Monday, June 13, 2005

இந்தியாவின் இராணுவ உதவியும் தேவையும்!

இலங்கையோடு பாதுகாப்பு ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடபட மாட்டாது என வைகோ விடம் உறுதியளித்த இந்திய அரசு தற்போது இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தினை மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன.

இப்பாதுகாப்பு ஒப்பந்தத்தினை பயன்படுத்தி இலங்கைக்கான ஆயுத மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா வழங்கும் என அறிய முடிகிறது.

இந்தியா தனது இறையாண்மையை பாதுகாக்கவும் ஏற்கனவே இருக்கின்ற தலைவலிகள் போதாதென்று இன்னுமொரு மூட்டுவலி வந்து விட கூடாது என்பதற்காகவும் இத்தகைய ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

அது இலங்கையில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டுள்ள போதும், அவர்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்வு கிடைக்க வேண்டும் என விரும்புகின்ற போதும் தனது இறையாண்மையை கருத்திற் கொண்டு இத்தகய ஒரு முடிவினை எடுத்திருக்கிறது.

வைகோ போன்றவர்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ இலங்கையில் ராணுவ உதவி என்ற பெயரில் உள்ளே நுழைவதோ அல்லது இலங்கை ஏதோ ஒரு நாட்டிலிருந்து மிக நவீன அன்னிய தயாரிப்பு ராணுவ தளவாடங்களை வாங்குவதோ இந்தியாவின் இறையாண்மைக்கு நல்லதா என்பதை வைகோ போன்றவர்கள் சிந்திக்க வேண்டும். மற்றும் படி அதனால் அப்பாவி தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள் குறித்து அவர் சிந்தித்தால் அவரை மாவீரன் என்று யாரும் சொல்ல போவது இல்லை.

விடுதலைப்புலிகள் என்பவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை, காவல்துறை போன்ற கட்டமைப்புகளை கொண்ட ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதுவும் அண்மையில் ஏற்பட்ட சுனாமி நெருக்கடியில் வெகு விரைவாக அரச இயந்திரம் செயற்படுவதற்கு முன்னரே அலையோய்ந்த வெறும் பதினைந்து நிமிட நேரத்திற்குள் துரித கதியில் மீட்பு பணியில் இறங்கி செயலாற்றியதன் மூலம் உலக நாடுகள் பலவற்றாலும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவர்கள்.

தவிரவும் கள்ள ஓட்டுக்கள் பல இட்டு மோசடிகள் செய்து, வாக்குறுதிகளை அள்ளி வழங்கி பின்னர் காற்றில் அவற்றை பறக்கவிட்டு இவ்வாறான ஜனநாயக செயற்பாடுகளினூடு ஆட்சியை பிடிக்காதவர்கள்.

அவர்களை அழித்தல் என்ற பெயரில் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழினம் மீது இலங்கை அரசு காலத்துக்கு காலம் மேற்கொள்கின்ற இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது தார்மீக ஆதரவினை வழங்குவதே இந்தியாவின் இறையாண்மையை பேணுகின்ற ஒரு செயல் ஆகும்.

நிற்க,

புலிகளை பொறுத்த வரை அவர்கள் தமது ஆயுத பலத்தில் பெரும்பாலானவற்றை இலங்கை அரச படைகளின் ஊடாகவே பெற்றிருக்கின்றனர். முதற் சண்டையில் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் பெறும் ஆயுதங்கள் அடுத்த சண்டையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பயன்படுத்தப் படுவதே வரலாறு.

ஆயுதங்கள் என்ன செய்யும். அவை யார் சுட்டாலும் சுடும்.

உலக ஆயத சந்தையில் புலிகளுக்கும் சேர்த்தே இலங்கை அரசு ஆயுதம் கொள்முதல் செய்கிறது என்பது யாவரும் அறிந்ததே.

அவ்வாறாக இந்தியாவும் தற்போது புலிகளுக்கு ஆயுதம் வழங்க தீர்மானிக்கிறது. ஒரு காலத்தில் நேரடியாக ஆயுதங்களை வழங்கிய அது தற்போது இலங்கை இராணுவம் ஊடாக சுற்றி வளைத்து கொடுக்கிறது என்பது தான் வித்தியாசம்.

ஈழப்போராட்டத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும் ஈழ விடுதலையை விரைபு படுத்துவதற்கும் தேவையான இராணுவ தளபாடங்கள் குறித்து புலிகளின் இராணுவ வெளியீடுகள் சில வெளியிட்ட பட்டியல் விபரங்கள் இவை.

இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கும் போது இந்த பட்டியலில் இருக்கின்ற ஆயுதங்களை இலங்கை இராணுவத்திற்கு இந்தியா வழங்கினால் அவை நல்ல படியாக புலிகளின் கைகளில் சென்று சேரும்.

இப்போது பட்டியல் விபரத்துக்கு வரலாம்.


120 மி.மீ. எறிகணை செலுத்திகள் - 25 அவற்றிற்கான எறிகணைகள் 200 000
130 மி.மீ ஆட்லறி - 10 அவற்றிற்கான எறிகணைகள் 100 000
152 மி.மீ. ஆட்லறி - 10 அவற்றிற்கான எறிகணைகள் 100 000
81 மி.மீ மோட்டர் எறிகணைகள் 100 000 (செலுத்திகள் தேவையில்லை)
37 மி.மீ இயந்திரத் துப்பாக்கி - 10 அதற்கான ரவைகள் 100000
23 மி.மீ இயந்திரத் துப்பாக்கி 25, ரவைகள் 500000 (கடற்சண்டைகளில் அதிகம் தேவைப்படுகிறது. இதனை தாராளமாக இலங்கை இராணுவத்திற்கு கொடுக்கவும்.)
ராங்கிகள் எவ்வகையைச் சேர்ந்தனவாயினும் மற்றும் அவற்றிற்கான எறிகணைகள் 25 000
சிறுரக ஆயுதங்கள் தேவையில்லை. தாராளமாக இருக்கின்றன.

விமானங்களின் தேவை அதிகமேயாயினும் இலங்கை இராணுவத்தினரிடம் சேரும் விமானங்கள் வெறும் இரும்புக் குவியலாகவே புலிகளிடம் வரும் என்பதால் அவை தேவையற்றவை.
காங்கேசன்துறை கிடைத்தபின் கடற்கலன்களுக்கான கோரலை அனுப்பி வைக்கிறோம்.

கொழுவியின் குறிப்பு: இலங்கை இராணுவத்தினரின் பலாலி விமான ஓடுபாதை புனரமைப்பை வெகு விரைவில் இந்தியா முடித்து கொடுத்தால் அது புலிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அத்துடன் திருகோணமலை எண்ணைக் குதங்களின் திருத்த வேலைகளையும் முடித்தால் மெத்த பெரிய உபகாரமாய் இருக்கும்.

மீண்டும் கொழுவி சீரியசாகிறது. இந்த படங்கள் பழைய நினைவுகளை மீட்டுகின்றன. ஆட்டோகிராப் மாதிரி!

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

4 comments:

kulakaddan said...

கொழுவி நல்ல விசயம் உள்ளத சொல்லியிருக்கிறீர். ஆனா உது ஆயுத உதவி செய்யவேணும் எண்டு எழுதுற பலருக்கு புரியாது. அதுவும் நல்லம் தான்.

Muthu said...

///அதுவும் அண்மையில் ஏற்பட்ட சுனாமி நெருக்கடியில் வெகு விரைவாக அரச இயந்திரம் செயற்படுவதற்கு முன்னரே அலையோய்ந்த வெறும் பதினைந்து நிமிட நேரத்திற்குள் துரித கதியில் மீட்பு பணியில் இறங்கி செயலாற்றியதன் மூலம் உலக நாடுகள் பலவற்றாலும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவர்கள்.////

கொழுவி,
பயங்கரவாதிகள் என்பதற்குப் புதிய வரையறை இதுதானா?. இது ஒரு திறம்பட்ட அரசாங்கத்தின் செயற்பாடல்லவா?? :-))).

Thangamani said...

ராவிலும், வெளியுறவுத்துறை அமைச்சிலும் இருக்கும் நம்மவர்கள் தான் இதுபோன்ற முடிவுகளை எடுக்க அரசுக்கு யோசனை சொல்பவர்கள். என்ன அவர்கள் பிள்ளைகள் அமெரிக்காவில் சொகுசாக இருக்கிறார்கள். முடிந்தவரை தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது, அழிப்பது, கடைசியில் ஓய்வு பெற்று அமெரிக்காவில் செட்டில் ஆகலாம் இல்லாவிட்டால் பெறுமதியான இரகசியங்களுடன் நேபாளம் வழியாகவும் அமெரிக்க குடிமகனாகவும் ஆகலாம். சண்டையென்று வந்தால் சாக அப்பாவி சுப்பனும், குப்பனும் கப்பலேறி ஓடவும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் சாகவும் இருக்கிறார்களே. இதில் ஆயுத பேரத்தில் வரும் காசு போனஸ்.

Anonymous said...

:-(