Thursday, May 31, 2007

எம் ஜி ஆர் குறித்து சொல்கிறார் பிரபாகரன் - வீடியோ

விடுதலைப் புலிகளின் தலைவர் தனக்கும் எம் ஜி ஆர் அவர்களுக்குமான தொடர்புகள் குறித்தும் அது நிகழ்ந்த காலப் பகுதிகள் குறித்தும் இந்த வீடியோவில் சொல்கிறார்.

Monday, May 21, 2007

திரைக் கதை, கதை வசனம் எழுத ஆட்கள் தேவை

உளவுத் துறை கொடுக்கும் கதைக் கருவிற்கு ஏற்ப திரைக் கதை மற்றும் கதை வசனம் எழுத சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன. இதுவரை காலமும் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவினர் உதவியுடனேயே கதை மற்றும் வசனம் என்பவை எழுதப் பட்டு வந்தன. ஆனால் அவை மிக மட்டமான மோசமான படைப்புக்களாக இருந்தமையால் மக்களால் உடனுக்குடன் புறக்கணிக்கப் பட்டு விட்டன. எனினும் அவை மிகச் சிறந்த காமெடிப் படைப்புக்கள் என்பதை மறுக்க வியலாது என்பதே பொதுவாக பொதுஜனத்தின் கருத்து. ஆகையால் இனிமேல் மருந்துக்கும் காமெடியற்ற கதைகளே வேண்டுமென தீர்மானித்திருப்பதாலும் காமெடியற்று எவ்வாறு கதையெழுதுவது என காவல்த்துறை மற்றும் உளவுத்துறை நிபுணப் பெருந்தகைகள் செய்வதறியாது யோசிப்பதாலும் கதை வசனம் முதலியவற்றை வெளியிடங்களில் இருந்து பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்புவோர் கொண்டிருக்க வேண்டிய தகமைகள்

உங்கள் கதைகளில் கண்டிப்பாக சிறுவர்களோ சிறுமிகளோ இடம்பெறக் கூடாது. அப்படி இருந்தாலும் அவாகள் இடையில் கொல்லப் பட்டுவிட்டதாய் அமைய வேண்டும்.

பெரும்பாலும் கடலும் கடல்சார்ந்த மீனவ மக்களின் வாழ்க்கையைச் சார்ந்ததாக கதைகள் அமைந்திருக்க வேண்டும். அப்பாவி மக்களின் முதுகில் ஏறியே நாம் நமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முடியும்

படகிற்காக கடத்தல் மீன் குழம்பிற்காக கடத்தல் வலைக்காக கடத்தல் வாளை மீனுக்காக கடத்தல் போன்று எந்த வித காமெடியும் கதையில் இருக்கக் கூடாது. (விமானமே ஓடுறாங்க.. படகுக்காகவா கடத்தினாங்க என்று சென்ற முறை ரொம்ப கேலி பேசி மனசை புண்படுத்திட்டாங்க)

கதை எழுதுபவருக்கு மன்னார் எங்குள்ளது முல்லைத் தீவு எங்குள்ளது பாக்கு நீரிணையின் ஆழ அகலங்கள் புலிகளிடம் என்ன மாதிரியான படகுகள் உள்ளன போன்ற தகவல்களுடன் மாலை தீவு எங்குள்ளது அந்தமான் தீவு எங்குள்ளது பிஜித் தீவு எங்குள்ளது போன்ற தகவல்களும் கண்டிப்பாக சொந்தமாகத் தெரிந்திருக்க வேண்டும். (நம்மிடம் இவை பற்றித் தெரிந்தவர் யாருமில்லையென்பதனால் எந்த வித உதவியும் செய்து தர முடியாது )

விண்ணப்ப தாரிகளுக்கு ஈழத்தமிழில் பரீட்சயம் இருப்பது எதிர்பார்க்கப் படுகிறது.

சிங்கள இராணுவ கடற்படையினருடனான காட்சிகளும் இடம்பெறுமாயினும் அவை கதையில் இடம் பெறப் போவதில்லை என்பதால் உங்களுக்கு சிங்களம் தெரிந்திருக்கத் தேவையில்லை.

