Sunday, August 28, 2005

இசையும் அரைமணிக் கதையும்

ஈழநாதன் சிலநாட்களின் முன் இசை பற்றிய ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் நான், என்னால் அரைமணித்தியாலம் ‘தகரமடிப்பதை’ப் பற்றி பேச முடியுமென்று பின்னூட்டம் இட்டுவிட்டேன். அதைக்கண்ட சயந்தன், அப்படி அரைமணித்தியாலம் கதைப்பதென்பது அபூர்வமான விசயம் போலச் சொல்லி அதைப் பதிவாக இடும்படிக் கேட்டுக்கொண்டார். அதனால் இந்தப் பதிவு.
(அரை மணித்தியாலம் கதைக்கக் கூடிய விசயத்தையெல்லாம் பதிவாகப் போடலாமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. இன்று காலை நான் சாப்பிட்ட இடியப்பமும் சொதியும் பற்றிக்கூட என்னால் அரைமணித்தியாலம் கதைக்க முடியும்.)

சரி, விளையாட்டுப் போட்டிகளுக்கு வெறுமனே ஒரு பார்வையாளனாக மட்டும் போகாமல் குறிப்பிட்ட அணியொன்றின் விசிறியாகப் போயிருந்தீர்களென்றால் உங்களுக்கு இப்பதிவு புரியும். குறிப்பாக உதைபந்தாட்டப் போட்டிகளுக்குச் சென்றிருந்தால்.

எனது பாடசாலையணி விளையாடியபோது உற்சாகமூட்டுவதற்காக நாங்கள் சிலர் நிறைய வேலைகள் செய்வோம். அதிலொன்று விளையாட்டின்போது (அதற்குப்பின்னும்கூட) தகரம் தட்டி, கோசம் போடுதல்.

முதலில் நல்ல கறள் பிடிச்ச ஒரு மண்ணெண்ணெய் உருளையை எடுத்துக்கொள்ள வேணும். பெரும்பாலும் ஒவ்வொரு விளையாட்டு மைதானத்திலும் ஒரு மூலையில் குறைந்த பட்சம் இரண்டு அரை உருளைகளாவது இருக்கும் (அணிக்கு ஒரு உருளையாக). அதில் நல்லதை எடுப்பதற்குப் போட்டிகளுமுண்டு. அதிஸ்டமுள்ளது அதிஸ்டம் கெட்டது எண்டுகூட இந்தத் தெரிவில பாக்கிறதுண்டு. ஒரு மணித்தியாலத்துக்கு முதலேபோய் நல்ல தகரத்தை எடுத்துவச்சு, அதிகமான நேரம் நிழல் விழக்கூடிய இடமாப் பாத்து, சகல ஆயத்தங்களோடயும் இருப்பம்.

நல்ல தடிகள் 4 தேவை. பொதுவாகப் பூவரசம் தடிகள்தான் பாவிப்பம். ஆனா சவுக்கந்தடி கிடைச்ச நல்லம். அதின்ர ‘நாதம்’ அந்த மாதிரியிருக்கும். தடிகளை முறச்சு எடுக்கக்கூடாது. முறிச்ச தடியின்ர நுனி தும்பு போல இருக்கிறதால சரியான ‘நாதம்’ வராது. ஜங், ஜங் எண்ட ஒரு ஒலிதான் வரும். அதால நுனிய மட்டமா வெட்டி வச்சுக்கொள்ள வேணும்.


விளையாட்டு வீரர்கள் மைதானத்துக்குள்ள போகேக்க தகரத்தைத் தட்டத் துவங்க வேணும். முதல் ஒருத்தர் தான் தட்டவேணும். சூடுபிடிக்கப் பிடிக்க இன்னொராள் சேரலாம்.
பந்து எங்கட ஆக்களின்ர காலுக்குள்ள நிக்கேக்க, அதுவும் எதிர்ப்பக்கத்தின் கோல்போஸ்டுக்குக் கிட்டவா நிக்கேக்க தட்டலாம். தனிய தகரம் மட்டும் தட்டுறது காணாது. அதோட பக்கத்தில ஒரு கோஸ்டி நிண்டு கத்த வேணும். அதுவும் இசைநயத்தோட கத்த வேணும். இதுக்கெல்லாம் நிரந்தரமா சில ‘ராகங்கள்’ இருக்கு. நான் பாக்கத்தக்கதா பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் ஒரே மெட்டைத்தான் இப்படிக் கத்துறதுக்கு பாவிக்கிறவை. "ஏழு ஸ்வரங்களுக்குள்ள தானே முழு இசையும் இருக்கு?"


