Monday, October 30, 2006

சர்வதேசத்தை ஏமாற்றுவோம்.

1
யாழ்ப்பாணம் இலங்கையின் இதர பகுதிகளிலிருந்து A 9 என்ற வீதியினூடாக இணைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணளவாக 4 லட்சம் மக்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர்.

இலங்கை அரச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தை இணைக்கும் A 9 வீதியானது புலிகளின் பகுதிகளினூடாகவே செல்கிறது.

யாழ்ப்பாணத்திற்கான ஒரேயொரு தரைவழிப்பாதையான இந்த வீதியை 2002 ம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி மக்கள் பாவனைக்கும், உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்வதற்குமாக, திறந்து விடுவதென புலிகள் தரப்பிலும் இலங்கை அரச தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

1995 புலிகள், யாழ்ப்பாணத்தை விட்டு வெளியெறிய பின்னர் 2002 வரை யாழ்ப்பாணம் தரைவழித் தொடர்பேதுமற்ற, இலங்கையின் இதர பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாக இருந்தது.

இக்கால கட்டத்தில் உணவுப்பொருட்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு நிலவியது. கப்பலினூடாகவே உணவுப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து இதர பகுதிகளுக்கு விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் பயணிப்பதற்கு அதிக காலம் காத்திருக்க வேண்டியும், பாதுகாப்பு அனுமதியை இராணுவத்திடமிருந்து பெறவேண்டியும் இருந்தது.

2002 புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் A 9 வீதி திறக்கப்பட, அது மக்களின் போக்குவரத்துக்கும், அவர்களின் உணவுத்தேவைக்கும் மிகுந்த வசதியாக அமைந்தது.

2
பாதையை மூடிவிடுவதானது ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்த மீறலாகும்.

இவ்வருட நடுப்பகுதியில், இலங்கை இராணுவம் இந்தப் பாதையினை மூடியது. மீண்டும் யாழ்ப்பாணம் ஒரு சிறைச்சாலையானது. உணவுப் பொருட்களுக்கு அங்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதை மூடப்பட்டதாக இலங்கை இராணுவம் சொல்லியிருக்கிறது.

அதென்ன பாதுகாப்புக் காரணம்..?

இந்த வீதியின் முன்னரங்க புலிகளின் நிலைகள் மீது தொடர்ச்சியாக இராணுவம் எறிகணைத்தாக்குதல்களையும் அவ்வப்போது முன்னேற்ற முயற்சிகளையும் மேற்கொள்கிறது. (யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி இராணுவ முன்னகர்வுகளும் இடங்களைக் கைப்பற்றுதலும் ஒப்பந்த மீறலாகும்.)

இன்னொரு காரணம் மக்கள் மீது பட்டினியை ஏவி விட்டு உளவியல் ரீதியாக அவர்களை மழுங்கடித்தல்.

3
சுவிற்சர்லாந்துக்குப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மனிதாபிமான பிரச்சனைகள் பற்றி, மக்களின் பட்டினி பற்றி தாம் பேசப்போவதாய் புலிகள் அறிவிக்க..

மக்களின் பட்டினி பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்காமல் இறுதித் தீர்வு பற்றி பேசப்போவதாக இலங்கை சொன்னது.

சர்வதேசமோ ஏதாவதென்றாலும் பேசுங்கள்.. ஆனால் பேசுங்கள் என்ற நிலையைத்தவிர வேறெதனையும் எடுத்ததாய் தெரியவில்லை.

பேச்சுவார்த்தையின் போது அரசு இறுதித் தீர்வு பற்றிப் பேசுவதே பொருத்தம் என சொல்ல, அப்படியானால் உங்களிடம் என்ன இறுதித் தீர்வு உள்ளது என புலிகள் தரப்பில் கேட்கப்பட்டதாம். அதற்கு அரசின் பதில் -

இப்போதுதான் இலங்கையில் இரு கட்சிகளும் ஒன்றாய்ச் சேர்ந்திருக்கின்றன. இனித்தான் இறுதி தீர்வு பற்றி நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றார்களாம்.ஆக அவர்கள் என்ன பேசுவது என்ற தெளிவே இல்லாமல்த்தான் பேச்சுக்கு வந்துள்ளார்கள் போல..

