Sunday, May 29, 2005

கவிதைத் தவறணை

இன்றைய கவிதைத் தவறணையில் புதிதாக வடிகட்டி வந்திருக்கும் கவிதைக் கள்ளு புதியவனுடையது. மிக அருமையாக கவி வடிக்கும் அவரது எழுத்துக்கள்

அற்புதமானவை.

ஆச்சரியமானவை.

இயல்பானவை..

ஈ...ஈ...ஈ... (ஈயன்னாவில ஒரு சொல்லும் மாட்டுப்படேல்ல எண்ட படியாலை..)

உயர்வானவை..

ஊக்கம் தருபவை..

எழுச்சி கொள்ள செய்பவை..

ஏக்கம் தருவன..

இப்படி அவரது கவிதைகளை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் தமது கவிதைகளை அனுப்பி இன்று முதல் எமது கவிதைத் தவறணையில் இணைந்து கொள்கிறார். வாருங்கள் அவரது கவிதைக் கள்ளைக் குடிச்சு மயங்கி கிறங்கி போவோம்.

இதோ அவரது காதல் ரசம் சொட்டும் கவிதை. தொடர்ந்தும் அவரை எமது கவிதைத் தவறணைக்கு வரவேற்போம்.

(இந்த கவிதையை மன்னவனின் குரலில் ஒலிப்பதிவு செய்ய முயற்சித்தும் முடியவில்லை)

மீண்டும் சாவேன்

Image hosted by Photobucket.com

நீ இல்லையென்றால்..
நான் செத்து விடுவேன்..

நான் செத்துவிட்டால்
நீ அனாதையாகி விடுவாய்..
நீ அனாதையாகினால்..
நான் மீண்டும்
செத்து விடுவேன்.

(இக் கவிதைத் தவறணையில் கள்ளுக்குடித்தவர்கள் கீழே நட்சத்திரக்குறி இருக்கிறது. அதில சக என்பதை அமத்தி செல்லவும்.)

Thursday, May 26, 2005

என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி

அன்பு வலைப்பதிவு நண்பர்களே,

இப்போதெல்லாம் சில பதிவுகளில் என் பெயரைத் தாங்கி ப்ளாக்கர் பின்னூட்டங்கள் வருகின்றன.

அந்த பின்னூட்டங்களை நான்தான் இட்டேன் என்பதையும் எனது பெயரை பாவித்து எவரும் அவற்றை இடவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, May 22, 2005

தரகு முதலாளித்துவமும் மனைவியும்.

அப்பப்பா என்ன வெயில்?
இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.

என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

நாம் எவ்விடமும் சுத்தவில்லை. நேரே சந்தைக்கு மட்டுமே போய் வருகிறோம். மனிதர்கள் நாங்கள் படும் வேதனை உங்களுக்கெங்கே தெரியப் போகிறது? சந்தைக்குச் செல்வதிலுள்ள இடர்பாடுகளும், குட்டி முதலாளிகளுடன் பேரம்பேசிப் பொருட்கள் வாங்க நாங்கள் படும்பாடுகளும் சொல்லுந்தரமன்றென்று நாம் அடிக்கடி இயம்புவது உங்கள் செவிட்டுக்காதுகளுக்கு ஒருபோதும் விளங்காதென்பது எமக்குத்தெரியாததல்லவென்பது நன்றாகத் தெரிந்தும் வேண்டுமென்றே சீண்டவும் கோபமேற்றவும் இயம்பப்படும் வார்த்தைகளுக்கு நாம் கொள்ளும் பொருளென்னவென்பது தெரியாமல் வினவுவதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் வஞ்சகப்புத்திகளிற்றாம் நாம் தெளிவுறுகிறோமென்பதைச் சொல்….

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?

நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.

நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள். அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?

ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…

போதும். போதும்…
அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?

இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.

எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?


