தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அண்மையை அறிக்கையொன்றில் புலிகளின் நிலைப்பாடு தெரியாமல் எவ்வாறு இலங்கையில் போர் நிறுத்தமொன்றினை மேற்கொள்ள இயலும் என கேள்வியெழுப்பியிருந்தார். அவரது அக்கூற்று குறித்து கேள்வியெழுப்பிய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் பதில் அளித்திருக்கிறார்.
போர் நிறுத்தம் ஒன்றிற்கு எமது தரப்பில் எந்தவிதமான தடங்கல்களும் இல்லை. எப்போதும் போர் நிறுத்தம் ஒன்றிற்குத் தயாராகவே இருக்கின்றோம். இருதரப்பு போர் நிறுத்தம் ஒன்றிற்கான ஏற்பாடுகளைச் செய்வது இலங்கை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் புலிகள் இன்றுவரை தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்களுக்கான தற்காப்புச் சமரிலேயே ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய மக்களும், தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ள மனிதாபிமான கோரிக்கையை பொதுவாக பலரும் ஆதரிக்கின்றனர்.
இந்த பின்னணியில் மத்திய அரசும், தமிழக முதல்வரும் சிறிலங்கா அரச தரப்பில் மட்டும் போரை நிறுத்துவது எவ்வாறு சாத்தியப்படும். மறுதரப்பும் (விடுதலைப் புலிகள்) போரை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பொதுமக்களிடமும் இது குறித்த ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடி வருபவர்களும் குறிப்பாக இதில் விடுதலைப் புலிகளின் சார்பாக அதன் பொறுப்பாளர்களும், தாங்களும் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி வழியில் தீர்வுகாண தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் - 2002 இல் நோர்வே அனுசரணையோடு உருவாகிய போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதும் புலிகள் அப்போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதான அதிகாரபூர்வ அறிப்பு எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.