Wednesday, June 29, 2005

பரிசோதனைப் பதிவு.

அன்பர்களே வணக்கம்.
இது பரிசோதனைப் பதிவு.
$கொழுவி.

Wednesday, June 22, 2005

பேடுகளின் கொக்கரிப்பு.

பெடியன்கள்' எண்டு சொல்லி ஒரு வலைப்பக்கம் வந்திருக்கு.
போய்ப்பாத்தாப் பயமாத்தானிருக்கு. மண்டையோட்டுக்குறியோட கறுப்புப் பின்னணியும் பயங்கரமாயிருக்கெண்டா, அவயள் போட்டிருக்கிற தலைப்புக்களும் அப்பிடி. தாங்கள் இணையத் தமிழ்த் தீவிரவாதியளாம். போடுற பதிவுகளும் சும்மா வெளுத்து வாங்குது.

எடுத்த உடனயே வலைப்பதிவாளருக்கு எச்சரிக்கை விடுகினம். தளங்களை முடக்குகினமாம். பிறகு புலிகளின் வால்பிடியெண்டு கொஞ்சப்பேரச் சொல்லி அவளயவிட மற்றாக்கள வால்பிடிக்க வேண்டாமெண்டு எச்சரிக்கினமாம். நாலு கவிதை, சங்கர் ராஜி பற்றி ஒரு பதிவு, சு.ப. வின் படமொன்று என்று ஒரு சாம்பாறுத் தளம். பத்தாததற்கு, தோழர்களின் பின்னூட்டங்கள் வேறு அவர்களைக் குசிப்படுத்தியிருக்கக் கூடும். நல்ல வியாபாரத்தந்திரமுள்ள, விவரமான தீவிரவாதிகள் தான் அவர்கள். இல்லாவிட்டால் இவ்வளவு பேரை முட்டாளாக்கும் வல்லமை எப்படி வந்தது? இரண்டு நாள் கூட முடியவில்லை, அவர்களின் தளத்துக்கான பார்வையாளர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவிட்டது. (நான் முதன் முதல் பார்க்கும்போது 31.)

அவர்களின் பெயர்களைப்பாருங்கள். கோமாளிகளின் பெயர்கள். உண்மையில் கோமாளிகள் தான் அவர்கள். தாங்கள் ஏதோ பயங்கமானவர்கள், ஏதோ ஒரு கொள்கையுடையவர்கள், (மற்றவர்களை முட்டாளாக்குவது தான் அது) தீவிரவாதிகள் என்று தோற்றம் தரத்தக்கவகையில் அவர்களின் தள அமைப்பும் பதிவுகளும் இருக்கிறது. இந்நேரத்தில் இயக்குனர் சூர்யா இயக்கி நடித்த ‘நியூ’ என்ற படம் தான் ஞாபகம் வருகிறது. அதில் வில்லன் ஒருவன் நடித்திருப்பான் கவனித்திருப்பீர்கள். கட்டுமஸ்தான பலர் புடைசூட நடுவில் வெளிச்சம் போட்டு ஒருவனின் மேல் கால்போட்டு இருக்கும் அந்தவில்லன் கடைசியில் ஒருவனா ஒருத்தியா எனத் தெரியாதவாறு வெறும் கோமாளியாக மாறும் காட்சி, ஞாபகமிருக்கா? அப்படித்தான் இந்தத் தீவிரவாதிகளும். அத்தனையும் கோமாளிக்கூத்து.

இதற்குள் கவலை கொள்ளத்தக்க விடயமென்னவென்றால், அவர்கள் ஒரு பதிவு போட்டார்கள், சில வலைத்தளங்களை முடக்கியிருப்பதாக.
உண்மையில் அது எவ்வளவு பேத்தலான கதை என்பது ஒருபுறமிருக்க எங்கள் வலைப்பதிவாளர்கள் அடித்த லூட்டிதான் தாங்க முடியாது. அதிலும் சுந்தரவடிவேல் அண்ணனும், ஸ்ரீரங்கன் அண்ணனும் அடித்த பின்னூட்டங்கள்தான் உச்சக்கட்டம்.
தளங்களை முடக்குதல் அராஜகப்போக்காம், இதனால்தான் ஈழப்போராட்டம் பின்தள்ளப்பட்டதாம். அது பாசிசமாம். ஜனநாயக ரீதியில் கருத்துக்களை முன்வைக்கட்டாம். தளங்களை முடக்க வேண்டாமாம். இப்படிப் போகிறது அவர்களின் வேண்டுகோளும் பின்னூட்டங்களும். (என்ன இது? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு)

சத்தியமா என்னால அடக்க ஏலாமப்போட்டுது சிரிப்பை. ஏதோ தொழில் நுட்பக் காரணங்களால் இயங்காமற்போன பதிவுகளை தாம்தான் முடக்கினோம் என்று அவர்கள் புரட்ட, இவர்கள் அறிவுரை சொல்ல, நல்ல நகைச்சுவைக்காட்சிதான் போங்கள். சுந்தரவடிவேலரையும் ஸ்ரீரங்கத்தாரையும் நினைக்கப் பாவமாத்தானிருக்கு. கூடவே தோழர்களையும். என்னத்தச் செய்ய? தலையிட அடிச்சுக்கொள்ளுறதத் தவிர.