உங்கள் கதை தெரிவு செய்யப்பட்டு பின்னர் அது 5 வயதுச் சிறுவன் ஒருவனிடம் படித்துக் காட்டப் படும். அவன் கதை முழுவதையும் சிரிக்காமல் கேட்டால் உங்களுக்கு வாய்ப்பு நிச்சயம் தரப்படும். நிறையக் கதைகளை எதிர்காலத்தில் எடுக்க இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்டவாகளுக்கு வாய்ப்புத் தரப்படும்.

Sunday, May 20, 2007

அந்தோ பரிதாபம் போட்டுடைத்தான் சிறுவன்

தமிழக பொலீசு இலங்கை கடற்படை இந்திய உளவுத் துறை ஒரு சில பயிற்றப்பட்ட மீனவர்கள் இவற்றின் ஒத்துழைப்புடன் ஏகப்பட்ட பூகோள அரசியல் சொதப்பல்களோடாயினும் ஒருவாறு நாடகத்தை நேற்று ஒப்பேற்றி முடித்து நாடகத்தின் மூலம் ஏதேனும் பயனுள்ள முடிவுகள் கிடைக்குமா என காத்திருந்த காலத்தில் கொண்டு வந்து விடப்பட்ட மீனவர்களில் ஒருவனான சிறுவன் தம்மை வெடிப் பிரயோகம் செய்து கடத்தியது சிறிலங்கா நேவி தான் எனவும் தாம் அவர்களின் கவனிப்பிலேயே இருந்ததாகவும் தம்மை கொண்டு வந்து விடுவித்துப் போனது சிறிலங்கா நேவியே எனவும் தெரிவித்திருக்கிறான்.






கடத்தலின் பின்னணி.. மக்கள் தொலைக்காட்சியில் சிறுவன்

தற்போது ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொலைக் காட்சி ஒளிபரப்பாகி வருகிறது அனைவரும் அறிந்ததே..
"மக்கள்" தொலைக்காட்சியின் இன்றிரவு செய்திகளில் .... இந்திய புலனாய்வுத்துரையினரின் அண்மைய நாடகமான "அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, மீண்டு வந்தவர்களில்" ஒருவரான சிறுவன் பல அதிர்ச்சித் தகவல்களை "மக்கள்" தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளான்!! இதை இன்றிரவு செய்திகளில் ஒளிபரப்ப உள்ளனர். .... இலவசமாகத்தான்!!!

மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றது!!!

உண்மைகள் வெளிவருவதை எந்த அளவிற்கு இந்திய உளவுத்துறையினரும், இந்திய அரசும் அனுமதிக்கப் போவதென்பது, நாளடைவில்தான் தெரியும்!!

இந்தியாவில் இப்போது இச் செய்தி வெளியாகியிருக்கும்.

Saturday, May 19, 2007

கடத்தல் நாடகம் கிளைமாக்ஸை எட்டியது:)

தற்போது மீனவர்கள் திரும்பிவிட்டனர்.

பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திரும்பிய மீனவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காக கரை சேர்ந்த உடனேயே ஊடகத்தாரைக் கூட்டி அங்கேயே புலிகளை அம்பலப்படுத்தாமல் சென்னைக்கு வரவழைத்து சென்னையிலும் கரையிலும் யாரிடமும் பேசவிடாமல் கடைசியாக மீண்டும் ஒரு வாக்குமூலத்தை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

திரும்பிய தமிழக மீனவர்கள் சொல்லியிருப்பதாக இன்று வெளியான செய்தியில் சிரிக்காமல் சிந்திப்பதற்காக நீங்கள் படிக்க வேண்டிய வரிகள்:

"ஹெல்மட் அணிந்து முகத்தை முற்றும் மறைத்துக் கொண்டு ஒருவர் எங்களை சந்தித்து உங்களை விரைவில் கேரள கடற்பகுதியில் கொண்டு போய் விடுகிறோம் என்று கூறினார். வானூர்தியில் சென்று பார்வையிட்டு வருவதாக கூறி சென்றார்."

என்னது கேரள கடற்பகுதியை விடுதலைப் புலிகள் வானூர்தியில் சென்று பார்வையிட்டனர்.

கேரள கடற்கரை பகுதி இருப்பது அரபிக் கடல் என அறிந்திருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இருப்பது வங்கக் கடல் என அறிந்திருக்கிறோம்.

