Sunday, April 30, 2006

ஒட்டுப்படை முகாம் தாக்கியழிப்பு

எதிர்பார்த்தது போலவே நடந்துவிட்டது.
பொலநறுவைப் பகுதியில் அமைந்திருந்த 'கருணா குழு' எனப்படும் துணைஇராணுவக் குழுவின் முகாம் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் கவனத்தைப் பெற்ற விடயம் இதுவாகும். ஒரு செய்திநிறுவனம் நேரடியாகச் சென்றுகூட முகாமைப் பார்வையிட்டதுடன் பகிரங்கமாக வெளிப்படுத்தியும் இருந்தது. ஆனால் இன்றுவரை அரசதரப்பு அதை மறுத்தே வந்துள்ளது.

தமிழர் தரப்பில் பத்திரிகையாளர்கள், புத்திசீவிகள் கொல்லப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளில பலர் கொல்லப்பட்டதற்கும் இக்குழுவே காரணமென்று கூறப்பட்டுவந்ததுடன், பலவற்றை அவர்களே ஒப்புக்கொண்டும் இருந்தனர்.

இவ்வளவு நாளும் இம்முகாம் மீது தாக்குதல் நடத்தப்படாதது பலருக்கு ஆச்சரியமாகவே இருந்திருக்கும். ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதற்காகப் பொறுத்திருக்கலாம். அண்மைய சம்பூர் முப்படைத் தாக்குதலின்பின் நிலைமை மாறிவிட்டது போல் தோன்றுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை இம்முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலதிக செய்திகள் கிடைக்கவில்லை.

செய்தி: புதினம்

Saturday, April 15, 2006

சிறிலங்காவை இந்திய பிரதமர் எச்சரிக்க வேண்டுகோள்

திருகோணமலையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா அரசாங்கத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஓவியர் புகழேந்தியின் "தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும்" நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொதுக்கூடங்களில் உரையாற்றுவதற்கும் ஊடகங்களில் நேர்காணல் அளிப்பதற்கும் இந்திய, தமிழக அரசாங்கங்கள் தடைவிதித்து வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டிருந்தன.

அண்மையில் குறிப்பிட்ட காலத்துக்கு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற பழ.நெடுமாறனுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிமன்ற அனுமதிக்குப் பின்னர் நேற்றைய நிகழ்வில் பழ. நெடுமாறன் பங்கேற்றார்.

ஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீட்டு விழா நிகழ்வுக்குத் தலைமை வகித்து பழ.நெடுமாறன் ஆற்றிய முழு உரையின் எழுத்து வடிவம்:

நமக்கு அருகாமையில் 20 மைலுக்கு அருகில் இருக்கும் நம்முடைய சகோதரர்கள், நம்முடைய தமிழீழ மக்கள் அங்கே நடத்தி வருகிற போராட்டத்தை, அதனது விளைவுகளை அந்த மக்களின் சொல்லொண்ணாத் துயரங்களை ஓவியங்களாக வடித்து இங்கே தமிழகத்திலும் இந்தியாவின் பிற்பகுதிகளிலும் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் கண்காட்சிகளாக நடத்தி இருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

ஆனாலும் எந்த மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தை ஓவியங்களாக வரைந்தாரோ அந்த மக்கள்- தமிழீழ மக்கள் அவரது ஓவியங்களைப் பார்த்து மகிழக் கூடிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையும் சென்ற ஆண்டு தீர்ந்தது.

இங்கிருந்து தமிழீழத்துக்கு அந்த ஓவியங்களை எடுத்துச் சென்று, எந்த மக்களின் துயரங்களை ஓவியமாக வடித்தாரோ எந்த மக்களினது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை ஓவியங்களாக வடித்திருக்கிறாரோ அந்த மக்கள் முன்னாலே அவர் வைத்து அவர்களின் ஆதரவைப் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

அந்த மக்களின் போராட்டத்தை நேரில் சென்று பார்த்து முழுமையாக அறிந்து கொண்டதோடு சமூகப் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டு வந்து நூலாகவும் வடித்திருக்கிறார்.

20 ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடந்தன. அந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானது வியட்நாம் விடுதலைப் போராட்டம். அந்தப் போராட்டம் பற்றி ஆங்கில மொழியிலும் பிறமொழியிலும் ஏராளமான நூல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல் சீனத்திலே மாபெரும் தலைவர் மாவோவின் தலைமையில் நடைபெற்ற மகத்தான போராட்டம் பற்றி எத்தனையோ நூல்கள் வெளிவந்திருக்கின்றன. எத்தனையோ வெளிநாட்டவர்கள் வியந்து அதைப் பற்றி எழுதி இருக்கின்றனர்.

