Monday, September 18, 2006

திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ

தியாகி திலீபனின் பத்தொன்பதாவது நினைவு தினம் இப்போது. எங்கள் தேசத்தின் இளைய எதிர்கால தூர நோக்கோடு செயலாற்றிய வசீகரம் மிக்க தலைவனை அகிம்சை நாட்டின் ஆணவத்தால் இழந்து 19 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் சோகம் ஆறாத துயராய் கிடக்கிறது.
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.



"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்
உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..

வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..

அவன் என்ன தான் கேட்டான்?

அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..

அதற்காகவா இந்த விலை?

அதற்காகவா இந்த துயரம்?

வன்னியனின் இப்பதிவில் திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள் என்ற பதிவு இடம் பெறுகிறது. பன்னிரண்டு நாட்கள் திலீபனுடன் அருகிலேயே நின்றிருந்த மு.வே.யோ வாஞ்சிநாதன் அப்போ நடந்தேறிய அந்த துயரத்தை தன் எழுத்துக்களில் சொல்லியிருக்கின்றார். தான் நேசித்த மக்களுக்காக ஒரு இளைஞன் சொட்டுச் சொட்டாய்ச் செத்தானே அவனைப் படியுங்கள்

9 comments:

ஈழபாரதி said...

அந்த தியாக தீபம் அணைந்து விட்டாலும் அவன் ஏற்றி வைத்த விடுதலை நெருப்பு ஒவ்வொரு ஈழத்தமிழனுக்குள்ளும் எரிந்து கொண்டுதான் இருக்கும்.

வரவனையான் said...

நல்ல இணைப்பு மிக்க நன்றி

Anonymous said...

கண்களில் நீர் கோர்க்கின்றது..

Anonymous said...

அன்பார்ந்த தமிழீழ மக்களே !
விளக்கு அணையுமுன்பு பிரகாசமாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகத்துடன் இருக்கிறேன் என்பது தெரிகிறது. இன்று தாராளமாகப் பேசமுடிகிறது. போராடத் தயாராகுங்கள்! எனக்கு விடை தாருங்கள்! ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும் எனது தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. மறைந்த போராளிகள் 650 பேருடன் சேர்ந்து 651 ஆவது ஆளாகி மேலிருந்து பார்ப்பேன். எங்கள் உயிர் உங்களுடன் ஒட்டிவிடும். என்னைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். எனது அவயவங்கள் செயலிழப்பதனால், இனிமேல் மனிதனாக வாழமுடியாது என்பது எனக்குத் தெரியும்.
எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள். கொள்கைக்காக என்னைத் தொடர்ந்து வருவார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள். நாங்கள் ஐந்து ஆறு பேர் சாவதால் எவ்வித தீங்கும் வந்துவிடாது. முக்கள் புரட்சி வெடிக்கட்டும். நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவைகளும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்”.
-- அந்த நினைவுகளில் அழுகிறது மனம்

Anonymous said...

எங்கள் தேசத்தின் இளைய தலைவனை இழந்த துயரம் இன்னமும் நெஞ்சில் கனக்கிறது.

Anonymous said...

thanks

Anonymous said...

suresh from Iran
1988இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில்-இல் படித்த போது,திலீபனின்-இன் வீர மரணம் என் ஈழ தாகத்தை கட்டியது.எனை போன்ற பல தமிழ் நாடு வாலிபர்களின் நிஜ நாயகன் திலீபன் தான்.திலீபன் நம் சமகாலத்தின் மாபெரும் வீரன்.Nethaji,Che-quvera,Fidel Castro,Ho-chi-min,Yazzer Arabat,
இன்னும் பல உலக தலைவர்கள் தன் நாட்டின்/இனத்தின் விடுதலைக்கு போரடியதை நான் படித்திருகிறேன்.ஆனால் திலீபன் நடத்திய போராட்டம் என் காலத்தில் நடந்தது நான் கண்டது.
படித்ததை விட பார்த்ததே நம் மனதில் நன்றாக பதியும்.திலீபன் தூவிய விடுதலை விதை ஈழ பூமியில் மட்டுமல்ல உலகில் தமிழன் வாழும் இடம் எல்லம் புரட்சி மலர்களை பூக்கும்.
வாழ்க திலீபன் புகழ். வெல்க திலீபன் விரும்பிய விடுதலை பயணம்

Anonymous said...

விதியே ! உன் கரங்கள் இத்தனை கொடியதா? பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா? ஆப்படி அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்?

தமிழினத்துக்காகத் தனது தந்தை, சகோதரங்களைப் பிரிந்து வந்தாரே…. அது குற்றமா?
தமிழினத்துக்காகத் தன் வைத்தியப் படிப்பையே உதறி எறிந்தாரே….. அது குற்றமா?
தமிழினத்துக்காக இரவு பகல் பாராமல் மாடாக உழைத்தாரே…… அது குற்றமா?
தமிழினத்துக்காக தன் வயிற்றிலே உள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தாரே…. அது குற்றமா?
தமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாலே…. அது குற்றமா?
எது குற்றம்?

வானத்தைக் பார்த்து வாய்விட்டுக் கத்தவேண்டும் போல் இருக்கிறது.
கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது? இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக….? திலீபனுக்காக…… தமிழினத்துக்காக…..
அப்படியிருக்க…. அந்தக் கண்ணீரை…. ஏக்கத்தை…. இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே…? ஏன்?

உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா? காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா?
அல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…?

கொழுவி said...

ஈழபாரதி,
வருகைக்கு நன்றி.
வரவனையான்,
வருகைக்கு நன்றி.
நல்லவன்,
வருகைக்கு நன்றி.