்தைப் பெற்ற விடயம் இதுவாகும். ஒரு செய்திநிறுவனம் நேரடியாகச் சென்றுகூட முகாமைப் பார்வையிட்டதுடன் பகிரங்கமாக வெளிப்படுத்தியும் இருந்தது. ஆனால் இன்றுவரை அரசதரப்பு அதை மறுத்தே வந்துள்ளது.

தமிழர் தரப்பில் பத்திரிகையாளர்கள், புத்திசீவிகள் கொல்லப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளில பலர் கொல்லப்பட்டதற்கும் இக்குழுவே காரணமென்று கூறப்பட்டுவந்ததுடன், பலவற்றை அவர்களே ஒப்புக்கொண்டும் இருந்தனர்.

இவ்வளவு நாளும் இம்முகாம் மீது தாக்குதல் நடத்தப்படாதது பலருக்கு ஆச்சரியமாகவே இருந்திருக்கும். ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதற்காகப் பொறுத்திருக்கலாம். அண்மைய சம்பூர் முப்படைத் தாக்குதலின்பின் நிலைமை மாறிவிட்டது போல் தோன்றுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை இம்முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்திகள் கிடைக்கவில்லை.

செய்தி: புதினம்

Saturday, April 15, 2006

சிறிலங்காவை இந்திய பிரதமர் எச்சரிக்க வேண்டுகோள்

திருகோணமலையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஓவியர் புகழேந்தியின் "தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொதுக்கூடங்களில் உரையாற்றுவதற்கும் ஊடகங்களில் நேர்காணல் அளிப்பதற்கும் இந்திய, தமிழக அரசாங்கங்கள் தடைவிதித்து வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டிருந்தன.

அண்மையில் குறிப்பிட்ட காலத்துக்கு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற பழ.நெடுமாறனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிமன்ற அனுமதிக்குப் பின்னர் நேற்றைய நிகழ்வில் பழ. நெடுமாறன் பங்கேற்றார்.

ஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுக்குத் தலைமை வகித்து பழ.நெடுமாறன் ஆற்றிய முழு உரையின் எழுத்து வடிவம்:

நமக்கு அருகாமையில் 20 மைலுக்கு அருகில் இருக்கும் நம்முடைய சகோதரர்கள், நம்முடைய தமிழீழ மக்கள் அங்கே நடத்தி வருகிற போராட்டத்தை, அதனது விளைவுகளை அந்த மக்களின் சொல்லொண்ணாத் துயரங்களை ஓவியங்களாக வடித்து இங்கே தமிழகத்திலும் இந்தியாவின் பிற்பகுதிகளிலும் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் கண்காட்சிகளாக நடத்தி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

ஆனாலும் எந்த மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை ஓவியங்களாக வரைந்தாரோ அந்த மக்கள்- தமிழீழ மக்கள் அவரது ஓவியங்களைப் பார்த்து மகிழக் கூடிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையும் சென்ற ஆண்டு தீர்ந்தது.

இங்கிருந்து தமிழீழத்துக்கு அந்த ஓவியங்களை எடுத்துச் சென்று, எந்த மக்களின் துயரங்களை ஓவியமாக வடித்தாரோ எந்த மக்களினது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை ஓவியங்களாக வடித்திருக்கிறாரோ அந்த மக்கள் முன்னாலே அவர் வைத்து அவர்களின் ஆதரவைப் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

அந்த மக்களின் போராட்டத்தை நேரில் சென்று பார்த்து முழுமையாக அறிந்து கொண்டதோடு சமூகப் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டு வந்து நூலாகவும் வடித்திருக்கிறார்.

20 ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடந்தன. அந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானது வியட்நாம் விடுதலைப் போராட்டம். அந்தப் போராட்டம் பற்றி ஆங்கில மொழியிலும் பிறமொழியிலும் ஏராளமான நூல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல் சீனத்திலே மாபெரும் தலைவர் மாவோவின் தலைமையில் நடைபெற்ற மகத்தான போராட்டம் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன. எத்தனையோ வெளிநாட்டவர்கள் வியந்து அதைப் பற்றி எழுதி இருக்கின்றனர்.

யாசீர் அரபாத் தலைமையிலேயே பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றியும் அதனது விளைவுகள் பற்றியும் ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன.

அதைப் போலவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஏராளமான நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளன.

ஆனால் அந்த நூல்களை எல்லாம் இந்த தமிழ்நாட்டு மக்கள் அறியாதபடி இங்கே சட்டங்கள் தடுக்கின்றன.