வங்கக் கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே மன்னார் கடலில் "பாரிய" படைபலம் பொருந்திய இந்தியப் பேரரசின் கடற்படை உள்ளது.

அன்னியக் கொள்வனவுகளால் கொழுத்துக் கிடக்கும் சிங்களக் கடற்படை உள்ளது.

இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் மட்டுமல்ல- வான்படையின் கண்ணிலும் மண்ணைத் தூவி அரபிக் கடலில் உள்ள கேரள கடற்கரைப் பகுதியை புலிகள் பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன் நிற்கவில்லை விடுதலைப் புலிகள்

வங்கக் கடல் தாண்டி

அரபிக் கடலை தொட்ட விடுதலைப் புலிகள்

இந்துமா சமுத்திரத்தையும் விட்டுவைக்கவில்லை.

ஆம்.

"மீண்டும் வந்த போது தமிழக கடல் பகுதியிலேயே உங்களை விட்டுவிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். எங்களுடைய டிரைவர் (மலையாளி சைமன்) எங்கே என்று கேட்டோம். அவரை ஏற்கனவே படகில் அனுப்பி வைத்து விட்டோம். நீங்கள் கரைக்கு சென்ற பிறகு உங்களை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள். ஆனால் அவர் மாலைதீவு கடற்படையினரிடம் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு இராமேஸ்வரம் நடுக்கடலில் எங்களை மீனவர்களிடம் ஒப்படைத்தார்கள்"

இதில் எங்கே மாலைதீவு வந்தது?

புலிகள் எப்படி மாலைதீவில் இயங்குகிறார்கள்?

மாலைதீவானது

வங்கக் கடலிலும் இல்லை

அரபிக் கடலிலும் இல்லை

இந்துமா சமுத்திரத்தில்

அமெரிக்கா- இந்தியா- பிரித்தானியா- சிறிலங்காவின் கூட்டுக் கண்காணிப்பு வலயத்தில் உள்ள பிரதேசம்.

அமெரிக்காவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்காதீர்கள்

தெற்காசியாவில் காலூன்றுவதற்காக பிரித்தானியாவிடமிருந்து பெற்ற டிகாகோ கார்சிகோ தீவு மாலைதீவுக்கு கீழேதான் உள்ளது.

புளொட் அமைப்பைக் கொண்டு 1989-களில் அங்கு சதி நடத்திய இந்தியாவின் றோவுக்கு எப்போதும் மாலைதீவு மீது "காதல்" உண்டு.

அதற்கும் அப்பால்

மாலைதீவு அருகே மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்தோர் பேசியது தமிழ் அல்ல- மலையாளம் என்று அந்நாட்டு அரசாங்கமே அறிவித்துவிட்ட நிலையில்

மாலைதீவு பகுதியில் எமது இயக்கத்தின் செயற்பாடு இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்ட நிலையில்

தமிழக முகர்ஜிவாலாக்களுக்குத்தான் என்னே அறிவு! அடம்பிடிக்கிறார்களே!

தெளிவாகச் சொல்கிறோம்

இந்தக் கடத்தலின் பிதாமகனே இந்திய றோதான்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அனைத்துலகத்தின் அனுசரணையைப் பெறுவதற்கான ஒருநிலைப்பாட்டை இந்திய அரசு எடுக்க விடாமல் தமிழகத்தின் புலிகள் ஆதரவு நீடித்து நிற்கிறது. தமிழக அரசும் அதற்கேற்ப ஈழத் தமிழர் ஆதரவு நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஒட்டுமொத்தமாக மத்திய ஆளும் அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல்- காவல்துறை நாடகம்தான் இது.

தமிழக காவல்துறை கருணாநிதியின் கையில் இருந்தாலும்

தமிழகத்தில் பால்ரசு குண்டு கைதுகள் முதல் கஸ்பாரின் சங்கமம் வரையான அனைத்து புலிகள் தொடர்பான பிரச்சனையில் எம்.கே.நாராயணன் தலையிட்டுக் கொண்டிருப்பதையும் அதனை தடுக்க முடியாமல் தமிழகக் காவல்துறை பணிந்தாக வேண்டிய "இந்திய அரசியல் கட்டமைப்பு" இருக்கிறது. இது இந்திய அரசியல் அவதானிகளுக்கும் ஊடகத்தாருக்கும் அறிந்த விடயம்தான்.

