Tuesday, October 02, 2007

நான் புலி, ரயாகரன் துரோகி

நிதர்சனம் வலைத்தளம் யாருடையது என்பது தொடர்பாக காலங்காலமாக சர்ச்சை நடந்துவருகிறது. சர்ச்சை என்பதைத்தாண்டி பலநேரங்களில் புலிகள் மீதான அவதூறு பரப்புவதற்கு இந்த விசயம் கையாளப்படுகிறது. புலியெதிர்ப்பு வாதிகள் அடிக்கடி சொல்லும் 'நிதர்சனம் புலிகளுடையதுதான்' என்ற கோசம் வழமைபோல ரயாகரனால் சொல்லப்பட இன்னொருமுறை தீப்பற்றிக் கொண்டது.
நிதர்சனம் புலிகளுடையதுதான் என்பதற்கு புலியெதிர்ப்புக் 'கும்பல்' சொல்லும் காரணம், அது புலிகளுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுகிறது என்பதுதான்.
புலிகளை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லாரையும் 'துரோகி' என்ற சொல்லால் அழைக்கும் சில புலி வால்பிடிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தப் புலியெதிர்ப்புக் கும்பல் செய்வதும் அந்த வால்பிடிகளின் வேலையைத்தான்.
வலைப்பதிவு எழுதுபவர்களில்கூட புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள். புலிகளை ஆதரித்து எழுதுகிறார்கள். இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி பார்த்தால் வலைப்பதிவில் புலிகள் ஆதரவுப்போக்குக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் புலிகள்தான். அதன்படி பார்த்தால் கொண்டோடி புலியாகத்தான் இருக்க வேண்டும். (ஆனால் புலியாதரவாளர்கள் நிதர்சனம் வலைத்தளம் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புவதோடு, அதை வெளிப்படையாக எழுதியுமிருக்கிறார்கள் என்பது இங்கொரு நகைமுரண்)
மறுவளத்தில், புலியை விமர்சித்து எழுதுபவர்கள் எல்லோரும் துரோகிகள்தாம் (இதை நாம் சொல்லவில்லை; புலியெதிர்ப்புக் கும்பலின் வாதப்படி தான்). அவ்வகையில் ராயகரன் துரோகிதான்.
இப்போது புதுவாதம் வைக்கப்படுகிறது.
"நிதர்சனம் புலிகளுடையதா இல்லையா என்று வாதிடுவதால் எந்த மாற்றமும் நடந்துவிடாது".
மேலும், புலிகளின் வரலாற்றைப்போலவே நிதர்சனத்தின் வரலாறும் இருக்கிறதாம். ஆகவே இது புலிகளினது தானாம்.
நிதர்சனம் தமது வலைத்தளமில்லை என்பதை புலிகள் அதிகாரபூர்வமாக மறுத்து அறிக்கை விட்டிருந்தார்கள். நிதர்சனம் தளமும் புலிகளுடனான தமது தொடர்பை மறுத்திருந்தது.
சரி, ரயாகரன் சொல்வதுபோல் புலிகளின் மறுப்பை நம்புவதற்கில்லை என்பது நியாயமான வாதம் தான். புலிகள் தாம் செய்தவற்றை மறுத்திருக்கிறார்கள்.
ஆனால், நிதர்சனம் தமது தளமில்லையென்ற நிலையில் அதை நிறுத்த புலிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியை ரயாகரன் கேட்பது வியப்பானது. என்னதான் செய்ய வேண்டும், ஓர் அறிக்கை விடுவதைத்தவிர?
நிதர்சனத்தை நடத்துபவரை மண்டையில் போடச் சொல்கிறீர்களா? முதலில் நிதர்சனம் தளத்தை நிறுத்துவதை வரவேற்கிறீர்களா? நீங்கள் முன்பு எழுதிய கட்டுரைகளில் இருந்து, அதை முழுமையாக மறுப்பீர்கள் என்றுதான் புரிகிறது.
பிறகு என்னதான் செய்வது? நிதர்சனத்தை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று புலிக்கு ரயாகரன் கோரிக்கை வைப்பது வேடிக்கையானதல்லவா?
அடுத்து, நிதர்சனம் யாருடைய நலனுக்குப் பாடுபடுகிறது என்ற கேள்வியை கேட்டுவைப்போம். நிதர்சனம் தொடர்ந்து இயங்குவதில் யார் பலனடைகிறார்கள் எனற கேள்வியைக் கேட்டு வைப்போம். நிதர்சனம் நிறுத்தப்பட்டால் யாருக்குத் தீமை என்பதைக் கேட்டுவைப்போம்.
இவற்றுக்குரிய பதில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நிதர்சனமானது புலிகளின் எதிர்த்தரப்பின் நலனையே தனது முதன்மை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது. நிதர்சனத்தால் பலனடைவது புலியெதிர்ப்பாளர்களே. நிதர்சனம் நிறுத்தப்பட்டால் நட்டமடைவது புலியெதிர்ப்பாளர்களும் சிறிலங்கா அரசுமே.
நிதர்சனத்தை நிறுத்துவோம்; அதன்மீது வழக்குப்போடுவோம் என்று கரடி விட்டுக்கொண்டிருந்தவர்கள் எங்கே போனார்கள்? ஏன் வழக்குத் தொடுக்கப்படவில்லை? ஏன் நிதர்சனம் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது?
ஆனந்தசங்கரி துள்ளினார், புளொட் அமைப்பு கொக்கரித்தது. இறுதியில் என்ன நடந்தது? எதுவுமே நடக்கவில்லை.
ஏன் சிறிலங்கா அரசின் உயர்மட்டத்தில்கூட நிதர்சனம் தளம் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கமே அறிக்கையும் கண்டனமும் வெளியிடவேண்டி வந்தது. இவ்வளவுக்கும் நிதர்சனத்துக்கு எதிர்ப்பக்கம் நின்று கொக்கரித்தவர்களிடம் தான் நூறுவீத நியாயமும் இருந்தது. அதுவும் சிறிலங்கா அரசாங்கம் நினைத்திருந்தால் அந்த படம் வெளியிட்ட பிரச்சினைக்கு நிதர்சனத்தை முடக்கியிருக்கலாம். அனால் சும்மா அறிக்கை விட்டதோடு நின்றுவிட்டது. அதுபோல்தான் புளொட் மற்றும் ஆனந்தசங்கரி வகையறாக்களின் வெற்றுச் சவடால்கள். நிதர்சனத்தைப் புரட்டுறோம் புடுங்குறோம் என்று அறிக்கை விட்டவர்கள், தமது பக்கம் முழுமையாக நியாயம் இருந்தபோதும்கூட எதுவும் செய்யவில்லை. இது, ஏதோ ஜனநாயகப்பண்பால் வந்ததென்று யாரும் நம்பமுடியாது. ஒரே காரணம், நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்பதுதான்.
நிதர்சனம் தொடர்ந்து இயங்கவேண்டுமென்று விரும்புவர்கள் சிறிலங்கா அரசாங்கமும் ஆனந்தசங்கரியும், புளொட்டும்தான். ஏனென்றால் அதில் அவர்களின் புலியெதிர்ப்பு வியாபாரம் இருக்கிறது. நிதர்சனத்தை வைத்து புலிகளை வசைபாடும் அருமையான வாய்ப்பை அவர்கள் நழுவவிடத் தயாரில்லை.
இப்போது சொல்லுங்கள், நிதர்சனம் யாருடைய நன்மைக்காக இயங்குகிறது?

