Tuesday, September 09, 2008

இந்திய ராடர் நிலையம் மீது புலிகள் வான் தரைத் தாக்குதல்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை ஆகாய, தரைவழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது விடுதலைப் புலிகள் தரைவழியாகவும் ஊடுருவி படைத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலையும் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலையும் நடத்தினர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வன்னியிலிருந்து வவுனியா படைத் தலைமையகம் மீது கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் படைத் தலைமையகத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களில் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவர் என்றும் 15 பேர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்களில் 5 பேர் வான்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு இந்திய அரசு வழங்கிய இந்திரா இரு பரிமாண ராடர்கள் இருந்த கட்டடத் தொகுதிக்கே விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகவும், இந்திரா ராடர்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் அதனை இயக்கிக்கொண்டிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த இரு பொறியியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை இந்தியத் தூதரகம் தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

Anonymous said...

;-)

narayana...narayana...