யாசீர் அரபாத் தலைமையிலேயே பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றியும் அதனது விளைவுகள் பற்றியும் ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன.

அதைப் போலவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஏராளமான நூல்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளன.

ஆனால் அந்த நூல்களை எல்லாம் இந்த தமிழ்நாட்டு மக்கள் அறியாதபடி இங்கே சட்டங்கள் தடுக்கின்றன.

நான் எழுதிய நூல்களுக்கும் தடை- வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கெடுபிடிகளுக்குக் கொஞ்சமும் அஞ்சாமல் அந்த மண்ணிற்குச் சென்று, அந்த வீரஞ்செறிந்த மண்ணிலே சுற்றி வந்து, மக்களைப் பார்த்து, அவர்களது துயரங்களையெல்லாம் அறிந்துவந்து அதையெல்லாம் ஒரு நூலாக இந்தக் கால கட்டத்திலே வடித்திருப்பது என்பது சிறப்பானது மட்டுமல்ல-துணிவுமிக்கதும் ஆகும்.

எந்தத் தமிழீழ மக்களுக்காக அங்கு சென்று ஓவியக் கண்காட்சிகளை நடத்தியதோடு அந்த மக்களினது நிலைமைகளைப் பற்றிய உண்மைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று அவர் வெளியிட்டிருக்கிற இந்தத் தருணத்தைவிட, அங்கே தமிழீழத்தில் இருந்து வரக்கூடிய செய்திகள் நம்முடைய நெஞ்சைப் பிளக்கின்றன.

தமிழீழத்தின் திருகோணமலையில் சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தின் விளைவாக 19 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல எது எது தமிழரின் வியாபார, வணிக நிலையங்களோ அதையெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

அங்கே ஒரு பெரிய இனவெறிக் கலவரம் இராணுவத்தினாலும் அரசாங்கத்தாலும் அங்கே ஏற்பட்டிருக்கிறது. அங்கே மக்கள் சொல்லொண்ணா பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஜெனீவாவிலே பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தை விளைவாக சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் நடைபெறக் கூடிய நிலையில் இனவெறிக் கலவரத்தை மீண்டும் திட்டமிட்டுத் தொடங்கியிருக்கிறார்கள் எனில் அவர்களுக்கு சமாதானத்தில் நம்பிக்கை இல்லை என்பதுதான் இதன் மூலம் தெரிகிறது.

உலக நாடுகளை ஒரு பக்கம் ஏமாற்றிக் கொண்டு மற்றொரு பக்கத்தில் திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். உலகம் இதை உணர வேண்டும்.

குறிப்பாக

இந்திய அரசு இதை உணர வேண்டும்.

அதிலும் நீங்கள் பார்த்தால் திருகோணமலையில் மட்டுமல்ல- அருகிலே உள்ள சம்பூரில் சிங்களக் கடற்படையினர் ஏவுகணைகளை ஏவி கிராமத்தைத் தாக்கியுள்ளது. வீடுகள் பற்றி எரிந்திருக்கின்றன. 2 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கலவரச் சூழ்நிலையில் அங்கே திருகோணமலையிலே தமிழ் மக்கள் பேரவைத் தலைவராக இருக்கக் கூடிய வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், இலங்கை வங்கிக்குப் போகிறார்.

திருகோணமலையில் அந்த வங்கி எங்கே அமைந்திருக்கிறது எனில்-

இரண்டு பக்கமும் இராணுவ சோதனைச் சாவடிகள்-

அந்த வங்கிக்கு எதிரே திருகோணமலை துறைமுக காவல்நிலையம்-

அதற்கு பக்கத்திலே கடற்படைத் தலைமை அலுவலகம்-

இவ்வளவும் இருக்கக் கூடிய அந்த இடத்தில் அவர் வங்கிக்குப் போகிறார்- வங்கியிலே நுழைகிறார்- வங்கியிலேயே வைத்து அவரை சுட்டுத் தள்ளுகிறார்கள்.

வெளியே இராணுவம், காவல்துறை இருக்கிறது. எதிரிலே காவல்நிலையம் இருக்கிறது. ஆனால் சுட்டவர்கள் வங்கிக்குள்ளேயே ஓடுகிறார்கள். வங்கிக்குப் பின்னாலே சிங்கள இரகசியப் பிரிவு காவல்துறையின் அலுவலகம் உள்ளது. அதற்குள் ஓடி ஒளிகிறார்கள்.

இன்று வரை அந்தக் கொலையாளிகளைப் பிடிப்பதற்கோ யார் என்று அறிவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

திட்டமிட்டு சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்கிறது.

எதனால் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்படுகிறார்?