நான் எழுதிய நூல்களுக்கும் தடை- வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கெடுபிடிகளுக்குக் கொஞ்சமும் அஞ்சாமல் அந்த மண்ணிற்குச் சென்று, அந்த வீரஞ்செறிந்த மண்ணிலே சுற்றி வந்து, மக்களைப் பார்த்து, அவர்களது துயரங்களையெல்லாம் அறிந்துவந்து அதையெல்லாம் ஒரு நூலாக இந்தக் கால கட்டத்திலே வடித்திருப்பது என்பது சிறப்பானது மட்டுமல்ல-துணிவுமிக்கதும் ஆகும்.

எந்தத் தமிழீழ மக்களுக்காக அங்கு சென்று ஓவியக் கண்காட்சிகளை நடத்தியதோடு அந்த மக்களினது நிலைமைகளைப் பற்றிய உண்மைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று அவர் வெளியிட்டிருக்கிற இந்தத் தருணத்தைவிட, அங்கே தமிழீழத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் நம்முடைய நெஞ்சைப் பிளக்கின்றன.

தமிழீழத்தின் திருகோணமலையில் சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தின் விளைவாக 19 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல எது எது தமிழரின் வியாபார, வணிக நிலையங்களோ அதையெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அங்கே ஒரு பெரிய இனவெறிக் கலவரம் இராணுவத்தினாலும் அரசாங்கத்தாலும் அங்கே ஏற்பட்டிருக்கிறது. அங்கே மக்கள் சொல்லொண்ணா பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஜெனீவாவிலே பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தை விளைவாக சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் நடைபெறக் கூடிய நிலையில் இனவெறிக் கலவரத்தை மீண்டும் திட்டமிட்டுத் தொடங்கியிருக்கிறார்கள் எனில் அவர்களுக்கு சமாதானத்தில் நம்பிக்கை இல்லை என்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.

உலக நாடுகளை ஒரு பக்கம் ஏமாற்றிக் கொண்டு மற்றொரு பக்கத்தில் திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலகம் இதை உணர வேண்டும்.

குறிப்பாக

இந்திய அரசு இதை உணர வேண்டும்.

அதிலும் நீங்கள் பார்த்தால் திருகோணமலையில் மட்டுமல்ல- அருகிலே உள்ள சம்பூரில் சிங்களக் கடற்படையினர் ஏவுகணைகளை ஏவி கிராமத்தைத் தாக்கியுள்ளது. வீடுகள் பற்றி எரிந்திருக்கின்றன. 2 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கலவரச் சூழ்நிலையில் அங்கே திருகோணமலையிலே தமிழ் மக்கள் பேரவைத் தலைவராக இருக்கக் கூடிய வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், இலங்கை வங்கிக்குப் போகிறார்.

திருகோணமலையில் அந்த வங்கி எங்கே அமைந்திருக்கிறது எனில்-

இரண்டு பக்கமும் இராணுவ சோதனைச் சாவடிகள்-

அந்த வங்கிக்கு எதிரே திருகோணமலை துறைமுக காவல்நிலையம்-

அதற்கு பக்கத்திலே கடற்படைத் தலைமை அலுவலகம்-

இவ்வளவும் இருக்கக் கூடிய அந்த இடத்தில் அவர் வங்கிக்குப் போகிறார்- வங்கியிலே நுழைகிறார்- வங்கியிலேயே வைத்து அவரை சுட்டுத் தள்ளுகிறார்கள்.

வெளியே இராணுவம், காவல்துறை இருக்கிறது. எதிரிலே காவல்நிலையம் இருக்கிறது. ஆனால் சுட்டவர்கள் வங்கிக்குள்ளேயே ஓடுகிறார்கள். வங்கிக்குப் பின்னாலே சிங்கள இரகசியப் பிரிவு காவல்துறையின் அலுவலகம் உள்ளது. அதற்குள் ஓடி ஒளிகிறார்கள்.

இன்று வரை அந்தக் கொலையாளிகளைப் பிடிப்பதற்கோ யார் என்று அறிவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

திட்டமிட்டு சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்கிறது.

எதனால் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்படுகிறார்?

அண்மையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் அன்று தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும்போது அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு வன்னியசிங்கம் விக்னேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட இருந்தது. அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள்.