--நோர்வேக்கு ஒரு கோரிக்கை: இனி புலிகளை சுவிசுக்கு அழைத்து வராமல் ரணில் கட்சியையும் மகிந்த கட்சியையும் ஒரு தரப்பாகவும் எதிர்த்தரப்பில் JVP கட்சியையும் அழைத்து வந்து இறுதி தீர்வு குறித்து பேச விட்டு வேடிக்கை பாருங்கள். அவர்களுக்குள் ஒரு இணக்கம் வருகிறதா என..--

இரு பிரதான கட்சிகளும் ஒன்றாய் இணைந்திருக்கின்றன என்பது உண்மைதான். இனி அவர்களுக்குள் பிக்கல்கள், பிடுங்கல்கள், முரண்கள் உண்டாகி அது தீர்ந்து, அப்படியே ஒரு தீர்வை உண்டாக்கினாலும், இருக்கவே இருக்கிறது நீதிமன்றம்.. அது தீர்வை முடக்க.. பிறகு முதலிடத்திலிருந்து பேச ஆரம்பிக்க..

அதுவரை மக்களின் பட்டினிக்கு என்ன தீர்வு?

நாள்தோறும் சாகும் பத்துக்கு மேற்பட்ட உயிர்களுக்கு என்ன தீர்வு..?

4
சுவிசில் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கையில் இராணுவம் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டிருந்தது. இராணுவ முன்னகர்வுக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருந்தன.

ஒப்பந்தத்தின் படி இராணுவ முன்னகர்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என சர்வதேசத்தினால் இலங்கை அரசை அழுத்த முடியவில்லையா?

சர்வதேசத்தின் அழுத்தங்களை மீறித்தான் இலங்கை அரசு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனவா..?

வரும் நாட்களில் வடக்கில் இன்னொரு பாரிய இராணுவ நடவடிக்கையொன்றினை மேற்கொள்ள இராணுவம் தயாராவதாக சொல்லப்படுகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நகர்வுகளுக்கும் படுகொலைகளுக்கும் சர்வதேசத்திடம் ஏதாவது பதில் உள்ளதா..?

5
இது ஒரு சந்தேகம்

புலிகள் இராணுவ வலிமை பெற்றிருக்கும் வரை மட்டுமே சர்வதேசம் விழுந்தடித்து புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. உண்மையில் புலிகள் ஒரு பலமிழந்த அமைப்பாக இலங்கை அரசால் இலகுவாக வெற்றி கொள்ள முடிகிற ஒரு அமைப்பாக இருப்பின் இவ்வளவு ஈடுபாடு காட்டுவார்களா..?

அல்லது இது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என சொல்லி விட்டு இருந்திருப்பார்களா..?

இனியும், ஒருவேளை இராணுவம் புலிகள் அமைப்பைத் தோற்கடித்து விட்டால், புலிகளைச் சர்வதேசம் பேச்சுக்கு அழைத்து வருமா? வராது..

6
புலிகள் தாம் தயாரித்து விட்ட நிகழச்சி நிரலில் தேவையான மாற்றங்களோடு பயணிக்கப் போகின்றார்கள். அவ்வப்போது சர்வதேசம் அழைத்தால் பேச்சுக்கு போவது உட்பட இலங்கை அரசின் பொருளாதார இராணுவ மையங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கி விட்டார்கள். சர்வதேசம் பற்றிய தெளிவான முகம் தெரிந்த பிறகு அதனை ஏமாற்றினால் தவறென்ன..? அவர்கள் ஏமாற்றவில்லையா..

Monday, October 23, 2006

தீபாவளிப் படுகொலை

எல்லோரும் தீபாவளி கொண்டாடியபோது நாங்கள் பலரைப் பலிகொடுத்துத் துக்கம் கொண்டாடினோம்.
அப்பாவி மக்கள் பத்தொன்பது பேரைக்கொன்று வெறியாட்டமாடியவர் என்ன நினைத்திருப்பர்?

அம்மக்களை நரகாசுரன்களாக நினைத்திருப்பரோ?

1987 ஓக்டோபர் 21 இல் யாழ்ப்பாண மருத்துவமனையில் நடைபெற்ற 'தீபாவளிப் படுகொலை'யின் நினைவு விரைவிலேயே அகன்றுவிட்டதா?
அக்கொடிய தீபாவளி நாளின்பின் இம்முறைதான் யாழ்ப்பாணம் தீபாவளி கொண்டாடவில்லை.
அன்று படுகொலை காரணம்; இன்று படுகொலைகளுடன் பட்டினியும் காரணம்.



யாழ் மருத்துவமனைப் படுகொலை பற்றி முன்பு எழுதிய பதிவுகள்.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 1.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 2.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 3.