அண்மையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் கிறிஸ்மஸ் அன்று தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும்போது அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு வன்னியசிங்கம் விக்னேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட இருந்தது. அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அவரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக ஒழித்துக் கட்டியிருக்கிறார்கள்.

திருகோணமலை முழுவதுமே தமிழர் பகுதியிலே அமைந்திருக்கக் கூடிய இயற்கையான துறைமுகம். நீண்ட நெடுங்காலமாக அந்தத் திருகோணமலை துறைமுகத்தின் மீது அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருக்கிறது.

அமெரிக்காவின் கடற்படையை அங்கே நிறுவ தொடர்ந்து முயற்சிகள் நடந்தன.

ஒருகாலத்திலே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கடற்படைத் தளமாக அது இருந்தது-அவர்கள் ஆண்ட காலத்தில்.

ஆனால் அதற்கு முன்னால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இராசேந்திர சோழனின்-சோழர்காலத்தில் திருகோணமலை கடற்படைத் தளமாக இருந்தது.

நமக்குச் சொந்தமான அந்தத் துறைமுகத்தை ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா விரும்புகிறது. அன்று இந்தியாவின் எதிர்ப்பு இருந்த காரணத்தால் அமெரிக்க கடற்படைத் தளம் அங்கே வரவில்லை.

சிங்கள அரசு என்ன நினைக்கிறது?

இந்தக் கடற்படைத் தளம் நமக்கு உபயோகப்படாது- இது தமிழர் பகுதியில் இருக்கிறது. ஆகவே இதை அமெரிக்காவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அங்கே வந்து உட்காரும்.

அதன் பின்னர் தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு வசதியாக இருக்கும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.

அன்று ஜெயவர்த்தனா அந்நாட்டின் அதிபராக இருந்தபோது திட்டமிட்டு திருகோணமலைப் பகுதியில் சிங்களவர்களை குடியேற்றினார்.

அவர்கள் எத்தகைய சிங்களவர்கள் தெரியுமா?

சிங்களச் சிறைகளிலே பெரிய கிரிமினல் குற்றங்களைச் செய்து நீண்டகாலம் சிறைவாசம் விதிக்கப்பட்டவர்களையெல்லாம் விடுதலை செய்து அவர்களுக்கு நிலம் கொடுத்து நிதி கொடுத்து அங்கே குடியேறச் செய்தனர்.

அவர்களைக் கொண்டு ஊர்க்காவல் படை என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வழங்கினார்கள்.

அவர்களுக்கு வேலை என்ன? அங்கிருக்கக் கூடிய தமிழர்களை எல்லாம் தாக்கி அங்கிருந்து வெளியேற்றுவது, ஓட ஓட விரட்டுவது என்பதுதான்.

இந்த வேலைக்காக சிங்களக் குண்டர்கள் அங்கே குவிக்கப்பட்டார்கள்.

அதுமட்டுமல்ல நண்பர்களே-

திருகோணமலையில் மூன்றில் ஒருபகுதியில் இன்று சிங்களவர்கள் குடியேறியிருக்கிறார்கள்.

இது திருகோணமலை முழுமையாக சிங்களர்களின் சிக்கினாலும் அமெரிக்க கடற்படை தளம் அங்கு அமைந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு வருகிற அபாயத்தை விட இந்தியாவுக்குப் பேராபயம் என்பதை டில்லியில் உட்கார்ந்திருப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

யாருக்கோ நடக்கிறது? அங்கிருக்கிற ஈழத் தமிழர்களுக்குத்தானே இந்த சங்கடம் என்று எண்ணி டில்லியில் இருப்பவர்கள் பேசாமலிருப்பார்களேயானால்

அது

இந்தியாவுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1982 ஆம் ஆண்டு நான் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு வந்தேன்.

அதற்கு முன்னர் ஆண்டு யாழ்ப்பாணத்திலே மிகப் பெரிய நூலகத்தை சிங்கள இராணுவம் கொளுத்தியது. அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களைக் கொல்லலாம். ஆனால் எதற்காக நூல் நிலையத்தைத் திட்டமிட்டு கொளுத்தினார்கள்? அழித்தார்கள்? அதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் இங்கிருந்து இலங்கைக்குப் போனேன்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் என்னை அழைத்துக் கொண்டு போய் எரிந்து போன நூல் நிலையத்தைச் சுற்றிக் காட்டினார்.

ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையமாக அது திகழ்ந்தது. மறைந்த அறிஞர் ஆனந்தகுமாரசாமி பற்றி எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் சிலருக்காவது தெரிந்திருக்க வேண்டும்.

