Friday, February 13, 2009

இலங்கை விவகாரத்தில் பிரிட்டிஸ் தூதர்! சிறிலங்கா நிராகரிப்பு! புலிகள் வரவேற்பு

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை பற்றிய விடயங்களைக் கையாள என பிரித்தானியா அரசாங்கம் நியமித்த சிறப்புத் தூதுவரை, அது தமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயல் எனக் கூறி சிறிலங்கா அரசு நிராகரித்து விட்டது.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், தமது நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரை, சிறிலங்காவின் தற்போதைய மனித அவல நிலை தொடர்பாக ஆராய்வதற்கான சிறப்பு தூதுவராக நேற்று வியாழக்கிழமை நியமித்தார்.

இந்த நியமனத்தை நிராகரித்த சிறிலங்கா அரசாங்கம், சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அவசியமற்ற தலையீட்டினை பிரித்தானியா அரசாங்கம் மேற்கொள்ள முயற்சிப்பதாகவும், சிறிலங்காவின் தன்னாட்சி அதிகாரத்திற்கு உள்ள கௌரவத்திற்கு இத்தகைய முயற்சி கேடு விளைவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவின் இத் தூதர் நியமனத்தை வரவேற்று புலிகள் பிரித்தானியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். புலிகளின் சர்வதேசங்களுக்கான இராஜாங்க உறவுப் பிரிவின் அதிகாரி செ. பத்மநாதன் பிரித்தானிய பிரதமமந்திரியால் நியமிக்கப்பட்ட இச் சிறப்புத் தூதருக்கு எழுதியுள்ள இக்கடிதத்தில் இம் முயற்சியை தாம் வரவேற்பதாகவும் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலைகளைத் தடுப்பதில் பிரித்தானியாவிற்கு தார்மீக கடமையிருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் பேச்சு ஊடான தீர்வில் தாம் அக்கறையுடன் இருப்பதாகவும் 2002 பெப்ரவரி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் கரிசனையுடன் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

1 comment:

Anonymous said...

In the title - "புலிகள் வரவேற்பு"should come first and "சிறிலங்கா நிராகரிப்பு" should come after that.