Monday, November 27, 2006

என்ர அப்பா எதுவும் கொண்டு வாறேல்லை

கடைகளில எதுவுமில்லையெண்டு அப்பா சொன்னார். ஏன் எதுக்காக எண்டு காரணங்கள் சொல்லுகினம். ஆனா எனக்கெதுவும் விளங்கேல்லை. இனிப்புக்கள், பிஸ்கற்கள், பட்டர், பால்மா.. ஏன் முட்டை, மீன் இவையெல்லாம் எங்கை போயிட்டுதுகள்..

என்னை விரும்பிற ஆக்கள் எனக்கென்ன வேணும் எண்டு போனில கேட்கினம். என்னட்டை ஒரு பெரிய லிஸ்ற் இருக்கு. ஆனா அதை அனுப்பத்தான் ஒரு வழியும் இல்லை.

மூண்டு நாளைக்கு முன்னாலை என்ர நண்பன் தன்ரை அன்ரி தனக்கு பார்சல் அனுப்பியிருக்கிறதா வகுப்பறையில வைச்சு சொன்னான். அதுக்குள்ளை பால் மா, சீனி, பிஸ்கற், சவர்க்கார பவுடர் எல்லாம் இருந்ததாம்.அதை திறந்து பாக்க சீனியும் சவர்க்கார பவுடரும் ஒண்டா கலந்து கிடந்ததாம். எண்டாலும் பிஸ்கற்றும் பால்மாவும் தாங்கள் எடுத்தவையாம்.

என்ர அன்ரியும் நாங்கள் எப்பிடி இருக்கிறமெண்டு அறிய போன் பண்ணினவ. நான் அவவிட்டை பிஸ்கற்றும் பால்மாவும் அனுப்ப சொன்னனான். ஆனா சவக்கார பவுடர் அனுப்ப வேண்டாம் எண்டும் சொல்லியிருக்கிறன். இப்ப ஒவ்வொரு நாளும் தபால்க்காரனை பாத்துக்கொண்டிருக்கிறன்.

நேற்று என்ர அப்பா பாண் வாங்கிற கியுவில நிக்கிறதுக்கு போக பிந்திட்டார். அவருக்கு பாண் கிடைக்கவில்லை. நான் காலை எதுவும் சாப்பிடாமல்த்தான் பள்ளிக்குடம் போனன். இடைவேளைக்கும் எதுவும் சாப்பிட இல்லை.

இண்டைக்கும் வழமை போல காலமை 5 மணிக்குத்தான் ஊரடங்குச் சட்டம் எடுத்தவை. சனம் எல்லாக் கியுவிலையும் நிக்கினம். கப்பல்ல கொழும்பு போறதுக்கு ஒரு கியு, சாமான் வாங்க ஒரு கியு, மண்ணெண்ணை வாங்க ஒரு கியு. என்ரை அப்பாவும் விடிய பாண் வாங்கிறதுக்கு கியுவில நிக்கப் போனார். அவர் ஒரு பாண்துண்டோடை வந்தார்.

நான் அதில ரண்டு துண்டைச் சாப்பிட்டு விட்டு ஒரு துண்டைப் பள்ளிக்குடம் கொண்டு போனன்.

இன்ரெர்வெல் நேரம் நான் என்ர பாண் துண்டு வைச்சிருக்கிற பெட்டியை திறந்தன். அதை பக்கத்தில இருக்கிற என்ர நண்பி எட்டிப் பாத்தா.. பாவம் அவ.. அவ இன்ரெர்வெலுக்குச் சாப்பிட ஒண்டும் கொண்டு வரேல்லை. அதோடை அவ காலையும் ஒண்டும் சாப்பிடேல்லையாம்.

அவவின்ர அப்பாவை ஆமிக்காரன் சுட்டுப் போட்டான். அதாலை காலைமை எழும்பிப்போய் கியுவில நிண்டு பாண் வாங்க அவவுக்கு ஆருமில்லை.

நான் என்ர பாண் துண்டை ரண்டா பிய்த்தேன். பிறகு என்ன நினைச்சனோ தெரியாது. முழுவதையும் அவவுக்கே குடுத்திட்டன். பாவம் இன்று முழுதும் சாப்பிட வில்லைத்தானே..

எனக்கு இப்ப பசிக்குது. எனக்கு பசித்தாலும் பரவாயில்லை. அவவின்ர அப்பாவை சுட்ட மாதிரி என்ர அப்பாவையும் ஆமி சுட்டுவிடக் கூடாது கடவுளே..

2 comments:

Anonymous said...

:(

கானா பிரபா said...

கண்ணுக்கு முன் ஒரு இடிஅமீன் ஆட்சி