திருகோணமலை முழுவதுமே தமிழர் பகுதியிலே அமைந்திருக்கக் கூடிய இயற்கையான துறைமுகம். நீண்ட நெடுங்காலமாக அந்தத் திருகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்காவின் கடற்படையை அங்கே நிறுவ தொடர்ந்து முயற்சிகள் நடந்தன.

ஒருகாலத்திலே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கடற்படைத் தளமாக அது இருந்தது-அவர்கள் ஆண்ட காலத்தில்.

ஆனால் அதற்கு முன்னால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இராசேந்திர சோழனின்-சோழர்காலத்தில் திருகோணமலை கடற்படைத் தளமாக இருந்தது.

நமக்குச் சொந்தமான அந்தத் துறைமுகத்தை ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. அன்று இந்தியாவின் எதிர்ப்பு இருந்த காரணத்தால் அமெரிக்க கடற்படைத் தளம் அங்கே வரவில்லை.

சிங்கள அரசு என்ன நினைக்கிறது?

இந்தக் கடற்படைத் தளம் நமக்கு உபயோகப்படாது- இது தமிழர் பகுதியில் இருக்கிறது. ஆகவே இதை அமெரிக்காவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அங்கே வந்து உட்காரும்.

அதன் பின்னர் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு வசதியாக இருக்கும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.

அன்று ஜெயவர்த்தனா அந்நாட்டின் அதிபராக இருந்தபோது திட்டமிட்டு திருகோணமலைப் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றினார்.

அவர்கள் எத்தகைய சிங்களவர்கள் தெரியுமா?

சிங்களச் சிறைகளிலே பெரிய கிரிமினல் குற்றங்களைச் செய்து நீண்டகாலம் சிறைவாசம் விதிக்கப்பட்டவர்களையெல்லாம் விடுதலை செய்து அவர்களுக்கு நிலம் கொடுத்து நிதி கொடுத்து அங்கே குடியேறச் செய்தனர்.

அவர்களைக் கொண்டு ஊர்க்காவல் படை என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வழங்கினார்கள்.

அவர்களுக்கு வேலை என்ன? அங்கிருக்கக் கூடிய தமிழர்களை எல்லாம் தாக்கி அங்கிருந்து வெளியேற்றுவது, ஓட ஓட விரட்டுவது என்பதுதான்.

இந்த வேலைக்காக சிங்களக் குண்டர்கள் அங்கே குவிக்கப்பட்டார்கள்.

அதுமட்டுமல்ல நண்பர்களே-

திருகோணமலையில் மூன்றில் ஒருபகுதியில் இன்று சிங்களவர்கள் குடியேறியிருக்கிறார்கள்.

இது திருகோணமலை முழுமையாக சிங்களர்களின் சிக்கினாலும் அமெரிக்க கடற்படை தளம் அங்கு அமைந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு வருகிற அபாயத்தை விட இந்தியாவுக்குப் பேராபயம் என்பதை டில்லியில் உட்கார்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

யாருக்கோ நடக்கிறது? அங்கிருக்கிற ஈழத் தமிழர்களுக்குத்தானே இந்த சங்கடம் என்று எண்ணி டில்லியில் இருப்பவர்கள் பேசாமலிருப்பார்களேயானால்

அது

இந்தியாவுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1982 ஆம் ஆண்டு நான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்தேன்.

அதற்கு முன்னர் ஆண்டு யாழ்ப்பாணத்திலே மிகப் பெரிய நூலகத்தை சிங்கள இராணுவம் கொளுத்தியது. அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களைக் கொல்லலாம். ஆனால் எதற்காக நூல் நிலையத்தைத் திட்டமிட்டு கொளுத்தினார்கள்? அழித்தார்கள்? அதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் இங்கிருந்து இலங்கைக்குப் போனேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் என்னை அழைத்துக் கொண்டு போய் எரிந்து போன நூல் நிலையத்தைச் சுற்றிக் காட்டினார்.

ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையமாக அது திகழ்ந்தது. மறைந்த அறிஞர் ஆனந்தகுமாரசாமி பற்றி எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் சிலருக்காவது தெரிந்திருக்க வேண்டும்.

அவர் மிகப் பெரிய அறிஞர்- உலகம் முழுமையும் சுற்றியவர். அமெரிக்காவின் அருங்காட்சியகம் ஒன்றுக்கு அதிகாரியாகப் பணியாற்றியவர். அவர் உலகம் முழுமையும் சென்று சேகரித்த அரிய ஓலைச்சுவடிகள், நூல்களை அந்த நூலகத்துக்குக் கொடுத்திருந்தார்.

8 இரும்பு பீரோக்கள் நிறைய அவர் கொடுத்த ஓலைச்சுவடிகளும் நூல்களும் நிறைந்திருந்தன. நான் சென்று பார்த்தபோது அவ்வளவும் பொசுங்கி சாம்பலாகிக் கிடந்தது.

அவர்களுக்கு தமிழர்களை இனப்படுகொலை செய்வதை விட தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதில் வெறி இருந்தது. அதன் விளைவாக அந்த நூலகம் அடியோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

இதை ஏன் சொல்லுகிறேன் எனில்-

அதைப் பற்றி அறிந்துவந்து பிரதமர் இந்திராகாந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.

"திருகோணமலையில் நான் சென்று பார்த்தபோது பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எதற்காக என்பதற்கு எனக்குத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டடங்கள் கட்டப்படுவதாக அந்த மக்கள் சொல்லுகிறார்கள்- அமெரிக்கா மெதுவாக அங்கே நுழைய முயற்சிக்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அதிலே கூறினேன்.

அப்போது மதிப்பிற்குரிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் இதைப் பற்றி சொன்னேன். என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டார்.

இங்கிருந்து ஒரு அனைத்துக் கட்சி தூதுக் குழு டில்லிக்குச் சென்று பிரதமர் இந்திரா காந்தியிடம் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும் என்று நான் சொன்ன போது அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் அவர் தலைமையிலேயே ஒரு தூதுக்குழுவாக டில்லி சென்றோம். பிரதமர் இந்திராகாந்தியிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்தோம்.

அதிகாரப்பூர்வமாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்ட மனு ஒன்று இந்திராவிடம் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திராகாந்தி அறிவிக்கிறார்-

இலங்கையின் எந்தப் பகுதியிலும் இந்து மா சமுத்திரத்தின் எந்தப் பகுதியிலும் எந்த வல்லரசு முயற்சி செய்தாலும் அது இந்தியாவுக்கு விரோதமான செயலாக நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று எச்சரித்தார்.

அதற்குப் பின்னால் அம்முயற்சி நின்றது. ஆனால் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்கள். அதற்கு சிங்கள அரசு ஒத்துழைக்கிறது.

நான் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை மிக்க பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள இந்த கலவரம்- அதுவும் சமாதான பேச்சுவார்த்தை- சர்வதேச சமூகத்தின் உதவியோடு வற்புறுத்தலின் பேரில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னால் இப்படி ஒரு கலவரத்தை நடத்துவார்கள் என்று சொன்னால்,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட இருந்தவரை சுட்டுக்கொலை செய்வார்கள் என்று சொன்னால்-

சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தச் சூழலில் எப்படி நடத்த முடியும்?

ஏதாவது ஒரு வேண்டாத சூழ்நிலையை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகள் எப்போதும் இப்படித்தான்-அவர்கள் எப்போதும் சமாதானத்துக்கு வரமாட்டார்கள் என்று அவர்கள் மீது பழியைப் போட திட்டமிட்ட இனப்படுகொலையைத் தொடர முயற்சிக்கிறார்கள்.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தப் பிரச்சனையிலே ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.

இந்தக் குரல் கொடுத்தால் இந்திய அரசு இந்தப் பிரச்சனையிலே எந்த அளவு கவனம் செலுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய அரசு இந்தப் பிரச்சனையிலே அது இரண்டும் கெட்டான் நிலைப்பாடாக இருக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கும் உதவாது. இந்தியாவுக்கும் உதவாது.

அங்கே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகாலத்துக்கும் மேலாக இப்பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நோர்வே நாட்டு மத்தியஸ்த்துடன் நடக்கிறது.

யார் இந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்கிறார்களோ அந்த நார்வே நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் இங்கே டெல்லிக்கு வருகிறார்கள். பிரதமரைச் சந்திக்கிறார்கள்- வெளிநாட்டு அமைச்சரைச் சந்திக்கிறார்கள்- அதிகாரிகளைச் சந்திக்கிறார்கள். இவர்களது ஆலோசனகளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் கொழும்புக்குப் போகிறார்கள்.

இந்தியாவின் சம்பந்தம் இல்லாமல் நாம் தனியாக இந்தப் பிரச்சனையில் செயற்படக் கூடாது என்று நோர்வே நினைத்து ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது? நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள்? எனக் கேட்டு அவர்கள் செய்கிறார்கள்.

கொழும்பிலிருந்து சிங்கள அரசு தலைவர்கள் சந்திரிகாவாக இருந்தாலும் ரணிலாக இருந்தாலும் ராஜபக்சவாக இருந்தாலும் டில்லிக்கு வருகிறார்கள். பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். அவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லுகிறார்கள்.

அதுமட்டுமல்ல நண்பர்களே-

இந்தியா இந்த பிரச்சனையிலேயே என்ன செய்திருக்க வேண்டும்?

நோர்வே தரப்பு அவர்களது கருத்தைச் சொல்லிவிட்டார்கள்-

சிங்களத் தரப்பு அவர்களது கருத்தைச் சொல்லிவிட்டார்கள்-

இன்னொரு தரப்பு இருக்கிறதே.. தமிழர் தரப்பு.. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டா? இல்லையா?

சரி விடுதலைப் புலிகளைத்தான் சந்திப்பதில் தயக்கம் இருக்கிறது. சரி அந்த இயக்கத்துக்குத் தடை விதித்து இருக்கிறீர்கள். எப்படி அழைத்துப் பேசலாம் என்று ஒரு சாக்கு சொல்லலாம்.

அதுகூட உண்மை அல்ல.

நாகாலாந்திலும் காசுமீரிலும் இந்திய அரசு தடை செய்த இயக்கங்களின் தலைவர்களை இந்திய இராணுவ விமானங்களிலே அழைத்துக் கொண்டு வந்து அவர்கள் சுவிட்சர்லாந்துக்கோ ஜப்பானுக்கோ உங்கள் விமானத்திலே அழைத்துச் சென்று இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது நீங்கள் பேசவில்லையா?

இந்தியாவுக்குள்ளேயே அவர்களை அழைத்துப் பேசவில்லையா?

இதே மன்மோகன்சிங் பேசவில்லையா?

ஏன் இவர்கள் விடயத்தில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயற்படுகிறீர்கள்?

சரி, விடுதலைப் புலிகளுடன் நீங்கள் பேசுவதில் உங்களுக்குப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

ஆனால்

இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 20 பேருக்கும் மேல் இருக்கிறார்கள்.

கடந்த இரண்டாண்டு காலத்துக்கும் மேலாக இந்தியாவின் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கிறார்கள். கடிதம் எழுதுகிறார்கள்.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து முறையிடுகிறார்கள். இந்தியாவின் பிரதமரைச் சந்திக்க வேண்டும்- மற்ற தலைவர்களையெல்லாம் சந்திக்க வேண்டும்- எங்களுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இரண்டாண்டுகாலமாக நீங்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

நியாயம்தானா?

சிங்களத் தரப்பு யார் வந்தாலும் பேசுகிறீர்கள்-

அண்மையிலே சிங்கள அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்ச முதன் முதலாக இந்தியாவுக்கு வருகிறார்- 30-க்கும் மேற்பட்ட பெரிய குழுவுடன் வருகிறார்.

அந்தக் குழுவில் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிற ஜே.வி.பி. இயக்கத்தைச் சேர்ந்தவரும் அந்தக் குழுவிலே வருகிறார். அதாவது 30 பேரில் அவரும் ஒருவர்.

இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவது-

இந்தியா பிராந்தியத்திலே வல்லாதிக்கப் போக்கிலே நடக்கிறது என்று இந்தியாவை எதிர்க்கிறவர் இங்கே வருகிறார்.

அவரையும் நம்முடைய பிரதமரும் மற்றவரும் சந்தித்துப் பேசுகிறீர்கள்.

சரி, அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அந்த நாட்டுக் குழுவிலே அவரை சேர்த்துக் கொண்டு வரும்போது நீங்கள் தடுக்க முடியாது.

ஆனால்-

சிங்களத் தரப்பு நியாயத்தைக் கேட்ட நீங்கள்-

மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்- மக்களிடத்திலே வாக்கு பெற்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாகியிருப்பவர்கள்.

அவர்கள் உங்களை சந்திப்பதற்கு இரண்டாண்டு காலம் முயற்சி செய்கிறார்கள். நீங்கள் எந்த அனுமதியும் கொடுக்க மறுக்கிறீர்களே?

அப்படியானால் நீங்கள் நடுநிலையோடு செயற்படுவதாக எப்படி நாங்கள் நம்ப முடியும்?

