தமிழ்ச் சின்னப்பிள்ளையெண்டதை நான் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கு.
ஏனெண்டால் தமிழ் எண்ட படியாலைதான் நான் சாகப் போறனாம். ஆனா எனக்கு அது ஏனெண்டு விளங்கேல்லை. பள்ளிக்குடத்தில எனக்கு கணக்குப் பாடத்தை விட, விஞ்ஞான பாடத்தை விட தமிழ்ப் பாடம் நிறைய விருப்பம். இதனாலை ஏன் சாகப்போறன் எண்டும் இதுக்காக என்னை எதுக்கு அவையள் சாக்கொல்ல வேணும் எண்டும் எனக்கு விளங்கேல்லை.
எனக்கு சாகிறதெண்டால் சரியான பயம். செத்தால் பேயா வந்து அலைவனாம்.
எனக்கு பேயெண்டாலும் சரியான பயம். ஆனால் அம்மா சொல்லுறா பேய்கள் தானாம் உந்தப் படங்களில இருக்கிற மாதிரி மனிசரை கொல்லுமாம். அதோடை அம்மா இன்னொண்டையும் சொல்லுறா..
சாகிறதெண்டால் நான் இப்பவே செத்துப் போக வேணுமாம். ஏனெண்டால் பொம்பிளைப்பிள்ளையா பிறந்த நான் பெரியாளா வளந்த பிறகு பேய் பிசாசுகள் என்னை கதறக் கதறக் கொல்லுமாம். ஆனா என்ரை அம்மா நான் கவலைப் படக் கூடாது எண்ட படியாலை அம்மாவையும் அந்தப் பேய்கள் கொல்லும் எண்டதை சொல்லாமல் மறைச்சுப் போட்டா.
எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். இன்னும் பள்ளிக்குடம் போகேல்லை. கதைக்கவும் மாட்டான். எண்டாலும் அவனும் தமிழன் தானே. அவனை மாதிரித்தான் ஒரு தம்பியை அம்மாக்கும் அப்பாக்கும் இடையில படுத்துக் கொண்டிருந்தவனை நித்திரைப்பாயிலையே வைச்சு கொலை செய்து போட்டாங்கள்.
எனக்கு பயமாக்கிடக்கு. நானும் என்ரை தம்பியும் அம்மாக்கும் அப்பாக்கும் இடையில தான் படுக்கிறனாங்கள். என்ர கனவிலையெல்லாம் என்ர தம்பி குடல் வெளியில தெரிய தூக்கில தொங்கிற மாதிரி வருகுது. அதை நான் அம்மாக்கு சொல்ல அம்மா என்னைக் கட்டிப்பிடிச்சு ஓவெண்டு கத்தி அழுகிறா. ஆனா தம்பி அதைப்பாத்துச் சிரிக்கிறான். அவனுக்கு ஒண்டும் விளங்கேல்லை.. இப்பிடித்தானே அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற அந்தத் தம்பியும் சிரிச்சு விளையாடியிருப்பான். ஒரு வேளை சாகிற நேரத்திலும் ஒண்டும் விளங்காமல் சிரிச்சுக் கொண்டிருந்திருப்பானோ?
எனக்கு சிலது விளங்கிற மாதிரியும் சிலது விளங்காத மாதிரியும் ஒரே குழப்பாமாக்கிடக்கு.
நான் பிறக்கேக்கை இங்கை சண்டை நடந்ததாம். ஆனால் தம்பி பிறக்கும் போது சண்டை இல்லை. அம்மா சொல்லுவா அவனைப் பாத்து நீ அதிஸ்டக்காரன் எண்டு. ஆனா செத்துப் போன இந்த தம்பி பிறக்கும் போதும் சண்டை இல்லாமல் தான் இருந்திருக்கும். அப்ப அவன் ஏன் அதிஸ்டக்காரனா இல்லை. ஒரு வேளை என்ர தம்பியும் அதிஸ்டக்காரனா இருந்து இப்படிச் செத்துப் போடுவானோ? எனக்கு கவலையாக் கிடக்கு.
எனக்கும் அவனுக்கும் சின்னச் சின்ன சண்டையள் வந்தாலும் அவனில நான் நல்ல பாசம். கடவுளே அவன் இந்த மாதிரி செத்துப் போன கோலத்தில இருக்கிறதை என்னாலை கண் கொண்டு பாக்கவே முடியாது.. எனக்கிப்ப அழுகையா வருது.. ஆனா.. தம்பி இப்பிடி செத்துப் போனால் கடைசியா நான் அவனைப் பாக்கத்தானே வேணும். என்ரை தம்பியெல்லோ அவன்?
