Sunday, February 19, 2006

வலதுசாரி - இடதுசாரி.

ஒரு தத்துவ விளக்கம்.

நான் வலது சாரியா? இடது சாரியா? இந்தக் கேள்வி எனக்குள் பலநாட்களுண்டு. எனக்கு மட்டுமன்றி நிறையப் பேருக்கும் இருக்கும். அக்குழப்பத்தைத் தீர்ப்பதற்காக இப்பதிவு.
முக்கியமான விடயம்,
"யாருமே நிரந்தர இடதுசாரியுமில்லை வலதுசாரியுமில்லை"

இதை விளங்கிக்கொள்ள நீங்களொன்றும் கால்மார்க்சையோ, ஏங்கெல்சையோ, லெனினையோ அல்லது (எனக்குப்) பேர் தெரியாத அறிஞர்களையோ அறிந்திருக்க வேண்டிய தேவையில்லை. மூலதனத்தைப் படித்திருக்க வேண்டியதுமில்லை. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதெல்லாம் சாலை விதிகளே. (இடது, வலது என்று இரு பக்கங்களிருப்பதையும் அவற்றைவிட வேறு பக்கங்களில்லையென்பதையும் கட்டாயம் தெரிந்து வைத்திருப்பீர்கள் தானே?)

இந்தியா, இலங்கை உட்ப பெரும்பாலான ஆசியநாடுகளின் சாலைவிதிகளைப் பாருங்கள்.

வாகனசாரிகள் வீதியின் இடப்பக்கமாகவும் பாதசாரிகள் வீதியின் வலப்பக்கமாகவும் செல்லவேண்டும். (கனடா, மெரிக்கா போன்றவற்றில் இவை மாறியிருக்கும். அத்தோடு வளர்ந்த நாடுகளில் வீதியின் இருபக்கமுமே பாதசாரிகள் நடப்பதற்குரிய நடைபாதை இருக்குமென்று சொல்கிறார்கள். அவ்விடங்களில் பாதசாரிகளுக்கு ஒருபக்கம் மட்டுமே என்பது பொருந்தாது.)

நான் இன்று நினைத்துப்பார்க்கிறேன். என் வாழ்நாளில் நான் எந்தச் சாரியாக இருந்திருக்கிறேன்?

சொல்லப்போனால் இரு சாரியாகவும் இருந்திருக்கிறேன்.
பெரும்பாலான சமயங்களில் நான் பாதசாரியாகவே இருந்திருக்கிறேன். ஆகவே அந்தத்தருணங்களில் நான் வலதுசாரி.

சைக்கிள் வந்தபின்புதான் நான் இடதுசாரியானேன்.
இருந்தும் கிட்டிய தூரங்களுக்கும், சைக்கிள் காத்துப்போய் அல்லது பழுதாப்போயிருந்த காலங்களிலும் வலதுசாரியாகவே நடந்து போயிருக்கிறேன்.
சைக்கிளிலோ வாகனத்திலோ போகும்போது அவ்வப்போது சாலை விதிகளை மீறின சந்தர்ப்பங்களில் வலதுசாரியாக இருந்திருக்கிறேன்.

அரசியலில் இடதுசாரி, வலதுசாரி என்ற சொற்றொடர்களைக் கேட்கும்போது அவ்வவ் நாட்டுச் சாலைவிதிகளின்படி வாகனத்தில் திரிபவர்கள், நடந்து திரிபவர்கள் என்று விளக்கம் கண்டிருக்கிறேன்.

எனவே தோழர்களே!
(சாரிகளைப் பற்றிக் கதைக்க வந்திட்டு தோழர்களே எண்டு விளிக்காமலிருந்தால் எப்படி?)
நீங்களும் இச்சொற்றொடர்களைக் கண்டு பயப்படவோ குழம்பவோ தேவையில்லை.
அந்தந்த நாட்டுச் சாலைவிதிகளைக் கொண்டு சாரியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது சொல்லுங்கள்.
**நீங்கள் இப்போது வலதுசாரியா? இடதுசாரியா?

____________________
இங்கே 'சாரி' என்று நான் சொன்னது, தமிழகத் தமிழில் சாரி என்று எழுதப்படும் sorry ஐப் பற்றியில்லை.

4 comments:

Anonymous said...

//நீங்கள் எந்த சாரி?
வலது சாரியா?
இடது சாரியா?//

சாரி. எனக்குத் தெரியல.

Anonymous said...

வாகனப்போக்குவரத்தின்படி இருக்கும் நாடும் வாகன இருப்புமே உம்மை இடதுசாரி வலதுசாரியாகத் தீர்மானிக்கட்டும். நடுச்சாரியிலே போனால், சாரி..

கொழுவி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
உலகின் மிக முக்கிய பிரச்சினையைப் பற்றி எழுதிய பதிவுக்கு வெறும் இரண்டுபேர் தான் பின்னூட்டமளித்துள்ளார்கள்.
தமிழ்ச் சமூகத்தின் மனநிலையை என்ன சொல்லி அழுவது?

dondu(#11168674346665545885) said...

நான் ராகவாச்சாரி.

அன்புடன்,
டோண்டு ராகவாச்சாரி