Monday, December 15, 2008

வான்புலிகள் எரிச்சலூட்டுகின்றார்கள் - இந்தியா

புலிகளின் வான்படை இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை.
ஆனால் எரிச்சலூட்டுகிறது.

கொரில்லா அமைப்புக்களோ, பயங்கரவாதிகளோ பயன்படுத்ததாக ஆயுதமான விமானத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தியிருக்கும் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலமானது பிராந்திய விவகாரமாக நோக்கப்படுவதாக பாதுகாப்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் திறை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீவ் ஃபாலி ஹோமி மேஜர் கூறியிருப்பதாக அந்த இணையம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை இந்தியா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லையென அவர் கூறியுள்ளார்.

இதனால், இஸ்ரேலிடம் கொள்வனவு செய்த அதிநவீன ரேடர் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்திருக்கும் தாக்குதல் பற்றி இந்தியப் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தியிருப்பதுடன் “இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் அதி நவீன ரேடர்கள் தாழப் பறக்கும் விமானங்களின் ஊடுருவல்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்று டெய்லி இந்தியா அண்மையில் செய்தி வெளியிட்டிருந்ததை அந்த இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், இந்திய கடற்படை இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஆளில்லாத உளவு விமானங்களைக் கூடுதலாகப் பயன்படுத்துவதற்கும், மேலும் இரண்டு கப்பல்களைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும் தீர்மானித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய விமானப்படை நகர்த்தக் கூடிய சிறிய ரஷ்யத் தயாரிப்பு ரேடார்களை கல்பாக்கம் அணுஉற்பத்தி நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பொருத்தியிருப்பதாக அந்த இணையச் செய்தி கூறுகிறது.

இதற்கும் மேலதிகமாக இந்திய விமானப்படை ‘எரோஸ்டட்’ ரேடார்களை தமிழகக் கரையோரங்களில் பொருத்தியிருப்பதுடன், இஸ்ரேலியத் தயாரிப்பான ஈ.எல்.ஃஎம்.-2083 எரோஸ்டட் ரேடர்கள் இரண்டும் தமிழகத்தில் பொருத்தப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வான்பரப்பிலிருந்து கட்டுப்படுத்தக்கூடிய இஸ்ரேலியத் தயாரிப்பு விமானங்களைக் கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.