சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தமிழர்களுக்கு சாதகமான முறையில் எதனையும் கலந்துரையாடவில்லை எனவும் சிறிலங்கா - இந்திய அரசுகளின் நலன்கள் பற்றியே ஆராய்ந்தனர் என்றும் கொழும்பில் உள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும் வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கலந்துகொண்டார்.
விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றை செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று சந்திப்பில் கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ச அழுத்திக் கூறியதாகவும் அதனை நாராயணன் குழு ஏற்றுக்கொண்டனர் என்றும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
சந்திப்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது குறித்து அதிகாரபூர்வமாக அரச தலைவர் செயலகமோ அல்லது கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ எதுவும் தெரிவிக்கவில்லை.
வன்னியில் கைது செய்யப்படும் விடுதலை புலிகளின் போராளிகள் அல்லது சரணடையும் போராளிகள் குறித்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக அரச தலைவர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் சந்தித்து கலந்துரையாடினார் என்று கொழும்பில் உள்ள இராணுவ தலைமையக தகவல்கள் கூறுகின்றன.
1 comment:
fuk
Post a Comment