அதுமட்டும் அல்ல-

சார்க் நாடுகள்- தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இந்த சார்க் நாடுகளுக்குள்ளேயே சுற்றுப் பயணம் செய்வதற்கு விசா தேவையில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். இன்றைய வரைக்கும் அமுலில் உள்ளது.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய நண்பர் ஈழவேந்தன் இந்தியாவுக்கு வந்தபோது, பெங்களுரிலே நாங்கள் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டை நடத்திய போது- அதில் பங்குபெறுவதற்காக வந்த போது சென்னை விமான நிலையத்திலேயே அவரை மடக்கி திருப்பி அனுப்பினீர்களே?

என்ன நியாயம் இது?

எதற்காக அப்படிச் செய்தீர்கள்?

ஏதாவது ஒரு நியாயமான காரணத்தைச் சொல்ல முடிந்தது?

சார்க் நாடுகளின் முடிவையும் மீறி இங்கே இருக்கிற உளவுத்துறை அதிகாரிகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றால்

டெல்லியிலே இருக்கக் கூடிய அமைச்சர்கள் எதற்காக அந்தப் பதவிகளிலே ஒட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்?

ஒரு தமிழன்- ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் இங்கே உள்ளே தமிழர்கள் நடத்துகிற ஒரு மாநாட்டுக்கு வரும்போது அவரை திருப்பி அனுப்புகிறீர்கள் என்று சொன்னால் என்ன காரணம்?

பக்கத்திலே ஆந்திரா இருக்கிறது.

ஆந்திராவின் தலைநகர் ஐதராபத்திலே உலகத் தெலுங்கு மாநாடு நடத்தினார்கள். தென்னாப்பிரிக்கா உட்பட உலகம் முழுவதிலிருந்தும் தெலுங்கு பேசும் மக்களின் பிரதிநிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார்கள்.

யாரையாவது திருப்பி அனுப்பினீர்களா நீங்கள்?

பஞ்சாப்பிலே உலக பஞ்சாபி மாநாடு நடைபெற்றது. இத்தனைக்கும் பஞ்சாப் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற மாநிலம்.

அமெரிக்காவிலே, கனடாவிலே, ஐரோப்பாவிலே, ஆசிய நாடுகளிலே உள்ள சீக்கியர்களின் பிரதிநிதிகள் எல்லாம் அம்மாநாட்டிற்கு வந்தார்கள்.

யாரையாவது நீங்கள் திருப்பி அனுப்பியது உண்டா?

பக்கத்தில் பெங்களுரிலே உலக கன்னட மாநாடு நடத்தினார்கள். உலகம் முழுவதும் எந்த நாட்டில் வசித்தாலும் கன்னட மொழி பேசுகிறவர்கள் வந்தார்கள். இந்தியாவின் பிரதமரும் போனார்.

அவர்களில் யாரையாவது ஒருவரை நீங்கள் திருப்பி அனுப்பியது உண்டா?

இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகலாம்.

அப்படியென்றால்-

இந்தியாவில் வழக்குடிய பிற மொழியினருக்கு- பிற தேசிய இனங்களுக்கு வழங்கப்படுகிற உரிமைகள் ஏன் தமிழனுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது?

அப்படியென்றால்

தமிழர்கள் இந்தியாவின் இரண்டாம்தர குடிமக்களா?

இரண்டாம்தர குடிமக்களா நாங்கள்?

எங்களின் இரத்தத்தின் இரத்தங்கள்- உறவினர்கள்-வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறவர்கள் இங்கே உள்ளவர்களைச் சந்திக்க வருவது என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

இந்தியா ஒரு நாடு என்று எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?

இதுதான் தேசிய ஒருமைப்பாடா?

பக்கத்திலே கர்நாடகத்திலே நடிகர் ராஜ்குமார் இறந்துபோனார்- வருத்ததிற்குரிய ஒன்று. அவர் இறந்து போனதற்கும் அங்கே வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?

அன்று நானும் நண்பர் கொளத்தூர் மணியும் கல்யாணியும் நக்கீரன் கோபாலும் சுகுமாரும் போயிருக்காவிட்டால்....

இந்த தமிழர்களுக்கு என்றுதானே ராஜ்குமார் உயிரை மீட்டுக் கொண்டு வந்தோம்.

அதற்கு நீங்கள் செலுத்துகிற நன்றிக் கடன் இதுதானா? என்ன நியாயம் இது?

இந்திய அரசாங்கத்தில் இருக்கிறவர்கள் எத்தனை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்-

கோவாவிலே பல ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு மொழிக் கலவரம் நடந்தது. கொங்கணி பேசுகிற மக்களுக்கும் மராட்டிய மற்றும் கன்னட மொழி பேசுகிற மக்களுக்கும் அங்கே மோதல் வந்தது.