சிரிப்புச் சிரிப்பா வருது
இவங்களை நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பா வருது.
வயிறு நோகச் சிரிப்பன்,
வயிறு வெடிக்கச் சிரிப்பன்.

Monday, June 20, 2005

வயிறு நோகச் சிரிப்பேன்.

ஆங்காங்கு அடிபட்டார்கள்;
நான் அவனில்லையென்றும்
நீ அவன்தானென்றும்.

இவங்களையும் இவள்களையும் நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பாய் வருது.
உரத்துச் சிரிக்கிறேன்.

நீதான் அவனென்றும்,
நான் அவனில்லையென்றும் சண்டைகள்.
ஐ.பி. பிடித்ததாய்ச் சொல்லி
பி.பி. ஏற சண்டை.
பிறகு வழக்குப் போட மிரட்டல்,
வழக்கம் போல பதுங்கல்.

எல்லாத்தையும் பாத்து
விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.

என்னை அவனெண்டாங்கள்,
இவனெண்டாங்கள்.
ஆரோ 'ந்தன்' எண்டாங்கள்.
பிறகு 'ந்தன்கள்' எண்டாங்கள்.
எந்தச் சுவரில் போய் முட்ட?

முட்டி முட்டி இடிப்பேன்,
சுவர் உடையுமட்டும் இடிப்பேன்
ஏனெண்டா என்ர தலையில்லத் தானே.

இவங்களையும் இவள்களையும் நினைக்கச்
சிரிப்புச் சிரிப்பாய் வருது.
விழுந்து விழுந்து சிரிப்பன்,
வயிறு நோக சிரிப்பன்,
வயிறு வெடிக்கச் சிரிப்பன்,
ஏனெண்டா அது என்ர வயிறில்லத் தானே.

Sunday, June 19, 2005

மறக்க முடியா நாட்கள்

Image hosted by Photobucket.com

நரிகளின் போர்க்குணம்

நரிகளுக்கு நேருக்கு நேர் நின்று சண்டை செய்கின்ற போராட்ட குணமோ அல்லது அதற்கான மூர்க்க குணமோ இல்லையாயினும் தந்திரத்தரத்தால் எதனையும் சாதிக்க கூடியது.

தன் தேவைக்கேற்ப அரவணைத்தும் தேவை முடிந்ததும் ஏறி மிதித்தும் தானும் ஒரு சர்வ வல்லமையுள்ள மிருகம் என்பதனை அது பல தடவைகளில் நிரூபிக்கிறது என ஒரு மிருக வள ஆராய்ச்சி நிலையம் முடிவு செய்கிறது.

நரிகள் தொடர்பாக பல சுவையான புராண கதைகள் உள்ளன.

ஒரு முறை ஒரு நரி தனது அயலில் உள்ள சிங்கத்தின் குகையும் குகை சார்ந்த பிரதேசங்களையும் தளம்பல் நிலையிலேயே தொடர்ந்து பேண வேண்டும் என்ற நோக்கில் புலிகளை அரவணைக்க முடிவு செய்தது.

புலிகளை மட்டுமல்லாது மான், மரை, பன்றி, கழுதை என எல்லா மிருகங்களையும் அது தன் வசம் இழுத்தது.

ஆயினும் காலப்போக்கில் புலிகள் தவிர்ந்த மற்ற எல்லா மிருகங்களும் நரியின் கூடாரத்தில் குடிபோதையில் மயங்கி கிடக்க புலிகள் மிகத்துல்லியமாக நரியின் கபடத்தனத்தை புரிந்து கொண்டன.

அக்காலத்தில் காட்டில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்தது. அந்த காட்டினில் கால் வைக்க காத்திருந்த நரிகளுக்கு இது வாய்ப்பாகி போனது.

ஏற்கனவே புலிகள் நரிகளின் குள்ளத்தனத்தை உணர்ந்து நரிகளோடு முரண்பட்டு நின்றதனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலிகள் இனத்தையே அது ஒழித்துக்கட்ட முடிவு செய்தது.

புலிகளை மட்டுமல்லாது அங்கு காட்டில் வசித்த அப்பாவி மிருகங்களையும் நரி சித்திரவதை செய்து கொன்றது. அணில்கள் மீன்கள் கொக்குகள் முதலான பல விலங்குகள் நரிகளால் கொல்லப்பட்டன.

இப்படி நரிகளுக்கும் புலிகளுக்குமான பல தொடர்புகளை சொல்லுகின்ற புராண கதைகள் இருக்கின்றன.

இப்போது நரிகளின் சில இயல்புகளை பார்க்கலாம்.

பக்கத்தில் யார் உருப்பட்டாலும் அதற்கு பிடிக்காது.

சின்ன சின்ன விசயங்களுக்கு எல்லாம் சலசலக்கும்.