அந்த எம்கே.நாராயணன் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழகத்துக்குத் துரோகம் இழைப்பவர்தான் என்பதை தமிழகம் நன்கறியும். இப்போது நடந்துள்ள கடத்தல் நாடகத்தில் "கப்டன்" பாத்திரம் வகித்தவர் கேரளத்தைச் சேர்ந்த சைமன் என்பதை நினைவில் கொள்வோம்.

தமிழக மீனவர்களை புலிகள் கடத்திச் சென்றதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு

அரசியல் ரீதியாக

தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் ஞானசேகரனைக் கொண்டு கடத்தியது புலிகள்தான்- சுட்டது புலிகள் என்று தொடர்ச்சியாக கேட்க வைத்துவிட்டு

அதன் மூலம் கருணாநிதிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியது இந்திய உளவுத்துறை.

புதினம்

Sunday, May 13, 2007

பதிவுகளைச் சூடாக்குவது எப்படி?

முன்பெல்லாம் பின்னூட்டங்களை மட்டுறுத்தி அல்லது கயமை செய்துதான் எங்கள் பக்கத்தை வியாபாரத்துக்கு விட வேண்டியிருந்தது:) இப்போ நாங்கள் நிரந்தரமாகவே ஒரு ஓரமா துண்டு போட்டு உட்காரக் கூடிய அளவுக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. உங்கள் பதிவுகளைச் சூடாக்கி ஓர் ஓரமாய் காட்சிப் படுத்த விருப்பமா?

என்ன செய்ய வேண்டும்.
என்னைப் போலவே ஒரு தலைப்பிடுங்கள். அவ்வளவும் போதும். உங்கள் பதிவு சூடாகும். இது ஒரு சுட்ட பதிவு

Saturday, May 12, 2007

இது ஒரு ஆறிய இடுகை - (ஆரிய இடுகை இல்லை)

தமிழ்மணத்தில் சூடான இடுகைகள் என புதிய பதிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சூடான இடுகைகள் என்பதன் மூலம் இலகுவாக விளங்கக் கூடியது சற்றே விவாதத்தன்மை கொண்ட காரமான சர்ச்சைக் குரிய பதிவுகள் என்பதே -

ஆனால் பார்வையிடப்படும் எண்ணிக்கைகளைக் கொண்டே இது சூடான பதிவுகள் தீர்மானிக்கப் படுகிறன்றன. ஆகவே எந்த மாதிரியான ஒரு பதிவுக்கும் சூடான இடுகையாக கூடிய வாய்ப்பு உண்டு. எல்லாவற்றையும் இடுகையின் தலையங்கமே தீர்மானிக்கிறது. ஒரு பரீட்சார்த்தமாக இந்த ஆறிய இடுகை சூடான இடுகையாக வருவதற்குரிய சந்தர்ப்பங்களை ஆராயும் முகமாகவே இந்த பதிவு. அவ்வாறு வந்தால்

ஒரு ஆறிய இடுகை எவ்வாறு சூடான இடுகைகளுக்குள் வரமுடியும்..?

அடுத்த தடவை ஒரு சுட்ட இடுகையினை இடுகிறேன் -

Saturday, May 05, 2007

தமிழக மீனவர்கள் கடத்தல் . அருமையான திரைக்கதை

தமிழக மீனவர்களை புலிகள் கடத்தியதும் கொலை செய்தது தொடர்பிலும் புலிகள் தமது மறுப்பை வெளியிட்டு விட்ட நிலையில் தற்போது கடல்புலிகளின் பேட்டிகள் மற்றும் கதைகள் என பெரும் எடுப்பில் ஒரு பரப்புரை அங்கு நடைபெற்று வருகிறது.