அவர் மிகப் பெரிய அறிஞர்- உலகம் முழுமையும் சுற்றியவர். அமெரிக்காவின் அருங்காட்சியகம் ஒன்றுக்கு அதிகாரியாகப் பணியாற்றியவர். அவர் உலகம் முழுமையும் சென்று சேகரித்த அரிய ஓலைச்சுவடிகள், நூல்களை அந்த நூலகத்துக்குக் கொடுத்திருந்தார்.

8 இரும்பு பீரோக்கள் நிறைய அவர் கொடுத்த ஓலைச்சுவடிகளும் நூல்களும் நிறைந்திருந்தன. நான் சென்று பார்த்தபோது அவ்வளவும் பொசுங்கி சாம்பலாகிக் கிடந்தது.

அவர்களுக்கு தமிழர்களை இனப்படுகொலை செய்வதை விட தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்களை அழிப்பதில் வெறி இருந்தது. அதன் விளைவாக அந்த நூலகம் அடியோடு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

இதை ஏன் சொல்லுகிறேன் எனில்-

அதைப் பற்றி அறிந்துவந்து பிரதமர் இந்திராகாந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினேன்.

"திருகோணமலையில் நான் சென்று பார்த்தபோது பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். எதற்காக என்பதற்கு எனக்குத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக கட்டடங்கள் கட்டப்படுவதாக அந்த மக்கள் சொல்லுகிறார்கள்- அமெரிக்கா மெதுவாக அங்கே நுழைய முயற்சிக்கிறது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அதிலே கூறினேன்.

அப்போது மதிப்பிற்குரிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் இதைப் பற்றி சொன்னேன். என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டார்.

இங்கிருந்து ஒரு அனைத்துக் கட்சி தூதுக் குழு டில்லிக்குச் சென்று பிரதமர் இந்திரா காந்தியிடம் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும் என்று நான் சொன்ன போது அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் அவர் தலைமையிலேயே ஒரு தூதுக்குழுவாக டில்லி சென்றோம். பிரதமர் இந்திராகாந்தியிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்தோம்.

அதிகாரப்பூர்வமாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்ட மனு ஒன்று இந்திராவிடம் கொடுக்கப்பட்டது.

அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பிரதமர் இந்திராகாந்தி அறிவிக்கிறார்-

இலங்கையின் எந்தப் பகுதியிலும் இந்து மா சமுத்திரத்தின் எந்தப் பகுதியிலும் எந்த வல்லரசு முயற்சி செய்தாலும் அது இந்தியாவுக்கு விரோதமான செயலாக நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று எச்சரித்தார்.

அதற்குப் பின்னால் அம்முயற்சி நின்றது. ஆனால் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்கள். அதற்கு சிங்கள அரசு ஒத்துழைக்கிறது.

நான் நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை மிக்க பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள இந்த கலவரம்- அதுவும் சமாதான பேச்சுவார்த்தை- சர்வதேச சமூகத்தின் உதவியோடு வற்புறுத்தலின் பேரில் ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னால் இப்படி ஒரு கலவரத்தை நடத்துவார்கள் என்று சொன்னால்,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட இருந்தவரை சுட்டுக்கொலை செய்வார்கள் என்று சொன்னால்-

சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தச் சூழலில் எப்படி நடத்த முடியும்?

ஏதாவது ஒரு வேண்டாத சூழ்நிலையை ஏற்படுத்தி, விடுதலைப் புலிகள் எப்போதும் இப்படித்தான்-அவர்கள் எப்போதும் சமாதானத்துக்கு வரமாட்டார்கள் என்று அவர்கள் மீது பழியைப் போட திட்டமிட்ட இனப்படுகொலையைத் தொடர முயற்சிக்கிறார்கள்.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தப் பிரச்சனையிலே ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.

இந்தக் குரல் கொடுத்தால் இந்திய அரசு இந்தப் பிரச்சனையிலே எந்த அளவு கவனம் செலுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்திய அரசு இந்தப் பிரச்சனையிலே அது இரண்டும் கெட்டான் நிலைப்பாடாக இருக்கிறது. அது ஈழத்தமிழர்களுக்கும் உதவாது. இந்தியாவுக்கும் உதவாது.

அங்கே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகாலத்துக்கும் மேலாக இப்பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நோர்வே நாட்டு மத்தியஸ்த்துடன் நடக்கிறது.

யார் இந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்கிறார்களோ அந்த நார்வே நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள் இங்கே டெல்லிக்கு வருகிறார்கள். பிரதமரைச் சந்திக்கிறார்கள்- வெளிநாட்டு அமைச்சரைச் சந்திக்கிறார்கள்- அதிகாரிகளைச் சந்திக்கிறார்கள். இவர்களது ஆலோசனகளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் கொழும்புக்குப் போகிறார்கள்.

