Wednesday, October 04, 2006

கருணாநிதியும் சால்ஜாப்புக் கதைகளும்

இந்தியாவுக்கு போன எங்கடை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் கொஞ்சப்பேரை சந்திச்சும் சில பேரை சந்திக்காமல் சால்ஜாப்பு கதையள் சொல்லிக்கொண்டும் சிலரை சந்திக்க கால் கடுக்க நிண்டு போட்டும் வந்திருக்கினம்.
இந்திய பிரதமரை இந்தா சந்திக்கிறம் அந்தா சந்திக்கிறம் எண்டு செய்தியள் வந்துது. பிறகு இல்லையாம் எண்டு வந்திட்டினம். ஏன் பிரதமர் சந்திக்க வில்லையெண்டு தெரியவில்லை. ஒருவேளை பிரதமரைச் சந்திக்க விருப்பதாக தமிழ்க் கூட்டமைப்பினர் சொல்லியிருந்ததும் வெறும் சால்ஜாப்புத் தானோ ?

கருணாநிதி அவர்கள் தெளிவாச் சொல்லிட்டார். கூட்டமைக் காரர் தன்னை சந்திக்க முயற்சித்ததா சொன்னது வெறும் சால்ஜாப்பு எண்டு. ஒருத்தர் ஒருத்தரை சந்திக்கிறதும் சந்திக்காமல் விடுவதும் அவையின்ரை விருப்பம் எண்டிட்டு இருந்தாலும் கருணாநிதி அப்பிடி சொல்லும் போது கூட்டமைக்குக் காரர் என்ன செய்திருக்க வேணும்?. நாங்கள் கருணாநிதியை சந்திக்க எவ்வாறான முயற்சிகள் செய்தோம் என்பதையும் அந்த ஒவ்வொரு முயற்சிகளுக்கும் எவ்வாறான எதிர்வினைகள் கிடைத்தன என்பதனையும் தெரியப் படுத்தியிருக்க வேணும். ஆனா அவை செய்தது என்ன? எனக்கென்னவோ அவையின்ர பதிலில வார்த்தைக்கு வார்த்தை வழியல் தான் தெரியுது.

பெரியண்ணா நீங்கள் என்னெண்டாலும் சொல்லுங்கோ.. உங்கடை காலைப் பிடிச்சுக்கொண்டுதான் நாங்கள் நிப்பம் எண்ட மாதிரி இருக்கு அவையின்ரை கதையள்.

இதைப்பற்றின கேள்வியொண்டுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் என்னெண்டு வளைஞ்சு நெளிஞ்சு பதில் சொல்லுறார் எண்டு பாருங்கோ.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.
நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

இதன் சாரம்சம் இதுதான். அண்ணை.. எங்களை சந்திக்காமல் விட்டது உங்கடை பிழையில்லை. நாங்கள் வந்து நிண்டதும் உங்களை சந்திக்க கேட்டதும் உங்கடை காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கும். அவ்வளவும் தான். மற்றும்படி பிரச்சனையில்லை. இன்னொருமுறை வாய்ப்புத் தாங்கோ..

ஆனால் கருணாநிதியும் தான் ஏன் கூட்டமைப்பினரை சந்திக்கவில்லையெண்ட உண்மையைச் சொல்லியிருக்கலாம். பின்னையென்ன? அவர் ஒரு முதல்வர் எண்ட பெயரில இருக்க கூட்டமைப்புக்காரர் முதலில அவரிடமெல்லோ போய் குனிஞ்சு விழுந்து வணங்கி ஆசி பெற்று எழும்பியிருக்க வேணும். அதை விட்டுவிட்டு எப்பிடி வைகோவை முதலில சந்திப்பினம்?. அதுவும் வைகோவூடாக பிரதமரை வேறை சந்திக்க முயற்சி செய்தவையாம். இதென்ன வெளிநாடே..? கட்சி வேறுபாடில்லாமல் எல்லாரையும் சந்திக்க..? இங்கை நீங்கள் வைகோவை முதலில சந்திச்சால் நீங்களெல்லாம் அவரின்ரை ஆட்கள்தான்.

உண்மையில கருணாநிதி அவர்களுக்கு நேரமில்லையெண்டதோ அல்லது கூட்டமைப்புக்காரர் சந்திக்க முயற்சிக்கவில்லையென்பதோ இங்கே கவனத்திலெடுத்துக்கொள்ளக் கூடிய விடயங்கள் இல்லை. பட்டென்று நெற்றியடித்தால் போலான காரணம் கூட்டமைப்புக்காரர் முதலில் வைகோவை சந்தித்துக் கொஞ்சிக் குலவியதே. அந்த ஆத்திரத்தில் விளைந்த மூன்றாந்தரத்திற்கும் குறைவான அரசியல்ப் பண்பாடே..

இங்கே கூட்டமைப்புக்காரர் என்ன செய்திருக்க வேணும். முதலில கருணாநிதியைச் சந்திச்சிருக்க வேணும். ஆனா.. அதுக்கு பிறகு அவர்களை வைகோ சந்திப்பாரா எண்டது சந்தேகம் தான்.

எங்கடை சனம் தான் பாவம். கருணாநிதி சபையில இலங்கை அரசுக்கு எதிரா கண்டனத்தீர்மானம் கொண்டு வரும்போது அவரைப் போற்றிப் புகழுவதும் பிறகு சால்ஜாப்பு கதையள் சொல்லும் போது துரோகியெண்டுறதுமா குழம்பி போய் நிக்கினம். அதுவும் சரிதான்.. சனம் தெளிவா எப்பதான் இருந்திருக்கினம்?

7 comments:

Anonymous said...

Koluvi..

Please read the following blogpost on this. This could give you some insight.

http://thiruvadiyan.blogspot.com/2006/09/blog-post_25.html

விண்ணாணம் said...

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு விவகாரம்- கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது. அல்லது இதற்குப்பெயர் தான் சால்ஜாப்பா?

யாரோ said...

ஜெயலலிதா முன்னால் குத்துவார், கருணாநிதி பின்னால் குத்துவார் என்பார்கள், அவர்களின் அரசியல் ஈழப்பிரச்சனையிலும், சரியாத்தான் போச்சு, அரசியல் ஆட்டம் முடிஞ்சு அடங்கும் வயதிலாவது கருணாநிதி திருந்தமாட்டார் போல் இருக்கிறதே..

Anonymous said...

சந்திச்சாலும்...

கொழுவி said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. இந்த நன்றிப் பின்னூட்டம் எனது பதிவை தமிழ்மண முன்பக்கத்தில் கொண்டு வருவதற்காகவும்....

செந்தழல் ரவி said...

லக்கிலூக் ஆசீர்வாதம் கிடைக்க வாழ்த்துக்கள்...

கருநா நதி said...

கூட்டமைப்பு காரரும் நிறைய தகிடு தத்தோம்களை விளையாடியிருக்கினம். அது பற்றி மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் விரிவா எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் கருணாநிதி தன்னை சந்திக்க முயலவில்லை எண்டு சொன்னது சால்ஜாப்புதான்