தொலைக்காட்சியில் வெளியான இரு இலங்கைத் தமிழ் நபர்களின் பேட்டியில் சரியான தயார்ப்படுத்தல் இல்லாமல் பேசியதாலேயோ அல்லது மிகச் சரியான பயிற்சி கொடுக்கப்படாமல் விட்டதாலேயோ அவர்களால் கோர்வையாக பேச முடியவில்லை. 1 நிமிடத்துக்கும் குறைவான அவர்களின் வீடியோ வாக்குமூலம் 3 தடவைகளுக்கு குறையாமல் வெட்டி வெட்டி ஆரம்பிக்கிறது. அதாவது தொடர்ச்சித் தன்மை இல்லாமல் உதாரணமா நாங்கள் மன்னாரிலிருந்து வெளிக்கிட்டு என்ற இடத்தில் கட்பண்ணி அடுத்த காட்சியில் போட்டில ஆயுதம் எடுக்கப் போகும் போது என்ற மாதிரி அவர்கள் அவர்கள் பேசுவது அவ்வப் போது திருத்தி திருத்தி தொகுக்கப் படுகிறது. Better luck next time

தவிர புலிகளின் ஆயுதக் கப்பல்களிலிருந்து படகுகளில் ஆயுதங்களைப் பெற்று மன்னாரில் அவற்றை இறக்க வேண்டுமெனில் ஆயுதக் கப்பல் இந்தியாவிற்கு அருகாக எங்கோ நிற்கிறதென்று அர்த்தம். ஆனால் வழமையாக சர்வதேசக் கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து எடுத்து வரப்படும் ஆயுதங்கள் முல்லைத்தீவு பகுதியிலேயே தரையிறக்கப்படும். புலிகளுக்கு இலகுவானதும் அதுவே. மன்னார் இந்தியாவிற்கு அருகாமையிலும் முல்லைத்தீவு அதற்கு எதிராக இலங்கையின் அடுத்த கரையிலும் உள்ளது.

மன்னார் கடலைப் பொறுத்தவரை அங்கு புலிகளின் இராணுவ மேலாதிக்கம் குறைவு என சொல்லலாம். முல்லைத் தீவு கடலோடு ஒப்பிடும் போது. திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை கப்பல்களின் பயணப் பாதையாக இது இருப்பதனாலும் புலிகளின் தென் தமிழீழத்திற்கான கடற்பாதையாக முல்லைத் தீவு ஊடான கடல் இருப்பதாலும் இக்கடலிலேயே புலிகளின் இராணுவ மேலாதிக்கம் அதிகம்.

மன்னார் கடலைப் பொறுத்தவரை அது பெருமளவில் உணவு வழங்கல் மற்றும் பொருள் வழங்கலுக்கான பாதையாகத் தான் பயன்படுகிறது. தமது இயக்கத்திற்கான மீன்பிடியில் ஈடுபடும் புலிகள் பயன்படுத்தும் கடலாகவும் அது தவிர சில அத்தியாவசிய பொருட்களை தமிழகத்தில் இருந்து (மீனவர்களின் துணையுடனும்) தருவிக்கவுமே அக்கடல் பெருமளவில் பயன்படுகிறது.

இந்த நிலையில் மன்னார் கடலின் அருகில் எங்கோ ஆயுதக்கப்பல் நிற்கிறதென்றால் அது இந்திய கடலில் தான் நிற்க வேண்டும். அல்லது இந்திய துறை முகங்களில் எங்காவது நிற்க வேண்டும். :)

அடுத்த கதை இன்னும் சுவாரசியமானது. அதாவது அப்படி நிற்கும் ஆயுதக் கப்பலை இந்தியா தாக்கினால் பிடித்து வைத்திருக்கும் 12 பேரை புலிகள் கொலை செய்து விடுவதாய் மிரட்டுகிறார்களாம். புலிகளை மலினப்படுத்துதல் என்ற பெயரில் இந்தியா தன் இமேஜை கெடுத்துக் கொள்ளப் போகிறது. உண்மையில் இந்தியாவிற்கு அருகில் ஒரு ஆயுதக் கப்பல் நிற்கிறது என்றால் இந்தியா பார்த்துக் கொண்டா இருக்கப் போகிறது. ? எங்கோ சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த கேணல் கிட்டு உட்பட்ட 12 புலிகளை பிடித்து இழுத்து வந்து சாகடித்த இந்திய கடற்படை தமது அருகில் இருந்து ஆயுதங்கள் இறக்கி செல்ல விட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறதாம்...:)))