அம்மோதலில் கன்னட மொழி பேசியவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

அப்போது கர்நாடகத்தின் முதல்வராக இருந்த குண்டுராவ், பிரதமர் இந்திராகாந்திக்கு அன்று என்ன சொன்னார்?

நீங்கள் உடனடியாக இராணுவத்தை அனுப்பி பாதுகாக்காவிட்டால்- நான் என் காவல்துறையை அனுப்புவேன் என்றார். பதறிப்போன இந்திராகாந்தி அடுத்த நாள் இராணுவத்தை அங்கே அனுப்பினார்-கலவரம் ஒடுக்கப்பட்டது.

இன்று பெங்களுரிலே தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்- திருகோணமலையிலே நம்முடைய தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்.

ஏன் என்று கேட்க வேண்டிய இந்தியரசு வாளாதிருக்கிறது என்று சொன்னால்

அதை எத்தனை நாள் நம்முடைய தமிழ்ச் சமுதாயம் சகித்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

இதையெல்லாம் நாங்கள் கேட்டால் உனக்கு வாய்ப்பூட்டு என்று சொல்கிறீர்கள்.

சரி, வாய்ப்பூட்டு போடுங்கள்.

என்று வாய்ப்பூட்டுத் திறக்கப்படுகிறதோ அன்றும் இதையேதான் பேசுவோம்.

அதனால் நாங்கள் ஓய்ந்துபோய்விடுவோம் என்று நினைப்பீர்களானால் நீங்கள் ஏமாளிகளாவீர்கள்.

ஓவியர் புகழேந்தி தனது நூலில் தமிழீழப் பகுதிகளில் அம்மக்கள் படுகின்ற துயரங்களைப் பதிவு செய்துள்ளார்.

அந்தத் துயரங்கள் குறைவதற்கு பதிலாக மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்- எத்தனையோ வேறுபாடுகளும் மோதல்களும் இருந்தாலும் அதற்கு அப்பாலும் ஒன்றுபட்டு நின்று நம்முடைய தமிழர்களுக்காக குரல் கொடுக்க தயராக வேண்டும்.

அப்போதுதான் டில்லியிலே இருப்பவர்களின் செவிகளிலே அது ஒலிக்கும். அப்போதுதான் செயற்படுவார்கள். இல்லையெனில் செயற்படமாட்டார்கள். அவர்களுக்கு அக்கறை இல்லை.

நான் மீண்டும் நம் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீங்கள் தயவு செய்து அங்கே திருகோணமலையிலே நடைபெறுகிற இந்தக் கலவரம் என்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் வேண்டும் என்று எச்சரிக்க வேண்டும்.

உடனடியாக நம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அழைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் செவிசாய்க்க வேண்டும். இது உங்கள் கடமை. அந்தக் கடமையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் பழ. நெடுமாறன்.

தமிழீழத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகள் மற்றும் தமிழீழ நிலைமைகளை தனது புத்தகத்தில் ஓவியர் புகழேந்தி பதிவு செய்துள்ளார். இந்நூலை இயக்குநர் மணிவண்ணன் வெளியிட்டார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பெ. மணியரசன், தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, இயக்குநர் சீமான் ஆகியோர் நூல் பற்றி கருத்துரை ஆற்றினர்.

Wednesday, April 12, 2006

போலி டோண்டுவும் சில உண்மைகளும்

நேற்று இரவு எங்கள் சக வலைப்பதிவாளர் திரு டோண்டு அவர்களை பத்திரிகையாளர் ஒருவர் சந்தித்து உரையாடுகிறார். அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதிமட்டும் இங்கு.

பத்திரிகையாளர்: வணக்கம் ஐயா,
டோண்டு: வணக்கம் தம்பி.

பத்திரிகையாளர்: நேற்று மதியத்துக்குப்பின் பல நாடுகளில் தமிழ்மணத்திரட்டி வேலை செய்யவில்லை. ஏதோ சிக்கல் நடந்துள்ளது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

டோண்டு: ஆம்! நானும் பார்த்தேன். இது நிச்சயம் அந்த மனம்பிறழ்ந்தவனின் வேலைதான். அவனை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

பத்திரிகையாளர்: யாரைச் சொல்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லையே?

டோண்டு: அவன்தான் போலிடோண்டு. உங்களுக்குத் தெரியாதா? பிரபல முன்னணி பின்னணிப் பத்திரிகையிலெல்லாம் வந்ததே. என்னோட போட்டோவைக் கூடப் போட்டிருந்தார்களே? நீங்கள் படிக்கவில்லையா?