ஒரு விடயத்தை ஊதிப் பெருப்பிப்பதில் நரிக்கு நிகர் நரியே தான்.

புலிகள் மீது தீராத பகையும் வன்மமும் உள்ள போதும் நேரடியாக தீண்ட பயம்.

பனங்காட்டு நரிகள் தவிர்ந்த மற்றய நரிகளுக்கு பக்கத்தில் சிறு சலசலப்பு கேட்டாலும் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

நரிகள் சந்தேக பிராணிகள் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

குள்ளத் தந்திர புத்தி மட்டும் இல்லாவிட்டால் அதனால் எதுவும் செய்ய முடியாது.

காட்டில் எவராயிருந்தாலும் தன்னிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும்.

நேர்மையாக ஒரு போதும் சண்டையிட்டதில்லை. முதுகில் குத்தும் ஒரு விலங்கு.

Monday, June 13, 2005

இந்தியாவின் இராணுவ உதவியும் தேவையும்!

இலங்கையோடு பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடபட மாட்டாது என வைகோ விடம் உறுதியளித்த இந்திய அரசு தற்போது இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

இப்பாதுகாப்பு ஒப்பந்தத்தினை பயன்படுத்தி இலங்கைக்கான ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா வழங்கும் என அறிய முடிகிறது.

இந்தியா தனது இறையாண்மையை பாதுகாக்கவும் ஏற்கனவே இருக்கின்ற தலைவலிகள் போதாதென்று இன்னுமொரு மூட்டுவலி வந்து விட கூடாது என்பதற்காகவும் இத்தகைய ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

அது இலங்கையில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள போதும், அவர்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்வு கிடைக்க வேண்டும் என விரும்புகின்ற போதும் தனது இறையாண்மையை கருத்திற் கொண்டு இத்தகய ஒரு முடிவினை எடுத்திருக்கிறது.

வைகோ போன்றவர்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ இலங்கையில் ராணுவ உதவி என்ற பெயரில் உள்ளே நுழைவதோ அல்லது இலங்கை ஏதோ ஒரு நாட்டிலிருந்து மிக நவீன அன்னிய தயாரிப்பு ராணுவ தளவாடங்களை வாங்குவதோ இந்தியாவின் இறையாண்மைக்கு நல்லதா என்பதை வைகோ போன்றவர்கள் சிந்திக்க வேண்டும். மற்றும் படி அதனால் அப்பாவி தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள் குறித்து அவர் சிந்தித்தால் அவரை மாவீரன் என்று யாரும் சொல்ல போவது இல்லை.

விடுதலைப்புலிகள் என்பவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை, காவல்துறை போன்ற கட்டமைப்புகளை கொண்ட ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதுவும் அண்மையில் ஏற்பட்ட சுனாமி நெருக்கடியில் வெகு விரைவாக அரச இயந்திரம் செயற்படுவதற்கு முன்னரே அலையோய்ந்த வெறும் பதினைந்து நிமிட நேரத்திற்குள் துரித கதியில் மீட்பு பணியில் இறங்கி செயலாற்றியதன் மூலம் உலக நாடுகள் பலவற்றாலும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவர்கள்.

தவிரவும் கள்ள ஓட்டுக்கள் பல இட்டு மோசடிகள் செய்து, வாக்குறுதிகளை அள்ளி வழங்கி பின்னர் காற்றில் அவற்றை பறக்கவிட்டு இவ்வாறான ஜனநாயக செயற்பாடுகளினூடு ஆட்சியை பிடிக்காதவர்கள்.

அவர்களை அழித்தல் என்ற பெயரில் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழினம் மீது இலங்கை அரசு காலத்துக்கு காலம் மேற்கொள்கின்ற இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது தார்மீக ஆதரவினை வழங்குவதே இந்தியாவின் இறையாண்மையை பேணுகின்ற ஒரு செயல் ஆகும்.

நிற்க,

புலிகளை பொறுத்த வரை அவர்கள் தமது ஆயுத பலத்தில் பெரும்பாலானவற்றை இலங்கை அரச படைகளின் ஊடாகவே பெற்றிருக்கின்றனர். முதற் சண்டையில் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் பெறும் ஆயுதங்கள் அடுத்த சண்டையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பயன்படுத்தப் படுவதே வரலாறு.

ஆயுதங்கள் என்ன செய்யும். அவை யார் சுட்டாலும் சுடும்.

உலக ஆயத சந்தையில் புலிகளுக்கும் சேர்த்தே இலங்கை அரசு ஆயுதம் கொள்முதல் செய்கிறது என்பது யாவரும் அறிந்ததே.

அவ்வாறாக இந்தியாவும் தற்போது புலிகளுக்கு ஆயுதம் வழங்க தீர்மானிக்கிறது. ஒரு காலத்தில் நேரடியாக ஆயுதங்களை வழங்கிய அது தற்போது இலங்கை இராணுவம் ஊடாக சுற்றி வளைத்து கொடுக்கிறது என்பது தான் வித்தியாசம்.