எனக்கு சாகிறதுக்கு சரியான பயம்தான் எண்டாலும் தம்பி சாகிறதெண்டால் என்னையும் சாக்கொல்லட்டும். ஒரு வேளை என்னப்போலத்தான் தூக்கில தொங்கிற அக்காவும் கேட்டிருப்பாவோ? அவவைப் பாக்க எனக்கு அழுகையா வருது. அவக்கு என்ரை வயசுதானே இருக்கும்.
அவவுக்கும் தன்ரை தம்பியில நல்ல பாசம் வைச்சிருப்பா தானே என்னை மாதிரி!
எனக்கு வடிவாத் தெரியாது. ஆனா கேள்விப்பட்டனான். ஏதோ சில நாடுகளில மிருகங்களை கொன்றால் கூட பொலிஸ் பிடிக்குமாம். நீதி மன்றம் எல்லாம் கொண்டு போவினமாம். ஆனால் இங்கை நாங்கள் குடும்பம் குடும்பமாக் கொல்லுப்படுறம். ஒருத்தரையும் பிடிக்கிறதுமில்லை. ஏன் எண்டும் கேக்கிறதில்லை.
சரி அந்த மிருகங்களாவது சந்தோசமா உயிரோடை வாழட்டும்
நான் ஒரு படம் பாத்தனான். இதில அம்மாக்கும் அப்பாக்கும் நடுவில செத்துக்கிடக்கிற தம்பியின்ர படத்தைப் பிடிச்சுக்கொண்டு வெளிநாட்டில - அது நல்ல வடிவான நாடு - ஒரு தங்கச்சி - அவ நல்ல வடிவான தங்கச்சி - இருந்தவ. அவ குளிர்சட்டையெல்லாம் போட்டு காலுக்கு சொக்ஸ் சப்பாத்து எல்லாம் போட்டிருந்தவ. அவவக்கும் என்ர வயசுதான் இருக்கும். அவ சந்தோசமா இருக்கிறது எனக்கும் சந்தோசமாத்தான் கிடக்கு. ஆனா நாளைக்கு செத்துப் போன என்ரை படத்தையும் அவயள் தூக்கிப் பிடிப்பினமோ எண்டதை நினைக்க பயமாக்கிடக்கு.
அளவுக்கு மீறி ஆசைப்படக்கூடாது எண்டு அப்பா சொல்லுறவர். எண்டாலும் எனக்கு சொல்லாமல் இருக்க முடியேல்லை. அந்த வெளிநாட்டுத் தங்கச்சி மாதிரியே நானும் காலுக்கு சொக்ஸ் சப்பாத்து போட்டு நல்ல உடுப்புப் போட்டு பள்ளிக்குடம் போக வேணும் எண்டு ஆசையாக் கிடக்கு. என்ன செய்ய எல்லாத்தக்கும் முதலில உயிரோடை இருக்கத்தானே வேணும்..
எனக்கு இந்த இடத்தில என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை.. நான் உயிரோடை இருப்பனா எண்டது எனக்கு தெரியேல்லை. உங்களில ஆருக்காவது தெரியுமா ? நானும் தம்பியும் அம்மாவும் அப்பாவும் இன்னும் என்னைப்போல இருக்கிற எல்லாரும் உயிரோடை இருப்பமா?
எனக்கு ஆரிட்டை கேட்கிறது எண்டு தெரியேல்லை . எண்டாலும் கெஞ்சிக் கேக்கிறன் ! எங்களுக்கு உயிர்ப்பிச்சை போடுறியளா?.. தம்பிக்கு கதைக்க தெரியாது. அவனுக்காக நான் கெஞ்சிக் கேட்கிறன்.. எங்களை உயிரோடை வாழ விடுவியளா..?
6 comments:
:(... :((
பயங்கர வாதத்தை முளையிலேயெ கிள்ளுகின்ற நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடு பட்டிருக்கிறது.
:((
எங்கட இளம் குருத்துகளின் தலைவிதியை நினைத்தால் பயமாய் இருக்கிறது.
மிகவும் நெஞ்சை உருக்கும் ஓர் செய்தியை குழந்தையின் நிலையில் இருந்து நீங்கள் எழுதியுள்ள விதம் இன்னும் கனமாக இருக்கிறது. :(((
enna solla.. ? vithi
Post a Comment