புலிகள் ஆயதங்களை எடுத்து வரும் போது அவற்றைக் கீழே இட்டு மேலே மீன்களை போட்டு மறைப்பார்களாம். யாரும் பார்த்து விடக் கூடாதென்பதற்காக. அவ்வாறு மறைத்து எடுத்து வரும் போது 5 தமிழக மீனவர்கள் அவர்களின் படகுககளில் உரிமையோடு ஏறி எங்களுக்கு இன்று மீன் அகப்பட வில்லை. உங்களிடம் மீன்கள் உள்ளதா என மீன்களை கிளறினார்களாம். அப்போ அடியிலிருந்த ஆயுதங்களை அவர்கள் பார்த்து விட்டார்களாம். அதை புலிகள் தமது தலைமைக்கு அறிவித்தார்களாம். அதனால் அவர்கள் எப்படியாவது பிரச்சனையை முடித்து விட்டு வரச் சொன்னார்களாம். எனக்கு கொட்டாவி வருகிறது. இருந்தாலும் சொல்லி முடிக்கிறேன். அதனாலை அந்த மீனவர்களை புலிகள் சுட்டு விட்டு போனார்களாம். பிறகு மரியா எண்ட வள்ளத்தில 6 புலிகள் எங்கையோ போனவையாம். அவை வள்ளத்தில பெயரை அழிக்க முயற்சித்தவையாம். ஆனா முடியேல்லையாம்.

இது தவிர புலிகளுடன் தமிழக பொலீசார் பேச்சுக்கள் வேறு நடாத்தினார்களாம். விட்டால் நடுக்கடலில் சந்தித்துப் பேசினோம் என்றும் சொல்வார்கள் போல.

மீண்டும் மீண்டும் சொல்வது போல நெருக்கடி காலங்களில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை தமிழக மீனவர்களின் உதவியுடனேயே புலிகள் தமது பிரதேசத்திற்கு தருவித்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்களை பகைத்துக் கொள்வதற்கு புலிகள் முன்வருவார்களா..

ஆரம்பத்தில் சிங்கள மீனவர்களாக பிடிபட்டு பிறகு இரவோடு இரவுகளாக தமிழ் மீனவர்களாக மாறி பின்னர் விடுதலைப் புலிகளாகத் தோற்றம் பெற்ற அந்த அப்பாவி 6 மீனவர்களும் சுதந்திரமாக பேசக் கூடிய நிலை வரட்டும். உண்மைகள் வெளியே வரும்.

ஆகக் குறைந்தது புலிகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுவதற்காக மீனவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்ற வகையில் இந்த கதையை சோடித்திருந்தாலாவது அதில் ஒரு அரசியல் இராணுவ முதிர்ச்சி இருக்கும். அதை விட்டு விட்டு சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்வது போல காதில பூச்சுத்துற வேலையை பார்க்கும் போது என்ன இழவு உளவுத்துறையோ என எண்ணத் தோன்றுகிறது. நிறைய தமிழ்ப்படம் பார்ப்பார்கள் போலும்.

ஏற்கனவே தமிழகத்தில் இருந்து அலுமினியம் செம்பு பித்தளைக் கடத்தலென நடாத்திய நாடகங்கள் பெருமளவில் வெற்றியைப் பெறாத நிலையில் மர்மமும் திகிலும் கலந்து வழங்கினால் மக்களைச் சென்றடைய முடியும் என நம்புகின்ற தமிழக பத்திரிகைகளின் வழியிலேயே உளவுத்துறையும் சித்தித்திருக்கிறது.

இது தமிழக மக்கள் மத்தியில் புலிகளுக்கு சார்பான அலையேதும் வந்துவிடக் கூடாதென்பதற்கான முற்காப்பு நடவடிக்கை என்று சொல்வதிலும் பார்க்க இந்தியா இலங்கைக்கு வெளிப்படையாக ஆயுதங்கள் வழங்கும் போது தமிழகத்தில் அது எந்த ஒரு கொந்தளிப்பையும் கொண்டு வந்து விடக்கூடாது என்ற அடிப்படையிலேயே நடக்கிறது.

ஆக இந்தியா வெளிப்படையாக இலங்கைக்கு ஆயுத உதவிகள் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. ஆனால் இதற்காக இத்தனை நாடகங்களைச் செய்யத் தான் வேணுமா..?

இறுதியாக புலிகள் ஆயுதங்களை எடுத்துவர மீன்பிடி வள்ளங்களை பயன்படுத்துவதில்லை. அதற்காக அவர்களிடம் மிகை வேக படகுகள் உள்ளன. அவற்றை இந்த பாடலில் பார்க்கலாம்.