Sunday, August 31, 2008

போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்



கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
போராளிகள் மடுவைவிட்டு
பின் வாங்கினர்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.

நகர முடியாத இடைஞ்சலில்
நிகழ்ந்து
வருகிற
எண்ணிக்கையற்ற
இடப்பெயர்வுகளில்
கைதவறிய
உடுப்புப்பெட்டிகளை விட்டு
மரங்களுடன்
ஒதுங்கியிருக்கின்றன சனங்கள்.

போர் இன்னும் தொடங்கவில்லை.

02
போராளிகள் இலுப்பைக்கடவையைவிட்டு
பின் வாங்கினர்.

பயங்கரவாதிகளை
துரத்திக்கொண்டு வருகிறது
அரச யுத்தம்.

மரத்தின் கீழ்
தடிக்கூரைகளில்
வழிந்த
மழையின் இரவுடன்
சில பிள்ளைகள்
போர்க்களம் சென்றனர்.

யுத்தம் திணிக்கப்பட்டதை
பிள்ளைகள்
அறிந்தபோது
பரீட்சைத்தாள்கள்
கைதவறிப் பறந்தன.

ஓவ்வொரு தெருக்கரை
மரத்தடியிலும்
காய்ந்த
உணவுக்கோப்பைகளையும்
சுற்றிக்கட்டியிருந்த
சீலைகளையும்
இழந்த போது
ஜனாதிபதியின்
வெற்றி அறிக்கை
வெளியிடப்பட்டிருந்தது.

03
போராளிகள் விடத்தல்தீவை விட்டு
பின்வாங்கினர்.

யுத்த விமானங்களிடமிருந்து
துண்டுப்பிரசுரங்கள்
வீசப்பட்ட பொழுது
வறுத்த
கச்சான்களை தின்கிற
கனவிலிருந்த சிறுவர்கள்
திடுக்கிட்டு எழும்பினர்.

எல்லோரும் போர்பற்றி
அறியவேண்டி இருந்தது.

04
போராளிகள் முழங்காவிலை விட்டு
பின்வாங்கினர்.

கைப்பற்றப்பட்ட கிராமங்களை
சிதைத்து எடுத்த
புகைப்பபடங்களை
வெளியிடும்
அரச பாதுகாப்பு இணையதளத்தில்
சிதைந்த
தென்னைமரங்களைக் கண்டோம்
உடைந்த
சமையல் பாத்திரங்களைக் கண்டோம்
தனியே கிடக்கும்
கல்லறைகளை கண்டோம்.

யுத்தம் எல்லாவற்றையும்
துரத்தியும்
எல்லாவற்றிலும் புகுந்துமிருந்தது.

05
மல்லாவியையும்
துணுக்காயையும் விட்டு
சனங்கள் துரத்தப்பட்டனர்.

ஒரு கோயிலை கைப்பற்ற
யுத்தம் தொடங்கியபோது
வணங்குவதற்கு
கைகளையும்
பிரார்த்தனைகளையும்
இழந்தோம்.

அரசு அகதிமுகாங்களை திறந்தது.

இனி
மழைபெய்யத்தொடங்க
தடிகளின் கீழே
நனையக் காத்திருக்கிறோம்
தடிகளும் நாங்களும்
வெள்ளத்தில்
மிதக்கக் காத்திருக்கிறோம்.

வவுனிக்குளத்தின் கட்டுகள்
சிதைந்து போனது.

கிளிநொச்சி
அகதி நகரமாகிறது
இனி
பாலியாறு
பெருக்கெடுத்து பாயத்தொடங்கும்.

நஞ்சூறிய உணவை
தின்ற
குழந்தைகளின் கனவில்
நிரம்பியிருந்த
இராணுவ நடவடிக்கைகளிலிருந்து
போர் தொடங்குகிறது.
---------------------------------------------------------------
20.08.2008

4 comments:

தமிழன்-கறுப்பி... said...

கவிதை தரம்...

King... said...

என்ன அண்ணன் நிலமைக்கு நீங்கள் என்ன சொல்லுறியள்...

King... said...

கவிதையும் படமும் போதுமானதாயிருக்கிறது புரிந்துகொள்வதற்கு...

Theepachelvan said...

அன்புள்ள கொழுவி

உங்கள் பதிவில் எனது கவிதையை போட்டிருப்பதற்கு நன்றி
மறு மொழிகளையும் பார்த்துச் செல்கிறேன்.

தீபச்செல்வன்