இந்தியாவின் சம்பந்தம் இல்லாமல் நாம் தனியாக இந்தப் பிரச்சனையில் செயற்படக் கூடாது என்று நோர்வே நினைத்து ஒவ்வொரு கட்டத்திலும் என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது? நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள்? எனக் கேட்டு அவர்கள் செய்கிறார்கள்.

கொழும்பிலிருந்து சிங்கள அரசு தலைவர்கள் சந்திரிகாவாக இருந்தாலும் ரணிலாக இருந்தாலும் ராஜபக்சவாக இருந்தாலும் டில்லிக்கு வருகிறார்கள். பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். அவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லுகிறார்கள்.

அதுமட்டுமல்ல நண்பர்களே-

இந்தியா இந்த பிரச்சனையிலேயே என்ன செய்திருக்க வேண்டும்?

நோர்வே தரப்பு அவர்களது கருத்தைச் சொல்லிவிட்டார்கள்-

சிங்களத் தரப்பு அவர்களது கருத்தைச் சொல்லிவிட்டார்கள்-

இன்னொரு தரப்பு இருக்கிறதே.. தமிழர் தரப்பு.. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டா? இல்லையா?

சரி விடுதலைப் புலிகளைத்தான் சந்திப்பதில் தயக்கம் இருக்கிறது. சரி அந்த இயக்கத்துக்குத் தடை விதித்து இருக்கிறீர்கள். எப்படி அழைத்துப் பேசலாம் என்று ஒரு சாக்கு சொல்லலாம்.

அதுகூட உண்மை அல்ல.

நாகாலாந்திலும் காசுமீரிலும் இந்திய அரசு தடை செய்த இயக்கங்களின் தலைவர்களை இந்திய இராணுவ விமானங்களிலே அழைத்துக் கொண்டு வந்து அவர்கள் சுவிட்சர்லாந்துக்கோ ஜப்பானுக்கோ உங்கள் விமானத்திலே அழைத்துச் சென்று இந்தியப் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது நீங்கள் பேசவில்லையா?

இந்தியாவுக்குள்ளேயே அவர்களை அழைத்துப் பேசவில்லையா?

இதே மன்மோகன்சிங் பேசவில்லையா?

ஏன் இவர்கள் விடயத்தில் மட்டும் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயற்படுகிறீர்கள்?

சரி, விடுதலைப் புலிகளுடன் நீங்கள் பேசுவதில் உங்களுக்குப் பல சிக்கல்கள் இருக்கின்றன.

ஆனால்

இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். 20 பேருக்கும் மேல் இருக்கிறார்கள்.

கடந்த இரண்டாண்டு காலத்துக்கும் மேலாக இந்தியாவின் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கிறார்கள். கடிதம் எழுதுகிறார்கள்.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து முறையிடுகிறார்கள். இந்தியாவின் பிரதமரைச் சந்திக்க வேண்டும்- மற்ற தலைவர்களையெல்லாம் சந்திக்க வேண்டும்- எங்களுக்கு நேரம் ஒதுக்கிக் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இரண்டாண்டுகாலமாக நீங்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் சாதிப்பதன் மர்மம் என்ன?

நியாயம்தானா?

சிங்களத் தரப்பு யார் வந்தாலும் பேசுகிறீர்கள்-

அண்மையிலே சிங்கள அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்ச முதன் முதலாக இந்தியாவுக்கு வருகிறார்- 30-க்கும் மேற்பட்ட பெரிய குழுவுடன் வருகிறார்.

அந்தக் குழுவில் இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிற ஜே.வி.பி. இயக்கத்தைச் சேர்ந்தவரும் அந்தக் குழுவிலே வருகிறார். அதாவது 30 பேரில் அவரும் ஒருவர்.

இந்தியாவுக்கு எதிராகச் செயற்படுவது-

இந்தியா பிராந்தியத்திலே வல்லாதிக்கப் போக்கிலே நடக்கிறது என்று இந்தியாவை எதிர்க்கிறவர் இங்கே வருகிறார்.

அவரையும் நம்முடைய பிரதமரும் மற்றவரும் சந்தித்துப் பேசுகிறீர்கள்.

சரி, அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அந்த நாட்டுக் குழுவிலே அவரை சேர்த்துக் கொண்டு வரும்போது நீங்கள் தடுக்க முடியாது.

ஆனால்-

சிங்களத் தரப்பு நியாயத்தைக் கேட்ட நீங்கள்-

மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட நம்முடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்- மக்களிடத்திலே வாக்கு பெற்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாகியிருப்பவர்கள்.

அவர்கள் உங்களை சந்திப்பதற்கு இரண்டாண்டு காலம் முயற்சி செய்கிறார்கள். நீங்கள் எந்த அனுமதியும் கொடுக்க மறுக்கிறீர்களே?