யாழ் மருத்துவமனைப் படுகொலை - 4.



படம்: யாழ்க்களம்

Wednesday, October 11, 2006

பலவீனப்பட்டுத்தான் போனோமா - 1

என்றுமில்லாத என்று சொல்ல முடியாதவாறான ஒரு இக்கட்டான நெருக்கடி நிலையில் ஈழத்தமிழர்களின் போராட்டம் சிக்கி நிற்பதானது ஈழ அபிமானிகள் அனைவரையும் குழப்பத்திலும், மனச்சோர்விலும், ஒரு விரக்தி நிலையிலும் கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

இந்த ஒருவருட காலமாகவே யுத்தமொன்றே தீர்வாகுமெனவும், புலிகள் காலவரையொன்றைச் சொல்லி போரினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் எழுதிய, பேசிய, ஆயினும், யுத்தத்திற்கு வெளியில் வாழ்கின்ற சிலர், தற்போது தமிழ்த்தேசியம் பலவீனமடைந்து விட்டதாயும், வேறொரு போராட்ட வடிவம் குறித்துச் சிந்திக்க வேண்டியவர்களாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இன்னும் சிலர், இந்த ஒருவருட காலமாக புலிகளின் யுத்தத்தை எதிர்பார்த்து ஏமாந்து போனதாய் சொல்கிறார்கள். பலர் இதனை ஒரு மானப் பிரச்சனையாக நோக்குகின்றனர்.

இவர்களில் பலர் யுத்தத்திற்கு வெளியில் வாழ்கின்றவர்கள். ஒவ்வொரு தடவையும் புலிகளின் தோல்விகளின் போதெல்லாம் இவர்களிடம் ஏற்படும் சலிப்பானது, இவர்களின் குத்தகைக்கார மனநிலையைச் சொல்கிறது. நிலத்தை குத்தகைக்கு கொடுத்து விட்டு வெளியிலிருந்து விளைச்சலை எதிர்பார்ப்பவராயும், எதிர் பார்த்த விளைச்சல் கிடைக்க வில்லையெனில் குத்தகைக்கு கொடுத்தவன் மேல் சினப்பவர் போலவும் இவர்களை உருவகித்துக் கொள்ளலாம். அல்லது ஒப்பந்த காரராயும் நோக்கலாம்.

இவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இவர்களை இத்தகையை ஒரு மனநிலையில் வளர்த்து விட்ட பெருமை புலத்தில் இயங்கும் தமிழ் ஊடகங்களையும் சாரும். புலிகள் என்பவர்கள் எமக்கு வெற்றிச் செய்திகளை மட்டுமே தரவேண்டுமென்ற இவர்களது எதிர்பார்ப்பு சரிவுறும் போதெல்லாம் சலித்துக்கொள்வதும், சினப்படுவதும் இவர்களின் இயல்பாகி விடுகிறது.

இன்னொரு வகையினர் ஈழப்போரின் பலவீனம் இதுவென வாதிட்டு இதற்கான காரணங்களை ஆதி முதல் விளக்குபவர்கள். ஈழப்போர் எப்போதெல்லாம் பின்னடைகிறதோ அப்போதெல்லாம் இவர்கள் எழுச்சியுறுவர்.

உண்மையில் ஈழப்போரின் இன்றைய நிலை என்ன?

பலரும் சொல்வது போல அரசியல் ரீதியாக இன்றைய திகதியில் பெரிதாக எதனையும் சாதித்து விடவில்லைத்தான். அல்லது தமிழரின் அரசியல் ரீதியான செயற்பாட்டிற்கான நேர் விளைவுகள் எதுவும் நடந்து விட வில்லைத்தான். இங்கே அரசியல் ரீதியான செயற்பாடென்பது இலங்கை அரசுடனானதாகவோ அல்லது இலங்கைக்குள் உட்பட்டதாகவோ அல்லாமல் சர்வதேசம் நோக்கிய செயற்பாடுகள் என அர்த்தப்படுகின்றன. இலங்கையின் உண்மையான கண்காணிப்பாளர்களாக மாறி விட்ட அமெரிக்கா யப்பான் இணைத்தலைமை நாடுகள் நோர்வே ஆகியவற்றுடனான நேரடித் தொடர்பொன்றை புலிகள் பெற்றுக்கொண்டமையானது அரசியல் ரீதியாக எந்தப் பலாபலனையும் தரவில்லை. மாறாக அவ்வாறு ஏற்பட்டுவிட்ட தொடர்புகளே புலிகளைக் கட்டி வைக்கும் கயிறுகளாகவும் மாறிவிட்டன.

