Friday, October 31, 2008

ராடர்களை இயக்கும் இந்தியர்கள் மீது சந்தேகம்!

இந்திய கதுவீ (ராடர்) கருவிகளை இயக்கும் தொழில்நுட்பவியலாளர்கள் மீது சந்தேகம் தெரிவித்துள்ள ஜே.வி.பி. கட்சி, வவுனியா படைத்தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் வானூர்தியை படையினர் சுட்டு வீழ்த்தியது என்பது பொய்யான தகவல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெறுகின்றமையினால் கதுவீ கருவிகளை இயக்கும் இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாகவும் ஜே.வி.பி குற்றம் சாட்டியிருக்கின்றது.

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலை புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய வானூர்தி தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜே.வி.பி கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித கேரத், இந்தியா வழங்கிய கதுவீ கருவிகள் தரமற்றவை என்றும் கூறினார்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் நவீன கதுவீ கருவிகளை பெறுவதன் மூலமே புலிகளின் வானூர்தி தாக்குதல்களை நிறுத்த முடியும். இந்தியா போலியான கதுவீ கருவிகளை வழங்கி ஏமாற்றுகின்றது எனவும் விஜித கேரத் தெரிவித்துள்ளார்.

வவுனியா படைத்தளம் மீது புலிகள் வானூர்தி தாக்குதல் நடத்தியபோது புலிகளின் வானூர்தி ஒன்றை சுட்டு விழுத்தியதாக படையினர் தெரிவித்திருந்தமை பொய்யான தகவல் என்றும் கூறிய அவர், அவ்வாறு சுட்டு விழுத்தப்பட்டிருந்தால் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னாரிலும் கொழும்பிலும் வானூர்தி தாக்குதலை ஒரே நேரத்தில் புலிகள் நடத்தியிருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: