நமது வலைச் சூழல் கண்காணிப்புக் குழுவின் கடந்த மற்றும் இந்த மாதத்து அறிக்கைகளின் பிரகாரம் வலையில் மீள வரவைப்போர் பேரவையின் சார்பில் கொழுவி ஆகிய நான் சுய நினைவுடன் எழுதும் கடிதம்:
அன்பிற்குரிய வலைப் பதிவர்களான சோமிதரன், வசந்தன் மற்றும் டிசே முதலானோருக்கு. நீங்கள் கடந்த சில மாதங்களாக வலைப் பதியாமல் இருக்கிறீர்கள். அதனால் ஒருவேளை நீங்கள் வலைப் பதிவை விட்டு விலகி விட்டீர்களோ என்ற ஐயத்தை எம்மத்தியில் தோற்றுவித்து விட்டது.
ஆயினும் உங்கள் இறுதிப் பதிவெதனிலும் வலையுலகை விட்டு விலகுவதாகவும் இனிமேல் பதிவதெனையும் எழுதப் போவதில்லையெனவும் நீங்கள் பதிவெதனையும் இட வில்லை. உங்கள் பதிவுகளை படிப்பதற்காக ஆவலுடன் தினம் தினம் உங்கள் பதிவுக்கு வந்து ஏமாந்து செல்லும் லட்சக்கணக்கான வாசகர்களின் மன வேதனையை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா..?
இந்நிலையில் வலையில் மீள வரவைப்போர் பேரவையினராகிய நாம் உங்களை மீள அழைத்து வருவதில் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம்.
அதாவது வலையில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்துப் பதிவெதனையும் இடாத வரைக்கும் உத்தியோக பூர்வமாக உங்களைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர முடியாமல் உள்ளது. உங்களை மீளவும் அழைத்து வருவதற்கான அன்புப் பின்னூட்டங்களை நாம் இடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நீங்கள் கட்டாயமாக விலகல் பதிவொன்றினை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது.
ஆகவே இந்த வரலாற்றுப் புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஒவ்வொருத்தரும் தனித்தனியாக நீங்கள் விலகுவதற்கான காரணங்களை உணர்ச்சி பூர்வமான பதிவுகளாக எழுதி வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறான பதிவொன்றினை நீங்கள் இடும் பட்சத்தில் பின்னூட்டப் பெட்டிகளுடனும் தொலைபேசிகளுடனும் தயாராக நிற்கும் மீள வர வைப்போர் பேரவை உறுப்பினர்கள் உங்கள் பதிவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உங்களை அழைத்து வருவார்கள். தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டால் உலகின் பிற நாடுகளில் இருந்தும் நேரடியாக உங்களை அழைத்து குரல் வழி வேண்டுதல் நடாத்தவும் வசதியாக இருக்கும்.
ஆகவே முதல் வேலையாக விலகிப் போவதை பதிவாக இடுங்கள். மற்றைய பதிவுகளை பின்னர் இடுங்கள். (முக்கிய குறிப்பு : பதிவுகளை இடும் போது கவனமாக இருங்கள். அவற்றை அவற்றிற்குரிய ஒழுங்கில் இடுங்கள். நினைவில் வைத்திருங்கள்: விலகுவதற்கான பதிவே முதலில் வரவேண்டியது)
13 comments:
இந்த மீளவரவைப்போர் பேரவையைப் பற்றிய மேலதிக விபரங்களை தந்தால் எங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வசதியாய் இருக்கும்...
//அதாவது வலையில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்துப் பதிவெதனையும் இடாத வரைக்கும் உத்தியோக பூர்வமாக உங்களைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர முடியாமல் உள்ளது. உங்களை மீளவும் அழைத்து வருவதற்கான அன்புப் பின்னூட்டங்களை நாம் இடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நீங்கள் கட்டாயமாக விலகல் பதிவொன்றினை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது.//
//அவ்வாறான பதிவொன்றினை நீங்கள் இடும் பட்சத்தில் பின்னூட்டப் பெட்டிகளுடனும் தொலைபேசிகளுடனும் தயாராக நிற்கும் மீள வர வைப்போர் பேரவை உறுப்பினர்கள் உங்கள் பதிவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உங்களை அழைத்து வருவார்கள். தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டால் உலகின் பிற நாடுகளில் இருந்தும் நேரடியாக உங்களை அழைத்து குரல் வழி வேண்டுதல் நடாத்தவும் வசதியாக இருக்கும்.//
//ஆகவே முதல் வேலையாக விலகிப் போவதை பதிவாக இடுங்கள். மற்றைய பதிவுகளை பின்னர் இடுங்கள். (முக்கிய குறிப்பு : பதிவுகளை இடும் போது கவனமாக இருங்கள். அவற்றை அவற்றிற்குரிய ஒழுங்கில் இடுங்கள். நினைவில் வைத்திருங்கள்: விலகுவதற்கான பதிவே முதலில் வரவேண்டியது)//
HAT TRICK வெடிச்சிரிப்பு. ஒருதடவ சிரிச்சு அடங்கறதுக்கு முன்னாடி அடுத்த பத்தியில் இன்னொரு வெடிச்சிரிப்பு. அப்புறம் இன்னொன்னு. தாங்க முடியல. என்ன சாப்பிட்டா இந்த மாதிரியெல்லாம் காமெடி வரும்?