ஒரு கோல் எமது அணியால் போடப்பட்டுவிட்டால் தகரமடி உச்சஸ்தாயியில இருக்க வேணும். கூடவே கத்துற வரிகளும்.


அதில வாற ஒரு வரி,

இந்த அடி போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?’

இந்த வரிகளையும் மெட்டையும் அப்படியே ‘களவெடுத்து’ கில்லி படத்தில பாவிச்சிட்டாங்கள். (பாட்டுவரியில மட்டும் சின்ன மாற்றம் செய்திருக்கிறாங்கள். ‘இந்த அடி’ எண்டு திரிசாவும் விஜயும் பாடினா அர்த்தம் பிசகிப்போடும் எண்டாக்கும்)

மேலும், பொதுவான நேரங்களில்,
கொலிஜ் கொலிஜ் எண்டு ஒருத்தர் கத்த, மற்றவர்அந்தப் பள்ளிக்கூடத்தின்ர பேரச் சொல்லுவார்.எப்பிடிக் கத்தினாலும் நாகரிகம் குறையாமல் இருக்கும்.

தள்ளுங்கராஜா
உள்ளுக்க போடா
எட்டு கோல்
எண்ணியடி

எண்டும் வரிகள் வரும்.

உந்த 'தள்ளுங்கராஜா' எண்டது ஆரெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எங்கட பள்ளிக்கூடத்துக்கான கோசத்திலதான் இந்தப்பேர் வரும். மற்றப் பள்ளிக்கூடத்துக்கானதில வேறயொரு பேர் வரும். ஆக அது அந்தந்தப் பள்ளிக்கூடத்துக்கான ஒரு வீரனின்ர பேர நிரப்பிற இடம். ஆனா எங்கட பள்ளிக்கூடத்தில அப்பிடியொருத்தன் விளையாடினதா எனக்குத் தெரியேல. விசாரிச்சுப்பாத்ததில ஒரு வாத்தி சொன்னார், 15 வருசத்துக்கு முந்தி, தான் படிக்கேக்கயும் இந்தப்பேரத்தான் கத்திறனாங்களெண்டு. அப்ப இது ஆரோ ஒரு மூத்த விளையாட்டுவீரனின்ர பேராத்தான் இருக்கோணும். எவ்வளவு பேரும் புகழும் பாத்தியளோ அந்த வீரருக்கு?

எதிரணி பந்து கொண்டந்து கோலடிக்க முடியாமல் போனாலும் தகரமடிக்க வேணும். இதில தகரமடிக்கிறவனுக்கு இருக்கிற கஸ்டம் என்னெண்டா விளையாட்ட சரியா ரசிக்க முடியாது. ஆனா மற்றவங்கள் அவ்வளவு நல்லா அடிக்கவும் மாட்டாங்கள். சரியான ‘ராகதாளத்தோட’ அடிக்கிற கலை சிலருக்குத்தான் வரும். ஆனா அந்தக் கலைஞனுக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். ஒரு சிறந்த விளையாட்டு வீரனுக்கு நிகரான மரியாதை கிடைக்கும். முக்கியமான போட்டியில வெண்ட பிறகு எங்கயாவது ஒரு சாப்பாட்டுக்கடைக்கு அந்த அணியக் கூட்டிக்கொண்டு போவினம். அப்ப விளையாடின வீரர்கள், பயிற்சியாளர் தவிர உள்ள போற ஒரேஆள் இந்த தகரமடிக்கிறவன் தானெண்டா அதுக்கு இருக்கிற மரியாதையைப் பாருங்கோவன். பின்னேரம் போட்டி எண்டா, கடைசி ரெண்டு பாடத்துக்கு இருக்கத் தேவையில்லாமல் விளையாட்டு வீரர்கள வெள்ளன வீட்டை விடுவினம். அதோட இந்த தகரமடிக்கிறதெண்டு 3 பேரையும் வெள்ளன பள்ளிக்கூடத்தியிருந்து போக அனுமதிப்பினம்.

ஒருக்கா ஒரு பள்ளிக்கூடத்தில நடந்த மாவட்ட மட்ட உதைபந்தாட்டப் போட்டியில எங்கட பள்ளிக்கூடம் வெண்டிட்டுது. சந்தோசம் தாங்க முடியேல. அப்ப ஒரு வாகனம் பிடிச்சுத்தான் திரும்பவும் எங்கட இடத்துக்கு வாறம். அப்ப வாறவழயில சும்மா வரலாமோ? அதுக்காக அந்தப் பள்ளிக்கூட மைதானத்திலயிருந்த தகரத்தையும் தூக்கி வாகனத்தில ஏத்திக்கொண்டு வெளிக்கிட்டாச்சு.