ஈழப்போராட்டத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் ஈழ விடுதலையை விரைபு படுத்துவதற்கும் தேவையான இராணுவ தளபாடங்கள் குறித்து புலிகளின் இராணுவ வெளியீடுகள் சில வெளியிட்ட பட்டியல் விபரங்கள் இவை.

இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கும் போது இந்த பட்டியலில் இருக்கின்ற ஆயுதங்களை இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கினால் அவை நல்ல படியாக புலிகளின் கைகளில் சென்று சேரும்.

இப்போது பட்டியல் விபரத்துக்கு வரலாம்.


120 மி.மீ. எறிகணை செலுத்திகள் - 25 அவற்றிற்கான எறிகணைகள் 200 000
130 மி.மீ ஆட்லறி - 10 அவற்றிற்கான எறிகணைகள் 100 000
152 மி.மீ. ஆட்லறி - 10 அவற்றிற்கான எறிகணைகள் 100 000
81 மி.மீ மோட்டர் எறிகணைகள் 100 000 (செலுத்திகள் தேவையில்லை)
37 மி.மீ இயந்திரத் துப்பாக்கி - 10 அதற்கான ரவைகள் 100000
23 மி.மீ இயந்திரத் துப்பாக்கி 25, ரவைகள் 500000 (கடற்சண்டைகளில் அதிகம் தேவைப்படுகிறது. இதனை தாராளமாக இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கவும்.)
ராங்கிகள் எவ்வகையைச் சேர்ந்தனவாயினும் மற்றும் அவற்றிற்கான எறிகணைகள் 25 000
சிறுரக ஆயுதங்கள் தேவையில்லை. தாராளமாக இருக்கின்றன.

விமானங்களின் தேவை அதிகமேயாயினும் இலங்கை இராணுவத்தினரிடம் சேரும் விமானங்கள் வெறும் இரும்புக் குவியலாகவே புலிகளிடம் வரும் என்பதால் அவை தேவையற்றவை.
காங்கேசன்துறை கிடைத்தபின் கடற்கலன்களுக்கான கோரலை அனுப்பி வைக்கிறோம்.

கொழுவியின் குறிப்பு: இலங்கை இராணுவத்தினரின் பலாலி விமான ஓடுபாதை புனரமைப்பை வெகு விரைவில் இந்தியா முடித்து கொடுத்தால் அது புலிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அத்துடன் திருகோணமலை எண்ணைக் குதங்களின் திருத்த வேலைகளையும் முடித்தால் மெத்த பெரிய உபகாரமாய் இருக்கும்.

மீண்டும் கொழுவி சீரியசாகிறது. இந்த படங்கள் பழைய நினைவுகளை மீட்டுகின்றன. ஆட்டோகிராப் மாதிரி!

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

அரசியலில் நமது வலைப்பதிவுகளின் செல்வாக்கு.

நாமும் ஏதோ பொழுதுபோக்காகக் கிறுக்குகிறோம், விவாதிக்கிறோம், சண்டை பிடிக்கிறோம் என்ற அளவிலேதான் வலைப்பதிவுகளை எடை போட்டு வந்தோம். நமது தமிழ்மணத்தில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவுகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லையென்றே நானும் நினைத்திருந்தேன். ஆனால் அரசியலில் இவை பெரும் தாக்கத்தைக் கொண்டுள்ளன என்பதை இப்போதுதான் அறிகிறேன். இந்த இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்வதே இப்பதிவின் நோக்கம்.

அண்மையில் வலைப்பதிவுகளில் மற்றவரை வெருட்டுவதும், காலக்கெடு போடுவதும், வழக்குத்தொடுப்பதாகச் சொல்வதும் நடந்து வருகின்றது. (இதற்குள் என் பெயரும் சம்பந்தப்பட்டது சுவாரசியமானது). இதைப்பார்த்த அரசியல்வாதிகளும் தங்கள் பங்குக்குக் கொளுத்த ஆரம்பித்துவிட்டார்கள். எதைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?

ஜே.வி.பி. சந்திரிகாவுக்குக் காலக்கெடு விதித்துள்ளது.
"வருகிற 15 ஆம் திகதிக்குள் பொதுக்கட்டமைப்பு கைச்சாத்திடும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும். சந்திரிக்காவுக்கான காலக்கெடு பதினைந்தாம் திகதி இரவு பன்னிரண்டு மணிவரை. இப்போதிருந்து அவருக்கான காலக்கெடு ஆரம்பிக்கிறது."
என்று சந்திரிக்காவை வெருட்டியுள்ளது. கூடவே இறையாண்மை, நல்லபெயருக்குக் களங்கம், தனித்தன்மை பற்றியெல்லாம் கதைத்துள்ளது. என்ன ஒற்றுமை பாருங்கள்.

ஏதோ ஒரு வழியில் நமது வலைப்பதிவுகள் கவனிக்கப்படுவது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இப்படியான ஒரு செயலுக்கு நம்மை முன்னோடியாக்கிவிட்டார்களே என்று நினைத்து மறுபுறம் வேதனையாயும் இருக்கிறது. யார் கண்டது? வலைப்பதிவாளர் ஒருவரே ஜே.வி.பி. முகவராயும் இருக்கக் கூடும்.

