இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், சென்னையில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதல் காரணமாக இலங்கையில் வாழும் நமது உடன் பிறப்புகளாகிய தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், உண்ண உணவு இன்றியும், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும், பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஒரே வழி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.
தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியும், அவர் தாங்கி நிற்கும் மத்திய அரசும் இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், இலங்கையல் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு நான் தலைமையேற்கிறேன்.
இலங்கை தமிழர்களுக்காக நிதி
தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் இடங்களில் இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். சென்னை உண்ணாவிரதப் பந்தலில் வைக்கப்படும் உண்டியலில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அதிமுகவினர் அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதியுதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர்களுக்காக நடைபெறும் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் நமது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அதிமுகவினரும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
/////////////////////////////////////////////
அடிச்சு ஆடுங்கடே.. சாகிற மக்களை வைத்து அரசியல் செய்கிற எல்லாரும் நல்லா இருங்கடே.