Monday, April 23, 2007

இந்தத் தமிழ் எப்படிப் புரிகிறது?

கீழே ஒருவசனம் தந்திருக்கிறேன்.
அவ்வசனத்தை நீங்கள் எப்படி விளங்கிக் கொண்டீர்கள் என்பதைப் பின்னூட்டமாகத் தெரிவியுங்கள்.
இது எனது தமிழ்ப்புரிதலை மீள்பார்வைக்கு உட்படுத்தும் ஒரு நடவடிக்கை.
'இயன்றவரை தமிழில்' எழுதப்பட்ட ஒருவசனம் என்போன்ற சிலருக்கு ஒருமாதிரியும், இன்னும் சிலருக்கு முற்றாக வேறுமாதிரியும் விளங்குவது ஏனென்றுதான் எனக்கு விளங்கவில்லை.

இனி கீழே வருவது தமிழ்மண நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பொன்றில் வந்த வசனம்.

இந்நிறுவனத்தினை நடத்துகின்றவர்களின் பெயர்கள் இத்தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இதற்குமேல் ஒரு பதிவருக்குத் தமிழ்மணத்தின் உள்ளமைப்பு, நிர்வாகம் தொடர்பாக எவ்விதமான மேலதிகத்தகவலும் தேவையில்லை, அப்படியாகத் தரவேண்டிய அவசியமும் எமக்கில்லை என்று கருதுகிறோம். தமிழ்மணத்தின் திட்டங்கள் நிர்வாகக் குழுவுக்குள் நாட்டின் சட்டங்களுக்கும் நிறுவன விதிகளுக்கும் அமைய விவாதிக்கப்பட்டு , முடிவுகள் எடுக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன. எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் அமெரிக்கநீதித்துறையின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை'




மேற்படிப் பத்தியில்,
எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்.


என்றுவரும் வசனத்தின் பொருள்தான் சிக்கலைக் கொடுக்கிறது.
இதில் நான் விளங்கிக்கொள்வது:
தமிழ்மணத் திரட்டி நிர்வாகத்தில் இருப்பவர்கள் "தமது செயற்பாட்டு விவரங்களை" தார்மீகக் காரணங்களுக்காக' தாமே விரும்பினால் மட்டுமே சக வலைப்பதிவர்களுக்குத் தரலாம் என்று சொல்கிறார்கள்.
அதாவது யார்யார் திரட்டியில் என்னென்ன பணி செய்கிறார்கள், என்பது தொடர்பான விவரங்களை என்று கருதிக்கொள்ளலாம்.

இதுதான் மேற்படி வசனத்தில் என்போன்றவர்களுக்கு விளங்கிக்கொண்டது.

ஆனால் வேறுசிலரோ வேறுமாதிரி இதை விளங்கிக்கொள்கிறார்கள். எப்படியென்றால்,

"திரட்டி நிர்வாகம் தார்மீகக் காரணங்களுக்காக தாமே விரும்பினால், திரட்டியில் இணைந்திருக்கும் பதிவர்களின் விவரங்களை சக பதிவர்களுக்கு வெளியிடும்"

மேலே நீலநிறத்தில் இருக்கும் முறையில் விளங்கிக்கொண்டவர்களுக்கும் அதற்கும்மேலேயுள்ள முறையில் விளங்கிக்கொண்ட என்னைப்போன்றவர்களுக்கும் இடையில் எவ்வளவு பெரிய வேறுபாடு?

மற்றவர்கள் தற்செயலாகத்தான் தவறாக விளங்கிக்கொண்டார்கள் என்று இதுநாள்வரை நினைத்திருந்தேன். ஆனால் -/பெயரிலியின் இடுகையைப் படித்தபின்னும் தொடர்ந்தும் அதேகருத்தில் இருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு எனது தமிழ்மேலேயே ஐயம் வந்துவிட்டது.
நாங்கள் கொஞ்சப்பேர்தான் தமிழைப் பிழையாகப் பயன்படுத்துகிறோமோ?

சரி, தனியே அந்த வசனத்தை மட்டும் வாசித்தறிவதில்தான் சிக்கல் என்றால் அவ்வசனம் வரும் பத்தியை (இவ்விடுகையின் தொடக்கத்தில் மேற்கோளிடப்பட்ட பத்தி) வாசித்தால் இன்னும் விளக்கம் கிடைக்கும்.

அதனால்தான் யார்யாருக்கு எப்படியெப்படி தமிழ்மண நிர்வாகத்தினரின் அறிவிப்பு வசனம் விளங்கியுள்ளது என்பதை அறிய இவ்விடுகை.
மேலே இரண்டுவிதமான புரிதல்களைத் தந்துள்ளேன். அதில் கொழுவியின் புரிதலா, மற்றவர்களின் புரிதலா உங்களுடைய புரிதல் என்பதைப் பின்னூட்டத்தில் சொன்னால்போதும். அவை இரண்டையும்விட வேறேதாவது புரிந்தால் அதையும் எழுதுங்கள்.

யார் சொன்னது மொழி தொடர்பாடலுக்கானது மட்டுமென்று?
தமிழ் மிகச்சிறந்த அரசியல் மொழியாகவும் உள்ளது.

***
இவ்விடுகையும் விளங்காமல் வழமைபோல் 'இலங்கைத் தமிழில் காமடிப் பதிவாகவே' தெரியச் சாத்தியமுள்ள சிலருக்கு, அவர்களுக்குப் புரியும்வண்ணம் ஒருவர்மூலம் மொழிபெயர்த்து இடஇருப்பதால் அதுவரை அவர்கள் பொறுமை காக்கும்படி கொழுவியாகிய நான் கேட்டுக்கொள்கிறேன்.


****
இவ்விடுகைக்கு, 'விழிப்புணர்வு' என்ற குறிசொல் கொடுக்கப்பட்டது தற்செயலானதே. யாரும் கண்டுகொள்ள வேண்டாம்.

3 comments:

Voice on Wings said...

இதை அனைத்துத் தரப்பினருக்கும் புரியும் விதமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அந்தப் பதிவிலேயே பின்னூட்டமாக இட்டுள்ளேன். ஏதோ, என்னால் முடிந்த தமிழ்ச் சேவை :)

Anonymous said...

//ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அந்தப் பதிவிலேயே பின்னூட்டமாக இட்டுள்ளேன்//

அப்படியென்றால் இனி இலங்கைத் தமிழ் பிரச்சனை இருக்காது. பேசாமல் ஆங்கிலத்திலேயே பதிவும் ஆரம்பிக்கலாம்.

SurveySan said...

கொழுவி,

voice on wingsன் மொழிபெயர்ப்பு கச்சிதம்.

//"We can provide information regarding our operations proactively, if jusstifiable reasons exisst, only if we wish, and that too, only to bloggers who have enrolled as per our rules. //

இதில், information, operations போன்ற general terms இருக்கு பாருங்க. ஆங்கிலத்திலும் குழப்பம் விளைவிக்கும் வாக்கியம் இது. what information? what operations? etc.. இதெல்லாம் தான் தெளிவா சொல்லலண்ணேன் :))