உங்களுக்கு எப்படி இருக்கிறது அன்பர்களே?

Friday, June 10, 2005

சோதினையுடன் விடைபெறுகிறேன்.

பிள்ளைகளுக்கு summer சோதினை நடக்கிறது. சோதினை முடிந்தவுடன் எங்காவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு செல்லலாம் என்று எண்ணம். இனி விசா கூட தேவையில்லையாம் பக்கத்து நாடுகளுக்கு போவதற்கு. (எப்ப அது நடைமுறைக்கு வருதோ தெரியவில்லை)

ஆகவே அடுத்த வாரத்திலிருந்து நான் சோதினையுடன் விடைபெறுகிறேன்.

இது தற்காலிக விடைபெறுதல் தான். மற்றம் படி.. தற்போது இணையத்தில் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த.. என்னைச் சிலரோடு இணைக்க நடக்கும் முயற்சிகளுக்கு அஞ்சி வேதனையுடன் விடைபெறவில்லை.

உண்மையில் அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அது எனது பிரச்சனையும் இல்லை.
நன்றி

Wednesday, June 08, 2005

புஸ்தக வெளயாட்டுக்கு நானும் வர்றேன்

இந்த புத்தக வெளயாட்டுக்கு நம்மை யாருமே கூப்பிடல. திறந்த வூட்டுக்குள்ளார நாய் (அட என்னை நானே நாய்ங்கிறேன்) புகுந்த மாதிரி நானே புகுந்துக்ககிறேன். ப்ளீஸ் என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்கப்பா..

ஆமா இன்னி வரைக்கும் எழுதினவங்க யாராச்சும் சொல்லி அப்புறமாத்தானே எழுதினாங்க. ஆனா பாருங்க சொல்லிச் செய்வர் சிறியர் என்கிற மாதிரி சொல்லாமல் செய்வர் பெரியர்ங்க..

நாம எப்பவுமே பெரியவங்க தான் அதுக்காக சின்ன வயசில படிச்ச பிடிச்ச புத்தகங்களை மறந்திட முடியுமா என்ன?

சரி ஆட்டத்துக்கு போகலாமா? என்கிட்ட உள்ள புத்தகங்க ஒரு 100 ஐ தாண்டுமுங்க. பட்டியல் போட்டுரலாமா?

அம்புலிமாமாவில ஒரு அம்பது போடுங்க.. சரி போட்டாச்சா? இப்போ பால மித்ரால ஒரு முப்பது போடுங்க.. எவ்வளவுங்க ஆச்சு? எண்பதா? சரி லயன் காமிக்ஸ் அப்புறம் ராணிக் காமிக்ஸ் வகையறாக்கள்ள ஒரு அம்பது போடுங்க.. என்னா.. 100 தாண்டிச்சா..

இப்போ பிடிச்ச புத்தகங்களுக்கு வரலாமுங்க.

புத்தகம் நம்பர் ஒண்ணு: முரட்டுக்காளை கார்த் தோன்றும் இயந்திர உலகு

புத்தகம் நம்பர் இரண்டு: ஜேம்ஸ் பாண்டு தோன்றும் ஆபத்தான அழகி

புத்தகம் நம்பர் மூணு : லேடி ஜேம்ஸ்பாண்டு மாடஸ்தி தோன்றும் சுறா மீன்

புத்தகம் நம்பர் நான்கு: மாயாவி தோன்றும் லண்டனில் மாயாவி

காமிக்ஸ்சில நெறைய புக்குங்க இருந்தாலும் நமக்கு இந்த நாலும் புடிச்சதுக்கு காரணம் அதுங்க கதையமைப்பு தானுங்க..

நீங்க யாராச்சும் ஜெர்மன் இலக்கியங்கள் படிச்சிருக்கீங்களா? நம்ம டோண்டு சார் (அவரை நான் ஆசையா மாமான்னு கூப்பிடுவேன். அவரே சொன்னாரு அப்டி கூப்பிடுன்னு) அப்புறம் ஜெர்மனில இருக்ற முத்து. அப்புறம் இன்னொருவங்க.. அவுக பேரு என்னான்னா.. மறந்திடுச்சே.. ஆ.. சந்திரவதனா.. இவுங்க எல்லாம் ஜெர்மன் இலக்கியங்க படிச்சிருப்பாங்கன்னு நினைக்கிறன்.

சும்மா இல்லீங்க.. அட்டகாசமான நல்ல புஸ்தகம் எல்லாம் ஜெர்மனில இருக்கு.

Die Gute Masse அப்டீன்னு ஒரு புக்கு.. நம்ம மதி அக்....!!!! இல்லயில்ல மதி சொன்னாங்களே The Good Earth அதனோட ஜெர்மன் பதிப்பு. அதப் படிச்சிட்டு மறக்கவே முடியலைங்க. மனசுக்குள்ளை நின்னாடுது.

