Friday, October 21, 2005

யாழ் மருத்துவமனைப் படுகொலை.

இன்று பாரதப் படைகளால் யாழ்மருத்துவமனையில் நடத்தப்பட்ட படுகொலையின் பதினெட்டாம் ஆண்டு நினைவுநாள். அதையொட்டி, அச்சம்பவம் பற்றி 'முறிந்த பனை'யில் எழுதப்பட்ட பத்திகளை இங்கே தருகிறோம். 'முறிந்த பனை' பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லையென்றே நினைக்கிறேன். 'அழ வேண்டாம் சோதரி' யின்போதோ வேறு சந்தர்ப்பங்களிலோ றாஜனி திரணகம பற்றிய விவாதங்களில் தாராளமாக இந்நூல் பற்றிக் கதைக்கப்பட்டதுண்டு. இனி அந்நூல் சொல்லும் அப்படுகொலை பற்றிய பத்திகளைப் பார்ப்போம். நீளம் கருதி பகுதிகளாக இடப்படுகிறது.

யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவனைக்கு வந்து கொண்டிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமலிருந்தது. எழுபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தன. யாழ்ப்பாணத்தின் முக்கிய பிரமுகர்கள் அரச அதிபரின் அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்துக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து எறிகணைத் தாக்குதலின் தீவிரம் குறைந்துவிட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததால் பாதுகாப்புப் பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13 ஆம் திகதி எறிகணைத்தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்திருந்தனர். ஆனால் அப்பாவி மக்களுக்குப் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய தாக்குதல்கள் பற்றி தங்களுக்கு ஏதும் தெரியாதென்று இந்தியத் தூதரகம் மறுத்ததாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்டோபர் 21 ஆம் திகதி - தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் யாழ் மருத்துவனையின் சுற்றுப் பகுதிகள் அனைத்தும் கோட்டை இராணுவ முகாமிலிருந்தும் ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு இலக்கானது. காலை 11.30 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைக் கூடத்தின்மேல் ஓர் எறிகணை விழுந்தது. பிற்பகல் 1.00 மணியளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத்துருப்புக்கள் காணப்பட்டதாக அங்கிருந்த மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 1.30 க்கு 8 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் ஓர் எறிகணை விழுந்ததில 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய இன்னொரு வைத்தியருடன் வெளியில் சென்ற இம் மருத்துவ நிபுணர் 2.00 மணியளவில் ஆயுதம் தாங்கிய சில விடுதலைப்புலிகள் அங்கு நிற்பதைக் கண்டிருக்கிறார். பின் அவர் மருத்துவர் கணேசரட்ணத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளைக் கேட்டுக்கொண்டார். அங்கிருந்த புலித்தலைவன் அதை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து குழுவினரோடு வெளியேறிவிட்டான். சற்று நேரத்தின் பின் வேறொரு புலிகளின் கோஸ்டி அவ்விடத்துக்கு வந்தது. அவர்களிடமும் நிலைமையை விளக்கிய பின் அவர்களும் அங்கிருந்து சடுதியில் காணாமற்போயினர்.

பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது.
"ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறிப் போய்விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்குமானால் அவ்வாறே சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவம் மிகக்கிட்டத்தில் இருந்ததாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியாகப் பசித்தபடியால் வீட்டுப்போகலாம் என முடிவெடுத்தேன். என்கூட வேலை செய்யும் இன்னொரு வைத்தியருடன் பிற்பகல் 2.30 க்கு ஆஸ்பத்திரி பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடுபோய்ச் சேர்ந்துவிட்டேன். பிற்பகல் 4.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிடங்களுக்குத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரிப் பக்கமிருந்து திருப்பிச் சுடும் சத்தமேதும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப் புலிகளும் இல்லை"
என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார்.

இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனத்தைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த அந்தப் பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்.

நன்றி : முறிந்தபனை.
----------------------------------------------------------------------------
இதன்பின்தான் அந்த அதிபயங்கரக் கொடூரம் இந்தியப்படைகளால் நடத்தப்பட்டது. மருத்துவர்கள், தாதியர், நோயாளிகள் எனப் பலர் அம்மருத்துவமனையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் இறப்பை இயன்றவரை உறுதிப்படுத்தும் அத்தனை வேலைகளும் செய்யப்பட்டன. மயிர் கூச்செறியும் அந்த அனுபவம் அடுத்த பகுதியாக வருகிறது.



2 comments:

கொழுவி said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

did the army just barge in the hospital and shot people or "something" happened just before army went on rampage???????

if you sleep on the railway track most probably train will run over you..nopoint in blaming army