இது தவிர வெளிநாடுகளில் தமிழர்கள் நடாத்துகின்ற பேரணிகள், ஊர்வலங்கள் உலக செவிகளில் உறைத்ததாகவோ ,அல்லது கண்டுகொள்ளப்பட்டதாகவோ இல்லை. இதனை இன்னொரு வகையில் சொல்லப்போனால் தமிழர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்வதினாலும், கவனமெடுப்பதனாலும் உலகத்திற்கு எந்தவகையிலும் தனிப்பட்ட விதத்தில் அரசியல், பொருளாதார இலாபங்கள் கிடைக்கப் போவதில்லை. ஆக இது தமிழர்களின் தவறாகாது.

அதுதவிர இலங்கை அரசுடன் அரசியல் ரீதியாக பேசி தீர்வுகளைப் பெறலாம் என எவராவது எழுதின், பேசின் அவர்களைப் பற்றி இரண்டு வாக்கியமாவது எழுதுவது விசர் வேலை.

அரசியல் நிலையில் சார் விளைவெதனையும் பெறாத நிலையில் இராணுவ நிலையில் தமிழர் தரப்பு பலவீனப்பட்டு விட்டதா?

அண்மைய சம்பூர் மாவிலாறு தவிர வடபகுதி போர்முனைகளில் புலிகளின் பின்வாங்கல்கள் அவர்களது இராணுவ ரீதியான பலவீனத்தை உணர்த்துகிறதா?

புலிகள் இதுவரை படைகளுக்கெதிராக வலிந்த பாரிய தாக்குதல்கள் எதனையும் என் செய்ய வில்லை.?

Tuesday, October 10, 2006

குழப்பியின் கதை

புலிகளின் தலைவர் பிரபாகரனின் கதையை நாராயணசுவாமி எழுதுகிறார். மாத்தையாவின் கதையை திருவடியான் எழுதுகிறார். விட்டால் எனது கதையையும் யாரேனும் எழுதி அதை படிக்க எனக்குக் கிடைக்கின்ற வேளைகளில் சொல்லொணாச் சிரிப்பையும் அழுகையையும் ஒருங்கே பெறுகின்ற துர்ப்பாக்கிய நிலை எனக்கு வாய்த்துவிடலாகாது என்ற அவசரத்தில் எனது கதையை எழுதத் தொடங்குகிறேன். ஆயின் கொழுவியின் கதை என்றுதானே தலைப்பிடுதல் பொருத்தம் எனினும் குழப்பியின் கதை என்பதே எனது தெரிவாகிறதெனில் அது ஏன்?

யார் அந்த குழப்பி?

அவருக்கும் கொழுவிக்கும் என்ன தொடர்பு?

கொழுவி யார்..? இது வரை யார் யார் மீது இவர் தொடர்பான சந்தேகங்கள் விழுந்துள்ளன?

தமிழ்மணத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட முதல் வலைப்பதிவு என்ற பெருமை ஏன் கிடைத்ததது.?

குழப்பிக்கும் கொழுவிக்கும் எங்கே ஏன் எப்படி தெறித்தது?

இவை பற்றிச் சொல்வதே குழப்பியின் கதை.

இதனை குழப்பிக்கு அர்ப்பணிப்பதே இதன் பெயரில் குழப்பி வர காரணம்.

இனி வரும் நாட்களில் குழப்பியின் கதை..

Wednesday, October 04, 2006

கருணாநிதியும் சால்ஜாப்புக் கதைகளும்

இந்தியாவுக்கு போன எங்கடை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கொஞ்சப்பேரை சந்திச்சும் சில பேரை சந்திக்காமல் சால்ஜாப்பு கதையள் சொல்லிக்கொண்டும் சிலரை சந்திக்க கால் கடுக்க நிண்டு போட்டும் வந்திருக்கினம்.
இந்திய பிரதமரை இந்தா சந்திக்கிறம் அந்தா சந்திக்கிறம் எண்டு செய்தியள் வந்துது. பிறகு இல்லையாம் எண்டு வந்திட்டினம். ஏன் பிரதமர் சந்திக்க வில்லையெண்டு தெரியவில்லை. ஒருவேளை பிரதமரைச் சந்திக்க விருப்பதாக தமிழ்க் கூட்டமைப்பினர் சொல்லியிருந்ததும் வெறும் சால்ஜாப்புத் தானோ ?