அப்புறம்.. Who says Elephants can't dance இந்த புக்கு பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா.. நம்ம ராம்கி அண்ணாச்சி(முன்னால ரஜினிங்கிற வார்த்தையை சேர்த்துக்கோங்க) சொன்னாரே தனக்கு படிச்ச ஆங்கில புஸ்தகம்னு. அதே தான். அதனோடை ஜெர்மன் பதிப்பு Wer sagt, können Elefanten nicht tanzen.அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சது. எனக்கு புரியுது எதுக்காக அவருக்கு அந்த புக்கு பிடிச்சிருக்குன்னு. (எதுக்காகன்னா.. அவருக்கு எதுக்காக புடிச்சிருக்கோ அதுக்காக தான்).
இன்னும் நிறைய ஜெர்மன் புக்குங்க இருக்கு.. ஆனாலும் இனி தமிழ் புக்குங்களுக்கு வருவோம்..
நான் படிச்சு முடிச்ச சில புக்குங்க,

அப்பமா இடியாப்பமா: அப்பம், இடியாப்பம் பத்தி நல்ல தெரியாத செய்திகளை இந்த புக்கு சொல்லுது. இதை எழுதினவரு அப்பம் இடியப்பாம் சாப்பிடுறதில ரொம்ப பிரபல்யம். அவர் பேரை சொன்னாலே அவருக்கும் அப்பத்துக்கும் இடையில இருக்கிற தொடர்பை புரிஞ்சுக்கலாம். ஆனாலும் புஸ்தகத்தில தன்னோட அரைவாசி பெயரை தான் பயன்படுத்தியிருக்காரு!

யூதப்போராட்டத்தில் எனது சாட்சியம்: இதை எழுதினவரு யூதப்போராட்டத்தில ஆரம்ப காலங்களில் பங்கு பத்தினவராம். அப்புறம் போராட்டம் போரடிக்க எங்கேயோ போயிட்டாரு. எங்கேன்னே தெரியல்ல. பிறகு ரொம்ப நாளுக்கப்புறம் மெடிக்கலுக்காக பிரான்ஸ் வந்தவரை அவரது மனைவி சும்மா இருக்கீங்க ஏதாச்சும் எழுதுங்கன்னு சொன்னதுக்காக இந்த புக்கை எழுதினாராம். அப்புறம் யூதப் போராட்டம் முடிஞ்சாப்புறம் யூதப்போராட்டம் முடிந்து விட்டதுன்னு கூட ஒரு புக் எழுதினாராம். (அது நான் இன்னும் படிக்கல.) இதெல்லாம் இந்த புக்கோட முன்னுரையில இவர் சொல்லியிருக்கார்.

அப்புறம் ஓம் ன்னு ஒரு புத்தகம். இத எழுதினவரு கொரில்லா குரங்குக என்றும் ஒரு புக்கு போட்டிருக்கிறாரு. நான் இன்னும் படிக்கல்ல அத.

இன்னும் கொஞ்ச லிஸ்டு இருக்கு

சூ..சூ.. சில கொறிப்புக்கள்

பதினாலாவது சந்திரன்

ரூபாத் தேசம்

ஆ.. இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன். சீனா சிங்கள வாணன்னு ஒருவர் போடுவார் பாருங்க புக்குக. அடடே..
பல் துலக்குவது எப்படி?

கண்ணாடி போடுவது எப்படி?

பவுடர் பூசுவது எப்படி..?

இந்த புக்குங்க எனக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணிச்சு.

சரிங்க.. ஆமா என்னை யாரும் அழைக்கலை.. அதுக்காக நான் அப்பிடி விட முடியுமா என்ன,
இவங்க தான் நான் கூப்பிடுறவங்க!
மாடர்ன் கேர்ள்..
முகமூடி
இணைய குசும்பன்
வரட்டுங்களா..

Monday, June 06, 2005

எழுத்துப் பொறுக்கி குருவிகள்

தீராநதி, உயிர்மை, காலச்சுவடு, கணையாழி இதழ்களில் வருகின்ற கவிதைகளை படித்து படித்து போர் அடித்து விட்டது. வித்தியாசமான புதிய முயற்சிகளை உள்ளடக்கிய கவிதைகள் தேடி கொழுவிகள் அலைந்தனர்.

அகப்பட்டது யாழ் இணையத்திலிருந்து சில பல நல்ல இதுநாள் வரை எங்கேனும் வாசித்தறியாத நல்ல கவிதைகள்.

மாந்தோப்பு என்ற இடத்திலிருக்கின்ற குருவிகள் என்னும் அதி உன்னத கவிஞன் எழுதிய கவிதைகளை படித்த மாத்திரத்திலேயே கொழுவிக்கும் குழப்பிக்கும் பிடித்து விட்டது.

மரபுக்கவிதை புதுக்கவிதை என கவிதைகளை பலவகையாக பிரிக்கலாம். ஆனால் குருவிகளின் கவிதைகளை மொத்தம் 30 வகையான பிரிவுகளில் வேறுபடுத்தலாம். இதுவே அவரது கவிதைகளின் சிறப்பும் ஆகிறது.

