Wednesday, June 24, 2009

இந்தியா போகலாம் வாங்கோ....

1988 இன் தொடக்க காலம். அப்போது இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருந்த நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பும் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது. ஈழத்தில் இந்திய இராணுவத்தோடு யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

நாங்கள் யாழ்ப்பாணம் திரும்பத் தீர்மானித்திருந்த காலம் ஏதோ பாலும் தேனும் ஓடிக்கொண்டிருந்த காலமன்று. மாறாக இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த, பேய்களின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டிருந்த காலம். சிறிலங்கா இராணுவத்தோடு பிரச்சினைப்பட்ட காலத்திற்கூட - நாங்கள் அம்மண்ணை விட்டு இந்தியா ஓடிவரும்போது இருந்த சூழ்நிலையைவிட - ஆயிரம் மடங்கு கொடுமைகள் நடந்துகொண்டிருந்த காலம். ஆனாலும் நாங்கள் திரும்பியே ஆகவேண்டுமென அப்பா முடிவெடுத்திருந்தார்.

இவ்வளவுக்கும் அங்கு நடப்பவை எவையும் எமக்குத் தெரியா என்றில்லை. தமிழ்நாட்டுக்கு வரும் காயக்காரரைப் பொறுப்பெடுத்து சிகிச்சைக்கு அனுப்பும் பணியைப் பகுதிநேரமாகச் செய்துகொண்டிருந்தார் அப்பா. நான்கூட அவ்வப்போது வாகனத்தில் கோடி(யா)க்கரைக்குச் சென்றிருக்கிறேன். குற்றுயிராய் வந்தவர்கள் சிலர் சொன்னவைகள் அதிர்ச்சியாக இருந்தன. எங்கள் பக்கத்து ஊரிலேயே கூட்டுப் படுகொலைகள் நடந்ததும், அதில் அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் கொல்லப்பட்டதும்கூட உடனுக்குடன் எமக்குத் தெரியவந்தன. யாழ்ப்பாண வைத்தியசாலையில் இந்தியப்படை ஆடிய கொலைவெறித் தாண்டவம் குறித்த செய்திகள் உடனுக்குடன் வந்து சேர்ந்திருந்தன. இப்படி எல்லாம் தெரிந்த நிலையிலும் நாங்கள் யாழ்ப்பாணம் போக அடுக்குப் பண்ணினோம்.

அது,அப்பாவின் தாய்மண் போவதற்கான வேட்கையாக இருந்திருக்க நியாயமில்லை. மாறாக அங்கே தாய்மண்ணைச் சிதைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் பகுதியில் - அப்பகுதி எமக்கு முழு ஆதரவாக இருந்தபோதும்கூட - அகதியாகத் தங்கியிருப்பதிலுள்ள அபத்தத்தை நினைத்துத்தான். தமிழ்நாடு என்னதான் எமது மொழிவழி உறவாக இருந்தாலும், எமக்கான முழு உணர்வுபூர்வமான ஆதரவுத்தளத்தைக் கொண்டிருந்தாலும், தங்கியிருப்பதென்னவோ இந்தியா என்ற நாட்டில்தான் என்ற உணர்வு குத்திக்கொண்டிருக்க, அங்கிருக்காமல் புறப்பட்டோம்.

படகு வழியாற் செல்ல எடுத்த முயற்சிகள் பலனின்றிப் போக, இறுதியில் இந்திய அரசே அனுப்பிய கப்பலில் (முதலாவது கப்பலாக இருக்க வேண்டும்) காங்கேசன்துறை போய்ச்சேர்ந்தோம். எங்களோடு வந்தவர்கள் பலருக்கும் இதுவே காரணமாக இருந்திருக்கக் கூடும்.
-----------------------------------------

2009 மே மாதம் 19 ஆம் நாளின் பின்...