பள்ளிக்கூடத்தைவிட்டு வாகனம் தாண்டின உடன ஒரே கும்மாளம்தான். தகரம் தட்டி கோசம் போடுப்படுது. நிறையச் சனம் பாதையில போய்வந்ததால வாகனம் நல்ல மெதுவாத்தான் வந்துது. ஒரு அரை மைல் வந்திருப்பம், பின்னால சைக்கிளில கலைச்சுக்கொண்டு வந்த பொடிப்பிள்ளையள் மறிச்சுப்போட்டாங்கள். என்ன பிரச்சினையெண்டா அந்த மைதானத்துக்குரிய தகரத்தைத் தூக்கிக்கொண்டு வந்திட்டமெண்டதுதான் பிரச்சினை. அவங்கள் விடுறமாதிரித் தெரியேல. கடசியா தகரத்தைத் தாரை வாத்திட்டு வந்தது தான்.

ம்… இந்தக் காலத்தில அந்தக் கலைஞர்களை எங்க மதிக்கப் போயினம்?
15 comments:

Anonymous said...

;-))))

Anonymous said...

எங்கடை காலத்திலை யாழ் இந்துக்கல்லூரியில் சீனியர் என்று ஒரு பழைய மாணவர் போட்டிகளுக்கு எல்லாம் வருவார்.அவர் வந்தால் மைதானம் களை கட்டும்.வயது 50 க்கு மேல் இருக்கும்.
கோசங்களுக்கும் ஆட்டங்களுக்கும் குறைவிருக்காது.அவரின் கூத்து பார்ப்பதற்காகவே விளையாட்டுப்போட்டிக்கு வருவோரும் உண்டு.

இன்னொரு கோசமும் உண்டு
எங்கட கொலிஜ் கிண்டு கொலிஜ்
ஏலுமெண்டால் பண்ணிப்பார்.

இதே போல் பல பல கோசங்கள்..நல்ல தொரு மீட்டல் பகிர்வு

-yaaro-

கொழுவி said...

அடடே,

எங்கட கொலிஜ் .............
ஏலேமெண்டால் பண்ணிப்பார்.

மறந்து போனேனே. இதுவும் பொதுவான சுலோகம் தானுங்கோ.

விடியலின் கீதம். said...

கந்தா கந்தா சோமாஸ்க்கந்தா ஏலுமெண்டா பண்ணிப்பார். மனசெல்லாம் நிறைகிறது

டிசே தமிழன் said...

இப்பத்தான் வாசித்தேன். நல்லாயிருக்கின்றது. நான் இதில் அவ்வளவு தேர்ச்சியற்றவன் என்றாலும் தகரமடிப்போருடன் கூட்டணி வைச்சிருந்தனான். பாடசாலையும் பக்கத்தில் என்பதால் என்னை விட பத்து வயது மூத்த தோழர்கள் எல்லாம் இதனால பழக்கம் உண்டு. விளையாட்டுக்களுக்கு தகரமடிப்பது மேலும் நீட்சி பெற்று, சிலவேளைகளில் பெண்கள் கடந்துபோகும்போது பாட்டுக்களுடன் இன்னும் அட்டகாசப்படுத்தும். எனக்குத் தெரிந்தவரை, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எதுவும் அளவுக்கு மீறி அத்துமீறியதில்லை.
// இந்தக் காலத்தில அந்தக் கலைஞர்களை எங்க மதிக்கப் போயினம்?//
கவலைப்படாதையும், நானும் நீரும் சேர்ந்து விரைவில் 'தகரமடிப்போர் சங்கம்' ஒன்று தொடங்குவோம் :-).

கொழுவி said...

பின்னூட்டத்துக்கு நன்றி.

//கந்தா கந்தா சோமாஸ்க்கந்தா ஏலுமெண்டா பண்ணிப்பார். //
விடியலின் கீதம்,
கத்திற சத்தத்தைப் பாத்தா உங்கட தம்பியோ மச்சானோ தகரம் வாங்க சைக்கிளில கலைச்சுக்கொண்டு வந்திருப்பாங்கள் போல.
என்ன ஆக்களப்பா? ஒரு ஓட்டைத் தகரத்தைத் தானும் கொண்டுபோக விடேல.;-)

டி.சே,
அதுக்கென்ன 'கூட்டணி' அமைச்சாப் போச்சு.

கொழுவி said...

டிசே,
மறந்துபோனன், படத்தில நல்ல வடிவா இருக்கிறீர். கதிர்காமர் குடுத்து வச்சவர்.

Anonymous said...

