Monday, September 17, 2007

திலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ

தியாகி திலீபனின் பத்தொன்பதாவது நினைவு தினம் இப்போது. எங்கள் தேசத்தின் இளைய, எதிர்காலத் தூர நோக்கோடு செயலாற்றிய, வசீகரம் மிக்க தலைவனை அகிம்சை நாட்டின் ஆணவத்தால் இழந்து 20 வருடங்கள் முடிந்து விட்டன. ஆனால் சோகம் ஆறாத துயராய் கிடக்கிறது.
திலீபனின் இறுதி நேர காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ பதிவு இது. அவரின் உண்ணா நோன்பிற்கான பின்னணியை விளக்குகிறது இப்படத்துண்டு.



"இனிமேல் என்னைத் தண்ணி குடிக்கச்சொல்லிக் கேட்கவேண்டாம். சரியோ?. உண்ணாவிரதம் என்றால் என்ன? தண்ணீர், குளுக்கோஸ், இளநீர் எல்லாமே உணவுதான். இந்த உணவுகளை எடுத்துக்கொண்டு எவ்வளவு நாளும் உயிர் வாழலாம். ஆனால், அது உண்ணாவிரதம் இல்லை. உண்ணாவிரதம் எண்டால் அதுக்கு அர்த்தம் வேணும்… ஒரு புனித இலட்சியம் நிறைவேற வேணுமெண்டதுக்காகத்தான் எங்களை நாங்கள் வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறது. இது வெறும் அரசியல் லாபத்துக்காக தொடங்கப்பட்டதல்ல. வயிறு முட்டக் குடித்துவிட்டு மக்களையும் ஏமாற்ற என்னால் முடியாது."

இந்த மேடையில் பேசிய ஒர் அன்பர் என்னை நீர் உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப் படுத்துவது போல் இருக்கிறது. நான் இந்த மேடையிலே நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தேன்… இறுதிவரை இந்த இலட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீங்கள் இந்தத் திலீபனை நேசிப்பது உண்மையாக இருந்தால், தயவு செய்து இனிமேல் என்னை யாரும் நீராகாரம் அருந்தும்படி வற்புறுத்த வேண்டாம். உங்கள் திலீபனுக்கு நிறைந்த மனக்கட்டுப்பாடும் தன்னம்பிக்கையும் உண்டு. என் கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் - திலீபன்

உலகிற்கே அகிம்சையை உணர்த்திய நாடு இந்தியா அந்த இளைஞனை அப்படி அநியாயமாக சாக விடும் என்று யாருமே நினைத்திருக்கவில்லை.

12 நாட்கள் ஒரு சொட்டுத்தண்ணீரும் வாயில் படாமல் உடல் வருத்தி உயிர் உருகி அணுவணுவாக அவன் மரணித்த போது அவனுக்கு வயது கனவுகள் சுமக்கும் இருபதுகளே..

வெள்ளையனே வெளியேறு என்றது போல இந்தியனே வெளியேறு என அவன் ஒருபோதும் கேட்டதில்லையே..

அவன் என்ன தான் கேட்டான்?

அமைதி காக்க வந்தவர்களே.. தயவு செய்து அமைதி காருங்களேன் என்று தானே விண்ணப்பித்தான்..

அதற்காகவா இந்த விலை?

அதற்காகவா இந்த துயரம்?

No comments: