Saturday, October 22, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை-3.

யாழ் மருத்துவமனைப் படுகொலை 1
யாழ் மருத்துவமனைப் படுகொலை 2

பகுதி 3
ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த இன்னொரு மருத்துவர் தொடர்ந்து கூறினார்.

"கதிரியக்கப் பகுதியிலிருக்கும் ஓய்வறையை விட்டு விலகிச்செல்லும் நடைபாதையில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன. அவற்றின்மீது திறந்திருந்த ஜன்னலொன்றின் வழியே வந்துகொண்டிருந்த மாலைச் சூரியஒளி பட்டுக்கொண்டிருந்தது. பயத்தில் உறைந்துபோயிருந்த நான் என்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக மரக்கட்டைபோலப் படுத்துக்கிடந்தேன். உண்மையில் நான் உயிர்தப்பியது பெரிய அதிஸ்டம்தான். அந்த இராணுவவீரர்கள் ஒரு கிரனைற்றை வீசி எறிந்திருந்தார்கள். அக்குண்டு வெடித்ததில் எனக்கு முன்னால் படுத்துக்கிடந்தவர்கள் எல்லாம் இறந்துவிட்டதைக் காலையில்தான் பார்த்தேன். குண்டுகள் வெடிப்பதைப்போல கிறனைற்றுக்கள் வெடித்துச் சிதறும்போது பயங்கரச் சத்தத்தை எழுப்பியது. பின் கட்டிடச் சிதறல்களும் பெருஞ்சத்தத்துடன் எங்கள் மீது படிந்தன. இறந்தவர்களிடமிருந்தும் காயமுற்றவர்களிடமிருந்தும் பெருகிவழியும் இரத்தத்தில் தோய்ந்து கட்டியாகும்.

"அந்த இரவுமுழுவதும் விழித்துக்கொண்டே படுத்துக்கிடந்த நான் பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்போது எங்கள் தலைக்கு மேலால் சீறிப்பாயும் வேட்டுக்கள் அல்லது கிரனைற் எறியப்படும் சத்தம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மா டீ,...டீ...டீ... என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது. இன்னொரு குழந்தை கதறி அழுதது. ஒருவேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடுமென நினைத்தேன்.

"'என் கால்கள் விறைத்துப்போயிக்கிறது. நல்லாய்க் குளிர்ந்து போயிருக்கிறது. என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது. தயவு செய்து அதை யாராவது எடுத்துவிடுங்கள்' என்று ஒரு பெண்மணி கேட்டுக்கொண்டிருந்தார்.
"அப்பெண்மணியின் வலி முனகலைப்பொறுக்க முடியாமல்,
'யாராவது அவருக்குப் பக்கத்திலிருப்பவர்கள் அப்பிணத்தை எடுத்துதவினால் என்ன? உங்களுக்குக் காது செவிடா?'
என்று கத்தினேன். அந்தப் பெண்மணி தொடர்ந்து முனகிக்கொண்டிருந்தார். காலையில் அங்கு நிலவிய அமைதிக்கான காரணத்தை நான் அறியும்போது சுற்றியிருந்த எல்லோரும் அந்தப் பெண்மணி உட்பட இறந்துபோயிருந்தனர். ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக்கொண்டிருந்தார். கூடவே ராஜீவ் வாழ்க, இந்திரா வாழ்க என்றும் கூவிக்கொண்டிருந்தார். காலையில் அவரும் கிரனைட் குண்டுக்குப் பலியாகக் கிடப்பதைக் கண்டோம். வேறுசிலர் கழிப்பறைக்குள் போய் உயிர்பிழைத்திருப்பதைக் கண்டோம். பின் எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்:
"இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மருத்துவமனை இயக்குநரும் மற்றவர்களும் உடனடியாக வந்து எங்களை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களெல்லாம் அகதி முகாமில் இருப்பார்கள். அநேகமாய் அவர்களெல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து முறையிட்டு சிலவேளை ஒருகுழுவாக வெள்ளைக்கொடிகள் ஏந்திக்கொண்டு வெளியே வரக்கூடும். அவர்கள் நம்மை மீட்பார்கள். நாங்கள் காலைவிடியும்வரை அவர்களுக்காகக் காத்திருப்போம்."

"எப்போது விடியுமென்று ஆவலாய்ப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கையோடு இருந்தோம்.