கருணாநிதி அவர்கள் தெளிவாச் சொல்லிட்டார். கூட்டமைக் காரர் தன்னை சந்திக்க முயற்சித்ததா சொன்னது வெறும் சால்ஜாப்பு எண்டு. ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கிறதும் சந்திக்காமல் விடுவதும் அவையின்ரை விருப்பம் எண்டிட்டு இருந்தாலும் கருணாநிதி அப்பிடி சொல்லும் போது கூட்டமைக்குக் காரர் என்ன செய்திருக்க வேணும்?. நாங்கள் கருணாநிதியை சந்திக்க எவ்வாறான முயற்சிகள் செய்தோம் என்பதையும் அந்த ஒவ்வொரு முயற்சிகளுக்கும் எவ்வாறான எதிர்வினைகள் கிடைத்தன என்பதனையும் தெரியப் படுத்தியிருக்க வேணும். ஆனா அவை செய்தது என்ன? எனக்கென்னவோ அவையின்ர பதிலில வார்த்தைக்கு வார்த்தை வழியல் தான் தெரியுது.

பெரியண்ணா நீங்கள் என்னெண்டாலும் சொல்லுங்கோ.. உங்கடை காலைப் பிடிச்சுக்கொண்டுதான் நாங்கள் நிப்பம் எண்ட மாதிரி இருக்கு அவையின்ரை கதையள்.

இதைப்பற்றின கேள்வியொண்டுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் என்னெண்டு வளைஞ்சு நெளிஞ்சு பதில் சொல்லுறார் எண்டு பாருங்கோ.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.
நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

இதன் சாரம்சம் இதுதான். அண்ணை.. எங்களை சந்திக்காமல் விட்டது உங்கடை பிழையில்லை. நாங்கள் வந்து நிண்டதும் உங்களை சந்திக்க கேட்டதும் உங்கடை காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கும். அவ்வளவும் தான். மற்றும்படி பிரச்சனையில்லை. இன்னொருமுறை வாய்ப்புத் தாங்கோ..

ஆனால் கருணாநிதியும் தான் ஏன் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லையெண்ட உண்மையைச் சொல்லியிருக்கலாம். பின்னையென்ன? அவர் ஒரு முதல்வர் எண்ட பெயரில இருக்க கூட்டமைப்புக்காரர் முதலில அவரிடமெல்லோ போய் குனிஞ்சு விழுந்து வணங்கி ஆசி பெற்று எழும்பியிருக்க வேணும். அதை விட்டுவிட்டு எப்பிடி வைகோவை முதலில சந்திப்பினம்?. அதுவும் வைகோவூடாக பிரதமரை வேறை சந்திக்க முயற்சி செய்தவையாம். இதென்ன வெளிநாடே..? கட்சி வேறுபாடில்லாமல் எல்லாரையும் சந்திக்க..? இங்கை நீங்கள் வைகோவை முதலில சந்திச்சால் நீங்களெல்லாம் அவரின்ரை ஆட்கள்தான்.

உண்மையில கருணாநிதி அவர்களுக்கு நேரமில்லையெண்டதோ அல்லது கூட்டமைப்புக்காரர் சந்திக்க முயற்சிக்கவில்லையென்பதோ இங்கே கவனத்திலெடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்கள் இல்லை. பட்டென்று நெற்றியடித்தால் போலான காரணம் கூட்டமைப்புக்காரர் முதலில் வைகோவை சந்தித்துக் கொஞ்சிக் குலவியதே. அந்த ஆத்திரத்தில் விளைந்த மூன்றாந்தரத்திற்கும் குறைவான அரசியல்ப் பண்பாடே..

இங்கே கூட்டமைப்புக்காரர் என்ன செய்திருக்க வேணும். முதலில கருணாநிதியைச் சந்திச்சிருக்க வேணும். ஆனா.. அதுக்கு பிறகு அவர்களை வைகோ சந்திப்பாரா எண்டது சந்தேகம் தான்.

எங்கடை சனம் தான் பாவம். கருணாநிதி சபையில இலங்கை அரசுக்கு எதிரா கண்டனத்தீர்மானம் கொண்டு வரும்போது அவரைப் போற்றிப் புகழுவதும் பிறகு சால்ஜாப்பு கதையள் சொல்லும் போது துரோகியெண்டுறதுமா குழம்பி போய் நிக்கினம். அதுவும் சரிதான்.. சனம் தெளிவா எப்பதான் இருந்திருக்கினம்?