அப்படியானால் நீங்கள் நடுநிலையோடு செயற்படுவதாக எப்படி நாங்கள் நம்ப முடியும்?

அதுமட்டும் அல்ல-

சார்க் நாடுகள்- தென்னாசிய நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் இந்த சார்க் நாடுகளுக்குள்ளேயே சுற்றுப் பயணம் செய்வதற்கு விசா தேவையில்லை என்று முடிவு செய்திருக்கிறார்கள். இன்றைய வரைக்கும் அமுலில் உள்ளது.

ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய நண்பர் ஈழவேந்தன் இந்தியாவுக்கு வந்தபோது, பெங்களுரிலே நாங்கள் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டை நடத்திய போது- அதில் பங்குபெறுவதற்காக வந்த போது சென்னை விமான நிலையத்திலேயே அவரை மடக்கி திருப்பி அனுப்பினீர்களே?

என்ன நியாயம் இது?

எதற்காக அப்படிச் செய்தீர்கள்?

ஏதாவது ஒரு நியாயமான காரணத்தைச் சொல்ல முடிந்தது?

சார்க் நாடுகளின் முடிவையும் மீறி இங்கே இருக்கிற உளவுத்துறை அதிகாரிகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்றால்

டெல்லியிலே இருக்கக் கூடிய அமைச்சர்கள் எதற்காக அந்தப் பதவிகளிலே ஒட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்?

ஒரு தமிழன்- ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் இங்கே உள்ளே தமிழர்கள் நடத்துகிற ஒரு மாநாட்டுக்கு வரும்போது அவரை திருப்பி அனுப்புகிறீர்கள் என்று சொன்னால் என்ன காரணம்?

பக்கத்திலே ஆந்திரா இருக்கிறது.

ஆந்திராவின் தலைநகர் ஐதராபத்திலே உலகத் தெலுங்கு மாநாடு நடத்தினார்கள். தென்னாப்பிரிக்கா உட்பட உலகம் முழுவதிலிருந்தும் தெலுங்கு பேசும் மக்களின் பிரதிநிதிகள் அம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார்கள்.

யாரையாவது திருப்பி அனுப்பினீர்களா நீங்கள்?

பஞ்சாப்பிலே உலக பஞ்சாபி மாநாடு நடைபெற்றது. இத்தனைக்கும் பஞ்சாப் ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிற மாநிலம்.

அமெரிக்காவிலே, கனடாவிலே, ஐரோப்பாவிலே, ஆசிய நாடுகளிலே உள்ள சீக்கியர்களின் பிரதிநிதிகள் எல்லாம் அம்மாநாட்டிற்கு வந்தார்கள்.

யாரையாவது நீங்கள் திருப்பி அனுப்பியது உண்டா?

பக்கத்தில் பெங்களுரிலே உலக கன்னட மாநாடு நடத்தினார்கள். உலகம் முழுவதும் எந்த நாட்டில் வசித்தாலும் கன்னட மொழி பேசுகிறவர்கள் வந்தார்கள். இந்தியாவின் பிரதமரும் போனார்.

அவர்களில் யாரையாவது ஒருவரை நீங்கள் திருப்பி அனுப்பியது உண்டா?

இப்படி வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகலாம்.

அப்படியென்றால்-

இந்தியாவில் வழக்குடிய பிற மொழியினருக்கு- பிற தேசிய இனங்களுக்கு வழங்கப்படுகிற உரிமைகள் ஏன் தமிழனுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது?

அப்படியென்றால்

தமிழர்கள் இந்தியாவின் இரண்டாம்தர குடிமக்களா?

இரண்டாம்தர குடிமக்களா நாங்கள்?

எங்களின் இரத்தத்தின் இரத்தங்கள்- உறவினர்கள்-வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறவர்கள் இங்கே உள்ளவர்களைச் சந்திக்க வருவது என்றால் உங்களுக்கு ஏன் கசக்கிறது?

இந்தியா ஒரு நாடு என்று எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?

இதுதான் தேசிய ஒருமைப்பாடா?

பக்கத்திலே கர்நாடகத்திலே நடிகர் ராஜ்குமார் இறந்துபோனார்- வருத்ததிற்குரிய ஒன்று. அவர் இறந்து போனதற்கும் அங்கே வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா?

அன்று நானும் நண்பர் கொளத்தூர் மணியும் கல்யாணியும் நக்கீரன் கோபாலும் சுகுமாரும் போயிருக்காவிட்டால்....

இந்த தமிழர்களுக்கு என்றுதானே ராஜ்குமார் உயிரை மீட்டுக் கொண்டு வந்தோம்.

அதற்கு நீங்கள் செலுத்துகிற நன்றிக் கடன் இதுதானா? என்ன நியாயம் இது?