4 comments:

கொழுவி said...

ம்.. நிதர்சனத்திற்கு எதிராக புலிகள் என்ன செய்தார்கள் என ரயாகரன் கேட்கிறார்.

என்ன செய்ய வேண்டும் ? தடுத்து நிறுத்தினால் ஜனநாயகக் குரல் வளையை நசிக்கும் புலிகள் என ஒப்பாரி எழுதுவதும் இவர்கள் தான். நல்ல முசுப்பாத்தி தான் போங்கள்.

தவிர முதலில் புலிகள் இதனை (நிதர்சனத்தை) மறுத்திருக்கிறார்களா அதற்கெதிராக பிரசாரம் செய்திருக்கிறார்களா என கேள்வி எழுப்புகிறார். சரி அண்ணைக்கு விசயம் தெரியாது போல என நானும் நினைத்து ஓமண்ணை மறுத்தவைதான் - அறிக்கை விட்டவைதான் என எழுதப்போனால் .. நாட்டாண்மை கணக்காக குந்தி இருந்து கொண்டு உது செல்லாது செல்லாது என கரணமடிக்கிறார்.

ஏதோ தங்கடை மனத்திருப்திக்காக மட்டும் மட்டுமே எழுதுறார். நிதர்சனத்தைப் போலவே - விட்டு விடலாம் :)

Anonymous said...

இன்டர்நெட் மீதுஅ திக நேரம் செலவிடும் சிறுவர்கள் இன்டர்நெட்டை ஒரு மாய உலகமாக கணித்து தமது ஆசைகள் விருப்புக்கள் எல்லாவற்றையும் அதிலே திணித்துக்கொள்வார்களாம். ஆனா அது மனோ ரீதியாக நல்லதல்ல என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்களாம்.

கொழுவி said...

//இன்டர்நெட் மீதுஅ திக நேரம் செலவிடும் சிறுவர்கள் இன்டர்நெட்டை ஒரு மாய உலகமாக கணித்து தமது ஆசைகள் விருப்புக்கள் எல்லாவற்றையும் அதிலே திணித்துக்கொள்வார்களாம். ஆனா அது மனோ ரீதியாக நல்லதல்ல என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்களாம்.

//

அனாமதேய நண்பரே,
ரயாகரனை கருத்தால் எதிர்ப்பது நன்று.
அதைவிட்டுவிட்டு அவரை சிறுவன் என்று பழிப்பதெல்லாம் சரியில்லை.
"சிறுபிள்ளைத்தனமான" என்று சொல்வது வேறு, "சிறுபிள்ளை" என்று சொல்வது வேறு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Anonymous said...

ராயகரன் அண்ணை தான் நிதர்சனம் தளம் நடத்திறார் எண்டு பட்சி/குருவி சொல்லுது