அவையாவன

ஆனாக் கவிதைகள், ஆவன்னா கவிதைகள் முதலான உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாம்.

ஆனாக்கவிதைகளிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதையாக தரவேண்டும் என கொழுவியும் குழப்பியும் விரும்பினாலும் நல்ல இலக்கியங்களை படிக்க காத்திருக்கும் வலை மேய்பவர்களின் ஆவல் கருதி முழுவதையும் தர எண்ணுகிறோம்.

முதலில் ஒரு வானாக் கவிதை படியுங்கள்.

வாழ்வெனும் வீதியில் பயணம்
வழக்கங்கள் மாறா விதிகள்
வழமையானால் இல்லை அவதிகள்
வழமைக்கு மாறாய் விதிகள்
வடிவமைத்து வடிவாய் வாழினும்
வரும் வாழ்வும் இனிதே பயணிக்கும்..!
வழமை நாம் விரும்பினும்
வழமைகள் மாற்றி
வரும் வாகனங்கள் வீதியில் சகஜம்
வந்தவை தரும் விபத்துக்கள்
வந்த பின் வருத்தம் தான் மிஞ்சும்
வருமுன் காப்போம் விதிகள்...!

வந்த விதி வழி அப்பாவியாய்
வடிவாய் வீதி வழி நீயும் வந்ததால்
வாழ்க்கைப் பாதையில் சந்தித்தாய்
வகை வகையாய் விபத்துக்கள்
வந்தவை எதுவும் புதிதல்ல
வருந்தவும் அங்கு இடமில்லை
வருந்த உன்னில் எதுவுமில்லை
வருந்தித் தொலைக்காதே உன் வசந்தம்
வாடா உன் முகம் என்றும் வேண்டும்
வரமது தந்திடு அரு மலரே...!

வசந்தம் வந்த வேளையில்
வந்தாய் என் வாழ்வின் ஒரே வசந்தமாய்
வடிவாய் உன்னை அழைத்துச் செல்வேன்
வருங்கால வீதி தன்னில் கரம் பிடித்தே
வருந்தாமல் வை ஒரு நம்பிக்கை
வரும் என் கை உன்னை நாடியே..!
வரும் மரணம் கூட
வழி மறிக்கா
வகையான அன்பு வழி
வரும் எங்கள் வாழ்வில் கடைசிவரை
வருத்தமின்றி வா
வகையாய் குதூகலிப்போம்
வான வீதியில் வாழ்ந்திடும்
வண்ணச் சிட்டுக்களாய்....!


வானாக்கவிதையின்
வனப்பிலே
வழிந்தோடிய
வளர் தமிழை (அடச் சே.. கொழுவிக்கும் குழப்பிக்கும் குருவிகளின் தாக்கம் இருக்கிறது) பருகிய நீங்கள் இனி குருவி எழுதிய ஒரு ஊனாக் கவிதை படியுங்கள்.

உதிர்ந்த வார்த்தையொன்று
உள்ளத்தைக் கிழித்தது
உண்மை அன்பு தேடி
உன்னை உண்மையாய் நாடி
உலகமே நீ என்று கண்டதற்கு
உன் காணிக்கை இதுதானா....??!
உண்மையாய் இக்கணம்
உலகமே வெறுக்கிறது
உன் நினைவு வாட்டுகிறது
உறக்கம் தொலைகிறது
உண்மை என்ன...?!
உன்னில் என்ன அவநம்பிக்கை
உன்னை ஊரே ஏய்க்குதோ
உன் கண்களை மறைக்குதோ..??!
உயிரே...
உனக்கொரு வேண்டுகோள்
உள்ளத்தில் நீயே முதலாய்
உன் வார்த்தைகளால்
உன் நிலை தாழ்த்தாதே...!
உண்மை அன்புக்கு
உலகில் இடமில்லை
உண்மை என்று உணர்ந்து
உலகை வெறுத்தவன்
உன் வார்த்தைகளால்
உண்மையில் உறுதியாகிறான்...!
உண்மைக்காய்
உறங்கி விழித்தவன் - இவன்
உளறுவதாய் என்னாதே - இன்னும்
உலகை உணர்கிறான்
உள்ளங்கள் உணர்கிறான்...!
உண்மையில் அன்பு
உன்னிடத்தில் உண்டா...??!
உலகில் உண்டா....??!
உண்டு
உன்னால் அதை
உள்ளம் கொண்டு தெளிக்கக் கூட முடியவில்லை
உண்மைக் காரணம்....
உண்மைகள் என்று
உலகம் உன்னை ஏய்ப்பதால்
உன்னை நீயே உணர மறுப்பதால்
உண்மைத் தேடல் இன்றி
உறுதி இழந்ததால்....!
உண்மையில் இவன்
உறுதியின் உறைவிடம் - இருந்தும்
உண்மை அன்புக்கு
உள்ளது அடைக்கலம்
உனக்கு மட்டுமே என்றும் அது...!