இந்திய அரசாங்கத்தில் இருக்கிறவர்கள் எத்தனை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்-

கோவாவிலே பல ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு மொழிக் கலவரம் நடந்தது. கொங்கணி பேசுகிற மக்களுக்கும் மராட்டிய மற்றும் கன்னட மொழி பேசுகிற மக்களுக்கும் அங்கே மோதல் வந்தது.

அம்மோதலில் கன்னட மொழி பேசியவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

அப்போது கர்நாடகத்தின் முதல்வராக இருந்த குண்டுராவ், பிரதமர் இந்திராகாந்திக்கு அன்று என்ன சொன்னார்?

நீங்கள் உடனடியாக இராணுவத்தை அனுப்பி பாதுகாக்காவிட்டால்- நான் என் காவல்துறையை அனுப்புவேன் என்றார். பதறிப்போன இந்திராகாந்தி அடுத்த நாள் இராணுவத்தை அங்கே அனுப்பினார்-கலவரம் ஒடுக்கப்பட்டது.

இன்று பெங்களுரிலே தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்- திருகோணமலையிலே நம்முடைய தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்.

ஏன் என்று கேட்க வேண்டிய இந்தியரசு வாளாதிருக்கிறது என்று சொன்னால்

அதை எத்தனை நாள் நம்முடைய தமிழ்ச் சமுதாயம் சகித்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

இதையெல்லாம் நாங்கள் கேட்டால் உனக்கு வாய்ப்பூட்டு என்று சொல்கிறீர்கள்.

சரி, வாய்ப்பூட்டு போடுங்கள்.

என்று வாய்ப்பூட்டுத் திறக்கப்படுகிறதோ அன்றும் இதையேதான் பேசுவோம்.

அதனால் நாங்கள் ஓய்ந்துபோய்விடுவோம் என்று நினைப்பீர்களானால் நீங்கள் ஏமாளிகளாவீர்கள்.

ஓவியர் புகழேந்தி தனது நூலில் தமிழீழப் பகுதிகளில் அம்மக்கள் படுகின்ற துயரங்களைப் பதிவு செய்துள்ளார்.

அந்தத் துயரங்கள் குறைவதற்கு பதிலாக மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்- எத்தனையோ வேறுபாடுகளும் மோதல்களும் இருந்தாலும் அதற்கு அப்பாலும் ஒன்றுபட்டு நின்று நம்முடைய தமிழர்களுக்காக குரல் கொடுக்க தயராக வேண்டும்.

அப்போதுதான் டில்லியிலே இருப்பவர்களின் செவிகளிலே அது ஒலிக்கும். அப்போதுதான் செயற்படுவார்கள். இல்லையெனில் செயற்படமாட்டார்கள். அவர்களுக்கு அக்கறை இல்லை.

நான் மீண்டும் நம் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

நீங்கள் தயவு செய்து அங்கே திருகோணமலையிலே நடைபெறுகிற இந்தக் கலவரம் என்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் வேண்டும் என்று எச்சரிக்க வேண்டும்.

உடனடியாக நம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அழைத்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் செவிசாய்க்க வேண்டும். இது உங்கள் கடமை. அந்தக் கடமையை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார் பழ. நெடுமாறன்.

தமிழீழத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிகள் மற்றும் தமிழீழ நிலைமைகளை தனது புத்தகத்தில் ஓவியர் புகழேந்தி பதிவு செய்துள்ளார். இந்நூலை இயக்குநர் மணிவண்ணன் வெளியிட்டார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் பெ. மணியரசன், தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, இயக்குநர் சீமான் ஆகியோர் நூல் பற்றி கருத்துரை ஆற்றினர்.

Wednesday, April 12, 2006

போலி டோண்டுவும் சில உண்மைகளும்

நேற்று இரவு எங்கள் சக வலைப்பதிவாளர் திரு டோண்டு அவர்களை பத்திரிகையாளர் ஒருவர் சந்தித்து உரையாடுகிறார். அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதிமட்டும் இங்கு.

பத்திரிகையாளர்: வணக்கம் ஐயா,
டோண்டு: வணக்கம் தம்பி.

பத்திரிகையாளர்: நேற்று மதியத்துக்குப்பின் பல நாடுகளில் தமிழ்மணத்திரட்டி வேலை செய்யவில்லை. ஏதோ சிக்கல் நடந்துள்ளது. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

டோண்டு: ஆம்! நானும் பார்த்தேன். இது நிச்சயம் அந்த மனம்பிறழ்ந்தவனின் வேலைதான். அவனை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.

பத்திரிகையாளர்: யாரைச் சொல்கிறீர்கள். ஒன்றுமே புரியவில்லையே?

