இதோ, இதிலிருக்கும் பொருட்களை எடுத்து வைப்பீராக.
என்னப்பா? சந்தைக்கெண்டு போய் எங்க சுத்திப்போட்டு வாறியள்?

போதுமப்பா. நான் என்ன கேக்க நீங்கள் என்ன சொல்லிறியள்?
நீங்கள் கேட்பதன் பொருளை முற்றிலுமாகப்புரிந்துதாம் நாம் பதிலிறுக்கிறோம்.
நிப்பாட்டுமப்பா.. என்ன நாம் தாம் தூம் எண்டு குதிக்கிறியள். அதுசரி நீங்கள் தனியத்தானே சந்தைக்குப் போனனியள்? இல்லாட்டி வேற ஆரோடயும்…?
ஆம். நாம் தனியேதாம் போய் வந்தோம். ஒரு மனிதனின் துன்பத்தைப் புரியாமல் அவன்மீது சந்தேகப்பட்டு துரோகிப்பட்டம் கட்டப்பார்க்கும் உம்போன்றவர்களினாற்றாம் நாம் பேச்சுச் சுதந்திரத்தையே இழந்துள்ளோமென்பதோடல்லாமல் தரகுமுதலாளிகளையும் குட்டி பூர்சுவா வர்க்கத்தையும் எதிர்க்கத்திராணியற்று…
போதும். போதும்…
அதுசரி, என்ன காய்கறியெல்லாம் இப்பிடி வாடிக்கிடக்கு?
இதுதாம் தொழிலாள வர்க்கத்தின் சாபக்கேடு. உழைக்கும் தொழிலாளிகளின்மேற்சவாரி செய்யும் தரகுமுதலாளிகளின் இயந்திரமான அடக்குமுறைகளினாற் கட்டுண்டுபோன வாழ்க்கையை வாழும் இருப்பிழந்த-உளமிழந்த-நிம்மதியிழந்த நிலையாகிப்போன வாழ்க்கையின் கொடிய பக்கங்களில் வாழ்ந்துவரும் தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை முடக்கும் தரகுமுதலாளிகளின் பினாமிகளான குட்டிப்பூர்சுவாக்களனினையெதிர்த்துச் செய்ய வேண்டிய போராட்டத்தின் ஓர் அங்கமாக புதிய ஜனநாயகப் புரட்சியைக் கைக்கொள்ளப்போகும் இவ்வர்க்கம் தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் அவலநிலையின் வெளிப்பாடே இந்தச் சோகங்கள்.
எனக்கொண்டும் விளங்கேலயப்பா. சந்தையில ஏதும் பிரச்சினையே?

நீங்கள் கதைச்சு முடியிறதுக்குள்ள நான் கறி வைச்சு முடிச்சிடுவன்.
நாம், தாம் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிறியள். ஆரப்பா உங்களோட சேந்த மற்றாக்கள்?
நாமென்பது நயமுள்ள வார்த்தை. அது இப்போது என்னையே குறிக்கும்.
நானென்பதை எப்போதொழிக்கிறோமோ அப்போதே மானுட விடுதலை பிறக்குமென…
ஆராவது சொல்லியிருப்பினம்.
எனக்கெதுக்கு அதெல்லாம்.
நீங்கள் ஏதாவது தமிழ்ப்பேச்சாளராய் இருந்திருக்கலாம்.
சொல்லிப்போட்டன், இனி என்னோட இப்பிடி நாம் தாம் தூம் எண்டு குதிச்சுக்கொண்டு நிண்டியளெண்டா இனி சாப்பாடு கிடைக்காது.

என்னப்பா விக்குதோ? இந்தாங்கோ. சோடாவக்குடியுங்கோ.
இல்லை. இது ஏகாதிபத்தியங்களின் திட்டமிட்ட க்கே.... திட்டமிட்ட சந்தைப்படுத்தற்பொறி க்கே.. பொறிமுறைப்பண்டம். ஏழைகளின் க்கே.. மேலேவப்படும் அராஜகம்.. க்கே.. பச்சைத்தண்ணியிருந்தாத் க்கே.. தாரும்.
------------------------------------------------
கொள்கைகள் 'மறுவாசிப்பு'ச் செய்யப்படவில்லை, மொழிப்பாவனை மட்டுமே.
------------------------------------------------
6 comments:
:))
(:=O
<:-I
>:-(
கேள்விங்க மட்டும் புரியுது.. பதிலெதுவுமே புரியலையே!! கொஞ்சம் இலகு படுத்தி எழுதுங்களேன்
உங்களுக்குப் புரியாமலிருப்பதே நன்று.
அருமையான படைப்பு.
keep up your good work of exposing the real culprits
Post a Comment