இனி நாங்கள் தரவிருப்பது குரவி எழுதிய ஒரு ஈனாக் கவிதை(ஈனக்கவிதை அல்ல).. ஈஈதோ..

இயற்கையை ரசித்தவன்
இன்பத்தை ருசித்தவன்
இருப்பவைக்காய் ஆசை வளர்த்தவன்
இழப்பதையே வெறுத்தவன்
இருளுக்குள் ஒளி தேடியவன்
இனிய விடியலுகாய் ஏங்கியவன்
இருப்பவர் எல்லாம் இன்பமாய் வாழ
இலட்சியம் வளர்த்தவன்
இனிய உலகுக்காய்
இனிய கனவு ரசித்தவன்
இனியவளே மலரே உன்
இதயத்தை அளந்ததும்
இயல்பை இழந்துவிட்டான்
இரவும் பகலும் உன் நினைவுகளால்
இந்து சமுத்திரமானான்
இயற்கை எங்கனும் உன்னுருவம்
இயல்பாய் வரையும் ஓவியனானான்
"இன்பத்துக்கு வழியெது
இனியவளின் வார்த்தையது"
இப்படியொரு தத்துவனானான்
இருப்பு இவனுக்கு வெறுப்பு
இன்று அதுவே கடமையாக்கினான்
இனிப்பாய் ஒரு வரி
இயல்பாய் அறியாதவன்
இன்று வரிகளில் தேன் சொரிகிறான்.....
இப்படி இப்படி எத்தனை மாற்றங்கள்
இவை எப்படி இவனுக்குள்
இன்னும் காரணம் அறிந்ததில்லை
இதன் மாயமும் புரியவில்லை
இருப்பவை எல்லாம் இன்பமாய்
இனியவளே உன் ரசிகனாய்
இவன் காண்பதெல்லாம் சொர்க்கமாய்
இவை பிரமையும் அல்ல
இன்றைய நிஜங்களாய்
இனிய நாளைய நினைவுகளாய்
இவன் இள மனதோடு பதிவாகுது
இவையே நாளை
இவன் வரலாறாகும்...!

நமது குருவிகள் லேசுப்பட்ட ஆள் இல்லை. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் தொடத் தயங்கும் விடயங்களையும் எழுத்துக்களையும் தொடுவார். பின்னே.. பாருங்கள் அவர் ஒரு பேயன்னா (பேயன் அல்ல) கவிதையும் எழுதியுள்ளார்.

பேசா மலரே
பேசினாய் முதல் வார்த்தை
பேச்சிற்கு நாலு வார்த்தை
பேதைக் குருவியிவன்
போதை தீர....!
போ... மலரே
போன காலம் மெளனத்தால்
போனதே வீணா...
பேரன்பு உனை மலரவைக்க
போனதோ வீராப்பு
போனதை எண்ணி வருந்தி
பேசினாயோ அன்பு வார்த்தை..!
பேசியது தேனினும் இனிப்பாய்
பேசாச் செவிகூடச் சுவை அறிந்து
போதை கொண்டு
பேச்சுக்கு அடிமையாகிறது....!
பேசாமல் தொடர்வாயோ
பேச்செனும் அமுதம் தினமும் ஊட்டாயோ..??!
போதை எனித் தீராது
பேசியதும் இங்கினி
போகாது வீணே...!
பேதையெனினும் போதையெனினும்
போகும் அவை
பேதையிவன் மூச்சில் கலந்து...!
பேச்சின் மொழியும்
பேதையே உன் ஞாபகம் தந்து
போகும் இவன் இறுதி மூச்சுவரை...!
பேசியதை இங்கு பேசியதற்காய்
பேசாமல் பேசிடு என்ன
பேச்சதில் நீயும் மலர்வாய்
பேதையிவன் நெஞ்சில்
பேரழகு மலராய்...!

என்ன.. குருவிகளின் ஆனா ஆவன்னா கவிதைகளில் குளித்தீர்களா..? நல்ல இலக்கியங்களை படித்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டீர்களா?

மீண்டும் சந்திப்போம்.
பிற்குறிப்பு கவிதைகளின் முழு உரிமையுமும் குருவிகளுக்கே சொந்தம். ஆனாவை ஆவன்னா என்றோ ஊனாவை ஊவன்னா என்றோ மாற்ற யாருக்கும் அனுமதியில்லை.

Sunday, June 05, 2005

காட்சியும் கானமும் ஒலிப்பதிவு

இன்றைய கவிதை தவறணையில் மலரும் புதிய கள் தியாகமாம்! காட்சியும் கானமும். ஒலிப்பதிவில் மலர்கிறது.

எமது முன்னைய கவிதைக்கு அளித்த அதே ஆதரவினை இதற்கும் அளிக்கவும்.

சிறார்கள் நாம் விடும் தவறுகளை மன்னித்தருளவும்.

இந்த காட்சியும் கானமும் பழையவனின் எழுத்தருவில் மலர்கிறது. நன்றி.