டோண்டு: அவன்தான் போலிடோண்டு. உங்களுக்குத் தெரியாதா? பிரபல முன்னணி பின்னணிப் பத்திரிகையிலெல்லாம் வந்ததே. என்னோட போட்டோவைக் கூடப் போட்டிருந்தார்களே? நீங்கள் படிக்கவில்லையா?

பத்திரிகையாளர்: இல்லை. நான் படிக்கவில்லை.
டோண்டு: அச்சச்சோ! நீங்கள் வாழ்க்கையின் கால்வாசியை இழந்துவிட்டீர்கள்.

பத்திரிகையாளர்: அப்படியென்ன விசேசம்? சரி. அதைவிடுங்கள். அவன்ஏன் தமிழ்மணத்தை நிறுத்துகிற அளவுக்குப் போகவேண்டும். இது சரியாகப்படவில்லையே?

டோண்டு: இல்லை. சரிவரும். தமிழ்மண காசிகூட அவனுக்கெதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அந்தக் கோபத்தில் அந்த மனம் பிறழ்ந்தவன் அப்படிச் செய்திருக்கக்கூடும். அதுமட்டுமல்ல. இப்போது வேறுபல இணையத்தளங்களிலும் அவன் ஆபாசமாக எழுதுகிறான். அது அந்தப் போலிடோண்டுதான். எனக்கு நன்றாகத் தெரியும்.

ஆறு வருடங்களுக்கு முன்பேயே அவன் தன் வேலையைத் தொடங்கிவிட்டான். கொழும்பில் சக்தி எப்.எம் என்ற பண்பலை வானொலியில் ஒருவன் தொலைபேசி உரையாடலில் வந்து கெட்ட வார்த்தைகள் பேசிச் சென்றான். நினைவிருக்கிறதா? அவன்தான். அவனேதான் அந்தப் போலிடோண்டு. அப்போதே அவனைப்பிடித்த்திருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது. அதைவிட.....

பத்திரிகையாளர்: போதும்போதும். எனக்குத் தலைசுற்றுகிறது. பிறகு சந்திப்போம்.
**********************************

கொழுவியும் இன்னொரு சகவலைப்பதிவாளரும் நேற்றிரவு தூதுவனில் அரட்டையடித்தார்கள். அதிலிருந்து ஒரு சம்பவம்.

வழக்கமாக எப்போதுமே ஒருங்குறியில் தட்டச்சும் கொழுவி நேற்று பாமினியில் தட்டச்சுகிறான். அப்போது,

வலைப்பதிவாளர்: என்ன கொழுவி, உம்மட யுனிக்கோட்டுக்கு என்ன நடந்தது?
கொழுவி: என்ன கோதாரியோ தெரியேல. இகலப்பை சரியா வேலை செய்ய மாட்டன் எண்டுது.

பிறகு சிலநேர அரட்டைக்குப்பிறகு அந்த வலைப்பதிவாளர் ஒரு ஒலிக்கோப்பு ஒன்றை அனுப்புகிறார். அதைக்கேட்டுக் கருத்தைச் சொல்லும்படி கேட்கிறார்.

கொழுவி: ஐசே. இப்ப என்னால கேக்க ஏலாது. நாளைக்குக் கேட்டிட்டுச் சொல்லிறன்.
வலைப்பதிவாளர்: என்னப்பா? யுனிகோட் வேலைசெய்யுதில்லையெண்டு சொன்னீர். இப்ப கேக்க ஏலாது எண்டுறீர். உந்தப் போலி டோண்டுவின்ர வேலைதான் உதெல்லாம். அவனிட்டக் கவனமாயிரும். கண்டபடி அங்க இஞ்சயெண்டு போய் பின்னூட்டம் போடாதையும்.

எண்டு பெரிய அட்வைஸ்.
*********************************
டோண்டுவுடனான சந்திப்பு கற்பனையே. ஆனால் இரண்டாவது அரட்டைச் சம்பவம் முற்றிலும் உண்மை. அச்சம்பவத்தின்பின்தான் இப்படியொரு பதிவுபோட வேண்டுமென்று தோன்றியது.

பத்தாயிரக்கணக்கில் (இலட்சக்கணக்கில்?) விற்பனையாகும் வெகுசனப் பத்திரிகையிலேயே வந்துவிட்ட, சர்வதேச மட்டத்தில் தோண்டித்துருவப்படப் போகிற(தாகச் சொல்லப்படும்), வலைப்பதிவுகளில் கிழிந்து நாராகிப்போன-போய்க்கொண்டிருக்கிற ஒரு விசயத்தைப் பற்றி நானும் என் பங்குக்கு ஒரு பதிவாவது போடாட்டி என்ன பெரிய கொழுவி நான்? பேருக்கே மரியாதையில்லாமப் போயிடும்.

நன்றியுடன்
-கொழுவி-