//அரை மணித்தியாலம் கதைக்கக் கூடிய விசயத்தையெல்லாம் பதிவாகப் போடலாமா என்பதில் எனக்கு ஐயமுண்டு. இன்று காலை நான் சாப்பிட்ட இடியப்பமும் சொதியும் பற்றிக்கூட என்னால் அரைமணித்தியாலம் கதைக்க முடியும்//

இப்போது தான் ஓரளவு புரிந்தது யாருக்கு நக்கலென்று.

விடியலின் கீதம். said...

தம்பி மச்சான் மார் தான் தகரம் அடிப்பினமோ? ஏன் நாங்கள் தகரம் அடிக்கேலாதா என்ன..?!!

nalayiny thanaraichselvan

கொழுவி said...

ஐயோ நளாயினி,
எங்கட வாகனத்தை கொஞ்சப்'பெடியள்' தான் தகரம் வாங்க கலைச்சுக்கொண்டு வந்தவங்கள் எண்டு பதிவில எழுதியிருக்கிறன்.
'பெட்டையள்' ஆரும் சைக்கிளில கலைச்சுக்கொண்டு வந்ததா எழுதேல.
அதாலதான் உங்கட தம்பிமார், மச்சான்மார் எண்டு சொன்னன்.
(நீங்கள் பெண் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறன்.)

ஓ... நீங்களும் தாராளமா தகரமடிக்கலாமே.
சுண்டுக்குளிக் காரியளும் வேம்படிக்காரியளும் அடிக்காததா?(மதியும் அடிச்சிருப்பா)

மைதானத்தில நிக்கிறவனுக்கு ரெண்டு பொம்பிளயள் அவனின்ர பேரச்சொல்லிக் கத்தினாக் காணும். ஒருக்காலுமில்லாத சக்தியொண்டு பாஞ்சு வரும்.

சயந்தன் said...

ம்.. சென்ஜோன்ஸ் கொலிஜ் மற்றது சென்றல் எண்டு நினைக்கிறன்.. இந்த ரண்டு பள்ளிக்குடத்துக்கும் big match நடக்கிறதெல்லோ.. அதுக்கு வேம்படிக்காரியளும் சுண்டுக்குளிக்காரியளும் அடிக்காத அடி என்ன? பாடாத பாட்டென்ன..?

டிசே தமிழன் said...

//சுண்டுக்குளிக் காரியளும் வேம்படிக்காரியளும் அடிக்காததா?(மதியும் அடிச்சிருப்பா)//
மதி அடிச்சிருப்பா என்று சும்மா இரண்டு வரியில் கூறமுடியாது. அது குறித்து ஒரு பெருங் காதையாய்த் தான் எழுத முடியும். அறிந்தவரையில் மதி சென் ஜோன்ஸ் பெடியளுக்கு ச்ப்போர்ட் பண்ணி அடிக்கின்ற தகரமடியில் அவரின் ஊரான புங்குடுதீவு வரை கேட்கும் என்று ஒரு கேள்வி. அவரின் தாயாரும் என்ரை மகள் தகரத்தில் தாண்டவமாடத் தொடங்கிவிட்டாள் இனி சென்றல் பெடியங்கள் துலைஞ்சாங்கள் என்றுதான் ஊர்க்காரர்களிடம் பெருமையாகச் சொல்லுவாராம் :-).

சயந்தன் said...

//மைதானத்தில நிக்கிறவனுக்கு ரெண்டு பொம்பிளயள் அவனின்ர பேரச்சொல்லிக் கத்தினாக் காணும். ஒருக்காலுமில்லாத சக்தியொண்டு பாஞ்சு வரும். //

நமக்குத்தான் அந்த குடுப்பினையே இல்லையே.. ஏனெண்டால் நாங்கள் மைதானத்திலையே நிண்டதில்லையே.. முதலாம் ஆண்டில ஓட்டப்போட்டி ஒண்டில கலந்து கொள்ள பேரைக் குடுத்திட்டு விளையாட்டுப் போட்டியண்டு சரியான நேரம் பாத்து தந்த குளுக்கோசை வாங்கி சாப்பிட்டு விட்டு நநான் escape!..

Maravandu - Ganesh said...

//இந்த அடி’ எண்டு திரிசாவும் விஜயும் பாடினா அர்த்தம் பிசகிப்போடும் எண்டாக்கும்
//

விஜய் பாடுனாத்தான் அசிங்கமாப் போவும் :-)

Anonymous said...

இந்தப் பதிவின்படி சயந்தனுக்கும் கொழுவிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை என்றல்லவா வருகிறது?

யாரப்பா கொழுவி?