வன்னியின் கடைசித் தொகுதி மக்களும் பிடிக்கப்பட்டு வவுனியாவில் அடைக்கப்பட்டுள்ள நிலை.
சில முகாம்களிலிருந்து சிலவழிமுறைகள் மூலம் வெளியேறக்கூடிய வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கின்றன. அப்படி வந்த உறவினனும் 'தோழனுமான' ஒருவன் சொன்னான்,
'டேய், உன்ர அம்மாவைக் கேட்டன், வெளிய வாங்கோ... இந்தியாவுக்குப் போய் இருந்து பிறகு என்ன செய்யிறதெண்டு பாக்கலாம் எண்டு. ஆனா தான் செத்தாலும் இந்தியா வரமாட்டன் எண்டு சொல்லிறா. நீயொருக்காக் கதைச்சுப்பார், தங்கச்சி மாரையெண்டாலும் விடச்சொல்லு.'

இது எனக்கு வியப்பைத் தரவில்லை. அம்மா மட்டுமில்லை, இன்னும் நிறையப்பேர் இப்படித்தான் சொல்வார்கள் என்பதை ஊகிப்பதொன்றும் கடினமில்லை. 'கதை... கதை...' என்று அவன் தந்த அரியண்டத்தால் கதைக்க வெளிக்கிட்டேன். உள்ளிருப்பவர்களோடு தொடர்பு கொள்ளும் வழிமுறையொன்றைத் தெரிந்து தொடர்பை ஏற்படுத்தித் தந்தான் அவன். எதிர்பார்த்ததை விட ஆவேசமான மறுமொழி வந்தது எதிர்முனையிலிருந்து. வன்னியிலிருந்து வெளிவந்த கடைசித் தொகுதி மக்களிடத்தில் பிறகு பேசக் கிடைத்த வேறுசில தொடர்புகளிலும் இந்த வசைமாரி தாராளமாகக் கிடைத்தது.

இன்று தாமரையின் வசைக் கவிதையையும் அதற்கான ஆதரவு, எதிர் வினைகளையும் படிக்க நேர்ந்தது. அம்மாவுக்கோ பேசிய மற்றவர்களுக்கோ கவிதை எழுதத் தெரியாது; கவர்ச்சிகரமான மொழிநடையில் கட்டுரைகூட எழுதத் தெரியாது. தெரிந்தால் தாமரையினதை விட கடும் வீச்சோடு அவை இருக்கும். கடும் சுகவீனம் காரணமாக பேசமுடியாமலிருக்கும் என் பேத்திக்கும் கவிதை எழுதத் தெரியாது. ஆனால் அவளுக்கு நன்றாக ஒப்பாரி பாடத் தெரியும். ஊர் இழவு வீடுகளில் அவள் குரல் ஒலிக்கும். என்ன மாதிரியாக எதுகை, மோனை அடுக்குவாள்? சந்தம் அழகாக இருக்கும்.

பேசக் கிடைத்தால் ஒருமுறை 'எணேய்! இந்தியா போய் இரணை, அங்க வருத்தத்தைச் சுகப்படுத்தலாம்' என்று சொல்லி அவளின் ஒப்பாரியைப் பதிவாக்க வேண்டும். நல்லதைச் சொல்லித்தான் ஒப்பாரி பாட வேண்டுமா என்ன?

இவர்களுக்காக எழுத தாமரையாவது இருக்கிறார் என்று அறுதற்பட்டுக் கொள்வோம்.

4 comments:

ARIVUMANI, LISBON said...

no words to express myself..

ரவி said...

இயலாமை.

siva said...

போங்கடா போக்கத்த பயலுங்களா
உங்களை யாரும் எங்க நாட்டுக்கு வாங்க வாங்கன்னு பாக்கு வைத்தலை வைச்சு கூப்பிடவில்லை.

உங்க கள்ள பாஸ்போர்ட் திருட்டு கடன் அட்டை கொள்ளை எல்லாத்தையும் உங்கட நாட்டுக்குள்ள வைச்சுக்குங்க.

அதோட ஆட தெரியாதவனுக்கு மேடை சரியில்லைன்னு சொன்னானாம்.

போங்கடா....

ஃபித்னா.காம் said...

பிரபாகரன் முன்னிலையிலே மானபங்கப்படுத்தப் பட்ட இளம் பெண்
http://www.sweetlanka.blogspot.com/