நானும அப்பிடித்தான். எனக்கும் உந்த ஆய்வுகள் அரசியல் வியாக்கியானங்கள் செய்யிறதெண்டால் சரியான ஆசை. இப்ப சீனா புலிகளுக்கு உதவி செய்யிறதையும் அது ஏன் உதவி செய்யுது எண்டதையும் அதுக்கு பின்னாலை இருக்கிற பிராந்திய நலன்களையும் விரிவா உங்களுக்கு சொல்ல இருக்கிறன்.
முதலில இந்தப் படத்தைப் பாருங்கோ. இதில புலிகளின் அரசியல்த்துறை பொறுப்பாளர் திரு சு ப தமிழ்ச்செல்வன் ஒரு ஆயுதம் ஒன்றை ஏந்தியிருக்கிறார். இதைப் பாத்த உடனை சிலர் அரசியல்ப் பிரிவைச் சேந்தவரே ஆயுதம் தூக்கிட்டார். இனி புலிகள் தரப்பில சமாதானம் எண்ட பேச்சுக்கே இடமில்லை எண்டு அறிவு பூர்வமா முடிவெடுப்பினம். அதுவும் தமிழ்நாட்டில வாற உந்த ராணி தேவி மாதிரியான புத்தகங்கள் இப்பிடியும் தலைபெழுதலாம் - ஆயுதம் ஏந்தினார் புலிகளின் அரசியல்த்துறை தலைவர். புலிகள் தரப்பில் இனி பேச்சுக்கு இடமில்லை
இந்தப்படத்தில தமிழ்ச்செல்வன் வைச்சிருக்கிற ஆயுதம் என்ன வகையைச்சோந்தது.. இதை முதலில ஆராய்வம். இது PF-89, a portable 80mm light anti-tank weapon அதாவது இது ஒரு டாங்கி எதிர்ப்பு ஆயுதம். சோவியத்தின்ர RPG -7 வகைக்கு மாற்றீடாக செய்யப்பட்டிருக்கெண்டு ஒரு தகவல் சொல்லுது. இதைப்பற்றி இன்னும் தேடுவம் எண்டு வெளிக்கிட எனக்குக் கிடைத்தது இந்தப்படம்.
படத்தில பாருங்கோ.. சீன எழுத்தில ஏதோ எழுதிக்கிடக்கு. இதுதான் என்ரை ஆராய்ச்சியை மேலும் தூண்டினது. இது சீன ஆயுத வகைதான் எண்டதை உறுதிப்படுத்தினது இந்த தளம். அது மட்டுமில்லை.. இன்னும் ஆச்சரியத்தை தந்த தகவல் என்னெண்டால் இந்த வகை ஆயுதம் இந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதிச் செய்தியின் படி அத் திகதிக்கு கிட்டவா அறிமுகப்படுத்தியிருக்கிறது சீன இராணுவம்
March 1, 2006: The Chinese army has begun issuing the PF-89, a portable 80mm light anti-tank weapon, to replace obsolete Soviet-era RPG-7 type weapons
ஆக.. இந்த வருட ஆரம்பத்தில அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆயுதம் வருட முடிவிற்குள் புலிகளிடம் வந்தது எப்படி?
ஆம் சீனா.. புலிகளுக்கு இராணுவ உதவிகளை வழங்குகிறது. இப்போது இதன் பின்னணிகளைப்பார்ப்போம்.
ஆசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவிடம் பகைத்துக்கொண்ட புலிகள் அந்த உறவினை இனி ஒட்ட முடியாது என்று கருதுகின்றனர். இந்நிலையில் 2020 களில் உலக வல்லரசாக வருவதற்குரிய வகையில் இரகசியமாய் செயற்படும் சீனாவுடன் உறவுகளைப் பேண புலிகள் விரும்புகின்றனர். இதன் மூலம் வல்லரசு ஒன்றின் ஆதரவும் துணையும் அவர்களுக்கு கிடைக்கிறது.
சிறிலங்கா இந்திய ஆதரவு நிலையினை எடுத்ததாகவே சீனா கருதுகிறது. ஆகவே அந்த நாட்டின் அரசுக்கு எதிராகப் போராடும் புலிகளுக்கு ஆதரவு நிலையினை எடுத்துள்ளது.
இனி இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.
அமெரிக்காவும் பாகிஸ்தானும் சிறிலங்கா அரசுக்கு இராணுவ உதவி வழங்குவது இந்திய இறையாண்மைக்கு குந்தகம் என்பதால் முன்பொருமுறை யாரோ ஒருவர் இந்தியாவே சிறீலங்காவிற்கு ஆயுத உதவிகள் வழங்க வேண்டும் என வலைப்பதிவில் சொல்லியிருந்தார்.
அதே போலவே புலிகளுக்கு சீனா உதவி வழங்குவது என்பதும் இந்திய இறையாண்மையை பாதிக்கின்றமையால் இந்தியா அந்த உதவியினை தடுத்து விட்டு தானே புலிகளுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்.
இந்த நேரத்தில் ... பிராந்தியமாவது வல்லரசாவது.. காசிருந்தா எங்கை குடுத்தும் ஆயுதம் வாங்கலாம் எண்ட உண்மை எனக்கு உறைக்க.. அது புலிகளால் முடியும் என்பதும் தெரிய வர.. என்னுடைய ஆய்வை இத்துடன் முடிக்கிறேன்.
அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து றொக்கெட் லோஞ்சர்கள் ஆந்திராவுக்கு போகாமல் இராமேஸ்வரப்பக்கம் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கற்பனையுடன்..