"22 ஆம் திகதி காலை 8.00 மணி அல்லது 8.30 மணியிருக்கும். வைத்தியர் சிவபாதசுந்தரத்தின் குரலைக் கேட்டேன்.
"நாங்கள் அப்பாவி டாக்டர்கள் நர்சுகள். நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் சரணடைகிறோம்."
என்று உரக்கக் கத்தியவாறு அவர் வந்துகொண்டிருந்தார். அந்த ஓய்வறைக்கு அவர் திரும்பியதும், ஓய்வறையிலிருந்து செல்லும் மாடிப்படிகளின் மேல் நின்றுகொண்டிருந்த இராணுவவீரனொருவன் அவர் மீது விடாமல் தொடர்ந்து சுடுவதை நாம் பார்த்தோம். வைத்தியர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டுவிட்டார். தன்கூட வந்த தாதியரை தானே தன் இருபக்கமும் தள்ளிவிட்டதால் அத்தாதியர் காயங்களுடன் தப்பிவிட்டனர். எங்களுடைய தலைவிதி அவ்வளவுதான் என்று எங்களுக்குத் தெரிந்துவிட்டது. மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டு அங்கு கிடந்தோம்.

"பின்னர் காலை 10.30 அல்து 11.00 மணியளவில் எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் பெண் வைத்தியரொருவர் உயிரோடிருப்பவர்களையும் காயமடைந்தவர்களையும் கைகளைத் தூக்கிக்கொண்டு எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைக் கேட்டோம். எங்கள் அறையில் ஆறுபேர் மாத்திரமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அனால் எங்களில் குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோமென்பது அப்போது புரிந்தது. நாங்களெல்லோரும் கைகளை மேலே உயர்த்தியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தோம். எங்களின் முன்னால் கிடந்த பிணங்களின் மீதெல்லாம் ஏறி நடந்தோம். அச்சடலங்கள் ஒருமைல் தூரத்துக்கு மேல் பரவிக்கிடந்தது போல் அப்போது தோன்றியது. இந்தியப் படை எங்களை நெருங்கிவர முடியாமல் அவை பெருந்தடை போலச் செயற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் நாங்கள் தப்பிப் பிழைத்திருக்கிறோம். அப்போது எங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்தினார்.

"அழாதீர்கள். நாம் அழுதுகொண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் நிறைய, மிக நிறைய இழந்துவிட்டிருக்கிறோம். அனால் நாம் செய்ய வேண்டிய பணிகள், பெரும்பணிகள் நிறைய இருக்கின்றன. நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்." என்று அவர் கூறினார்.

"அவர் மட்டும் அந்த வார்த்தைகளை எங்களிடம் கூறியிராவிட்டால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாய் இடிந்து போயிருப்போம். யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதியர்கள மற்றும் ஊழியர்கள் அடங்கிய இச்சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்பும் தான் முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் கூட இயங்கிக்கொண்டிருந்த மருத்துவமனைகளில் யாழ் மருத்துவமனையைத் தனித்துவத்தோடும் பெருமையோடும் நிலைநிறுத்துகிறது. இமால் முற்றுகையின் கீழ் பெய்ரூட் இருந்தபோது போர்ஜ் அல் பராஜ்னே என்ற முகாமில் இருந்த மருத்துவமனை என் நினைவுக்கு வந்தது."
தொடரும்....
----------------------------------------------
நன்றி: முறிந்தபனை.
மிகுதியை இதன் அடுத்த பகுதியிற் படிக்கவும்.


4 comments:

Anonymous said...

VAethanai Mikuntha eninum thannambikkai oottum pathivu

Anonymous said...

கொலுவி நீ ஒரு புலி ஆதரவாள நாய் அதுதான் இப்படி எழுதுறாய்

கொழுவி said...

கருத்திட்டவர்களுக்கு நன்றி.


//கொலுவி நீ ஒரு புலி ஆதரவாள நாய் அதுதான் இப்படி எழுதுறாய்//

ஹிஹிஹி... உது நான் எழுதினதில்லையுங்கோ.
முறிந்த பனையில இருந்து எடுத்துப் போட்டிருக்கிறன்.

உங்களுக்கு நாங்கள் நாய். எங்களுக்கு நீங்கள் நாய். அவ்வளவுதான்.

இந்தச் சம்பவம் பற்றின இன்னும் இரண்டு பகுதிகள் இருக்கு. இப்ப நேரமில்லை. இந்த வாரக்கடைசியில அதுகளையும் தட்டச்சுசெய்து போடுறன்.

சோமி said...

நல்ல வேலை கொழுவியாரெ.முறிந்த பனை நிச்சயம் இந்த தமிழ்மணத்தில் அரசியல் பேசும் சகல்ரும் படிக்க வேண்டியவைகள்.
பரவாயில்லையே இப்பிடி பயனுள்ள விசயங்களும் செய்யுறீரே....