சோமி என்பவருக்கும் எனக்கும் ஸ்நான சம்பந்தம் கூட இல்லை என்று இங்கு பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்
:))))))))))))))))))
சயந்தன் என்ற பதிவரும் விலகல் அறிவிப்பு பதிவிடாமல் விலகியிருக்கிறார். அவரையும் சேர்த்துக் கொள்ளவும்
வலைச் சூழல் கண்காணிப்புக் குழு ஒற்றன்
கொழுவி ,
கடேசியா இப்ப என்னதாங்காணும் சொல்ல வாறீர், இவுங்களெல்லாம் எழுத வேணாம்னு சொல்றீரா?
/சயந்தன் என்ற பதிவரும் விலகல் அறிவிப்பு பதிவிடாமல் விலகியிருக்கிறார். அவரையும் சேர்த்துக் கொள்ளவும்/
யோவ் - வடிவா என்னுடைய பதிவை பாரும் - கடைசியா இரண்டு பதிவிலும் படம் காட்டியிருக்கிறேன் - அது போதாதா..?
பிலிம் வேறு காட்ட வேண்டுமா?
உம்ம தொடர் கலாய்ப்புக்கு அளவே இல்லாம போயிடுச்சி :))
நானும் இவங்களுக்கு மடல் போட எண்ணியிருந்தேன்..டிசே பெண் பார்க்கும் படலமா?:)
//நானும் இவங்களுக்கு மடல் போட எண்ணியிருந்தேன்..டிசே பெண் பார்க்கும் படலமா?:)//
ஆகா - நம்ம பேரவைக்கு ஒரு பெருந்தலை அகப்பட்டுட்டார். வாங்க சார் வாங்க - ஆனா மெயிலெல்லாம் போட முடியாது சார். அவங்க பதிவு போட்டால் பின்னூட்டம் தான் போடலாம். போன் பண்ணுறது உங்க சொந்தச் செலவு - அதற்கு பேரவை ஸ்பான்சர் பண்ணாது.
ஈழநாதன் என்றொரு பதிவர் முன்னர் இருந்தார்.
நுண் அரசியலுக்கு ஏற்ற ஆள்.
அவரையும் விலகல் கடிதம் கொடுக்க சொல்லுங்கள்.
இதெல்லாம் போங்கு ஆட்டம் , ஈழ பதிவர்கள் மட்டும் காணாமல் போனா தான் பகிரங்க வேண்டுகோள் வைப்பீங்களா, நான் எல்லாம் பல காலமா மாசக்கணக்கிலே கானாம போய் இருக்கேன், ஏன் சமிபமாக கூட கடந்த ஆறு நாட்களாக வலைக்கு வரவேயில்லை(ஆக 31 - செப் 6) அதுக்கெல்லாம் கண்டுக்காம இப்போ மட்டும் அறிவிச்சா என்னய்யா அர்த்தம்?
ஈழநாதன், கிசோக்கண்ணன் எண்டு சிலர் 'காணாமற் போனோர்' பட்டியலுக்க வருவினம். அவைக்கு வேண்டுகோள் விடுக்கத் தேவையில்லையெண்டு நினைக்கிறன்.
சரியா கொழுவி?
நீர் வேற,
மனுசன் யாழ்ப்பாணம் போறனெண்டு வெளிக்கிட்டது. பண்டத்தரிப்புச்சந்தியில நிண்டு கதைச்சதுதான் தெரியும். பிறகு ஆளைக்காணேல. ஒருவேளை, பெட்டையளோட சேட்டைவிட்டு காவல்துறை பிடிச்சு உள்ள போட்டிட்டுதோ?
தீவு அண்ணை
ஏதேனும் முன்னை பின்னை கோபம் இருந்தால் தனியே மடல் போட்டுத் திட்டுங்கோ இப்பிடிப் பொதுவிலை திட்டாதையுங்கோ .நீங்கள் பாட்டுக்கு ஈழநாதன் நுண் அரசியலுக்கு ஏற்ற ஆளெண்டு சொல்லிப் போக தடியெடுத்த தண்டல்காரன் எவனாவது ஈழநாதன் அரசியலுக்கு ஏற்ற ஆளெண்டு சொன்னதாக நினைத்து போட்டுத் தள்ளிவிடப் போறான்.நான் ஊர்ப் பக்கம் போகவேணுமண்ணை
Post a Comment