Tuesday, January 22, 2008

டேய்! இன்னுமாடா எங்கள நம்புறீங்க?

இந்த மாதத்தில், இன்றுவரையான (22.01.2008) இருபத்தியிரண்டு நாட்களில் 592 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் 26 படையினர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களும் - குறிப்பாக இந்தியச் செய்தி நிறுவனங்கள் களைப்போ சலிப்போ இன்றி ஒவ்வொருநாளும் நாற்பது, ஐம்பது புலிகள் கொல்லப்பட்டார்கள் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.

சிறிலங்காவின் இராணுவத் தளபதி, இவ்வாண்டு தொடங்க முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், வன்னியில் எஞ்சியிருப்பது 3000 புலிகளே. அவர்களை மாதமொன்றுக்கு 500 பேர் வரை கொன்று ஆவணி மாதத்துக்குள் முற்றாக ஒழித்துவிடுவேன் என்று அவ்வறிக்கையில் தெரிவித்தார்.
அவரின் வாக்கைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகச் செயற்பட்ட இராணுவம் கொஞ்சம் அதிகமாகவே கொன்று குவித்துவிட்டது. 22 நாட்களில் 600 ஐ எட்டிவிட்டது கணக்கு. இப்படியே போய் இம்மாத முடிவில் 700 ஐத் தாண்டிவிடும். கடைசியில் ஏப்ரலுக்குப்பிறகு கொல்வதற்குப் புலிகள் இருக்க மாட்டார்கள்.

வன்னியென்பது மிகப்பெரிய பிரதேசம். புலிகள் சுற்றிக் காவல் செய்ய வேண்டிய பகுதியென்பது பலநூறு கிலோமீற்றர்கள். சரி, கடல்வழி ஊடுருவல்களைக் கணக்கெடுக்காமல் நிலவழிகளை மட்டும் பாதுகாப்பதென்றாலே நூற்றைம்பது கிலோமீற்றர் நீளமான காவலரண் தொடரைக் காப்பாற்ற வேண்டும். இராணுவத் தளபதியின் கணக்கின்படியிருந்த 3000 புலிகளில் இருபது வீதமான (600) புலிகள் கொல்லப்பட்டுவிட்டனர். காயமடைந்த கணக்கை விட்டுவிடுவோம். இருபது வீத புலிகளைக் கொன்றும்கூட வன்னியில் ஓரிடத்தைக்கூட உங்களால் கைப்பற்ற முடியவில்லையா?

உண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்தி வெளியீட்டாளராக இருப்பவர்களுக்கு பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களைப் பற்றிய பார்வை எதுவாக இருக்கும்?
வின்னர் படத்தில் வடிவேலு கேட்கும் கேள்விதான் அவர்களுக்குமிருக்கும்.
=======================
நிற்க,
வன்னியில் நிலங்களைக் கைப்பற்றுவது தமது நோக்கமில்லை என சிறிலங்கா ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார். புலிகளிடமிருந்து நிலங்களை மீட்கும் நோக்கத்தில் தாம் படை நடைவடிக்கையைச் செய்யவில்லை என்பது அவரின் கருத்து. வன்னியில் கடந்த இரு மாதங்களாக இடைவிடாது (கிட்டத்தட்ட ஒவ்வொருநாளும் ஏதோவோர் முனையில் முன்னேற்ற முயற்சி நடந்துகொண்டிருதானிருக்கிறது) நடந்த முன்னேற்ற முயற்சிகள் பெருமளவில் தோல்வியில் முடிவடைந்ததன் எதிரொலிதான் இந்தப் பேச்சா என்ற கேள்வி பொதுவா உள்ளது.
'என்ன இன்னும் பெரிய வெற்றிச் செய்திகள் எவையும் கிடைக்கவில்லையே?' என்ற தென்பகுதிச் சிங்களவரின் கேள்விக்கான விடைதான், "சேச்சே... நாங்கள் இன்னும் இடங்களைப் பிடிக்க வெளிக்கிடேல" என்ற ராஜபக்சவின் பதில். ஒருவகையில் 'சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும்' என்ற தொனியில்தான் அவரது அறிவிப்பு உள்ளது.

அதற்கா ராஜபக்ஷ சும்மா இருந்துவிடுவாரா என்ன?

'இன்னும் இரு வாரங்களில் மடுத் தேவாலயப் பகுதியைக் கைப்பற்றிவிடுவோம்' என தமக்கு உயர்நிலை இராணுவ அதிகாரியொருவர் சொன்னதாக இக்பால் அத்தாஸ் எழுதி இரு கிழமைகள் ஆகின்றன. இன்னும் மடு படையினரால் கைப்பற்றப்படவில்லை. ஆனால் அதைக் கைப்பற்ற மிகப்பாரியளவில் இராணுவம் முயற்சித்துக்கொண்டுள்ளது. சில தினங்களுக்குள் - குறிப்பாக இன்னும் இருவாரத்துள் வரவிருக்கும் சிறிலங்கா சுதந்திர தினத்துக்குள் மடுவையாவது கைப்பற்றிவிட வேண்டுமென்ற நோக்கில் மிகப்பெரும் படைநடவடிக்கையொன்றுக்கான ஆயத்தத்தை சிறிலங்கா இராணுவம் செய்துகொண்டுள்ளது.

அது முடியாவிட்டால் ஏதோவோர் இடத்தை, அது வெறும் காட்டுப்பகுதியாக இருந்தாற்கூட பரவாயில்லை, பிடித்துவிட்டோம் என்று அறிவிக்கவே அரசு முயற்சிக்கும்.

அதற்குள் தெற்கில் குண்டுகளும், கிளைமோர்களும் வெடிக்காமலிருந்தாலே போதுமானது என்பது இன்றைய அரசின் நிலை.

No comments: