Friday, October 21, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை.-2

யாழ் மருத்துவமனைப் படுகொலைகள் பாகம் 1.

பாகம் இரண்டு. தொடர்ச்சி......

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

"நாங்கள் அப்போது கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர். ஏழாம் இலக்க விடுதியைக் காலி செய்துவிட்டு நோயாளிகளும் அங்கிருந்தனர். சூட்டுச்சத்தம் எங்களுக்குக் கிட்டவாக வந்துகொண்டிருப்பது கேட்டது. 'இந்திய இராணுவம் உள்ளே நுளைந்தாலும் அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விசயங்களை விழங்கப்படுத்தலாம்' என்று நாங்கள் நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தோம். எங்களோடிருந்த வைத்தியர் கணேசரட்ணம் அறையை விட்டு வெளியே சென்றார். எங்களின் சகஊழியர்கள் சிலர் இன்னமும் தங்கள் விடுதிகளில் தான் இருந்தனர். சூட்டுச் சத்தங்கள் இப்போது எங்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது. எங்களைச் சுற்றிலும் ஒரே சூட்டுச்சத்தம். எங்களைச் சுற்றியுள்ள அபாயத்தை எல்லோரும் அப்படியே தரையில் படுத்துவிட்டோம். சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்த இராணுவம் அங்கே நெருக்கியடித்துக்கொண்டிருந்த மக்கள்கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளியது. நோயாளிகள் இறந்துவீழ்வதைக் கண்களால் கண்டோம். விரலைக்கூட அசைக்காமல் செத்துப்போனவர்களைப்போல நாங்கள் தரையில் கிடந்தோம். இறந்துபோனவர்களின் சடலங்களை அகற்ற வரும்போது எங்களையும் அவற்றோரு போட்டு எரித்துவிடுவார்களோ அல்லது சுட்டுவிடுவார்களோ என்று முழுநேரமும் நடுங்கிக்கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்களைக் கேட்டோம். எங்களுடைய குவாட்டர்ஸ் அமைந்திருந்த மேல்மாடியில் அவர்கள் அங்குமிங்கும் போய்வந்துகொண்டிருக்கும் சத்தம் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்தது. மறுநாட்காலை 11.00 மணிவரை கிட்டத்தட்ட 18 மணிநேரம் பிணங்களோடு பிணங்களாக அப்படியே கிடந்தோம்."

இந்த இடத்திலிருந்து இன்னொருவர் விவரிக்கிறார்:

"இந்திய இராணுவம் வேளிகேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளரின் அலுவலகத்துக்குள்ளும் வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் சுட்டார்கள். என்னோடு பணிபுரிந்த பலர் இறப்பதை நேரிற்கண்டேன். இன்னொரு சகஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார், 'அப்பிடியே அசையாமல் படுத்துக்கிடவுங்கோ' என்று.

"எனவே நாங்கள் அன்றிரவு முழுவதும் இம்மிகூட அசையாமல் அங்குகிடந்த சடலங்களின் அடியிற் படுத்துக்கிடந்தோம். ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்தவர்களில் ஒருவருக்கு இருமல் வந்தது. அவர் இரவில் அவ்வப்போது முனகியவாறு மெதுவாக இருமிக்கொண்டிருந்தார். ஓர் இந்தியவீரன் அப்போது அவர்மீது கிரனைற்றை (கைக்குண்டு) வீசினான். அவரோடு வேறு பலரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதி அதில் இறந்தது எனக்குத் தெரியும். இன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று இரத்துக்கூவினார்:
"நாங்கள் அப்பாவிகள், நாங்கள் இந்திராகாந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு"
அவர்மீதும் ஒரு கிரனேற் வீசப்பட்டது. அவரும் அவரோடு கூட படுத்துக்கிடந்த சகோதரரும் கொல்லப்பட்டார்கள்".
---------------------------------------

அன்றிரவு கடந்துபோய் காலையாகிவிட்டது. நிலைமை பயங்கரமாகவே இருந்தது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் சிவபாதசுந்தரம் அவர்கள் மூன்று தாதிகளுடன் தாழ்வாரம் வழியாக நடந்துவந்தார். தாம் யாரென்று காட்டிக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்துவிடுவது உசிதமென்று அவர்களிடம் சிவபாதசுந்தரம் எடுத்துரைத்திருக்கிறார். கைகளை மேலே உயர்த்தியபடி,
'நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் ஒன்றுமறியாத டாக்டர்களும் நர்சுகளும்தான்.'
என்று உரத்துக்கூறியவாறு அவர்கள் நடந்து வந்தனர்.

வைத்தியர் சிவபாதசுந்தரத்தை அவர்கள் வெகுகிட்டத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். நர்சுகள் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிக்கிக்கொண்ட குழந்தைகளையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த அந்த உன்னத மனிதன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். சமாதானத்தினதும் அகிம்சையினதும் காவலன் என்று தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு தேசத்து இராணுவத்தின் கரங்களிலிருந்து அம்மருத்துவனுடைய தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு வன்முறையும் மரணமுமே பதிலாகக் கிடைத்தன.

உயிர் பிழைத்தவர்கள் மறுநாட்காலை 11.00 மணிவரையும் இறந்துபோனவர்களின் பிணங்களுக்கிடையில் தாமும் இறந்துவிட்டவர்கள்போல் அப்படியே கிடந்தனர். இராணுவ அதிகாரியொருவர் அந்த ஆஸ்பத்திரி விடுதியொன்றுக்கு வந்தபோது அங்கிருந்த பெண் வைத்தியர் ஒருவர் அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய பின்புதான் தாங்கள் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தோர் அனைவரும் கூறினர். அந்த டாக்டர் அவ்வதிகாரிக்கு நிலைமையை விளக்கிக்கூறி தனது இருகைகளையும் மேலுயர்த்திவாறு அவர்கள் இராணுவத்தாரோடு இருக்கும் பகுதிக்கு வந்தார். தன்னுடன் பணிபுரிபவர்களையும் காயுமுற்றுக் கிடந்தோரையும் அவர் குரல் கொடுத்து அழைத்தார். தங்களின் சகமருத்துவர் டாக்டர் கணேசரட்ணம் ஸ்டெதஸ்கோப்புடன் கீழே இறந்துகிடப்பதைக் கண்டார். ஆஸ்பத்திரியில் தங்கியிருப்பவர்கள் மேலே தங்களின் அறைகளுக்குச் சென்று பார்த்தபோது முழுப்பகுதியும் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர். தரையிற் சிந்திக்கிடந்த அவர்களின் துணிமணிகள் ரத்தம்தோய்ந்த பூட்ஸ்களின் தடங்கள் காணப்பட்டன. அவர்களின் விலைமதிப்புள்ள உடைமைகள் அனைத்தும் பறிபோய்விட்டன. அதற்குப்பின்னர் அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர்களின் கதவருகில் ஒரு இராணுவவீரன் நின்றுகொண்டிருந்தான். அந்த நாட்களில் அவர்கள் பயங்கரப் பீதிக்குள்ளாகியிருந்தனர்.

நன்றி: முறிந்த பனை.

-----------------------------------------------------
அடுத்த பகுதியில் இன்னொரு மருத்துவரின் வாக்குமூலம் தொடரும்.


1 comment:

Anonymous said...

பாத்துப்பா! இன்டியாவிற்கு எதிர்மறையான எழுத்துக்கள் அப்பிடின்னு சொல்லி தூக்கிறப்போறானுக!