பத்திரிகையாளர்: இல்லை. நான் படிக்கவில்லை.
டோண்டு: அச்சச்சோ! நீங்கள் வாழ்க்கையின் கால்வாசியை இழந்துவிட்டீர்கள்.

பத்திரிகையாளர்: அப்படியென்ன விசேசம்? சரி. அதைவிடுங்கள். அவன்ஏன் தமிழ்மணத்தை நிறுத்துகிற அளவுக்குப் போகவேண்டும். இது சரியாகப்படவில்லையே?

டோண்டு: இல்லை. சரிவரும். தமிழ்மண காசிகூட அவனுக்கெதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்தக் கோபத்தில் அந்த மனம் பிறழ்ந்தவன் அப்படிச் செய்திருக்கக்கூடும். அதுமட்டுமல்ல. இப்போது வேறுபல இணையத்தளங்களிலும் அவன் ஆபாசமாக எழுதுகிறான். அது அந்தப் போலிடோண்டுதான். எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆறு வருடங்களுக்கு முன்பேயே அவன் தன் வேலையைத் தொடங்கிவிட்டான். கொழும்பில் சக்தி எப்.எம் என்ற பண்பலை வானொலியில் ஒருவன் தொலைபேசி உரையாடலில் வந்து கெட்ட வார்த்தைகள் பேசிச் சென்றான். நினைவிருக்கிறதா? அவன்தான். அவனேதான் அந்தப் போலிடோண்டு. அப்போதே அவனைப்பிடித்த்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. அதைவிட.....

பத்திரிகையாளர்: போதும்போதும். எனக்குத் தலைசுற்றுகிறது. பிறகு சந்திப்போம்.
**********************************

கொழுவியும் இன்னொரு சகவலைப்பதிவாளரும் நேற்றிரவு தூதுவனில் அரட்டையடித்தார்கள். அதிலிருந்து ஒரு சம்பவம்.

வழக்கமாக எப்போதுமே ஒருங்குறியில் தட்டச்சும் கொழுவி நேற்று பாமினியில் தட்டச்சுகிறான். அப்போது,

வலைப்பதிவாளர்: என்ன கொழுவி, உம்மட யுனிக்கோட்டுக்கு என்ன நடந்தது?
கொழுவி: என்ன கோதாரியோ தெரியேல. இகலப்பை சரியா வேலை செய்ய மாட்டன் எண்டுது.

பிறகு சிலநேர அரட்டைக்குப்பிறகு அந்த வலைப்பதிவாளர் ஒரு ஒலிக்கோப்பு ஒன்றை அனுப்புகிறார். அதைக்கேட்டுக் கருத்தைச் சொல்லும்படி கேட்கிறார்.

கொழுவி: ஐசே. இப்ப என்னால கேக்க ஏலாது. நாளைக்குக் கேட்டிட்டுச் சொல்லிறன்.
வலைப்பதிவாளர்: என்னப்பா? யுனிகோட் வேலைசெய்யுதில்லையெண்டு சொன்னீர். இப்ப கேக்க ஏலாது எண்டுறீர். உந்தப் போலி டோண்டுவின்ர வேலைதான் உதெல்லாம். அவனிட்டக் கவனமாயிரும். கண்டபடி அங்க இஞ்சயெண்டு போய் பின்னூட்டம் போடாதையும்.

எண்டு பெரிய அட்வைஸ்.
*********************************
டோண்டுவுடனான சந்திப்பு கற்பனையே. ஆனால் இரண்டாவது அரட்டைச் சம்பவம் முற்றிலும் உண்மை. அச்சம்பவத்தின்பின்தான் இப்படியொரு பதிவுபோட வேண்டுமென்று தோன்றியது.

பத்தாயிரக்கணக்கில் (இலட்சக்கணக்கில்?) விற்பனையாகும் வெகுசனப் பத்திரிகையிலேயே வந்துவிட்ட, சர்வதேச மட்டத்தில் தோண்டித்துருவப்படப் போகிற(தாகச் சொல்லப்படும்), வலைப்பதிவுகளில் கிழிந்து நாராகிப்போன-போய்க்கொண்டிருக்கிற ஒரு விசயத்தைப் பற்றி நானும் என் பங்குக்கு ஒரு பதிவாவது போடாட்டி என்ன பெரிய கொழுவி நான்? பேருக்கே மரியாதையில்லாமப் போயிடும்.

நன்றியுடன்
-கொழுவி-