பிரச்சினைகள் எங்குதானில்லை? மனித இனம் தோன்றினதிலிருந்தே தொடங்கிவிட்ட உற்பத்திகளின்மீதான சொந்தம் கொண்டாடும் சண்டைகளின் தொடர்ச்சியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் உற்பத்திகளின் மீதான வன்முறையின் தொடர்ச்சியே தாம் இத்தகைய பிரச்சினைகள் என்று நாம் சொல்லும்போது, இப்பிரச்சனையின் வேர்களையும் அறிந்தாற்றான் நிவர்த்திகளும் செய்யமுடியுமென்பதைத் தெளிவாகப்புரிந்துகொண்டு புதிய ஜனநாயகப்புரட்சிக்குப் புத்தொளிபாய்ச்சி அப்போராட்டத்தை தரகுமுதலாளிகளை நோக்கிப் பாய்ச்ச வேண்டிய தேவையையும் எம் தோழர்களுக்கு நாம்தாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். பொருள்முதல்வாதக்கொள்கைளைச் சரியாகப்புரியாமற்றான் இன்று தரகுமுதலாளிகளுக்கெதிரான போராட்டத்திற்குத் தேவையான மூலதனத்தைத் திரட்ட முடியாமற்றுன்பப்படுகிறோம். மூலதனமுடக்கலென்பதுத் திட்டமிட்டு பாட்டாளிகள்மேற் செலுத்தப்படும் வன்முறையென்பது தெரிந்தும் எம் தோழர்கள் காக்கும் மௌனம் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கதென்றாலும் இது பாசிசத்தின் விளைவானவொன்றென்பது தெரிந்தாலும் மானுடத்துக்கெதிரானவொருவுத்தியென்பதுப் புரிந்தாலும் தொழிற்றுறைக்கும் மானுடத்துக்குமெதிரான நிலையென்பதறிந்தாலும் பொருளாதாரப்பொறிமுறையின் மீதான அடக்குமுறைக்கெதிரானதென்பதுணர்ந்தாலும் கனிவளச்சுரண்டலையும் இத்தோடிணைத்துப்பார்க்க வேண்டிய தேவையிருப்பதாலும் ஆழ்ந்து சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுண்டு.

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?

நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும்.
நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…

ஆராவது சொல்லியிருப்பினம்.
எனக்கெதுக்கு அதெல்லாம்.
நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம்.
சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

அம். இதுதாம் தரகுமுதலாளிகளினதும் பூர்சுவாக்களினதும் பொறிமுறை. உழைக்கும் மக்களுக்கு உணவை மறுத்து அவர்களை அடிப்பணிய வைத்து அவர்களின் சிந்தனையை முடக்கும் பொறிமுறை, மனித விழுமியங்களைப் பொசுக்கும் பாசிசம், அடக்குமுறை, ஏகாதிபத்தியம். இதைத் தீர்த்துக்கட்டத்தான் அறிவுஜீவிகள் எல்லாரும் சேர்ந்து உளமொப்பிய புதிய ஜனநாயகப்புரட்சி தொடங்கு.. க்கே…க்கே…க்கே...

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.

இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாரும்.


------------------------------------------------
கொள்கைகள் 'மறுவாசிப்பு'ச் செய்யப்படவில்லை, மொழிப்பாவனை மட்டுமே.
------------------------------------------------


வெட்ட வெட்டத் தழைக்கும்

யாரோ ஒருவன்
அப்பிய நரகலுக்கு
அடிவாங்கிய பாவி நான்.
மணத்தினின்று
தூக்கப்பட்டவன்.
மனத்தால்
வஞ்சகம் நினையாதவன்.

மூலத்தை அள்ளாமல் -வெறும்
கூழத்தை அள்ளியவரே!
வெட்ட வெட்டத் தழைக்கும்
என் தலை,
கிளை.

கொழுவுதலும் தழுவுதலும்

கொழுவுதலும் -பின்
தழுவுதலும்
மனிதரின் குணமாம். - சில
மந்தைகளின் குணமாம்.
ஊடலும் கூடலும் போல.

வணக்கம்

வணக்கம்!

'கொழுவுதலும் தழுவுதலும்' உங்களை அன்புடன் வரவேற்கிறது.
'படைப்புக்களை'ப் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லிப்போங்கள்.